Tuesday 13 February 2018

எங்கு நோக்கினும் எண்ணிலா வண்ணத்துப் பூச்சிகள்

  அமெரிக்காவிற்கு வந்து அக்கடா என்று என் பெரியமகள் இல்லத்தில் தங்கி ஓய்வாக எழுதவும் படிக்கவுமாய் இருந்த சமயத்தில்  ஒரு நெடுந்தூர பயணம் வாய்த்தது.

   நாங்கள் தங்கியிருக்கும் டெல்லாசிலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலிருப்பது ஹூஸ்டன் என்னும் பெருநகரம். என் மாப்பிள்ளைக்கு கார் ஓட்டுவது என்பது திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போன்றது. காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்டோம். மதியம் ஒரு மணிக்கு ஹூஸ்டன் சென்றடைந்தோம். நடுவில் எரிபொருள் நிரப்பவும், இயற்கை அழைப்புக்கும் காரை நிறுத்திச் சென்றோம்.

    ஹூஸ்டனில் பணிபுரியும்  திருமதி பர்வத மீனா இல்லத்திற்குச் சென்று, அவள் சுவைபடச் செய்திருந்த மதிய உணவை ஒரு பிடி பிடித்தோம். அவளும் என் பெரியமகள் டாக்டர் அருணாவும் ஒருசாலை மாணாக்கியர்; பொறியியற் கல்லூரியில் உயிரி தொழில்நுட்பம் படித்தவர்கள். மாறா அன்புடைய தோழியரும் ஆவர். மீனா எனக்கு இன்னொரு மகளைப் போல.

   மாலையில் வட இந்தியரின் ஸ்வாமி நாராயண் கோவிலுக்குச் சென்றோம். மறு நாள் காலையில் என் மாப்பிள்ளையும் மகளும் வேறு பணியாகச் சென்றுவிட, மீனா, நான், என் மனைவி மூவரும் புகழ்பெற்ற காக்ரெல் வண்ணத்துப் பூச்சி மையத்தைப் பார்க்கச் சென்றோம். பொதுவாக பூச்சிகள் பற்றிய அருங்காட்சியகம் அது. கொசுவிலிருந்து கரப்பான் பூச்சி வரை நூற்றுக் கணக்கான பூச்சிகளைப் பதப்படுத்தி காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

   வண்ணத்துப்பூச்சிகள் குறித்துத் தனியாக ஒரு பெரிய அரங்கம் வியப்புக்குரிய வகையில் அமைந்துள்ளது. அங்கு எல். கே. ஜி மாணவன் தொடங்கி பிஎச்..டி மாணவன் வரை அறிந்து கொள்ளும் வகையில் அதிகாரப் பூர்வமான அரிய தகவல்களுடன் காட்சிப் படுத்தியுள்ளார்கள். அப்பப்பா! எத்தனை வகையான வண்ணத்துப் பூச்சிகள்!

   வண்ண வண்ண உடையணிந்த சின்னக் குழந்தைகள் வண்ணத்துப் பூச்சிகளைப் போலவே சுற்றித் திரிவதைப் பார்க்கும்போதுதான், ‘அடடா வயதாகி விட்டதே’ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவர்களுடைய ஆர்வத்திற்குத் துணை நிற்கும் பெற்றோர் இங்கே பலராக உள்ளார்கள். நம் ஊரில் சிலராக உள்ளார்கள். 
    
அந்த அரங்கத்தை விட்டு ஒரு கதவைத் திறந்து வெளியே சென்றால் நூற்றுக் கணக்கில் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன. அவை பறந்து வெளியில் ஓடிவிடாதா? ஓடா. காராணம் ஒரு பெரிய உயர்ந்த கண்ணாடி கூடாரத்திற்குள் நிற்கிறோம்! அதுவும் மரங்கள் செடி கொடிகளுக்கு  நடுவே! கூடாரத்தின் மேற்கூரையில் செயற்கை மழை, இயற்கை சூரிய ஒளி, காற்று வருவதற்கான விசேட அமைப்பு உள்ளது. வண்ணத்துப் பூச்சிகள் இயல்பாக வாழ்ந்து, மகிழ்ந்து குலாவி, இனப்பெருக்கம் செய்ய ஏற்ற ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளார்கள்.
  

  அங்கே சென்று சுற்றிப் பார்க்கும் மக்களின் தலை, தோள்களில் வண்ணத்துப் பூச்சிகள் வந்து ஒரு விநாடி அமர்ந்து செல்வது கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    சென்ற முறை ஹூஸ்டன் சென்றபோது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா என்னும் செயற்கை விந்தையைப் பார்த்தோம். இந்த முறை வண்ணத்துப் பூச்சிகள் என்னும் இயற்கை விந்தையைப் பார்த்தோம். அது வியப்பைத் தந்தது; இது மகிழ்ச்சியைத் தந்தது.

    இயற்கை நல்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக எதுவுமே இல்லை.
வன்னப் பறவைகளைக் கண்டுநீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
  (வன்னப் பறவை=அழகிய பறவை)

என்று உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் பாரதியார்.

பின் குறிப்பு: நம் திருச்சியில் கூட ஒரு வண்ணத்துப்பூச்சிப் பூங்கா  உள்ளது. http://iniangovindaraju.blogspot.in/2016/11/blog-post_22.html என்னும் இணைப்பில் சொடுக்கி அறிக.


6 comments:

 1. அழகான இடம்...புகைப்படங்களும் அருமை. வண்ணத்துப் பூச்சிகளைப் பாதுகாப்பது என்பதுஎ த்த்னை பெரிய விடயம் இல்லையா...நல்ல பதிவு...

  ஆமாம் திருச்சியில் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா உள்ளது. எனக்குத் தோன்றும் ஐயா நான் மரங்கள் செடிகளை வெட்டாமல், அல்லது வளர்த்து வந்தால் பராமரித்தால் வண்ணத்துப் பூச்சிகளும் இனிமையாய் குதுகலமாய் வாழும் இல்லையா...

  கீதா

  ReplyDelete
 2. ஐயா, இன்று நமது நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் முட்டாள்களின் கைகளில் பணம் போய்விட்டதால் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க முடியாமல் போய்விட்டது. இங்கு கடைசி சொட்டுத் தண்ணீரையும் விற்ற பிறகுதான் அடடே இனி என்ன செய்வோம் என்ற எண்ணம் வரும். இப்படி ஒரு உலகத்தையே எதிர்பார்க்கிறேன் கனவுகளுடன்.

  ReplyDelete
 3. ஐயா, இன்று நமது நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் முட்டாள்களின் கைகளில் பணம் போய்விட்டதால் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க முடியாமல் போய்விட்டது. இங்கு கடைசி சொட்டுத் தண்ணீரையும் விற்ற பிறகுதான் அடடே இனி என்ன செய்வோம் என்ற எண்ணம் வரும். இப்படி ஒரு உலகத்தையே எதிர்பார்க்கிறேன் கனவுகளுடன்.

  ReplyDelete
 4. ஆகா
  படங்களைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது ஐயா

  ReplyDelete
 5. All fine.You are keeping young everything.Best Wishes

  ReplyDelete
 6. எங்கு நோக்கினும் எண்ணிலா வண்ணத்துப் பூச்சிகள். கவிதை வரியே தலைப்பாக. வண்ணத்துப் பூச்சி பற்றி ஏராளமான தகவல்கள். நன்றி.

  ReplyDelete