கால் நூற்றாண்டு காலம் பள்ளித்
தலமையாசிரியராகப் பணியாற்றிவன் என்பதால் பள்ளியைப் பார்வையிடும் வாய்ப்புக்
கிடைத்தால் உடனே சென்று பார்ப்பது என் வழக்கம். அந்த வகையில் அமெரிக்கா டெக்சாஸ்
மாநிலத்தில் கெல்லர் என்னும் நகரில் அமைந்துள்ள ரிட்ஜ் வியூ தொடக்கப் பள்ளியைப்
பார்க்க நேர்ந்தது.
நான் சென்றபோது மாலை ஆறு மணி. அறிவியல்
கண்காட்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது. கண்காட்சி, பெற்றோர் கூட்டம், விழா
போன்றவை பள்ளி நேரம் முடிந்தபின் நடப்பது இங்குள்ள முறைமையாகும்.
இப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே
நடைபெறுகின்றன. நானூறு பேர் பயிலும் பள்ளியில் நாற்பது ஆசிரியர்கள்
பணிபுரிகிறார்கள். எந்த வகுப்பறையிலும் இருபது பேருக்கு மேல் அனுமதி இல்லை.
வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர்தான். நாள் முழுவதும் அனைத்து வகைப் பாடங்களையும் அவரே
கற்றுத் தருவார். எல்லாம் குழந்தையை மையமாகக் கொண்ட செயல்வழிக் கற்பித்தல்தான்.
குழந்தையின் உடல் நலத்தில் ஆசிரியர் குறியாக
இருப்பார். குழந்தை சற்றே சோர்வாக்க் காணப்பட்டாலும் பெற்றோரைத் தொடர்பு கொண்டு
பேசுவார். ஒரு குழந்தைக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி வரும் என்றால்,
அந்த வகுப்பில் அவரையும் சேர்த்து யாரும் கத்தரிக்காய் குழம்பையோ, பொரியலையோ ஓர்
ஆண்டுக்குக் கொண்டு வரக் கூடாது என்பது அவ் வகுப்பறை விதியாகும். பெற்றோரும்
ஒத்துழைக்கின்றனர்.
பள்ளிச் செயல்பாடுகளில் பெற்றோர் முன்வந்து
தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய படங்களை அறிவிப்புப்
பலகையில் போட்டுப் பள்ளி நிர்வாகம் பாராட்டுகிறது.
குழந்தைகள் வகுப்பறையில் எழுதிய கவிதைகள்,
ஓவியங்கள் முதலியவற்றை ஒவ்வொரு வகுப்பறைக்கும் முன்புறம் மற்றவர் கண்ணில்
படும்படியாய் ஒட்டி வைக்கின்றனர். குழந்தைகள் ஒவ்வொருவரின் கனவு என்ன என்பதை, அதாவது
பிற்காலத்தில் என்ன பணியில் ஈடுபடப் போகிறார்கள் என்பதைக் கேட்டறிந்து அந்த
விவரத்தை வகுப்பறைக்கு முன்னால் வைத்திருக்கிறார்கள்.
பள்ளியின் இணையதளத்தில் ஆசிரியர்களின்
படம்,இல்ல முகவரி, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பெற்றோர்கள் ஆசிரியருடன் வீட்டுப்பாடம் விவரம் உட்பட தகவல்
பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
A proud Exhibiter |
கண்காட்சியைப் பார்த்து அசந்துவிட்டேன்.
நம் ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் திட்டப்பணியை இங்கே மூன்றாம் வகுப்பு
மாணவன் செய்துள்ளான்.
