Sunday, 26 March 2017

வேலை அல்லாத வேலை

     நேற்று நானும் என் மனைவியும் பேரங்காடி ஒன்றுக்குச் சென்றிருந்தோம். பில் போடும் இடத்தில் கூட்டமாக இருந்தது. “நீ எவ்வளவு நேரம்தான் நிற்பாய் போய் காரில் உட்கார்; நான் வருகிறேன்என்று கூறிவிட்டு வரிசையில் நின்றேன்.

     சற்று நேரம் கழித்து, பொருள்களுடன் காரை நோக்கிச் சென்றபோது, ஒரு பெண் என் மனைவியிடம்இது ஒங்களுக்கு வேலை அல்லாத வேலைஎன்று சொல்லிக்கொண்டே தன் மகனை ஸ்கூட்டரில் நிற்க வைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

     குர்குரே பாக்கெட்டில் இருந்ததை சிந்தாமல் சிதறாமல் தின்றுவிட்டு அந்த பாலித்தின் உறையை கீழே போட்டுள்ளான்.”இப்படி கண்ட இடத்தில் கீழே போடலாமா? அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடு அல்லது எடுத்துக் கொண்டுபோய் வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போடுஎன்று  என் மனைவி சொல்ல அவனும் குனிந்து எடுத்தான். அந்தச் சமயத்தில்தான் அவனுடைய அம்மா, “இது ஒங்களுக்கு வேலையல்லாத வேலை’ என்று சொல்லவும் அவன் குனிந்து எடுத்த பாலித்தீன் உறையை மீண்டும் கீழே போட்டுவிட்டான்.

     
எங்கள் தெருவில் வசிக்கும் ஒருவரது பையன் – பள்ளியில் படிக்கும் சிறுவன்- அவர்கள் வீட்டிற்கு முன்புறம் திறந்தவெளியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். “உங்கள் வீட்டில் கழிப்பறை இல்லையா? இது நல்ல வழக்கம் இல்லையே” என்று சொல்லிவிட்டு நடைப் பயிற்சியைத் தொடர்ந்தேன். “அவருக்கு இது வேலை இல்லாத வேலை” என்று அவனுடைய அம்மா கூறியது காதில் விழுந்தது. அதைக் கண்டு கொள்ளாமல் வேகமாக நடையை எட்டிப் போட்டேன்.

     இப்போதெல்லாம் அவன் அப்படி வெளியில் சிறுநீர் கழிப்பதில்லை. காரணம் என்னுடைய அறிவுரை அன்று. என்னுடைய பைனாகுலர். சில நாள்களில் பறவைகளைக் கூர்ந்து நோக்குவதற்காக என் பைனாகுலரைக் கழுத்தில் மாட்டியபடி நடைப்பயிற்சிக்குச் செல்வதுண்டு. ஒரு நாள் அந்தச் சிறுவன்  சிறுநீர் கழிக்கையில் அவனை நோக்கி என் பைனாகுலரைத் திருப்பினேன்; அவ்வளவுதான்.

       பொது இடங்களை மாசுபடுத்தக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சொன்னாலும்  சிலருக்குக் கோபம் கொப்பளிக்கிறதே ஏன் எனக் கேட்டாள் என் மனைவி.

     “வா இருவரும் சென்று திருவள்ளுவரிடம் கேட்போம்” என்று சொன்னேன். அவளும் தலையாட்டினாள்.

     “ஐயா வள்ளுவரே! வணக்கம். நாங்கள் நல்லதுக்குதானே சொன்னோம். அந்த அம்மாக்கள் எங்கள்மீது கோபப்படுகிறார்கள்” என்று கூற, வள்ளுவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

      நலத்தின்கண் நாரின்மைத் தோன்றின் அவன்தன்
      குலத்தின்கண் ஐயப் படும்

   எனச் சினத்துடன் சீறினார்.

   “ஐயா, இக் குறளுக்கானப் பொருள்.........’ என்று இழுத்தேன்.
   “போய் பரிமேலழகரிடம் கேள்” என்றார்.

   “சமுதாய நலத்தில் ஒருவனுக்கு ஆர்வம் இல்லை என்றால்  அவனுடைய குலத்தின் மீதே சந்தேகப்பட வேண்டியுள்ளது” என்று  நச்சென்று பரிமேலழகர் பகர்ந்தார்!

   அதற்கு அடுத்தவாரம் திருவள்ளுவரைப் பார்த்துப் புலம்பினேன்.

   “ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டுகிறாயே” என்று ஒரு கல்லூரி மாணவனைடம் கேட்டேன். “நீங்கள் என்ன ட்ராபிக் போலீசா. இது உங்களுக்கு வேலை அல்லாத வேலை’ என்றான் அந்த மாணவன். என் சோகக் கதையைச் சொல்லி முடித்ததுதான் தாமதம்.மீண்டும் கோபம் பொங்க ஒரு குறளைக் கூறினார்.

  ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையார்
  செத்தாருள் வைக்கப் படும்

   என்று கூறிவிட்டு ஆலங்குச்சியால் பல்தேய்த்தபடி நடையைக் கட்டினார்.

வள்ளுவர் உணர்த்துகிறார். ஆனால் சிலருக்கு  ஒணத்தி இல்லையே.


9 comments:

  1. Very beautiful social awareness. Prof.Pandiaraj

    ReplyDelete
  2. Very nice and public thinking activities

    ReplyDelete
  3. Very nice and public thinking activities

    ReplyDelete
  4. வள்ளுவரைத் துணைக்கழைத்த அழகு அருமை. ஆனால் வள்ளுவர் தான் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார். ஆனாலும் இந்தக் கடுமை தேவை தான்

    ReplyDelete
  5. As usual very fantastic write up.

    ReplyDelete
  6. இது உங்களுக்கு வேலை இல்லாத வேலைதான். ஏனென்றால் நம் மக்கள் மனம் அப்படி! நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  7. இது உங்களுக்கு வேலை இல்லாத வேலைதான். ஏனென்றால் நம் மக்கள் மனம் அப்படி! நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete