நானும் என் துணைவியாரும் கனடாவுக்குப் பறந்து வந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் சிறகை விரிக்க சிலநாள்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. வருகிற பதின்மூன்றாம் நாள் காலை பத்துமணி அளவிலே ஒட்டாவா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவை நோக்கிப் பறக்கத் தயாராய் இருப்போம்.
நிறைவாக ஒரு பதிவினை இந்த வலைப்பக்கத்தில்
இடுவதற்காக ஏதாவது செய்தி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் எட்டி நடையைப்
போட்டேன். கால்போன போக்கிலே நடந்தேன்.
எங்கள் இல்லத்திற்கு அருகில் இருந்த, ஆனால் இதுவரைப் பார்த்தறியாத அந்த அகன்ற தெருவின் வலது ஓரமாக நடந்தேன். இந்த நாட்டின் விதிப்படி வலப்பக்கத்தில்தான் நடக்க வேண்டும். அங்கே தெருவோரத்தில் ஒரு பெரிய பெட்டி நின்றது. அருகில் சென்று பார்த்தேன். பொதுமக்கள் தங்களிடம் நல்ல நிலையில் உள்ள பழைய உடைகளை இப் பெட்டியில் போடலாம் என எழுதப்பட்டிருந்தது.. இதற்கென உள்ள சமூகச் சேவை அமைப்பினர் அவற்றை வாரந்தோறும் சேகரித்து, துவைத்து, தேய்த்து, மடித்து அழகிய அட்டைப் பெட்டிகளில் இட்டு, அதன் மேலே அன்புடன் என்று அழகாக எழுதி ஆங்காங்கே வசிக்கும் ஏழை எளியவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று தருகிறார்கள்.
அந்தத் தெரு ஒரு பெரிய சாலையில் சங்கமித்தது. அந்தச் சாலையில் சற்று தூரம் நடந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்று கண்ணில் பட்டது. பனியிலும் மழையிலும் தங்கள் கடமையைச் செவ்வனே செய்யும் நகரின் தூய்மைப் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவிக்கும் வாசகம் அது. நாடு திரும்பியதும் முதல் வேலையாக இப்படி ஒரு பதாகையை எங்கள் தெருவில் வைக்க வேண்டும் என்னும் முடிவோடு தொடர்ந்து நடந்தேன்.
அடுத்து என் கண்ணில் பட்ட காட்சி பெரும் வியப்பை ஏற்படுத்தியது. பொதுவாக இந்த நாட்டில் திருடும் வழக்கம் இல்லை என்று நினைப்பவன் நான். ஆனால் என் நினைப்பைப் பொய்யாக்கும் வகையில் யாரோ ஒருவர் தன் சைக்கிளை ஒரு தெருவோர மின்கம்பத்தில் ஒரு சங்கிலியில் கோர்த்துப் பூட்டிவைத்துவிட்டு எங்கோ சென்றுள்ளார். கொஞ்சம் கூர்ந்து பார்க்கிறேன். சைக்கிளின் முன் சக்கரத்தைக் கழற்றி அதையும் ஒன்றாக வைத்துப் பூட்டியுள்ளார். திருட வருபவன் பூட்டைத் திறந்தாலும் ஸ்பேனர் செட் இருந்தால்தான் சக்கரத்தை மாட்டிச் சவாரி செய்யமுடியும். அநேகமாக சைக்கிள் உரிமையாளரின் ஒரு கசப்பான முன் அனுபவமே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
தொடர்ந்து நடந்தபோது ஒரு பெரிய மைதானமும் ஓர் அறிவிப்புப் பலகையும் தெரிந்தன. நகரமைப்பு ஆணையம் வைத்துள்ள அந்த அறிவிப்புப் பலகையில் இருந்த செய்தி எனக்குப் புதுமையாக இருந்தது. “இந்த இடத்தில் பெரிய பலமாடிக் குடியிருப்பினைக் கட்ட அனுமதி கேட்டு ஒரு விண்ணப்பம் வந்துள்ளது. பொதுமக்கள் இது குறித்துத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்” என்பது அந்த செய்தியின் சுருக்கம். நம் ஊரில் இத்தகைய நடைமுறை இல்லையே என்னும் ஏக்கம் மேலிட மேலும் நடை போட்டேன்.