Parents visit the exhibits |
This child dreams to become a Teacher |
எடுத்துக்காட்டாக ஒன்று. நம் ஊரில் அதிக
மின்னழுத்த மின் கம்பிகளைத் தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் ஏராளமான முக்கோண
வடிவங்களை உள்ளடக்கியதாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். முக்கோண வடிவம்தான் அதிக
எடையத் தாங்கும் வல்லமையுடையது என்பதை ஒரு சிறுவன் விளக்கியது பெரு வியப்பைத்
தந்தது. திட்டப் பணிகளை மாணவனே வீட்டில் செய்தான் என்பதற்கான போட்டோவையும்
காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
A poem composed by a child |
Parent Volunteers are honored |
இப் பள்ளியில் பெரிய தியேட்டர், உள்
விளையாட்டரங்கம், தூய்மையான உணவகம், பாட ஆய்வகங்கள், நூலகம், அதி நவீன கழிப்பறைகள்
முதலிய கட்டமைப்பு வசதிகள் உரிய தரத்துடன் அருமையாக உள்ளன. இவை அனைத்தும் தரைத்தளத்தில்தான்
உள்ளன. ஐந்து ஏக்கர் பரப்பில் வசதிகள் விரிந்து கிடக்கின்றன. ஆசிரியர், பெற்றோர்,
பார்வையாளர் பயன்பாட்டுக்காக நூறு கார்களை நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளது. முக்கியமானது,
மாற்றுத் திறன் குழந்தைகள், ஆசிரியர், பெற்றோர் ஆகியோர் சக்கர நாற்காலியில்
எங்கும் எளிமையாகச் செல்லும் வகையில் யாவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது ஓர் அரசுப்பள்ளி. பாதுகாப்பான பள்ளிப்
பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு டாலர் கூட கட்டணமாக வசூலிப்பதில்லை!
முற்றிலும் இலவசக் கல்வி!
முனைவர்
அ.கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.
குழந்தையின் உடல் நலத்தில் ஆசிரியர் குறியாக இருப்பார். குழந்தை சற்றே சோர்வாக்க் காணப்பட்டாலும் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசுவார். ஒரு குழந்தைக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி வரும் என்றால், அந்த வகுப்பில் அவரையும் சேர்த்து யாரும் கத்தரிக்காய் குழம்பையோ, பொரியலையோ ஓர் ஆண்டுக்குக் கொண்டு வரக் கூடாது என்பது அவ் வகுப்பறை விதியாகும். பெற்றோரும் ஒத்துழைக்கின்றனர்.
ReplyDeleteபடிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது ஐயா
அரசுப் பள்ளி என்பதை அறியும்போது வியப்பு கூடுகிறது
என்ன அருமையான பள்ளி ஐயா! இப்படியான பள்ளிகள் இந்தியாவில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையையும் தனியாகக் கவனிக்கும் அதுவும் ஒரு குழந்தைக்கு அலர்ஜி என்றால் எல்லோருமே அதைப் பின்பற்றுவது என்பதெல்லாம் எத்தனை அருமை வியப்பு! குழந்தைகள் நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரும் ஒத்துழைப்பது வியப்பு!
ReplyDeleteகீதா: எனக்கும் அனுபவம் உண்டு. அங்கிருந்த 9 மாதங்களில் என் மகன் அங்கு அரசுப்பள்ளியில்தான் 7 ஆம் வகுப்பு படித்தான். எந்தவிதச் செலவும் இல்லை. ஆனால் அங்கு ஆசிரியர்கள் அனைவரும் அத்தனை அருமையாக இருப்பார்கள். புத்தகம் எதுவும் வாங்கத் தேவையில்லை. எல்லாமே பள்ளியில் கொடுத்துவிடுவார்கள் அனைத்தும் ஆய்வு செய்யப் பயன்படும் புத்தகம் போலத்தான் இருக்கும். கல்வி முறையும் வித்தியாசம்...எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் மகனுக்கும்! நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொன்றும் நினைவுக்கு வந்தது...அருமைஅயன பதிவு
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பாதம் பார்ப்பது போல், அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் கெல்லர் நகரில் அமைந்துள்ள ரிட்ஜ் வியூ தொடக்கப் பள்ளி பற்றி மிகச் சிறப்பான அறிமுகம். இந்தத் தரத்தை நோக்கி நம் பள்ளிகளும் முன்னேறிக் கொண்டுள்ளன தானே?
ReplyDeleteஅருமையான பள்ளிக்கூடம் அழகான அறிமுகம்...
ReplyDeleteபடிக்கவே பரவசப்படுத்துகிறது. நம் நாட்டிலும் ஒரு நாள் இது நிகழும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete