Wednesday 16 December 2020

பல்சுவைப் பயணம்

      இந்தக் கொரோனா காலக் கட்டத்தில் விமானப் பயணம் என்பது திட்டமிட்டவாறு அமைவதில்லை என்பது பலருடைய அனுபவம். விமான நிறுவனத்தார் அவ்வப்போது ஓர் அதிர்ச்சி மின்னஞ்சல் அனுப்பி நம் வயிற்றில் புளியைக் கரைப்பார்கள்.

   நாங்கள் ஜனவரியில் அமெரிக்கா செல்ல பயணப்பதிவு செய்திருந்தோம். ஒட்டாவாவிலிருந்து மான்ட்ரியல், மான்ட்ரியலிலிருந்து டெல்லாஸ் என இரு வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்வதாய் இருந்தோம். கொரோனா காரணமாக ஒட்டாவா – மான்ட்ரியல் விமானம் அன்றைய நாளில் ஓடாது என மின்னஞ்சல் வந்ததால் இரு மாப்பிள்ளைகளும் இரு தரப்புக் கருத்துகளை முன்வைத்து ஒரு மனதாக இந்தப் புதிய மாற்றுப் பயணத்திட்டத்தை வகுத்துக் கொடுத்தனர்.

 கனடாவில் இளையமகள் இல்லத்தில் தங்கியிருந்த ஐந்து மாதங்கள் ஐந்து நாள்கள் போல ஓடி விட்டன. பேரனுடன் பொழுது போக்கியதால் நாள்கள் சென்றதே தெரியவில்லை. உறவு, நட்புகளிடம் விடைபெற்றுக் கொண்டு 13.12.2020 அன்று மூன்று மணி நேரம் முன்னதாகவே  அதாவது காலை ஏழு மணிக்கே ஒட்டாவா பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்தோம்.

   வழக்கம்போல் நடந்த கிடுக்கிப்பிடி பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து விமான வாயிற்கூடத்தை நெருங்கினோம். எங்கள் .விமானத்துக்கு உரிய வாயில்தானா என்பதை அங்கிருந்த ஊழியரிடம் கேட்டு உறுதிப் படுத்திக்கொண்டோம். பிறகு நாங்கள் கையோடு எடுத்துச் சென்ற உபயோகித்துத் தூக்கி எறியும்(குப்பைத் தொட்டியில்) விரிப்பானை அங்கிருந்த இருக்கையில் விரித்து அமர்ந்தோம்.

    காலை உணவை உண்ணலாம் என நினைத்தபோது தண்ணீர் இல்லாதது நினைவுக்கு வந்தது. நாங்கள் கொண்டுவந்திருந்த தண்ணீர் பாட்டிலை பாதுகாப்புச் சோதனையில் பறிமுதல் செய்துவிட்டார்கள். சரி ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கலாம் என்றால் எட்டு டாலர் (ரூ.470) செலவழிக்க வேண்டும். விமானத்திற்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.

   சரியாக 9.25 மணிக்கு வாயில் திறந்தது. விமானத்தின் வாய் வழியே நுழைந்து அதன் வயிற்றுப்பகுதியில் சென்று அமர வேண்டும். முதியவர் என்பதால் எங்களை முதலில் ஏற அனுமதித்தார்கள். அதனால் தள்ளுமுள்ளு இல்லாமல் சென்று உரிய இருக்கையில் அமர்ந்து ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்தபோது பனிமழை கொட்டிக்கொண்டிருந்தது.

   மற்றப் பயணிகள் ஏறி உள்ளே வருவதை வேடிக்கை பார்த்தோம். வாண்டுகள் முதல் வயதான முதியவர்வரை வண்ண வண்ண முகக்கவசம் அணிந்திருந்தார்கள். அவர்கள் பன்னாட்டுப் பயணியர் ஆதலால் ஏதேதோ மொழியில் பேசியபடி தங்கள் இருக்கைகளைத் தேடினார்கள். பயணம் செய்யப் பதிவு செய்திருந்த பயணியர் அனைவரும் வந்துவிட்டதால் விமானம் 9.45 மணிக்கே புறப்பட்டு ஓடுபாதையில் ஓடியது.

