Sunday, 19 August 2018

கடவுளின் நாடு கலங்கி நிற்கிறது

      God’s own country என்பது கேரளா சுற்றுலாத் துறையின் முத்திரை வாசகமாகும். அந்தக் கடவுளின் நாடு இன்று கொட்டித் தீர்க்கும் பேய்மழையால் கலங்கி நிற்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, அரசு இயந்திரத்தை உரிய முறையில் இயக்கி, மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்து வருகின்றார்.

   தெலுங்கானா மாநிலம் நாட்டிலேயே மிக அதிக உதவித்தொகையான ரூபாய் இருபது கோடியை வழங்கியுள்ளது. அண்டை வீடாக இருக்கும் நம் மாநில அரசு ரூபாய் பத்துகோடி மட்டும் வழங்கியிருப்பது பாராட்டத் தக்கதாய் இல்லை.

  “காஷ்மீர்க்காரன் இருமினால் கன்னியாகுமரிக்காரன் மருந்து எடுத்துக்கொண்டு ஓடுவான்” என்று பாரதிதாசன் சொன்னது இப்போது என் நினைவுக்கு வருகிறது.

    கடுகளவு உள்ள புதுச்சேரி மாநிலம் ஒரு கோடி நிதியுதவி அளித்துள்ளதை ஒப்பிடும்போது நமது மாநில அரசு இந்நேரம் ஐம்பது கோடி உதவியை அளித்திருக்க வேண்டாமா? 

     அரசின் நிலைப்பாடு இப்படி இருந்தாலும், தமிழக மக்களின் உதவிக் கரங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன. சென்னையில் பூமிகா அறக்கட்டளை ஓர் உதவி மையத்தை ஏற்படுத்தி உதவி வேண்டுவோரையும் உதவி செய்வோரையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது.

   என் தலைமாணாக்கர்களில் ஒருவரான வா.மணிகண்டனின் நிசப்தம் அறக்கட்டளை வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளது. ஆர்வமும், நேர்மையும் செயல்திறனும் கொண்ட பெரிய பட்டாளம் அவருக்குப் பக்கபலமாக உள்ளது.

     அரிமா, சுழற்சங்கம், ஜேசீஸ் போன்ற தொண்டு நிறுவனங்களும் தொய்வின்றி உதவி வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணாக்கச் செல்வங்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
  தமிழக அரசின் ஆட்சிப்பணி அலுவலர்கள் தம் ஒருநாள் ஊதியத்தை வழங்க முன் வந்திருப்பது மன நிறைவைத் தருகிறது.

   என் துணைவியாரும் “உங்கள் ஒருநாள் ஓய்வூதியத்தைக் கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பிவிட்டு மறுவேலை பாருங்கள்” என்றார். ஆனால் என் மூன்று நாள் ஓய்வூதியத்தை அனுப்பி வைத்தது இந்தப் பதிவைப் படித்தபின்தான் அவருக்குத் தெரியவரும்.

  எனது மகிழுந்துக்கு ஒரு மாதம் ஓய்வுகொடுத்து, ஒருமாத எரிபொருளுக்கு ஆகும் தொகையை அடுத்தத் தவணையாக கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பும் எண்ணமும் உள்ளது.

    பாலித்தீன் பைகளின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்து, ஆறுகளில் மணல் அள்ள தடைவிதித்து, முறையாகத் தூர்வாரி, அணைக்கதவுகளை அவ்வப்போது பழுதுநீக்கிப் பராமரிக்கும் கேரளாவே கதிகலங்கித் தடுமாறுகிறது என்றால், அப்படி எல்லாம் எதுவும் செய்யாத  நம் தமிழகம் என்ன பாடுபடுமோ?


5 comments:

  1. மனிதநேயம்.பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க...

    ReplyDelete
  3. Doctorji, An opportunity to prove our humanism ! You did it. It has inspired me to follow you .

    ReplyDelete
  4. Super Sir,

    We all need to help them as much as possible for recovery

    ReplyDelete
  5. என் இனிய ஆசிரியருக்கு..

    நீங்கள் ஆளாக்கிய உங்கள் மாணவனின் அளவில்லா ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

    வாங்கும் சம்பளத்தை விட இருமடங்கு பணி செய்தவர் நீங்கள்..

