Wednesday, 14 February 2018

அமெரிக்காவில் அன்பர் தினம்

  வேலண்ட்டைன் டே எனப்படும் காதலர் தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இளம் காதலர்களும் இளம் கணவன் மனைவியரும் புத்தாடை அணிந்து ஒருவர்க்கொருவர் கொய்மலர், வாழ்த்து அட்டை, ஆடை அணிகலன் போன்ற அன்பளிப்புகளைத் தந்து மகிழ்கிறார்கள். உணவகங்களுக்குச் சென்று உண்டு மகிழ்கிறார்கள். சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள்.

   பள்ளிகளில் கூட காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறுவர் சிறுமியர் ஆசிரியர்களுக்கு மலர்க்கொத்து அளித்து தங்கள் அன்பினைத் தெரிவிக்கிறார்கள்.

   குழந்தைகள் தம் பெற்றோருக்குச் சிறு அன்பளிப்புகளைத் தந்து காதலர் தின வாழ்த்துக் கூறும் வழக்கமும் இங்கு உண்டு.

   நம் நாட்டில் மன்மதனைக் காதல் கடவுள் என்று சொல்கிறோம். அவன் கையில் இருப்பன கரும்பு வில்லும் மலர் அம்புகளும். அமெரிக்காவிலும் குப்பிட் என்னும் ஆண் கடவுள் காதலைப் பரப்புவதாய்ச் சொல்கிறார்கள். இந்தக் கடவுளும் வில் அம்புடன் இருக்கிறார் என்பது வியப்புக்குரிய செய்தியாகும். இக் கடவுளின் அம்பினால் தாக்குண்டோர் காதல் வயப்படுகிறார்கள் என்பது இவர்களுடைய நம்பிக்கையாகும்.

அமெரிக்காவில் காதல் வாஸ்து உண்டு என்பது பலருக்கும் தெரியாது. அந்த வாஸ்து என்ன சொல்கிறது?

படுக்கை அறை வீட்டின் தென்மேற்கு மூலையில் அமைவது சிறப்பு.

அதன் சுவர்கள் வெளிர் பச்சை அல்லது வெளிர் நீல நிறத்தில் இருத்தல் நன்று.

சுவர்களில் கடல் காட்சியுடன் கூடிய படங்களை வைப்பது சிறப்பு.

 சுவரில், மேற்கூரையில்  இதய வடிவ ஸ்டிக்கர்களை ஒட்டி வைப்பது நல்லது.

  தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒளிமயமான மின் விளக்குகள் எரிய வேண்டும்.

  படுக்கை அறையில் கண்டதைப் போட்டு வைக்காமல், தேவையான  பொருள்களை மட்டும் தூய்மையாக, தூசு துப்பு இல்லாமல் வைக்க வேண்டும். தூசும் மாசும் இருந்தால் கணவன் மனைவி காதல் உறவு சிறப்பாக இருக்காது என உறுதியாக நம்புகிறார்கள்.

  படுக்கை விரிப்பு, தலையணை உறைகள் வெளிர் நிறங்களில் பூப் போட்டதாய் இருத்தல் சிறப்பு. இவற்றில் அழுக்கு அதிகமானால் அன்பு குறையுமாம்.

 படுக்கை அறையில் உடல் தெரியும் வகையில் கண்ணாடி எதுவும் இருத்தல் கூடாது.

   படுக்கை அறையில் ஒரு நோட்டு அல்லது டைரி வைத்து, அதில் இருவரும் காதல் உணர்வு மிக்க வரிகளை எழுதிக் கொண்டிருப்பது உறவை வலுப்படுத்துமாம்.(அது மற்றவர் கண்ணில் படாமல் இருக்கட்டும்)
படுக்கை அறையில் அலைப்பேசி, லேப்டாப் போன்ற எந்த எலக்ட்ரானிக் பொருள்கள் இருந்தாலும் காதல் வராதாம்.

  அமெரிக்கர்களின் உணவு, உடைக் கலாச்சாரத்தைப் பின்பற்ற விரும்பும் நாம் அவர்களுடைய காதல் வாஸ்தைப் பின்பற்றலாமே.
.....................................
முனைவர் .கோவிந்தராஜூ,

அமெரிக்காவிலிருந்து.

3 comments:

  1. காதல் வாஸ்து தகவல்கள் சிற்ப்பு.


    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. காதல் வாஸ்து தகவல்கள் இப்போதுதான் அறிகிறோம் ஐயா...

    ReplyDelete