Thursday 2 August 2018

தனித்தமிழ்ச் சிறுகதை


  முத்தமெனும் மாமருந்து
 (முனைவர் அ.கோவிந்தராஜூ)


    கபிலா மருத்துவமனை என்பது கரூர் நகரில் அமைந்துள்ள  புகழ்வாய்ந்த  மருத்துவ மனையாகும். அது ஓர் ஐந்துடு விடுதி போன்று இருக்கும். இந்த மருத்துவமனை வளாகத்தில்   வாகனங்களை  வசதியாக நிறுத்த முடியும்.

வழக்கம்போல் அன்று அதிகாலையிலும் செவிலியர் தம் பணிகளைச் செவ்வனே செய்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக நான் மருத்துவமனையை நோக்கி நடந்தேன்.

       அந்த விடியற்காலையில் ஒரு வெண்ணிற 108 நோயாளர் ஊர்தி’ அதிவிரைவாக  வந்து மருத்துவமனையின் முன்வாயிலில் குலுங்கி நின்றது.   அந்த  ஊர்தியின்  பின்பக்கக் கதவுகள் நொடியில் திறந்தன. முப்பது வயது மதிக்கத் தக்க  பெண் ஒருத்தி படுத்திருந்தாள். அவளுடைய மூக்கில் ஒரு மூச்சு வாங்கி பொருத்தப்பட்டிருந்தது. அது ஓர் உயிர்வளி உருளியில்  இணைக்கப்பட்டிருந்தது.

   உதவியாளர்கள் ஓடிவந்து உயிர்வளிக் குடுவையுடன் கூடிய ஒரு  படுக்கை வண்டியில்  அந்தப் பெண்ணைப் படுக்க வைத்தார்கள். இரவுப் பணியாற்றிய  மருத்துவர் மாதொருபாகன் அந்தப் பெண்ணின் வலது கண்ணை மெல்லத் திறந்து பார்த்தார். அருகில் நின்ற செவிலியிடம்  ஏதோ சொல்ல அவள்  தன் கைப்பேசி மூலம் சில குறிப்புரைகளைத் தந்துகொண்டே ஓடினாள்.

       அப் பெண் நோயாளி  அதிமுனைப்புப் பண்டுவப்  பிரிவில் சேர்க்கப்பட்டாள்.

அந்த நோயாளி குறித்த விவர அறிக்கை என் பார்வைக்கு வந்தது. அவள் பிழைத்தெழ வேண்டும் என என் மனம் விரும்பியதற்கு ஒரு காரணம் உண்டு..

உடனடியாக ஒரு மருத்துவர் குழுவை அமைத்தேன்.

அவளுடைய கணவர் ஊரில் இல்லையாம். சற்று நேரத்தில் அங்கே வந்த உறவினர் சிலர் உள்ளே சென்ற மருத்துவரின் வருகைக்காக வெளியில் காத்திருந்தனர்.

  அவள் ஒரு பழங்குடி இனப்பெண். கொல்லிமலையில் இயற்கை வேளாண்மை செய்து நாமக்கல் உழவர் சந்தையில் நாளும் காய்கறி பழங்கள் விற்பவள். அதிகாலையில் கடைவிரிக்கும்போது மயங்கி விழுந்த அவளை அருகிலிருந்தோர்  ஒரு 108 நோயாளர் ஊர்தியை வரவழைத்துக் கரூர் கபிலா மருத்துவமனைக்கு அனுப்பியதை அவளது உறவினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்..

   மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் தமக்குள் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு எதிரில் இருந்த அறைக்கதவு இரண்டாகப் பிரிந்து விலகியது. மருத்துவக் குழுவின் தலைவர்  மருத்துவர் கண்ணன் அவர்கள் வெளியே வந்து  நோயாளி மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் சொன்னதும் அங்கு கூடியிருந்த பெண்கள் கதறி அழுதார்கள்; ஆண்கள் சிலையாகிச் சுவரில் சாய்ந்து, சரிந்து, குத்துக்காலிட்டு உட்கார்ந்து கைகளைத் தம் தலைமீது வைத்துக் கொண்டார்கள்.

     நுரை ஈரலில் மோசமான நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் அவள் சாக நேரலாம் என்பதுதான் மருத்துவர் சொன்ன கெட்ட செய்தி. அதே சமயம் சென்னையிலிருந்து ஒரு சிறப்பு மருத்துவ வல்லுநர் வந்து கொண்டிருக்கிறார் என்பது அவர் கூடுதலாகத் தந்த நல்ல செய்தி.
    மாலையில் வந்த சென்னை மருத்துவரை வாயிலில் நின்று வரவேற்று நோயாளியின் அறைக்கு அழைத்துச் சென்றேன். வழங்கப்பட்ட பண்டுவ  விவரத்தை முன்கூட்டியே அவர் மின்னஞ்சல் மூலம் அறிந்திருந்ததால் அவர் தனது சிறப்புப் பண்டுவத்தை உடனே தொடங்கிவிட்டார்.

