எங்கள் சொந்த ஊரான கூவத்தூரில் மிஞ்சிப் போனால் பத்து வீடுகளில் சைக்கிள் இருக்கும். ஒருவர் சொந்தமாக சைக்கிள் வைத்திருக்கிறார் என்றால் அவர் வசதியானவராகக் கருதப்பட்ட காலம்(1960) அது. சைக்கிள் வாங்கும் அளவுக்கு வசதியான நிதிநிலை இருந்தும் எங்கள் அப்பா ஏனோ சைக்கிள் வாங்கவில்லை. அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
எங்கள் ஊரின் சாலை மிகவும்
குறுகியது. சாலையின் இரு பக்கமும் பெரிய பள்ளம் இருக்கும். ஒரு பேருந்தோ லாரியோ
வந்தால் சைக்கிளை ஓரங்கட்ட முடியாது. அல்லது அதற்கென ஒரு தனித்திறமை வேண்டும்.
எங்கள் அப்பா ஒரு சைக்கிள் வாங்கித் தராமைக்கு அதுவும் ஒரு காரணமாக
இருந்திருக்கலாம்.
எங்கள் வீட்டில் நான் மற்றும் அண்ணன் இருவர்
இருந்தோம். அண்ணன் இருவரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து நன்றாக ஓட்டக்
கற்றுக்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு ஓர் அணா வாடகை.
எங்கள் பெரிய அண்ணன் பெருமாள்
உள்ளூர் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்ததும் அப் பள்ளியின்
தலைமையாசிரியர் (பின்னாளில் எனக்கும் தலைமையாசிரியர்) வடவீக்கம் சாமிநாதன்
அவர்களின் வழிகாட்டுதலில் எங்கள் ஊரிலிருந்து மூன்று மைலுக்கு அப்பால் வடவீக்கம்
என்னும் ஊரில் இருந்த ஒரு
கிறித்துவ நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அப்போதும்
அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தர எங்கள் அப்பா முன்வரவில்லை. எங்கள் அண்ணனும்
சைக்கிள் வாங்க வேண்டுமென்று ஏனோ அடம்பிடிக்கவில்லை! இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு
நடந்து சென்று படித்தார்.
அவர் எட்டாவது படிக்கும்போது
ஒருநாள் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டில் ஒரு சைக்கிள் நின்றது. யாரோ
மேலத்தெரு பக்கிரிப் படையாச்சி என்பவர் எங்கள்
அப்பாவிடம் வாங்கிய முப்பது ரூபாய் கடனை அடைக்க முடியாமல் தன் சைக்கிளை
கொண்டுவந்து வீட்டில் விட்டுச் சென்றார் என்பது எங்கள் அம்மா சொல்லித்தான்
பின்னாளில் எங்களுக்குத் தெரிய வந்தது.
அது ஒரு பழைய காலத்து 24 அங்குல
உயர ஹெர்குலிஸ் சைக்கிள். அரை செயின் கவர் உண்டு. அது பல இடங்களில் ஒடுங்கியும்
உப்பியும் இருந்ததால் சைக்கிளை ஓட்டும்போது செயின் உராய்ந்து விதவிதமான ஒலி
எழுப்பும். பின் பிரேக் மட்டும் பிடிக்கும்; முன் பிரேக் பிடிக்காது. சைக்கிள்
என்ன நிறம் என யாராலும் கணிக்க முடியாது. ஹேண்டில் பாரில் ஒரு பெல் இருந்தது.
நிக்கல் உரிந்துபோய் கன்னங்கரேலென்று
இருக்கும். சில சமயம் நன்கு அடிக்கும்; சில சமயம் அதற்கும் சளிப் பிடித்துக் கொணகொண
என அடிக்கும். முரட்டுத் தோலால் ஆன சீட். அதற்கு கவர் ஏதும் இல்லை.
அந்தக் காலத்தில் சைக்கிள்
வைத்துக்கொள்ள லைசென்ஸ் கட்டாயமாக இருந்தது. ஊர் மணியக்காரரிடத்தில் எட்டணா
கொடுத்தால் ஒரு முக்கோண வடிவ அலுமினிய வில்லையைத் தருவார். அதை சைக்கிளின் முன்
பிரேக் கம்பியில் பொருத்திக்கொள்வதுண்டு.
பொதுவாக மக்கள் 22 அங்குல சைக்கிள்
வைத்திருப்பது வழக்கம். ஆனால்
வழக்கத்திற்கு மாறாக உயரமான சைக்கிள் என்பதால் என் அண்ணனால் அதில் ஏறி உட்கார்ந்து
ஓட்ட முடியாத நிலை. எப்படியோ தத்திக்குத்திக் குரங்குப்பெடல் போட்டு ஓட்டத்
தொடங்கினார். கொஞ்சம் வளர்ந்தபின் ஏறி உட்கார்ந்து ஓட்டினார்.
