காதல் என்பது செம்புலப் பெயல்
நீரைப்போல் மனங்கலத்தல் ஆகும். உடற் கவர்ச்சியால், உடைக் கவர்ச்சியால், உரைக்
கவர்ச்சியால் பெண்களைக் கவர முடியாது
என்னும் கருத்தை நா.பார்த்தசாரதி அவர்கள் தம் நாவல்கள் பலவற்றில் மணியிடை இழையாக வைத்துள்ளார்.
சுலக்சணா காதலிக்கிறாள் என்னும் நாவலின் முன்னுரையில், “இது ஒரு நுணுக்கமான மனோதத்துவக் கதை” என்று
குறிப்பிடுகிறார் நாவலாசிரியர்.
சுலக்சணா உதயா பல்கலைக்கழகத்தில்
தங்கிப்படிக்கும் மாணவி. கனகராஜ் என்னும் மாணவன் அவளிடம் நட்பு கொள்கிறான். ஒரு
கட்டத்தில் தன் காதலைத் தெரிவிக்கிறான். ஒரு நாள் தன் தோழியை மானபங்கம் செய்யவந்த
முரடனை எதிர்த்துப் போராடுகிறாள் சுலக்சணா. அப்போது உடனிருந்த கனகராஜ் பயந்து ஓடி
ஒளிகிறான். வீராசாமி என்ற மற்றொரு சக மாணவன் முன்வந்து முரடனுடன் போராடி
விரட்டியடிக்கிறான். போகிற போக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முரடன்
வீராசாமியின் கையை வெட்டித் துண்டாக்கி விடுகிறான். இதற்குப் பிறகு சுலக்சணா
கனகராஜை அடியோடு வெறுத்தாள்; வீராசாமியை உயிருக்குயிராக நேசித்தாள்.
“பணமும் படிப்பும் முக வசீகரமும் உள்ள ஒரு
பயந்தாங்கொள்ளியை விட வறுமையும் அழகின்மையும் உள்ள ஒரு தைரியசாலியைத் தன்
பிரியத்துக்கு உரியவனாகத் தேர்ந்தெடுக்கும் புதுமைப் பெண்ணாகிய சுலக்சணாவின் கதை
இது” என்று நா.பா. அவர்கள் நாவலின் முன்னுரையில் கூறியிருப்பது மிகப் பொருத்தமாக
அமைகிறது.
நா.பா.வின் நெற்றிக்கண் இரண்டு மையக் கருத்துகளைக் கொண்ட நாவலாகும்.
ஒன்று நக்கீர தைரியமுடைய பத்திரிகையாளனின் புறப்போராட்டம். இரண்டு ஒரு காதலனின் அகப்போராட்டம். பத்திரிகை முதலாளி
நாகசாமி நடத்துகிற நாளிதழ் ஒன்றின் இதழ் ஆசிரியராகப் பணியாற்றுகிறான் சுகுணன். நாகசாமியின்
மகள் துளசியுடன் சுகுணனுக்கு ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. ஆனால்
யாரும் எதிர்பாராத வகையில் துளசிக்கு வேறொரு இடத்தில் மணம் முடித்து விடுகிறார்
நாகசாமி. இங்கேதான் சுகுணனின் அகப்போராட்டம் தொடங்குகிறது. முதலில் துளசியிடம்
கடும் கோபம் கொள்கிறான். பிறகு விரக்தியடைகிறான். பின்னர் அவளிடம் இரக்கப்பட்டு
அன்புகாட்டுகிறான். துளசி என்னவோ தொடர்ந்து காதலுணர்வோடு பழகுகிறாள். மாற்றானுக்கு
வாழ்க்கைப்பட்ட பிறகு தன்னிடம் எப்படிப் பழக வேண்டும் என்னும் எல்லையை உணர்த்தும்
நோக்கில் துளசியிடம்,
“இனிமேல் நாம் பழகுவதற்கு எல்லைகள்
உண்டு; அது எனக்குப் புரிந்துவிட்டது. அது உனக்கும் புரிய வேண்டும். உனக்கு என்
மேலிருக்கிற அன்பை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்வது கூட உனக்குக் கெட்ட பெயரை
உண்டாக்கும்”
என்று சுகுணன் அறிவுறுத்துகிறான்.
அவள் படித்தவள் அல்லவா? புரிந்து கொள்கிறாள். தன் கணவனுக்கும் புரியவைக்கிறாள். சுகுணன் புதிய பத்திரிகையைத் தொடங்குவதற்கு உடுக்கை இழந்தவன் கைபோல ஓடிச்சென்று தன் நகைகளையும் கழற்றிக் கொடுத்து உதவுகிறாள்.
அவள் படித்தவள் அல்லவா? புரிந்து கொள்கிறாள். தன் கணவனுக்கும் புரியவைக்கிறாள். சுகுணன் புதிய பத்திரிகையைத் தொடங்குவதற்கு உடுக்கை இழந்தவன் கைபோல ஓடிச்சென்று தன் நகைகளையும் கழற்றிக் கொடுத்து உதவுகிறாள்.
காதலிக்குத் திருமணம் ஆனபின்னரும்
அவளிடத்தில் அன்பு காட்டுவது என்பது பொருந்தா நெறிபோலத் தோன்றும். ஆனால் உளவியல்
நோக்கில் இது உணர்வு மடைமாற்றம் எனப்படுகிறது. அதாவது காதல் உணர்வு நட்புணர்வாக
பரிணாமம் கொள்கிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காதலானது திருமணத்தில் முடியாத
நிலையில், நட்பாக மலர்வது அக் காதலர் இருவரின் மன நலத்திற்கு நல்லது என உளவியல்
உரைக்கிறது.
ஆனால் நடப்பியல் வாழ்வில் காதலில்
தோல்வியுற்ற ஆண் தன் காதலியின் திருமண வாழ்விலும் குடும்பச் சிக்கலை
ஏற்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. அமிலத்தை வீசுகிறான் அல்லது அவளைக் கொல்லவும்
துணிகிறான். இந்த நாவலில் சுகுணன்-துளசி ஆகியோரின் நிறைவேறாத காதல் நட்பாக மாறுவது
இந்தச் சிக்கலுக்கு மாற்றாக அமைகிறது.
நட்பு காதலாக மாறும்போது காதலும்
நட்பாக மாறலாமே. மனத்துக்குக் கடிவாளம் போடும் திறனுடையவர்களுக்கு மட்டுமே இது
சாத்தியமாகும்.
................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து
நட்பு காதலாக மாறும்போது காதலும் நட்பாக மாறலாமே. மனத்துக்குக் கடிவாளம் போடும் திறனுடையவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.
ReplyDeleteஅருமை ஐயா
உண்மை
நட்பு காதலாக மாறும்போது காதலும் நட்பாக மாறலாமே. மனத்துக்குக் கடிவாளம் போடும் திறனுடையவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.// நல்ல வரிகள்.
ReplyDeleteநல்ல பதிவு ஐயா.
துளசிதரன், கீதா
நீங்களே கூறிவிட்டீர்கள், மனதுக்கு கடிவாளம் போடுவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
ReplyDelete"உடற் கவர்ச்சியால், உடைக் கவர்ச்சியால், உரைக் கவர்ச்சியால் பெண்களைக் கவர முடியாது".
ReplyDeleteஉரைக்கவர்ச்சி... நல்ல சொல்லாட்சி... மருத்துவ முத்தம் போல....?