    நீங்கள் செய்வதெல்லாம் சம்பளத்துக்காக அல்ல..

    உங்களின் ஆத்ம திருப்திக்காக..

    உங்களைப் போல கண்ணுக்கு தெரியாத கடமை நிறைவாய் செய்யும் ஆசிரிய பெருமக்கள் இன்னும் இருப்பதால் தான் நம் தேசமே என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்து எழுந்து நிற்கிறது..

    சொல்லப்போனால் இப்போதிருக்கும் தேசத்தையே சத்தமில்லாமல் பின்புலமாக நின்று கட்டியமைத்தவர்கள் நீங்கள் தான்..

    சமூக அரசியல், உலக அரசியல், உள்ளூர் அரசியல், கடந்து வந்த பிரச்சினைகள், கடக்கும் நிகழ்கால அவலங்கள் என அனைத்தையும் தாண்டி, தாங்கி நிற்கவும், அடுத்த நகர்வை நோக்கி நடைபயில தேச மக்களை செதுக்கி வார்ப்பெடுக்கும் சிற்பிகள் நீங்கள்..

    வெளியே தேசத்தை காப்பது நம் ராணுவ வீரர்கள், அது போல உள்ளே நிற்கும் ஒவோரு குடிமகனையும் தன்னலம் கூடப்பாராது உருவாக்குவது நீங்களே..

    உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வீரவணக்கங்கள்..

    எழுத்தறிவிப்பவன் இறைவனை விட பெரியவன்..

    உங்களால் பட்டை தீட்டப்பட்டு இன்று மாபெரும் சபைகளில் நாங்கள் பிரகாசிக்கக் காரணம் நீங்களேயன்றி வேறொன்றுமில்லை..

    தாயைப் போல அளவிலா அன்பு காண்பித்தது ஒருபுறம்..

    வெளிப்புறமாகக் கண்டிப்பு காண்பித்தாலும் உள்ளுக்குள் எங்களுக்கான அக்கறை மறைமுகமாக மேலோங்கி நிற்பதில் தந்தையின் பாசம் காண்பித்தது ஒருபுறம்..

    கடவுளை போல வரமளித்தது ஒரு புறம்..

    இவ்வனைத்தையும் ஒருசேரக் குழைத்து..

    இதற்கும் மேலே ஒரு தனித்துவம் சமைத்த மனம்,
    ஒரு ஆசிரிய மனம்..

    உங்களின் அன்றைய கண்டிப்பு எதற்கென்று புரியாது குழம்பினோம் மாணவப்பருவத்தில், இன்று வருடங்கள் செல்லச்செல்ல வாழ்க்கை உணர்த்துகிறது அந்தக் கண்டிப்பெல்லாம் எதற்கென்று..

    தன்னையே உருக்கி மின்சாரம் அளித்தது நீங்கள்..
    இன்று சபைகளில் உங்களால் நியான் விளக்காய் ஒளிர்வது உங்களின் நாங்கள்..

    உங்களை நிறைந்த மனதுடன் நன்றிகளாயிரம் சொல்லி நினைவு கூறுகிறேன்..

    எங்களின் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் பெருமிதமாய்ச் சொல்வேன்
    எனக்கு அமைந்த ஆசிரியர் எப்படிப்பட்டவர் தெரியுமா என்று..

    அந்த மன நிறைவு எங்களுக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம்..

    இது வெறுமனே உங்களை குளிர்விக்க கூறும் மிகைப்படுதலில்லை..

    உங்களால் வளர்ந்தவனின் ஒரு பெருமிதத்திமிர் என்றே கூடக்கொள்ளலாம்..

    நீங்கள் எவ்வளவு பெரியவர், நீங்கள் ஆற்றியது எவ்வளவு பெரும்பணி என்பதை உங்களுக்குச் சொல்லும் நாள், இந்நாள்..

    எனை வார்ப்பெடுத்த என் ஆசிரியரை நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும், நிறைந்த மனதோடும் வைக்க அந்த இயற்கையையும், இறைவனையும் வேண்டுகிறேன்..

    நன்றி அய்யா..!
    வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்..!!

    இப்படிக்கு,
    பெருமித உணர்வுடன்..
    பெருமை மிகு வைரவிழாப்பள்ளி மாணவன்..

    ReplyDelete