      அடுத்த நொடியில் மேலே எழுந்து பறக்க வேண்டிய விமானம்  புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தது! எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஜன்னல் வழியே பார்த்தால் ஒரு இராட்சத ட்ரோன் விமானத்தின் மீது பறந்தவாறு பச்சை வண்ணத்தில் ஒரு திரவத்தை பீய்ச்சி அடித்தது. அதுகுறித்துக் கைப்பேசி வழியே மகளிடம் கேட்டேன். பனிமழை பெய்யும்போது விமானத்தின் இறக்கைகள் பழுதுபடாமல் இருப்பதற்கு உரிய ஏற்பாடாம் அது.

   அடுத்த பத்து நிமிடங்களில் விமானம் புறப்பட்டுப் பறக்கத் தொடங்கியது. தண்ணீர் பாட்டில், முகக்கவசம், பிஸ்கட், கிருமி நாசினிக் குடுவை ஆகியவை அடங்கிய பையை ஓர் அழகிய விமான நங்கை பைய வந்து வழங்கினாள். மகள் அன்புடன் கொடுத்தனுப்பிய பொடி தடவிய இட்டலிகளை நிதானமாக உண்டு முடிக்கவும் டொரண்டோ நகர் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கவும் சரியாக இருந்தது.

    ஓர் உதவியாளர் சக்கரநாற்காலியுடன் தயாராய் இருந்தார். என் மனைவி அதில் அமர்ந்துகொள்ள நான் பின்னால் நடந்து சென்றேன் அரை மணி நேர நடைக்குப் பிறகு நம்மூர் ஏட்டியெம் இயந்திரம் போன்ற ஒரு இயந்திரத்தின் முன் நிறுத்தி சில விவரங்களை எனக்குச் சொன்னார்.

   நான் எனது பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தை அதன் நாக்கின்மீது வைத்ததும் அது நக்கிப்பார்த்து அதாவது ஸ்கேன் செய்து என் ஜாதகம் முழுவதையும் திரையில் காட்டியது. கூடவே சில வினாக்களைக் காட்டி ஆமாம் அல்லது இல்லை எனச் சொல்லும்படிப் பணித்தது. Do you use Cannabis?  என்ற வினா எனக்குப் புரியவில்லை. நல்ல வேளை எப்போதோ ஓர் ஆங்கில நாவலில் அது குறித்துப் படித்தது நினைவுக்கு வந்ததால் ‘இல்லை’ என விடையளித்தேன். ஆம் என விடையளித்திருந்தால் போலீசை அழைத்திருப்பார்கள். அது ஒருவகை போதைப்பொருள். அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. இப்படியாக ஒரு தேர்வு எழுதி முடித்தவன்போல் நின்றேன்.  “நீங்கள் தந்த விவரங்களை மதிப்பீடு செய்கிறோம் காத்திருக்கவும்” என்ற வாசகம் திரையில் மின்னியது. அடுத்த இரு நிமிடங்களில் பிரிண்ட் என்னும் பட்டனை அழுத்தச் சொன்னது. அழுத்தியதும் ஓர் அச்சிட்ட காகிதத்தைத் துப்பிவிட்டு, ‘உடன் வரும் பயணி யார்’ எனக் கேட்டது. என் மனைவியின் பாஸ்போர்ட்டையும் நக்கச்சொன்னேன்; நக்கியது. துப்பச்சொன்னேன்; துப்பியது.   