    சற்று நேரம் கழித்து அந்தச் சிறப்பு மருத்துவர் எனது  அறைக்கு வந்து தேநீர் அருந்தியபடி நோயாளியின் நடப்புநிலை குறித்து விளக்கிவிட்டு மீண்டும் சென்று பார்த்தார். நானும் உடன் சென்றேன். அவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. செவிலியர் அளித்த குருதி ஆய்வறிக்கையில் நோய்த் தொற்று குறைந்ததற்கான குறிப்பு ஏதுமில்லை.
 அச் சிறப்பு மருத்துவர் தன் கைப்பேசியை இயக்கி யாரிடமோ பேசினார். அவர் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி வீசியது.

“இந் நோயாளியின் குடும்பம் கூடுதல் செலவை ஏற்றுக்கொள்ள இயலுமானால், மும்பையில்  இருக்கும் என் நண்பர் நுரையீரல் மருத்துவ வல்லுநர் மருத்துவர் மகிழ்நன் அவர்களை வரவழைக்கலாம்.?”

“இந்த நோயாளியின் பண்டுவத்திற்கு ஆகும் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன். உடனே ஆவன செய்யுங்கள்”

சென்னை மருத்துவரின்  வேண்டுகோளை ஏற்று   மும்பை நகரிலிருந்து அந்த  மூத்த சிறப்பு மருத்துவர் மறுநாள் வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று நோயாளி குறித்த விவரத்தைச் சுருக்கமாகச்சொன்னேன். மும்பை மருத்துவர் மருத்துவ அறிக்கையை நுணுகிப்  பார்த்தார். நெற்றியைச் சுருக்கியபடி தன் கையடக்கக் கணினியில் மூழ்கினார். பிறகு மாற்று மருந்துகள் சிலவற்றை ஊசி மூலம் அளிக்கச் செய்தார்.

ஆறு மணி நேரம் கழித்து  நோயாளியின் குருதியை எடுத்து ஆராய்ந்தபோது நோய்த்தொற்று நீங்கியிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நோயாளி நீள்துயில்  நிலைக்குப்  போய்விட்டதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

   நோயாளியின் உடல் நிலையை கூர்ந்து நோக்கிய  மருத்துவர்கள் அவளுக்கு மூளைச் சாவுக்கான அறிகுறி தொடங்கிவிட்டதை அறிந்ததும் காத்திருந்த உறவினரிடம் சென்று கைவிரித்தார்கள். கண் கலங்கி நின்ற அவளுடைய கணவர் அச் செய்தி தந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்; முதலுதவிக்குப்பின் கண் திறந்தார்; கதறினார்; கண்ணீர் விட்டார்.

   மீண்டும் மருத்துவர்குழு அவளைப் பரிசோதித்து மூளைச்சாவு ஏற்பட்டதை உறுதி செய்தது. மருத்துவக் குழுவின் தலைவர் மருத்துவர் கண்ணன் அவர்கள், “நோயாளியின் மூக்கில்  பொருத்தப்பட்டுள்ள  மூச்சு வாங்கியை  அகற்றினால் மூச்சு அடங்கிவிடும் என்று அவளது கட்டிலில் தொங்கிய  மருத்துவ அறிக்கை ஏட்டில் எழுதிக் கையொப்பமிட்டார்.

  அந்த  அறிக்கையைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின. ஆழ்ந்த  சிந்தனைக்குப் பிறகு, என் மனைவி அழகம்மையைத் கைப்பேசியில் அழைத்து விவரம் கூறினேன். வண்டார்குழலியை  உடன் அழைத்து வருமாறு சொன்னேன். அவள் அடுத்த அரை மணி நேரத்தில் பதினெட்டு மாதக் குழந்தையை அணைத்தபடி என் அறைக்கு  வந்தாள். பிறகு அவளை அந்தப் பெண் நோயாளியின் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

     “இந்தப் பெண்ணைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடித் தோற்றுவிட்டார்கள். இப்போது மூச்சுவாங்கியை  அகற்றப் போகிறார்கள். குழந்தையை அவள் அருகில் அழைத்துச் செல்;  கடைசியாக தன் அம்மாவின்  கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கட்டும்” என்று நான் சொன்னதும் என் மனைவி அழகம்மை குழந்தையை எடுத்து அப் பெண்ணின் முகத்தருகில் விட்டாள். சுற்றி நின்ற எல்லோரும் வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

   ஒரு செவிலி மெல்ல மூச்சு வாங்கியை அகற்றினாள். அணையப்போகும்  விளக்கு கடைசியில் நன்றாக எரியுமாம். அப்படித்தான் அவளுடைய முகமும் ஒளிமயமாக இருந்தது.

   “அம்மா... அம்மா..” என மழலை மொழியில் அழைத்தபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டது அந்தக் குழந்தை.