பழைய சைக்கிள் என்பதால் அடிக்கடி
கோளாறு ஏற்படும். அதைச் சரிசெய்ய வீட்டில் காசு கிடைக்காது. காலப்போக்கில் அவரே
சரிசெய்யும் நுட்பங்களில் தேர்ந்தவர் ஆனார். இந்த சைக்கிளை வைத்துக்கொண்டு ஆறு
மைல் தூரத்திலிருந்த ஜெயங்கொண்டம் என்னும் ஊரில் இருந்த கழக உயர்நிலைப்பளியில் பள்ளி இறுதி வகுப்பான
பதினோராம் வகுப்பும் முடித்தார். பின்னர் அவர் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில்,
விடுதியில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்தார். மூன்று மாதம் சென்று விடுமுறையில்
ஊருக்கு வந்தவர் விடுமுறை முடிந்து அந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டு கும்பகோணம்
சென்றுவிட்டார். அதில்தான் கும்பகோணம் தெருக்களில் சுற்றித் திரிந்தாராம். அங்கே
நான்காண்டு படித்து முடித்ததும் சைக்கிளில் ஊர் திரும்பினார்.
வந்ததும் வாராததுமாக ஆண்டிமடம் கழக
உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் வேலை கிடைத்தது. தொடர்ந்து அதே சைக்கிளில்
சவாரி செய்தார்! ஒரு மாதத்திற்குள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்ட
மேற்படிப்பில் இடம் கிடைக்க, வேலையை மட்டுமன்று சைக்கிளையும் விட்டுச்
சென்றுவிட்டார்.
அப்போது (1964) நான் உள்ளூரில் இருந்த
ஊராட்சி ஒன்றியப் பள்ளியில்
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்று
ஆண்டிமடம் கழக உயர்நிலைப்பள்ளியில் படிக்க வேண்டும் என்னும் ஆசை என்னைத்
தொற்றிக்கொண்டது. எனக்கு சைக்கிள் கற்றுத்தர என் நடு அண்ணன் கிருஷ்ணன் எவ்வளவோ
முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில், “உனக்கு இந்த ஜென்மத்தில் சைக்கிள் ஓட்ட வராது”
என அறிவித்துவிட்டார். நான் விட்டேனா? நண்பர்களின் உதவியால் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அவ்வப்போது
கீழே விழுந்து விழுப்புண்பட்டு, அவை வீரத் தழும்புகளாக மாறியது தனிக்கதை. பிறகு அந்த சைக்கிளில் நான் சுற்றாத இடமில்லை;
செல்லாத ஊரில்லை. ஹேண்டில் பாரில் கைகளை வைக்காமல் ஓட்டும் வித்தை கூட எனக்கு
அத்துபடியானது! ஆனால் உள்ளூரில் நான் ஏழாம் வகுப்பை முடிப்பதற்குள், அந்த சைக்கிள்
முதுமை அடைந்து, சரி செய்யமுடியாத அளவுக்கு உருக்குலைந்து வீட்டுச் சுவரின் மீது
சாத்தி வைக்கப்பட்டது.
மூன்று மைல் தூரத்தில், ஆண்டிமடம் என்னும் ஊரில் இருந்த கழக
உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து ஓராண்டு முழுவதும் தோளில்
புத்தகப்பை, கையில் வளையத்துடன் கூடிய ஈயம் பூசப்பட்ட பித்தளை டீம்பாசில் பழைய
சோறு, மாங்காய் உப்புக்கன்னம் சகிதமாக நடந்து சென்று படித்தேன். அப்படி நடந்து
செல்லும்போது ஊர்க்காரர் யாராவது ஆண்டிமடம் செல்வார்கள். அவர்கள் என்னை சைக்கிளின்
பின்னால் ஏறிக்கொள்ளச் சொல்வார்கள்.
ஆனால் நான் மறுத்துவிட்டு நடந்தே செல்வேன். காரணம் உண்டு. சைக்கிளை நிறுத்தி
ஏற்றிக்கொள்ளமாட்டார்கள். சைக்கிள் மெல்ல ஓடும்போதே நாம் ஓடிச்சென்று ஏறிக்கொள்ள
வேண்டும். அந்த வித்தை அப்போது எனக்கு அறவே கைகூடவில்லை!
நான் கால்கடுக்க கால்களில்
செருப்புகள் கூட இல்லாமல் நடந்து செல்வதைப் பார்க்கப் பொறுக்காமல் என் நடு அண்ணன்
ஒரு நீண்ட மடலை எழுதி கோவையில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என்
பெரிய அண்ணன் பெருமாளுக்கு அனுப்பினார். அடுத்த மாதமே ஒரு பச்சை வண்ண சைக்கிள்
(கொஞ்சம் பழைய சைக்கிள்) டிவிஎஸ் பார்சல் சர்வீஸ் மூலம் வந்து சேர்ந்தது.
அப்பப்பா! தனியாக சொந்த சைக்கிளில்
பள்ளிக்குச் சென்ற அந்த முதல்நாள் அனுபவம் இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது!