அருகில் இருந்த பூங்காவுக்குள் நுழைந்தேன். அப்பாடா என்று ஓர் இருக்கையில் அமரலாம் என நினைத்து அந்த அழகான இருக்கைக்கு அருகே சென்றபோது அங்கும் ஒரு வியப்பு காத்திருந்தது. அந்த இருக்கையை நன்கொடையாக அளித்தவர்கள் ஒட்டாவா வட்டாரப் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள். அவர்களை மனதாரப் பாராட்டியபடி சற்றே அமர்ந்தேன்.
அதேசமயம் எதிரில் இருந்த அறிவிப்புப் பலகை அதிர்ச்சியைத் தந்தது. நாய் ஆய் போக நேர்ந்தால் அதை நாயின் உரிமையாளர் முறையாக அள்ளி அதற்குரிய இடத்தில் போட வேண்டும். தவறினால் நூறு டாலர்- இந்திய பணமதிப்பில் ரூபாய் ஆறாயிரம் தண்டக்கட்டணம் செலுத்த வேண்டும்.
மேகம் கருக்கத் தொடங்கியதால் வீட்டை நோக்கி
விரைந்தேன். கோவிட் புண்ணியத்தில் வீட்டிற்குச்
சென்றவுடன் மீண்டும் ஒரு குளியல் போட்டேன்., மனைவி சுவையாக வைத்திருந்த மாங்காய்
வத்தல் குழம்பின் வாசம் என்னை வரவேற்றது. அப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதை
நான் சொல்லவும் வேண்டுமா?
முனைவர்
அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
அருமை! Bon voyage!
ReplyDeleteபயணக் கட்டுரை மிகவும் அருமை ஐயா
ReplyDeleteபடம் காட்டிக் கதை சொல்வதில் வல்லவராயிற்றே நீங்கள். அதுவும் சமூகத்தை செப்பனிடும் வாசகங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சிறப்பு... மிகவும் சிறப்பு அண்ணா. இந்தத் தளத்திலிருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்காக ஒரு சிறிய தகவல்.
ReplyDeleteஎங்கள் ஊர் நடுப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஒப்பாக "ஊழைப்பாளர் தினத்தை" (மே 1 ஆம் நாள்) கொண்டாடி மகிழ்வோம். அது சமயம், எங்கள் ஊர் தூய்மைக் காவலர் அனைவரையும் மேடையேற்றி, அவர்களையெல்லாம் வாழ்த்தி, நன்றி பாராட்டி, பரிசு தந்து மகிழ்வதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது எங்கள் "நடுப்பட்டி கனவு கிராமம்."
தமிழுடன்
த. தங்கப்பாண்டியன்
இச் செய்தியை இங்கே உள்ளவர்களுடன் இன்றே பகிர்வேன்.
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteபல தகவல்களை அறிய முடிகிறது... நன்றி...
தங்கள் கட்டுரை படித்தேன். நற்பண்புகள் மற்றும் தீய குணங்களின் கலவையே மனித குலம். சைக்கிள் திருடும் பழக்கம் இப்போதுதான் கனடாவில் ஆரம்பித்துள்ளது.பைக் திருடும் அளவுக்கு நம் நாடு முன்னேறியுள்ளது.அவர்கள் நம் அளவு முன்னேற பல வருடங்கள் ஆகும்.
ReplyDeleteவணக்கம். தங்களது பதிவுகள் கனடா நாட்டைப் பற்றியும் அதன் சமூகவியல் பற்றியும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக இருந்தது. மகிழ்ச்சி.
ReplyDeleteவியப்புதான் மேலிடுகிறது ஐயா
ReplyDeleteஎல்லாவற்றிலும் ஒரு நேர்மை. ஒரு நியாயம்.ஒரு படிப்பினை.நம்மூரிலும் பின்பற்றினால் நாமும்........ மனிதராகலாம். அருமையான பதிவு ஐயா.
ReplyDelete