Monday, 20 March 2017

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்?

   நம்முடைய எம்.பி.பி.எஸ்; எம்.எஸ் போன்ற பட்டங்களை அமெரிக்க நாடு துளியும் மதிப்பதில்லை. அவர்கள் நடத்தும் ஒரு மருத்துவம் சார்ந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்றால்தான் அங்கே படிக்க முடியும் அல்லது பணியாற்ற முடியும்.

    இந்தச் சூழலில் நீட் தேர்வைச் சந்திக்காமல் நம் தமிழக மாணவர்கள் பெறும் எம்.பி.பி.எஸ் பட்டத்தை அயல் நாட்டவர் மட்டுமல்லர் அண்டை மாநிலத்தார் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

     பத்து வருடங்களாக மாற்றப்படாமல் துரு ஏறிக் கிடக்கும் மேனிலைக் கல்விப் பாடத்திட்டம், அறிவுக்கு வேலையில்லாமல் மனப்பாடம் செய்வதற்கு மட்டும் இடமளிக்கும் தேர்வுமுறை, பிளஸ் டூ என்னும் பெயருக்கேற்ப பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்பகுதியை மட்டும் இரண்டு ஆண்டுகளில் படிக்கும் அவலம்- இவை எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பனவாய் இல்லை.

   குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்ததாம் என்னும் கதையாக ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் சேர்ந்துகொண்டு நம் மாநிலத்து மாணவர் நலனுக்கு எதிராக நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கேட்டு உச்சநீதி மற்றும் பாராளுமன்ற வாசலில் நிற்கின்றன.

     இது உண்மையில் புரியாத புதிராகவே உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் கிராமப்புறத்து மாணவர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவது போலத் தோன்றுகிறது. அதே சமயம் இதில் ஏதோ உள்குத்து இருப்பது போலவும் தோன்றுகிறது. இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் The NEET Conundrum என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. Conundrum  என்னும் சொல்லுக்குப் புதிர் என்றுதான் பொருள்.

   அறுபதுகளில் இந்தி வேண்டாம் எனச் சொல்லி, ஆங்கிலத்திற்குச் சிவப்புக் கம்பளம் விரித்ததன் பயனை இன்னும் நாம் அறுவடை செய்கின்றோம். அரசியல்வாதிகளின் மகன்களும் பேரக் குழந்தைகளும் தனியே இந்தி படித்தார்கள் பயன்பெற்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்

.  கூடுதலாக ஒரு மொழி கற்பது என்பது கூடுதலாக ஒரு விழியைப் பெறுவது போலாகும்.

    ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் மூன்றாம்தர அரசியல்வாதிகள் இன்று நீட் தேர்வை வேண்டாம் என்கிறார்கள். ஆடு மழையில் நனைகிறதே என்று ஒநாய் வருந்திய கதைதான்.

    நீட் தேர்வை வேண்டாம் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யாரும் சொல்லவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே சொல்கிறார்கள். இவர்கள் என்ன கூப்பாடு போட்டாலும் செல்லாது. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகாமல் இருந்தால் அது தற்கொலைக்குச் சமமாகும்.

    “பையன் அழுவான்; ஊசி போட வேண்டாம்; பயப்படுகிறான் எனவே அறுவை சிகிச்சை வேண்டாம்” என்று மருத்துவரிடம் முட்டாள் தனமாகச் சொல்லும் பெற்றோருக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

   இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டத்தில் தரம் உயர்த்தி, யோசித்து விடை எழுதும் வகையில் தேர்வுமுறையை மாற்றி அமைத்து, பதினோராம் வகுப்புப் பாடத்தை முழுமையாக நடத்திட அரசு ஆவன செய்தால், நம் மாணவர்களும் நீட் தேர்வு என்ன அதைவிடக் கடினமான தேர்வுகளையும் எதிர்கொண்டு வெற்றியடைவார்கள். இதற்காக ஒரு மூன்றாண்டு காலம் கால அவகாசம் கேட்கலாம். இப்படிச் சிந்திக்காமல், “நடக்கப் பயந்தவன் தன் மகனுக்கு அதே ஊரில் இருந்த  சித்தப்பன் வீட்டுப் பெண்ணைக் கேட்டானாம்” என்ற கதையாக நம் அரசியல்வாதிகள் பேசுவது அறியாமையின் உச்சக்கட்டமாகும்.

     “திறமானப் புலமை எனில் வெளிநாட்டார்
      அதை வணக்கம் செய்தல் வேண்டும்

என்பான் பாரதி. இது நம் அரசியல் தலைவர்களுக்கு எங்கே புரியப்போகிறது?

    “எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே?” என்ற தஞ்சை இராமையாதாஸ் அவர்களுடைய  திரைப்பாடல் வரிதான் என் செவிகளில் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது!

