Thursday, 26 October 2017

நூலக நாடு நூலகம் நாடு

 எனக்கு நூலகங்கள் மிகவும் பிடிக்கும். நான் நான்காம் வகுப்பில் படித்தபோது எங்கள் ஊர் ஊராட்சி  நூலகம் சென்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் எழுதிய மலைக்கள்ளன் நாவலைப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. அந்தச் சிறு வயதில் தொடங்கிய நூலக ஆர்வம் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து நூலக அறிவியலில் ஒரு பட்டம் பெறவும் அடித்தளமாக அமைந்தது.

  ஒரு பொது நூலகத்தைப் பார்க்க முடியுமா என  என் மகள் புவனாவிடம்  கேட்டேன். உள்ளூர் நூலகத்தில் நானும் உறுப்பினர் ஆக நினைத்தேன்., வாங்கப்பா  போகலாம்என அழைத்தாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் எங்கள் கார் கார்லிங்உட் கிளை நூலகத்தின் முன் உரிய கார் நிறுத்தும் பகுதியில் நின்றது.

  கண்ணாடிக் கதவுகளைத் திறந்து உள்ளே சென்றோம். அடுத்த அடியை என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய நூலகமா?” என வியந்து அப்படியே உறைந்து நின்றேன்.  மூன்று தளங்களில் அமைந்த பெரிய நூலகமாக இருந்தது.


      நூலக உதவியாளர் சுட்டிக்காட்டிய கணினியில் தன் பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளிட்ட அடுத்த வினாடியில்   புவனா கோவிந்தராஜு என்னும் பெயர் பொறித்த கண்ணைக்கவரும் நூலக உறுப்பினர் அட்டை வந்து விழுந்தது. உறுப்பினர் ஆவதற்குக் கட்டணம் எதுவுமில்லை! ஒட்டாவா நகரில்  வசிப்பதற்குச் சான்றாக ஓட்டுநர் உரிமத்தை காட்டினாள்  அவ்வளவுதான்.

   அடுத்து அந்த உதவியாளர் சொன்ன தகவல்தான் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது இன்ப அதிர்ச்சி! இனி நீங்கள் முப்பது புத்தகங்கள், பத்து டி.வி.டி கள் ஆகியவற்றை  வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்காதா என்ன?

    நாவல் என எழுதப்பட்ட நூலடுக்கில் என் மகள் தான் விரும்பிய நூல்களைப் பார்த்து ஒரே நிமிடத்தில் எடுத்தாள். நான் சிறுகதை நூலை எடுக்க விரும்பினேன். அருகில் இருந்த கணினியில் Short stories by Canadian authors  என உள்ளீடு செய்தேன். உடனே ஒரு பத்து நூல்களின் பெயர், நூலாசிரியர், அவை தற்போது நூலகத்தில்  உள்ளதா இல்லையா, இருந்தால் எந்த அடுக்கு போன்ற விவரங்கள் திரையில் தோன்றின. விசைப்பலகைக்கு அருகில் சிறு தாள்களும் பென்சிலும் இருந்தன. விவரத்தை எழுதிக்கொண்டு குறிப்பிட்ட அடுக்கை நோக்கி விரைந்தேன்- கண்டேன் புத்தகத்தை.


  பெரிய  அலமாரிகளில் நூல்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. செவி நுகர் நூல்கள்(Audio books)  நூற்றுக் கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    எடுத்த நூல்களை ஒவ்வொன்றாக Barcode reader மேல் வைக்க நூல் பற்றிய விவரம் கணினித் திரையில் தோன்றியது. நூல் விவரம், திருப்பிக் கொடுக்க வேண்டிய தேதி முதலியவற்றோடு ஒரு சிறு துண்டுச்சீட்டு வெளியில் வந்தது. 

   குழந்தைகள் பிரிவில் அவர்களுக்கேற்ற இருக்கைகள், வண்ணப் படங்களுடன் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், விளையாட்டுப் பொம்மைகள் என எல்லாம் அசத்தலாக இருந்தன. தொட்டில் பழக்கம் இறுதி வரைக்கும் என்பதால் பெற்றோர் தம் குழந்தைகளுடன் நூலகத்திற்கு வருகிறார்கள்.

   பதின்ம வயதினருக்குத் தனிப்பிரிவு உள்ளது. அவர்தம் பருவத்திற்கு ஏற்ற நூல்களை அங்கு பார்க்கலாம். அவர்களுக்கென பல்வேறு போட்டிகளையும் நடத்திப் பரிசளிக்கிறார்கள். எட்டிப் பார்த்தேன். ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. ஒரு கல்லூரி மாணவன் குலுக்கலில் ஒரு சீட்டை எடுத்து அதில் குறிப்பிட்டவாறு நாய்போல குரைத்தான். இன்னொருவன் கராத்தே செய்து காட்டினான். இப் போட்டிக்கு Scavengers Hunt என்று பெயராம்!

  ஆழ்ந்து படிப்போருக்குத் தனிப்பிரிவு,  நூலக நண்பர்களுக்குத் தனி இடம் என ஏகப்பட்ட பிரிவுகள் உள்ளன. முதியோருக்கான  பிரிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப் பிரிவில் இருந்த புத்தகங்கள் எல்லாம் பெரிய  பெரிய எழுத்துகளில் இருந்தன. முதுமை என்பது இரண்டாவது குழந்தைப்பருவம் என்பதை மனத்தில் கொண்டு இப்பிரிவை அமைத்திருக்கிறார்கள்!