அந்த சைக்கிளை ஓட்டிச் சென்று பள்ளியில் நிறுத்தியபோது ஒரு பெருங்கூட்டம் என்
சைக்கிளை மொய்த்துக் கொண்டது. என் நண்பர்கள் மெத்து மெத்து என்றிருந்த சீட்கவரை
மெல்லத் தொட்டுப் பார்த்தார்கள். நண்பர்களிடையில் ஒரே நாளில் எனது மதிப்பு
பலமடங்கு உயர்ந்தது போல உணர்ந்தேன். பள்ளி நேரம், தூங்கும் நேரம் தவிர அந்த
சைக்கிளிலேயே திரிந்தேன்.
சைக்கிளைப் பளபள எனத் துடைத்துத்
தேங்காய் எண்ணெய் விடுவேன். அந்த சைக்கிளிலும் அவ்வப்போது பழுதுகள் ஏற்படும். ஒரு
நாளும் சைக்கிள் கடையில் விட்டுப் பழுது பார்த்ததில்லை. டியூபில் ஏற்படும்
பங்க்சரை நானே ஒட்டிவிடுவேன். சக்கரத்தில் உருவாகும் கோட்டத்தையும் சரி
செய்வேன். முழு சைக்கிளையும்
பிரித்துப்போட்டு, வாங்கிவரும் புதிய உதிரி பாகங்களைச் சேர்த்து மீண்டும் பூட்டும்
வல்லமையை வளர்த்துக் கொண்டேன். படிப்பு வராவிட்டால் சைக்கிள் கடை வைப்பது என்ற
எண்ணத்தோடும் இருந்தேன்.
ஒருமுறை எங்கள் ஊரிலிருந்து
பதினேழு மைல் தூரத்தில்
மதனத்தூர் என்னும் ஊரில் அங்கே ஓடிய ஆற்றில் நடந்த படப்பிடிப்பைக் காண சைக்கிளில்
போனேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடித்த ‘தேர்த்திருவிழா’ என்னும் படம் அது. 1968இல் வெளியான அந்தப்
படம் ஜெயங்கொண்டம் பிரிமியர் கலா பேலஸ் என்னும் பெயர்கொண்ட தியேட்டரில் ஓடியபோது
அதே சைக்கிளில் சென்று முதல்நாள் காட்சியைப் பார்த்ததை மறக்க முடியுமா?
இந்தக் காலக் கட்டத்தில் என் நடு
அண்ணார் ஒரு சிறிய மளிகைக்கடையை நடத்திவந்தார். அக் கடைக்குத் தேவையான பொருள்களை
வாங்க வெளியூர்களுக்கு சைக்கிளில் சென்று வருவதும், தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும்போது
சைக்கிளின் பின்னால் உள்ள கேரியரின் இருபக்கத்திலும் இரு செப்புக்குடங்களைத்
தொங்கவிட்டுக் குடிதண்ணீர் கொண்டுவருவதும் என் வேலையாக இருந்தது.
முப்பது மைலுக்கு அப்பாலிருந்த
எங்கள் அம்மாவின் சொந்த ஊரான சீர்காழிக்கு, அந்த சைக்கிளில் என் நடு அண்ணனைப் பின்னால் அமர வைத்துக்கொண்டு பாப்பாக்குடி,
காட்டுமன்னார்குடி, பனங்காட்டாங்குடி வழியாகச் சென்று வந்ததை நினைத்தால் இன்றும்
எனக்கு வியப்பு மேலெழும்.
ஒருமுறை வீட்டுத் தோட்டத்தில் காய்த்த மாங்காய்களை சைக்கிளின் பின்னால் மூட்டையாகக்
கட்டி சிதம்பரம் வரைக்கும் சென்று விற்று
வந்ததும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமே.
எழுபத்து இரண்டு
அகவையை நிறைவு செய்யும் இத் தருணத்தில் என் இளமைக்கால நினைவுகளை இப்படி அசை போட்டுப்
பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
பின் குறிப்பு:
அண்மையில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில்
வெளிவந்த ‘குரங்கு பெடல்’ என்னும் திரைப்படத்தை எங்கள்
வீட்டுத் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தேன். நீண்ட காலத்துக்குப்பின்
ஒரு நல்ல படத்தைக் பார்த்த உணர்வு ஏற்பட்டது. மகனின் உணர்வுக்கு மதிப்பளிக்கும்
ஒரு தந்தையை மையமாகக் கொண்ட படம். மேற்காண் கட்டுரையை kurangupedalmovie@gmail.com என்னும் மின்னஞ்சல்
மூலம் அனுப்பி வைத்தேன்.
மின்னஞ்சலை அனுப்பிய மறுநாள் குரங்கு பெடல் படத்தின் இயக்குநர் எனக்கு மறுமொழி அனுப்பி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இதோ அம் மடல்.
வணக்கம் ஐயா!
தங்களின் மின்னஞ்சல் கண்டு தங்களின் சைக்கிள் கதையை வாசித்தேன். தங்கள் கடந்த கால இனிய நினைவுகளை அசைபோட எங்கள் திரைப்படம் உதவியது பெருமகிழ்ச்சி.
கமலக்கண்ணன்.
Thanks and Regards,
Kamalakannan
Director
Mobile: +91 9787911776
Email:
kamal@themontage.in
No comments:
Post a Comment