   
   
    


10 comments:

  1. தேர்வை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமே தவிர
    தேர்வே வேண்டாம் என்று மறுப்பது சரியாகத் தோன்றவில்லையே
    தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே மையமாகக் கொண்ட கல்வி முறை மாற வேண்டும் ஐயா

    ReplyDelete
  2. ஐயா, உங்கள் பதிவு இன்றைய கல்வியின் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இது நீட் தேர்வுக்கு மட்டுமல்ல அனைத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும். பாடத்திட்டதை மாற்றியக்கவேண்டும் என்ற உங்கள் கருத்து மிக மிக சரியானயே. ஆனால் பாடத்திட்டத்தை மாற்றுவது அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஆசிரியர்கள் கையில் தானே இருக்கிறது. வேலைக்கு பணம் கொடுத்து குறுக்கு வழியில் அரசு அதிகாரியாகவும் ஆசிரியராகவும் செல்பவர்களுக்கு பாடமே தெரியாது எப்படி திட்டமிடவும் வளர்ச்சியை நோக்கி சிந்திக்கவும் தெரியும். கல்வி என்பது பணம் படைத்த முட்டாள்களின் கையில் அதிகாரத்தோரணையில் செல்லும் போது அறிவு எங்கே ஓங்கும். உங்களைப்போன்ற பல உயர்ந்த ஆசிரியர்களின் நாற்காலிகள் பல கருங்காலிகளின் சிம்மாசனமாகிப்போனதே இந்த அவலநிலைக்கு காரணம். தனியார்மயக் கல்வி வியாபாரம் ஒழிந்து அறிவாளிகளின் ஆட்சியில் தகுதியான ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் நீட் என்ன உலகில் எந்தத் தேர்வையும் மாணவர்கள் சந்திக்க தயாராகிவிடுவர். உதாரணமாக இது உண்மையிலேயே நடந்த நிகழ்வுகள். ஒருவகுப்பில் நன்றாகப்படிக்கும் மாணவர்கள் ஒருபாடத்தில் தேர்ச்சி பெறவில்லை எனவே மறுமதிப்பீடு செய்ய பல்கலைக்கழகத்தில் வேண்டுகிறார். அதற்கு ரூ.450 செலுத்துகிறார். மேலும் தேர்ச்சி பெறவில்லை என்பதற்கு அடுத்த தேர்வு விண்ணப்பதில் 400 கட்டுகிறார். தேர்வு தொடங்க 2 நாட்கள் முன்னதாக அவர் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி என்று வருகிறது. அவர் அந்தத் தேர்வு எழுத வேண்டாம் என்று சொல்லப்பட்டது. சரி. 850 ரூபாய் பணம் ஒரு ஆசிரியரின் தவறால் நடந்தது. இதை இழப்பீட்டோடு பல்கலைக்கழகம் திருப்பித்தரவேண்டுமல்லவா ஆனால் அப்படி நடப்பதில்லை. எவரோ செய்த தவறுக்கு மாணவர்கள் தண்டனைபெரும் கேவலம் நமது தமிழ் நாட்டைத்தவிர வேரெங்கும் நடக்காது. தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அறக்கட்டளையின் கீழ் நடந்தால் அவற்றை நாட்டுமையாக்கி கல்வியை கட்டாயமாக்கினால் தான் இந்த நிலை மாறும் ஐயா

    ReplyDelete
  3. .....மிக மிக நல்ல கட்டுரை..தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வது....அண்டை மாநிலங்கள் எல்லாம் நீட் எழுதும் போ து தமிழ்நாடு மட்டும் தனியாக.....எல்லாவற்றிலுமே இப்படித்தான்....நம் கல்வி முறை மாறினால்தான் நம் மாணவர்களும் பிற மாணவர்களுடன் சேர்ந்து நீந்திச் செல்ல முடியும்....இல்லை என்றால் பின்தங்கும் நிலைதான்...

    ReplyDelete
    Replies
    1. கேரளத்தில் நீட் தேர்வு எழுதுகிறார்கள் அதன் அடிப்படையில் தான் அட்மிஷன்,...

      Delete
  4. ...சொன்னது அனைத்தும் அருமை ஐயா...

    ReplyDelete
  5. தகுதித்தேர்வு வரவேற்கத்தக்கதே.தங்கள் கருத்தும் கட்டுரையும் அருமை. தனியார் கல்லூரிகள் வரைமுரையின்றி தமிழகத்தில் உள்ளதுடன் அவை பெரும்பாலும் அறமற்ற அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன. பள்ளியிக்கல்வியும் தேர்வுகளும் தகுந்த மேம்பட்ட முறையில் நடந்தால் கல்லூரிகளால் கள்ளப்பணம் பெற்று தகுதியற்றவர்களைச் சேர்த்துக்கொள்ள இயலாது. அவர்கள் வருமானம் குறைந்துவிடும் என்பதாலேயே அரசியல்வாதிகள் தகுதித்தேர்வுக்கு எதிராக உள்ளனர்.

    ReplyDelete
  6. நல்ல கருத்து மக்களுக்கு. நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  7. நல்ல கருத்து மக்களுக்கு. நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  8. அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட ஒன்றை, நம்மூரிலுள்ள சிலர் மட்டும் எதிர்ப்பது, இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத் துணை போவதற்கே என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்...பாடியவன் பாட்டை கெடுத்தான்....என்ற நிலைதான்....

    ReplyDelete