எனது கனடா நாட்டுப் பயணம் நிறைவுக்கு வரும்
சமயத்தில் நான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மகிழ்ந்த தருணம் இதுவாகும்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சிறப்பாகச் சொல்லி வைத்த ஒளவையாரின்
வாயில் ஒரு பிடி சர்க்கரையைப் போட்டால் சரியாக இருக்கும்.
ஒட்டாவா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த
தமிழ் மாலைப்பொழுது என்னும் விழா ஒட்டாவா நகரில் புகழ் பெற்ற ஒமர் டிஸ்லாரியர்ஸ்
உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது. மேடை அலங்காரம் எளிமையாகவும் புதுமையாகவும்
இருந்தது. ஆங்காங்கே தமிழ் உயிரெழுத்துகளை அழகுற அமைத்துப் பின் எழினியை(back drop) எழில்பட அமைத்திருந்தார்கள்.
தமிழ்ச் சங்கத்திற்கென புதியதாக வடிவமைக்கப்பட்ட ஒர் இலச்சினை
மேடைக்குக் கூடுதல் அழகை அளித்தது. அந்த இலச்சினையை வடிவமைத்தப் பெண்மணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அரங்கத்தின் உள்ளே அடியெடுத்து வைத்ததும்
பட்டுச்சேலை உடுத்திப் பங்காக நின்ற மகளிர் நமது பாரம்பரிய முறையில் சந்தனம்
அளித்து வரவேற்றார்கள். அவர்கள் மட்டுமா? விழா ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளை ஏற்று
விழாவுக்கு வந்தவரில் தொண்ணூறு விழுக்காட்டினர்
பாரம்பரிய உடையில் வந்திருந்தார்கள். என்னையும் சேர்த்துதான்.
அத்திப் பூத்தாற்போல் சேலையணியும் என் மகளும் கூட
ஆர்வத்துடன் சேலையணிந்து அழகுப் பெட்டகமாய் வந்தாள்!
பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்த சின்னச்
சின்னப் பெண் குழந்தைகள் அரங்கத்தின் குறுக்கும் நெடுக்கும் ஓடியாடி விளையாடிக்
கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தபோது நம்மூர் திருமண விழாவின்போது சிறுவர்
சிறுமியர் ஒடியாடும் காட்சி நினைவில் தோன்றி மறைந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பா ஒலித்து
ஓய்ந்ததும் நண்பர் மதுரை சுந்தரமூர்த்தி
அவர்கள் அழகு தமிழில் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆங்கில இடைச்செருகல் இல்லாமல்
கவனமாகப் பேசினார்.
தொடர்ந்து குழந்தைகள் சிலர் குழுவாக வந்து பரத
நடனம் ஆடினார்கள்; சிலர் செவ்விய இசை வடிவில் பாடினார்கள்; வேறு சிலர் இசைக்
கருவிகளை இசைத்தார்கள். மனக்கணக்கில் பயிற்சி பெற்ற மற்றும் சிலர் கேட்டு
முடிக்குமுன் விடைசொல்லி அசத்தினார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு மற்றும்
இலங்கைவாழ் தமிழர்களின் வழித் தோன்றல்கள்.
பின்னர் ஆடவரும் மகளிரும் அணி அணியாய் வந்து
திரையிசைப் பாடல்களைப் பாடினார்கள். இவ்வாறு பதினெட்டு நிகழ்வுகள் அரங்கேறின. எல்லா
நிகழ்வுகளும் பாராட்டும்படியாய் இருந்தன. மைசூர்பா ஒன்றை எடுத்து எந்தப்பக்கம்
பிட்டுத் தின்றாலும் ஒரே மாதிரியான சுவை இருக்குமே அப்படியிருந்தன அத்தனை
நிகழ்வுகளும்!
நிகழ்வுகளின் நடுவில் என்னை மேடைக்கு அழைத்து
நண்பர் சுந்தரமூர்த்தி அறிமுகப்படுத்தினார். பத்து நிமிடங்களில் ஒரு குட்டி விநாடி
வினா நிகழ்ச்சியை நடத்தினேன். எல்லாமே தமிழ், தமிழர் தொடர்பான வினாக்கள். எல்லா
வினாக்களுக்கும் பார்வையளர் பகுதியிலிருந்து சரியான விடை அம்புகள் என்னை நோக்கி
வந்தன; வியந்து நின்றேன்! சரியான விடை சொன்னவர்களை உடனுக்குடன் மேடைக்கு அழைத்துப்
பரிசோலைகளை அளித்தது எனக்குப் புதுமையாக இருந்தது. தொடர்ந்து திருக்குறள்
காமத்துப்பால் பற்றிச் சில கருத்துகளைக் கூறி, அணங்குகொல் எனத் தொடங்கும் குறளின்
விளக்கமாக திரு.ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
அவர்கள் எழுதியுள்ள பாடலை ஒலிக்கச் செய்தபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
எல்லாப் புகழும் குறளுக்கே என எண்ணியவாறு மேடையை விட்டு இறங்கினேன்.
