Tuesday, 14 February 2017

கனவை நனவாக்கும் காதல்

   இன்று காதலர் தினம் என காலண்டர் சொன்னது. பிழைப்பைக் கெடுக்கும் காதல் எங்கும் பெருகி விட்டதோ என மனம் மயங்கித் தவித்தது. முகம் பார்க்காமலே காதல் செய்ய முகநூலும் வாட்ஸெப்பும் வரிந்துகட்டிக் கொண்டு உதவுகின்றன.


     மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் பொன்மொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு மாற்றான் மனைவியாகி விட்டாள் எனத் தெரிந்தும் மாஜி காதலியுடன் மல்லுக்கட்டும் இளைஞர்களும் இருக்கின்றார்கள்.

    வாழ்வில் சாதிக்க வேண்டும் என்னும் கனவுகளோடு கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் காலத்தில் காதல் என்னும் மாய வலையில் சிக்கித் தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேற முடீயாமல் தவிக்கும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் நான் அறிவேன்.

    “காதலியர்  கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் இளைஞர்க்கு மண்ணில் மாமலையும் ஓர் சிறு கடுகு” என்பார் பாரதிதாசன். பெரிய இலக்குகளை எளிதாய் அடைவதற்கு காதல் என்பது ஓர் உந்து சக்தியாய் இருக்க வேண்டும் என்பதைத்தான் இப்பாடல் வரி உணர்த்துகிறது.

      "நாம் இருவரும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பின்னரே திருமணம்" என்னும் உறுதிப்பாட்டோடு இருந்து அந்த இலக்கை அடைந்து திருமணம் செய்த கொண்ட காதலரையும் நான் அறிவேன்.

    காதல் மணம் புரிந்த இருவரும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது என்னும் மன உறுதியோடு இருந்தவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணனும் பிரபாவதியும் என்பது பலருக்குத் தெரியாது.   
      நேற்று பெய்த மழையில் இன்று முளைத்து நாளை காய்ந்து விடும் காளான் போன்றதா காதல்? இன்று காதல் அவசர கதியில் தொடங்கி அவசர கதியில் நடக்கக் கூடாதவை எல்லாம் நடந்து விடுகின்றன.

     மலரினும் மெல்லியது காதல் என்பார் திருவள்ளுவர். முதலில் காதலர் எல்லாம் திருக்குறளில் உள்ள காமத்துப் பாலைப் படிக்க வேண்டும். வள்ளுவர் காட்டும் காதல் ஒருபோதும் தோல்வி அடையாது.

            இன்றைக்குக் காதலிலும் வன்முறை தலை விரித்தாடுகின்றது. காதல் என்பதற்குக் கொல்லுதல் என்று ஒரு பொருளும் உண்டு. இப்போதெல்லாம் இந்தப் பொருளில்தான் காதல் இருக்கின்றது. காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொன்றுவிடும் கோரக்காட்சிகள் அரங்கேறுகின்றனவே!

      திருமணம் செய்ய குறைந்த பட்ச வயது வரம்பு இருப்பதுபோல் காதல் செய்யவும் குறைந்த பட்ச வயது இருக்க வேண்டும். அப்போதுதான் கனவை நனவாக்கும் காதல் உருவாகும்.

      

7 comments:

  1. உங்கள் கருத்துக்க்களை ஒத்துக்கொள்கிறேன், ஆனால், முறையற்ற, தவறான காதல்கள் மிக குறைவு...அவை அதிகம் விளம்பரம் பெறுகின்றன. பத்துக்கு எட்டு காதல்கள் வெற்றி பெற்று, காதலர்கள் மனமொருமித்து தம்பதிகளாக வாழ்கின்றனர் என்று நான் நினைக்கின்றேன் ...

    ReplyDelete
  2. காதலர்கள்சேர்ந்து படித்து பண்பெறவேண்டிய பகிர்வு.நன்றி அய்யா.கட்டுரை அருமை.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. காதல் என்பது அன்பின் பரிமாற்றம். காதல் என்பதற்கு நம்மவர்கள் இளம்வயதினரின் காமத்தை மட்டுமே மையப்படுத்துகின்றனர். மனிதர்கள் தனக்குப்பிடித்தவை மேல் வைப்பது காதல். தாய் தந்தையர்கள் தன் பிள்ளைகளிடம் காட்டுவது காதல்,மணமுடித்த தம்பதியர்கள் தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்துவது காதல், வயதான பின்பும் கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் வைக்கும் உண்மையான அன்பு காதல். ஆனால் இன்று கண் மூடித்தனமான பாலுணர்வு ஈர்ப்பு இளம்வயதினரை நல்ல நிலைக்கு கொண்டு சேர்ப்பதில்லை. வாழ்கைக்குத் தேவையான கல்வி, வேலை மற்றும் வரு(மானம்) ஆகியவற்றை முறையாகத் தேடிக்கொண்டு இருமனங்கள் இணைவது தவறில்லை என்பது என் கருத்து.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    கரூர்.

    ReplyDelete
  5. Love has become meaningless nowadays since it has become body-oriented which is nothing but infatuation. Prof.Pandiaraj

    ReplyDelete