Sunday, 5 March 2017

பதிவுத் திருமணம்

     சென்ற வியாழக் கிழமை அன்று (2.3.17) கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் எனக்கும் சாந்திக்கும்  பதிவுத் திருமணம்  நடந்தது. அல்லது திருமணப் பதிவு நடந்தது என்றும் சொல்லலாம்.


குழப்பம் வேண்டாம். சாந்தி என்பவள் என் அருமை மனைவிதான்.

   நண்பர் சதாசிவம் தலைமையில், நண்பர்கள் பாலசுப்பிமணியம், மாணிக்கம், விமலாதித்தன் ஆகியோர் முன்னிலையில் பதிவுத் திருமணம் நிகழ்ந்தது. ஆவணங்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்தபின் சார்பதிவாளர் திருமதி இராஜேஸ்வரி அவர்கள் திருமணத்தை அங்கீகரித்துச் சான்றிதழை வழங்கினார்.


     எங்கள் திருமணம் நடந்தது 1985ஆம் ஆண்டு. 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் பதிவுத் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா?

   அதற்கு முன்னதாக இந்தத் திருமணப் பதிவுக்கு நான் பட்ட பாட்டைச் சொல்லியாக வேண்டும். என்னுடைய நண்பர் வருவாய் அலுவலர் மோகன்ராஜ்  அவர்களிடம் பேசினேன். அவருடைய வழிகாட்டுதலின்படி சார்பதிவாளரைச் சந்தித்தேன். கரூரில் நான் வசிப்பதற்கான குடும்ப அட்டைப் பதிவைக் காட்டினேன். எனினும் விதிகளின்படி பதிவு செய்ய வாய்ப்பில்லை என்பதை அன்புடன் தெரிவித்தார்.

     திருமணம் நடந்தபோது மணப்பெண் வசித்த ஊர், மணமகன் வசித்த ஊர், திருமணம் நடந்த ஊர் இவற்றுள் ஒன்றில்தான் இப்போது பதிவு செய்யமுடியும் என்றார்.  சொல்லி வைத்தாற்போல் இந்த மூன்று  ஊர் சார் பதிவாளர்களும் சாக்குப் போக்குச் சொல்லி மறுத்துவிட்டனர்.

    ஆனாலும் நான் என் முயற்சியைக் கைவிடவில்லை. திருமணப்பதிவுக்குரிய அடிப்படை ஆவணங்கள் என்னிடத்தில் இருந்தன.

   குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, திருமணப் பத்திரிகை, ஆதார் அட்டை, இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கான சான்று, என்னுடைய மாற்றுச் சான்று, என் மனைவியின் மாற்றுச் சான்று, கூடுதலாக எங்கள் கடவுச் சீட்டுகள், அண்மையில் எடுத்த ஒளிப்படம் என அனைத்து மூலச் சான்றுகளும் என்னிடத்தில் இருந்தன.

   இன்னொரு சார்பதிவாளரிடம் இது குறித்துக் கருத்துக் கேட்க விரும்பினேன். என்னிடம் எண்பதுகளில் கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் படித்த மாணவர் பூபதி இப்போது சேலத்தில் சார்பதிவாளராகப் பணியாற்றுகிறார். அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவர் மாவட்டப் பதிவாளரிடம் பேசினார். கரூர் மாவட்டப் பதிவாளர் கரூர் நகர சார் பதிவாளரிடம் திருத்தப்பெற்ற விதிகளின்படி பதிவு செய்ய இயலும் என்பதைத் தெரிவித்ததன் அடிப்படையில்  பூபதி மீண்டும் கரூர் சார்பதிவாளரைச் சந்தித்துப் பேசச் சொன்னார்.

     மறுநாள் சென்று அவருக்கு வணக்கம் சொன்னேன்.  என் புன்முறுவல் முன்னால் செல்ல நான் பின்னால் சென்றேன். அவர் என்னை அன்புடன் வரவேற்று, “நாளை முகூர்த்த நாள். வந்து பதிவு செய்து  கொள்ளுங்கள்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

   விண்ணப்பத்தை உரிய முறையில் நிறைவு செய்து,  சான்று ஆவணங்களை இணைத்து, ஒளிப்படத்தை ஒட்டி கையொப்பம் போடவேண்டிய இடங்களில் கையொப்பம் போடாமல் கொடுத்தேன். சார் பதிவாளர் முன்னிலையில்தான் கையொப்பம் போட வேண்டும். சான்றொப்பம் இட வேண்டிய நண்பர்கள் நால்வரும் அவரவர்தம் அடையாள மூலச்சான்றுடன் குறிப்பிட்ட நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து சார்பதிவாளரிடம் தம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு பதிவு ஆவணங்களில் சான்றொப்பமிட்டனர். நானும் என் மனைவியும் கையொப்பம் இட்டோம்; கைரேகைப் பதிவுகளையும் பதிந்தோம்.
    பதிவுக் கட்டணம் இருநூற்றுப் பத்து ரூபாய் மட்டும்  ரொக்கமாகச் செலுத்தினேன். நீங்கள் நினைப்பதுபோல் வேறு எந்தவித  செலவும் இல்லை. (நான் ரொக்கமாகச் செலுத்தியது பிரதமர் மோடிக்குத் தெரியாது!)

      சார் பதிவாளர் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார். நண்பர்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

   வீட்டு வரி பற்றுச் சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக கோப்பில் இட்டு வைக்கும் வழக்கம் எனக்கு இருப்பதால், இந்தத் திருமணப் பதிவு எளிதாக அமைந்தது. இரண்டு திருமணப் பத்திரிகைகளை முப்பது ஆண்டுகளுக்கு முன் கோப்பில் போட்டு வைத்தது இப்போது கைகொடுத்தது.

     கனடாவில் இருக்கும் என் இளைய மகளின் பட்டமேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அங்கு செல்ல உள்ளோம் அதற்கு எங்கள் இருவருக்கும் கனடா நாட்டு விசா தேவையாக உள்ளது. விசா பெறுவதற்கான விண்ணப்பத்துடன் திருமணப் பதிவுச் சான்றை இணைப்பது அந்நாட்டு விசா விதிப்படி கட்டாயமாகும்.

இதற்காகத்தான் இந்தப் பாடு.


குறிப்பு: 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த, நடக்கும் திருமணங்கள்- கோவிலில் நடந்தாலும் சரி, திருமண மண்டபத்தில் நடந்தாலும் சரி- அனைத்தும் கட்டாயம் சார் பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்னும் அரசாணை உள்ளது. திருமண நாளன்று மணப்பெண்ணுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருந்தால்தான் திருமணத்தைப் பதிவு செய்யமுடியும்.

6 comments:

  1. விசா விதிப்படி தேவைக்காக நடைபெற்ற திருமண நாள் பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா...அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய, பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  2. பட்டமேற்பு விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. தங்களின் இளைய மகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. I pray to the Almighty to bless the newly-registered-wed long life, good health and happiness. Pro.Pandiaraj

    ReplyDelete
  5. with your as usual touch it has come out with good humor in order to prove that you are a very good human. I enjoyed reading it. I do wonder how can you think and write like this! Really the flow of write up is extraordinary. No doubt you are gifted sir.

    ReplyDelete
  6. with your as usual touch it has come out with good humor in order to prove that you are a very good human. I enjoyed reading it. I do wonder how can you think and write like this! Really the flow of write up is extraordinary. No doubt you are gifted sir.

    ReplyDelete