விழா நிறைவில் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல
நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. அத்தனை நூல்களையும் திருமதி அனிதாவின் தந்தையார்
அவர்கள் சென்னையிலிருந்து அன்பளிப்பாக அனுப்பிவைத்தார் என்பது இங்கு
குறிப்பிடத்தகுந்த கூடுதல் தகவலாகும். அவர் கோபிசெட்டிபாளையம் செட்டியார்
மெடிக்கல்ஸ் நிறுவுநர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
விழா முடிந்ததும் இரவு விருந்து களை கட்டியது.
எளிய தமிழ் நாட்டுச் சைவ உணவு வகைகள். உறவினர் இல்லத்தில் உண்பது போன்ற உணர்வு
ஏற்பட்டது. தஞ்சாவூர் பாணியில் அமைந்த இட்லியும் சாம்பாரும் என்றும் நினைவில்
நிற்கும். கனடாவில் கோலோச்சும் ஹோட்டல் தஞ்சை உணவகத்தார் நம்
பாராட்டுக்குரியவர்கள்.
துல்லியமாகத் திட்டமிட்டு விழாவை வெற்றிகரமாக
நடத்திக்காட்டிய திருமதி அனிதா வருண் அவர்களுக்கும் அவருடைய குழுவினருக்கும்,
நிகழ்ச்சிகளைத் தொய்வில்லாமல் தொகுத்து வழங்கிய சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் ஒரு
ஓ போடலாம்.
ஆக, இதனால்
சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், கனடாவில் வாழும் அயலகத் தமிழரிடம் தமிழ்
நலமாகவும் வளமாகவும் உள்ளது என்பதுதான்.
...........................................
முனைவர்
அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
அருமையான நிகழ்வினை மிக அழகாகத் தொகுத்துக்கொடுத்துள்ளீர்கள் ஐயா. //அயலகத் தமிழரிடம் தமிழ் நலமாகவும் வளமாகவும் உள்ளது என்பதுதான்//உண்மைதான் ஐயா...
ReplyDeleteதாங்கள் நடத்திய நிகழ்வு வெகுச் சிறப்பு என்றால் அதற்கு அங்கு வந்த சரியான பதில்கள் அதைவிடச் சிறப்பு. குழ்ந்தைகளுக்குப் புத்தகம் பரிசாக வழங்குவது பாராட்டிற்குரியது. குழந்தைகளும் தங்களுக்குப் பரிசாக வந்திருக்கிறதே என்று திறந்தும் பார்ப்பார்கள்தானே!! அதுவேநல்லதொரு தொடக்கம்.
துளசிதரன், கீதா
Superb sir really
ReplyDeleteதமிழின் வாசத்தை தரணியெல்லாம் மணக்க செய்த உங்களுக்கு நன்றி ஐயா ...
ReplyDeleteYou are lucky enough to participate in the function of your choice.Best Wishes
ReplyDeleteநீங்கள் பங்கு பெற்று சிறப்பித்தமைக்கு நன்றி,,,,என் ஆசை நிறைவேறியது....
ReplyDeleteகனடா தமிழ் நிகழ்வினை செவ்வனே விளக்கியது ஒட்டாவா நகரிலிருந்து வரும் நேரலை...! ஆனால் கட்டுரையின் கடைசி வரை... முத்தாய்ப்பு.
ReplyDeleteஐயா, கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. அதிலும் தமிழ் கற்றோருக்குச் சீரிய சிறப்பு. கடல் கடந்து பல நாடுகளை கடந்து சென்றாலும் தமிழ் மணம் வீசும் என்பதன் எடுத்துக்காட்டு இது. தமிழன் உலகை ஆண்டவன் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. நமது பண்பாடு தான் நம்மை உயர்தும் என்பதை உங்கள் கட்டுரை உரக்க சொல்கிறது. நன்றி.
ReplyDeleteதமிழின் வாசத்தை தரணியெல்லாம் மணக்க செய்த உங்களுக்கு நன்றி ஐயா ...
ReplyDeleteநல்ல வாய்ப்பு. பாராட்டுகள். தொகுத்துத் தந்த விதம் அருமையாக இருந்தது ஐயா.
ReplyDeleteவிழா நிகழ்வுகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
ReplyDeleteகனடாவில் தமிழர்கள் (நம்மவர்களும் சரி, இலங்கைத் தமிழர்களும் சரி) மிகுந்த தமிழ் உணர்வோடு செயல்படுவதை நான் அறிவேன். வாழ்க அவர்தம் வாழ்க்கைமுறை! (அந்த 'அணங்குகொல்' பற்றி விரிவாக எழுதியிருக்கலாமே!)
ReplyDelete-இராய செல்லப்பா சென்னையில் இருந்து.