   அந்தத்  து(ரு)ப்புச் சீட்டுகளையும் பாஸ்போர்ட்டையும் மற்றோர் இடத்தில் அழகிய கூண்டுக்கிளியாய் அமர்ந்திருந்த அமெரிக்க நாட்டு இளம் பெண் அதிகாரியிடம் நீட்டினேன். பல கேள்விகளைக் கேட்டாள். சரி சென்ற முறை கேட்டதைத்தானே இந்தமுறையும் கேட்பார்கள் என நினைத்துச் சென்றால் எதிர்பாராத கேள்விகளைக் கேட்கிறார்கள். என் அமெரிக்க மகளின் மாத வருமானம் எவ்வளவு எனக் கேட்டால் எனக்கென்னத் தெரியும். ஆனாலும் தயங்காமல் ஒரு பெருந்தொகையைச் சொன்னேன். அதற்கு மேலே அதுகுறித்து கேட்கவில்லை.  எவ்வளவு அமெரிக்கன் டாலர்கள் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டாள். எந்த கேள்வி கேட்டாலும் தயங்காமல் யோசிக்காமல் உடனே பதில் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் சந்தேகப்பட்டுத் துருவித் துருவிக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள் என என்னை எச்சரித்து அனுப்பியிருந்தாள் என் இளைய மகள். கேள்வி கேட்டு முடிக்குமுன், ‘முந்நூறு டாலர் வைத்துள்ளேன்’ எனச் சொன்னேன். உண்மையாக அவ்வளவுதான் வைத்திருந்தேன். உடனே முகக் கவசத்தைத் தாழ்த்தி முகத்தைக் காட்டச்சொன்னாள். கண்ணொடு கண் நோக்கினாள்; என் பாஸ்போர்ட்டில் உள்ள படத்தை நோக்கினாள். அதேசமயம் அங்கிருந்த கேமரா என்னைப் படம் பிடித்தது. பிறகு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதுபோல் பாஸ்போர்ட்டில் இருந்த படத்தையும் இப்போது எடுத்தப் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருத்தம் சரியாக இருந்ததால் எங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு சீல் வைத்துக் கையொப்பம் இட்டு, “விஷ் யூ ஹாப்பி ஸ்டே” என வாழ்த்தியபடி கொடுத்தாள். இனி அடுத்த ஆறு மாதங்களுக்கு நாங்கள் அமெரிக்காவில் எங்கும் செல்லலாம். அப்பாடா! பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தோம் என்ற உணர்வுடன் பாதுகாப்புச் சோதனை மையத்தை அடைந்தோம்.

    அது இன்னொரு கண்டம். இடுப்பு பெல்ட், ஷூக்கள், செல்ஃபோன், பென்ட்ரைவ், லேப்டாப், மனைவி அணிந்திருந்த தாலிக்கொடி, கைப்பை எல்லாவற்றையும் ஒரு தாம்பாளத்தில் வைத்து ஒரு ஸ்கேனர் இயந்திரத்தில் திணித்தார்கள். பிறகு எங்களைச் சோதனை செய்தனர். முடிவில் எல்லாப் பொருள்களும் கைக்கு வந்தன. லேப்டாப் வரவில்லை. கேட்டால் ‘அங்கே போங்கள்’ எனக் கைகாட்டினார் ஒருவர். அங்கே சென்றால் ஒரு மிடுக்கான அதிகாரி ஒரு சிறிய கருவி மூலம் என் லேப்டாப்பை ஆராய்ந்தார். மூடியைத் திறக்கச் சொன்னார்; திறந்து காட்டினேன். அதே கருவியால் சற்று ஆராய்ந்தார். பிறகு ஓ.கே எனச் சொல்லித் திருப்பிக் கொடுத்தார். நன்றி சொன்னேன். இதற்கு முன் என் லேப்டாப் இப்படியொரு விசேட சோதனைக்கு உள்ளானதில்லை. ‘இதெல்லாம் விமானப் பயணத்தில் சகஜமப்பா’ என்னும் உணர்வோடு நான் பயணத்தைத் தொடங்கியதால் எந்தக் கெடுபிடியும் எனக்கு வருத்தைத்தையோ மன அழுத்தத்தையோ உண்டாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு தடையையும் தாண்டிய போதெல்லாம் ஒரு தனி உற்சாகம் பிறந்தது.