    சுவர்களில் உள்ளூர் ஓவியர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் வரைந்த படங்களை அழகாக மாட்டியிருந்தர்கள்.


   அங்குள்ள இருக்கை வசதிகளைப் பார்த்தாலே உட்கார்ந்து படிக்கலாம் என்னும் ஆசையைத் தூண்டுகிறது. ஓர் இடத்தில் புத்தக அலமாரியின் அருகில் ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். இப்படி சற்று நேரம் தூங்கி எழுந்து படிக்கவும் அங்கு அனுமதி உண்டாம்!

    நம்மூரில் நூலக வாசகர் வட்டம் இருப்பது போல இங்கும் நூலக நண்பர்கள் என்னும் அமைப்பு உள்ளது. நம் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் மாதம்தோறும் சிந்தனை முற்றம் கூட்டம் நடப்பதுபோல இங்கே வாரந்தோறும் நடைபெறுகிறது. அப்போது புதிய நூல்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு Book chat என்று பெயர் வைத்துள்ளார்கள். மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கருத்தரங்குகளும், குழந்தைகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சிகளும் வாரம்தோறும் நடைபெறுகின்றன.

    “ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்னும் பட்டுக்கோட்டையார் பாடல்வரியை கனடா நாட்டினருக்கு யார் மொழிபெயர்த்துச் சொன்னார்களோ தெரியவில்லை. அறிவை வளர்த்துக்கொள்ள வசதியாக நூலகக் கட்டமைப்பை பெரிய அளவில் உருவாக்கியுள்ளார்கள்.

   வெளியில் வரும்போது நூலகரிடம் பேசினேன். கனடா நாட்டில் நூலக இயக்கம் என்பது 1779 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டதை நினைவு கூர்ந்தார். “கோலன் பகுப்பு முறையைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா?” எனக் கேட்டேன். “வொன் மிஸ்டர் ரெங்கநாட்டன்” என்றார். ஆம். நூலக அறிவியலின் தந்தை எனப்போற்றப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரெங்கநாதன் அவர் எங்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்று பெருமையுடன் சொன்னேன். உடனே “வாவ்” என்று கூவினார்!


   வெளியே வரும்போது என் மகள், ‘அப்பா இங்கே கைகளைக் காட்டுங்கள்” என்று சொல்லி ஒரு பொத்தானை அழுத்தினாள். சில்லென்று ஒரு திரவம் துளி வந்து கையில் பரவியது. அது கிருமி நாசினியாம். பலரும் தொட்ட நூல்களை நாமும் தொட்டிருப்போம். நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக இதை வைத்துள்ளனர் என விளக்கம் தந்தாள்! வியந்து நின்றேன்!



    நான் ஒரு நூலக அறிவியல் பட்டதாரி. எனது கணிப்பில் இது உண்மையிலேயே மிகச்சிறந்த பொது நூலகமாகும்.

குறிப்பு: இக் கட்டுரையை இனிய குரலில் பாடியும் பேசியும் நூலக   விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கரூர் நண்பர் விமலாதித்தன் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
......................................
முனைவர் அ. கோவிந்தராஜூ,
கனடாவிலிருந்து.




7 comments:

  1. ஐயா இந்தக் கட்டுரைத் தலைப்பே மிகவும் அருமை. இன்று பல ஆசிரியர்களே வாசிப்பை நிறுத்தி விட்டு மாணவர்களை குறை சொல்லும் நிலை வந்துவிட்டது. நூலகம் இல்லாத கல்விக்கூடங்கள் பல உள்ளன இங்கு. ஆனால் நீங்கள் குறிப்பிடும் நூலகமும் அதில் உள்ள வசதிகளும் மெய் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் வீட்டில் நூலகம் வைத்திருப்பாதாக ஒரு கூட்டத்தில் கூறியதிலிருந்து நான் நூல்கள் சேகரிப்பு செய்து வருகிறேன். இந்த தகவல் மிகவும் பயனுள்ளது.

    ReplyDelete
  2. படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது ஐயா
    நம்ம ஊரில் எக்காலத்திலாவது இதுபோன்ற நூலகங்கள் வருமா என்பது சந்தேகமே,
    நன்றி ஐயா

    ReplyDelete
  3. வாசிப்போருக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்கு லயித்து நீங்கள் எழுதியுள்ள விதம் அருமை. நன்றி.

    ReplyDelete
  4. ரசனையான பகிர்வு ஐயா... ஏனோ பெருமூச்சு வருகிறது... (!)

    ReplyDelete
  5. எஸ். ஆர். ரெங்கநாதன் பற்றி குறிப்பிட்ட பொழுது எங்கள் இந்திய நாட்டை சேர்ந்தவரென்று நீங்கள் சொன்னது தங்கள் தேசப்பற்றைக் காட்டியது.
    தமிழ்நாட்டைச் சேர்ந்தவரென்று சொல்லியிருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன்.
    படிக்கத் தூண்டும் மொழி நடையில் இருந்தது பதிவு. வாழ்த்துக்கள் அண்ணா...!

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு நூல்கள்,நூலகங்கள்,நூலகர்கள் மீது தாங் அன்பு அளப்பரியது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  7. என்ன அருமையான நூலகம்! ஐயா! மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. இங்கும் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மிக மிக அழகாக இருக்கும். அங்கு சென்றாலே புத்தகம் வாசிக்க வேண்டும் என்று தோன்றிவிடும். கிட்டத்தட்ட இங்கு அதே போன்றுதான் இருக்கிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இங்கும் அதற்குச் சென்று வாருங்கள்..
    கீதா

    ReplyDelete