  எளிதில் உணர்ச்சி வசப்படாத மருத்துவர்களே மனம் நெகிழ்ந்து கண் கலங்கினார்கள். நானும் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

  அடுத்த நொடியில் அந்த அருஞ்செயல் நிகழ்ந்தது. “கு..கு.கு...குழலி” என அவளுடைய வாய் முணகியது. கண்கள் மெல்லத் திறந்தன; கைகளும் கால்களும் அசைந்தன.

    தூக்கம் கலைந்து எழுவதுபோல் எழுந்து உட்கார்ந்துகொண்டு குழந்தையை அள்ளி எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். பார்த்துக்கொண்டு நின்ற அவளுடைய கணவர் மீண்டும் மயங்கி விழுந்தார் இன்ப அதிர்ச்சியில். 
 
   பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் அவளுக்குப் பிறந்த  மூன்றாவது குழந்தை அது. குழந்தைப்பேறு  வாய்க்காத நாங்கள் சென்ற மாதம்தான் கொல்லிமலைக்குச் சென்று அவளிடமிருந்து முறைப்படி அக் குழந்தையைத் தத்தெடுத்து வந்தோம்.

   “அம்மாவின் உயிரை மீட்ட அந்தக் குழந்தை இனி அவளிடம் இருப்பதுதான் சரியாக இருக்கும்; அவளுடைய நோய்க்கு மருந்தாகவும் இருக்கும். இனி நாம் அந்தக் குழந்தைக்கு வளர்ப்புப் பெற்றோராக  மட்டும் இருந்து எல்லா உதவிகளையும் செய்வோம்” என்று நான் என் மனைவி அழகம்மையிடம் சொல்ல அவளும் உடனே ஒத்துக்கொண்டாள்.

  நாங்கள் இருவரும் என் அறையை நோக்கி நடந்தோம்.  இருக்கையில் அமர்ந்து என் தனிப்பேழையில் இருந்த மருத்துவ மனையின் நிகழ் பதிவேட்டை எடுத்தேன். “ஒரு குழந்தையின் முத்தம் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு நோயாளியின்  உயிரை மீட்டது; இது இந்திய நாட்டின் மருத்துவ வரலாற்றில் இதுவரை அறியப்படாத அரிய நிகழ்வாகும்” என்று கபிலா மருத்துவமனையின் இயக்குநர் என்ற முறையில் என் கைப்பட  எழுதிக் கையொப்பம் இட்டேன்.  

பிறகு நானும் என் மனைவியும் மருத்துவமனைக் குடியிருப்பில் இருந்த எங்கள் இல்லத்தை நோக்கி நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வுடன் மெல்ல நடந்தோம்.

  


11 comments:

 1. மனதை உருக வைத்து விட்டது...

  ReplyDelete
 2. தனித்தமிழ் வாழ்கிறது....தரம் பெறுகிறது...தனித்துவமாகிறது....நடையின் சரளம் அற்புதம்...இறுதி வரி‌யில் மட்டும் தத்துப் பெற்ற குழந்தையையும் பறிகொடுத்த தாயின் வலியையும் சொல்ல தக்க வார்த்தை சேர்த்திருக்கலாம்

  ReplyDelete
 3. நல்ல முயற்சி அண்ணா! முயன்று பார்த்தால் தனித்தமிழில் சிறுகதை என்ன நெடுங்கதையே படைக்க முடியும் என்பதற்கு தங்களது இப்பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 4. Though not able to understand direct meaning of a few words unfamiliar to me, I am able to enjoy contextual meanings ; beyond that,beauty of chaste Tami words , I enjoyed. So good of your,Dr !

  ReplyDelete
 5. மனம் நெகிழ்ந்துபோய்விட்டது ஐயா
  அதிலும் தங்களின் தனித்தமிழில் சிறப்பு ஐயா

  ReplyDelete
 6. அன்பு முத்தங்கள்
  அற்புதங்கள் செய்யும் என்று
  அழகான கதை வடித்துள்ளீர்கள்
  அருமை நேர்த்தி.

  எம் மருத்துவமனையைக் கதைக்களமாக்கி
  எனையும் கதை மாந்தராக்கி
  தனித்தமிழில் உருக்கமாக இயற்றியுள்ளீர்.
  நன்றி ஐயா.

  அன்புடன்
  கண்ணன்.

  ReplyDelete
 7. படித்து முடித்த இறுதியில் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன் ஐயா!
  இந்த உலகில் அன்பினால் மட்டுமே அதிசயத்தக்க நிகழ்வுகளை நடத்திட முடியும்!!!

  ReplyDelete
 8. நெகிழ்வான நிகழ்வு. உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய ஒரு நிகழ்வை (கதையை?) தனித்தமிழிலும் தரமுடியும் என்ற செய்தி இன்றைய இளைஞர்களைச் சென்றடைய வேண்டும்.

  ReplyDelete
 9. நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி ...

  ReplyDelete
 10. அன்பால் மட்டுமே இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.... அருமையான சிறுகதை....👏👏👏👏👏👌👌👌💐💐💐

  ReplyDelete