Friday, 4 December 2020

சோறு போடும் உழவர் சோர்ந்து போகலாமா?

   உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் புது தில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தைப் பத்தோடு பதினோராவது செய்தியாகப் பார்த்துக் கொண்டே உங்கள் மனைவி சுட்டுக் கொடுத்த மசால் வடைகளைச் சுவைக்கின்றீர்கள்.  சிவ பூசையில் கரடி நுழைந்த கதையாய் நான் உள்ளே வந்துவிட்டேன்.

    நக்கி எடுக்கும் நவம்பர் டிசம்பர் குளிரில் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் போராடுகின்றார்கள்  . இங்கேயும் அவர்களுக்கு ஆதரவாக கனடாவின் டொரண்டோ, வான்கூவர், கொலம்பியா ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன!

கனடா: படம் இணையத்திலிருந்து

   சரி, நம்மூரின் உழவர் பிரச்சனை அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனை என்ன என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

  உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சிறு, குறு விவசாயிகள் வாழும் நாடு நம் நாடு. கால்வயிறு கஞ்சியாவது கிடைக்கிறது, குழந்தைகளைக் கொஞ்சம் படிக்க வைக்க முடிகிறது என்றால் அது அவர்கள் வைத்துள்ளை கையளவு நிலத்தின் வருவாயில் இருந்துதான். இப்போது அதற்கும் சிக்கல் வந்ததால்தான் விவசாயிகள் போராடுகிறார்கள்,

   புதிய சட்டத்தின் விளைவாக, கிராமத்து விளை நிலங்களை வளைத்துப்போட்டு வணிக நோக்கில் விவசாயம் செய்ய(Industrial Agriculture Model) கார்ப்பரேட் கம்பெனிகள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன. இதில் சில வெளிநாட்டுக் கம்பெனிகளும் அடக்கம். அதிகாரத்தில் உள்ளோர் இவர்களைச் சிரித்த முகத்துடன் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார்கள். Factory farming என்னும் புதுமுறை விவசாயம் பெருகும். விளைபொருள்கள் பெருமளவில் ஏற்றுமதி ஆகும்.

    உள்ளூர் விவசாயிகள் நில உரிமையாளர் என்னும் தகுதியை இழந்து, தன் மானத்தை இழந்து, இலவச கோதுமைக்காக கோவணத்துடன் ரேஷன் கடைகளில் கால்கடுக்க நிற்பார்கள். கட்சி வேறுபாடு இல்லாமல் பண முதலைகள் போட்ட பிச்சைப் பணத்தை வாரி இறைத்து விவசாயிகளின் வாக்குச்சீட்டை அரசியல்வாதிகள் வாங்குவார்கள். தேர்தலில் வென்று தேசநலன் குறித்து உரக்கப் பேசுவார்கள்.

    இன்னொரு கோணத்திலும் இப் பிரச்சனையைப் பார்ப்போம்.

  வயிற்றுக்குச் சோறுபோடும் நோக்கில் நடந்த விவசாயம் காலப்போக்கில் வணிக நோக்கில் மாறியதால் இயற்கையின் சமநிலைத் தன்மை கெட்டது. பல்வகைப் பயிர்களைப் பயிரிடாமல் பணப்பயிர்களை மட்டுமே பயிரிடும் நிலை உருவாகியது. இதன் விளைவாக தாவரங்கள் பலவற்றின் பயன்பாடு குறைந்து, விவசாயிகள் பயிரிட மறந்து, அவை மண்ணுலைகை விட்டே நீங்கிவிட்டன. 1950களில் நம் நாட்டில் 1400 கீரை வகைகள் இருந்தனவாம். இப்போது 200 வகையான கீரைகளே எஞ்சியுள்ளன என்று ஓர் ஆய்வு கூறுகிறது. பல தானியப் பயிர்களும் இப்படி அழிந்து விட்டன.

  இன்றளவும் இந்திய மக்களுக்குச் சோறுபோடும் குக்கிராமத்துக் குறுவிவசாயிகள் இன்னும்  கோழிகள், ஆடு மாடுகள் வைத்துக்கொண்டு விவசாயம் செய்வதால்தான்  இந்த விளைநிலம் மலடு ஆகாமல் இருக்கின்றது.

  வருங்காலத்தில் காப்பரேட் கம்பெனிகள் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு ஒருபயிர் விவசாயத்தையே(Monoculture farming) பெருமளவில் செய்யும். உற்பத்தி இலக்கை எட்ட வேண்டி மரபு சாரா விதைகள், நச்சு இடுபொருள்கள், நீண்ட நாள்கள்  உணவுப்பொருள் கெடாமல் இருக்க உயிர்க்கொல்லி இராசாயனப் பொருள்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தும். நஞ்சில்லா உணவு கிடைக்காத நிலை ஏற்படும்.

  ஓர் அதிர்ச்சி தரும் தகவலை நான் மூடி மறைக்க விரும்பவில்லை. ஒரு காலத்தில் சத்துள்ள காய்கனிகளைத் தந்த நம் விவசாய நிலங்கள் இப்போது சத்தில்லாத காய்கனிகளைத் தரத் தொடங்கிவிட்டதாக ஒரு ஆய்வுக் கட்டுரையில் படித்தேன். இயற்கை விவசாயத்திற்குத் திரும்பினால் மட்டும்தான் மீண்டும் சத்துள்ள காய்கனிகளைப் பெறமுடியும்.

   இந்தச் சூழலில் பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?

   உழவர்களுக்குத் தோள் கொடுக்க முன்வர வேண்டும். உள்ளூர் உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நேரடியாக அவர்களிடமிருந்து பேரம் பேசாமல் வாங்க வேண்டும். இயற்கை வேளாண் பொருள்களை கூடுதல் விலைகொடுத்து வாங்கி ஊக்குவிக்க வேண்டும்.

 மண்ணின் நலமே மக்களின் நலம் என்னும் விழிப்புணர்வை உழவர்களிடையே ஏற்படுத்தலாம்.

   கைப்பேசியில் கடுந்தவம் செய்யும் இளைஞர் கூட்டம் உழவர்கள் நிலைகுறித்துச் சிந்திக்குமாறு உசுப்பிவிட வேண்டும். அரசியல்வாதிகளின் முகமூடியை அகற்றும் சக்தி இவர்களிடம்தான் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும்.

  அடடா! உங்கள் மனைவி கொடுத்த மசால் வடைகளைத் தொடர்ந்து தின்னாமல், தொலைக்காட்சிக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு,  நான் சொன்ன செய்திகளைக் கேட்டதற்கு நன்றி. இதை இன்னும் நான்கு பேருக்குச் சொல்வீர்கள் என நம்புகிறேன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

4 comments:

  1. உழுதுண்டு வாழ்பவனை இவர்கள் தொழுது பின் செல்ல வேண்டாம்; அவர்களையும் சக மனிதர்களாகப் பார்த்தாலே போதும். விவசாயிகளுக்கான குறைந்தபட்ச பொருளாதாரத் தேவைகளுக்கான உத்தரவாதத்தைக் கூட தர முயற்சிக்காத அரசுகள் இப்போது அவன் கோவணத்தையும் பிடுங்கப் பார்க்கின்றன.
    ஆளத் தகுதியற்றவர்களிடம் அதிகாரம் தரப்படுவதால் ஏற்படும் விளைவுகள் இவை.

    ReplyDelete
  2. நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன

    ReplyDelete
  3. சுதந்திர இந்தியாவில் நடைபெறுகின்ற பெரிய பேரணி. விவசாயிகளின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
  4. அரசு திருந்தும்... திருந்த வேண்டும்...

    ReplyDelete