     சிக்காகோ செல்ல வேண்டிய எங்கள் விமானம் சரியாக பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்பட்டது. இரண்டு மணி நேரப் பயணம். கொண்டு வந்திருந்த உணவை உண்டோம். மனைவி உறங்கினாள். நான் முன்னால் இருந்த திரையில் ஒரு வனவிலங்கு தொடர்பான திரைப்படத்தைப் பார்த்தேன். இடையில் விமான நங்கை அளித்த தேநீரைப் பருகினேன். மனைவியை செல்லமாக ஒரு தட்டு தட்டி, தேநீர் தந்தேன்.  ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்; தேவலோகம் தெரிந்தது!







     மேகக் கூட்டத்தின் மேலே பறந்ததால் குனிந்து மேகத்தைப் பார்த்தேன். அட்டா! என்ன அழகு! என்ன அழகு! சூரிய ஒளியில் அவை ஒளிர்ந்த அழகை சொற்களால் விளக்கமுடியாது. பார்த்துதான் அனுபவிக்க முடியும்.  சிக்காகோ நகரை நெருங்கியதும் வீடுகளெல்லாம் தீப்பெட்டிகளைப் போல சிறியதாகத் தெரிந்தன. ஸ்பைடர்மேன் பாணியில் ஜன்னல் வழியே வெளியேறி ஒரு பறவையாக அதுவும் பருந்தாக மாறி கீழே பார்ப்பதுபோல் கற்பனை செய்து பார்த்தேன். கைப்பேசி கேமராவில் அவ்வப்போது சில படங்கள் எடுத்தேன். விமானம் தரையிறங்கிய போது அமெரிக்க நேரம் பிற்பகல் மணி 3.54. என் கைக்கடியாரம் 4.54 எனக் காட்டியது. அது கனடா நேரம். கடிகார முட்களை பின்னுக்குத் தள்ளி அமெரிக்க நேரத்தைக் காட்டும்படி வைத்தேன்.

     விமானத்தை விட்டு இறங்கி தரையில் காலை வைத்ததும் குனிந்து தரையைத் தொட்டு வணங்கினேன். சரியாக 127 ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டு ஆன்மிகத் துறவி சுவாமி விவேகானந்தர் கால் பதித்த இடமல்லவா  அது!

     பிறகு ஓர் அரேபிய குதிரையைப் போன்ற ஏழடி உயரமுள்ள பெண்மணி ஒருத்தி என் மனைவியை சக்கரநாற்காலியில் அழைத்துச் செல்ல நான் பின்னாலேயே ஓடினேன். ஆம். அவள் நடந்தாள்; ஆனால் அவளது நடைக்கு ஈடுகொடுக்க நான் ஓட வேண்டியிருந்தது! அரை மணி நேர சுற்றலுக்குப் பிறகு டெல்லாஸ் செல்லும் விமான வாயிலருகே வந்து அமர்ந்தோம். மகள் கொடுத்தனுப்பியிருந்த வறுத்த முந்திரி, பாதாம் பருப்புகளைச் சுவைத்தவாறு வழியில் கண்ட காட்சிகளைச் சற்றே அசைபோட்டேன்.

    ஓர் இடத்தில் சிக்காகோ பள்ளி மாணவர்கள் செய்த டையனோசரஸ் என்னும் விலங்கின் உருவம் மிகப்பெரிய அளவில் காட்சியளித்தது. மற்றோர் இடத்தில் விமானத்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் முதன்முதல் வெற்றிகரமாக இயக்கிய விமானத்தின் இயந்திரத்தை வடிவமைத்துக் கொடுத்த இயந்திரப் பொறியாளரை நினைவு கூரும் (கூறும் என்பது தவறு) வகையில் சார்லஸ் எட்வர்ட் டெய்லர் அவர்களின் சிலையை அழகுற அமைத்திருந்தார்கள். கிறிஸ்துமஸ் விழா நெருங்கி வருவதால் வழியெங்கும் இதுவரை நான் கண்டிராத வண்ண மின்விளக்கு அலங்காரங்கள் என் கண்களைக் கொள்ளை கொண்டன.

     மாலை சரியாக 6.05 மணிக்கு எங்கள் விமானம் பறக்கத் தொடங்கியது. ஐந்தே நிமிடத்தில் பன்னிரண்டாயிரம் அடி உயரத்தில் பறந்தது. உயரம், வேகம், வெளிப்புற வெப்பநிலை என அனைத்து விவரங்களும் எதிர் இருக்கையின் முதுகில் உள்ள திரையில் தெரியும். இது இரண்டரை மணி நேரப்பயணம். ஜன்னல் வழியாகப் பார்த்தால் நரகலோகம் தெரிந்தது! ஆம். எங்கு நோக்கினும் இருட்டு! இருட்டு! எடுத்துக் குழைத்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்ளலாம்; அப்படியோர் இருட்டு!

    என்னதான் விமானப்பயணம் என்றாலும் உடற்சோர்வு இருக்கத்தான் செய்தது. எனவே ஒரு தூக்கம் போட்டு கண்விழித்தபோது விமானம் டெல்லாஸ் பன்னாட்டு விமான தளத்தில் நின்று கொண்டிருந்தது. சற்று நேரத்தில் விமானம் வாயைத் திறந்து பயணிகளைக் கக்கியது.

  எகிப்து நாட்டு உதவியாளர் ஒருவர் சக்கரநாற்காலியுடன் தயாராய் நின்றார். இந்தியில் பேசினார். புரிந்து கொண்டு நான் ஆங்கிலத்தில் பேசினேன். தகவல் பரிமாற்றம் சரியாய் இருந்ததால் தக்க இடத்தில் கொண்டுபோய் விட்டார். இந்தித் திரைப்படங்களைப் பார்த்தே இந்தி மொழியைப் பேசக் கற்றுக்கொண்டதாய்க் கூறினார். அன்புடன் கொடுத்த ஐந்து டாலர்களைத் தயங்காது பெற்றுக்கொண்டு விடைபெற்றார். ஆனால் மற்ற விமான நிலையங்களின் உதவியாளர்கள் அன்பளிப்பைப் பெற அன்புடன் மறுத்துவிட்டனர்.

    பிறகு கன்வேயர் பெல்ட் மூலம் வந்த எங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு மாப்பிள்ளைக்குத் தகவல் கொடுத்தேன். அவர் அடுத்த நொடியில் உள்ளே வந்து ஆறடி தூரத்தில் நின்று எங்களை அன்புடன் வரவேற்றார். அவருடைய மகிழுந்தில் இருபது நிமிட நேரம் பயணித்து எங்கள் மகள் முனைவர் அருணா சிவகணேஷ் வளமனையை அடைந்தோம். நேரே மாடி அறைக்குச் சென்றோம். அங்கிருந்தவாறு மகளுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு, அடுத்த பதினான்கு நாள் தனித்திருப்புக்குத் தயாரானோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

 

  

5 comments:

  1. ஐயா வணக்கம் உங்களோடு பயணித்தது போலிருந்தது. ஹேப்பி stay

    ReplyDelete
  2. ஐயா... உங்களின் பயணத்தில் பல்சுவை உணர்வும் இருந்தது... அருமை ஐயா...

    ReplyDelete
  3. முருகையன்.தி16 December 2020 at 20:59

    இனிய பயணம் ஐயா. தங்களின் பதிவு எம்மையும் விமானத்தில் அழைத்துச் சென்றது. நன்றி ஐயா.

    ReplyDelete
  4. அனுபவிப்பது என்பது ஒரு வகை. அனுபவிப்பதை பகிர்வது என்பது மற்றொரு வகை. அதிலும் சிறப்பு வாசிப்பவர் அதை உணரும் விதத்தில் எழுதுவது. உங்களுடன் நாங்களும் வந்த உணர்வு. மிகவும் மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  5. I'm travelling with you(r) article .
    Enjoying it sir.
    Photos & videos are super!

    ReplyDelete