Thursday, 3 August 2023

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

   மனிதருக்குத் துன்பம் எந்த வடிவில் எங்கிருந்து எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்னும் கணியன் பூங்குன்றனாரின் கூற்று இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். பிறர் தர நன்று வருகிறதோ இல்லையோ தீது வருகிறது.

    துன்பங்கள் கூட இருவகைப்படும். ஒன்று- தானே வருவது; மற்றது- நாமே வரவழைத்துக்கொள்வது. எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். பரம்பரையாகத் தானே வருவது முதல் படிநிலைச் சர்க்கரை நோய். நாவடக்கம் இல்லாமல் வாய்ச்சுவைக்கு அடிமையாகி, கருப்பட்டி அல்வாதானே என்று கண்டபடிக்குத் தின்று அடுத்தப் படிநிலைக்கு ஆளாவது என்பது நாமே வரவழைத்துக் கொள்ளும் துன்பம்.

   இப்போது அனைவரின் ஆறாவது விரலாக இருக்கும் கைப்பேசிதான் இந்த இருவகைத் துன்பங்களையும் அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாக விளங்குகிறது.

   வங்கிக் கணக்குகள் உட்பட அனைத்து விவரங்களையும் அதில் வைத்திருப்போர் பலராவார். ஆனால் முகம் தெரியாத ஒருவன் நம் கைப்பேசிக்குள் வந்து ஓர் ஆசை வலையை விரித்து அதில் நம்மை விழச் செய்து பெரும் துன்பத்திற்கு ஆளாகச் செய்து விடுகிறான். ரூபாய் ஐந்து கோடி பரிசு விழுந்துள்ளதாகக் கூறி அதை அனுப்புவதற்குரிய நடைமுறைச் செலவுக்காக  ஆயிரம் ரூபாய் அனுப்புமாறு சொல்வான். ஐந்து கோடிக்கு ஆசைப்பட்டு அவனுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நம் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுதும் காலியாகிவிடும்!

   சிலர் இணையவழிச் சீட்டாட்டத்தில் இனிதே சிக்கவைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றனர். சிலர் பெண் குரலில் அழைத்து இனிக்க இனிக்கப் பேசி இருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொள்கின்றனர்.

   சிலர் முகநூலில் எதைப் போடுவது என்பது தெரியாமல் போட்டு  ஏமாறுகின்றனர். ‘இப்போது நாங்கள் குடும்பத்துடன் கொடைக்கானல் போய்க்கொண்டுள்ளோம்என்று பதிவு இடுபவருடைய வீட்டின் பூட்டை அன்று இரவே உடைத்து விடுகிறான் திருடன். இதுவும் வரவழைத்துக் கொள்ளும் துன்பந்தான்.

    எப்படி எல்லாம் ஏமாற்றலாம் எனக் கற்றுத்தர பயிற்சி நிலையங்கள் இருக்குமோ? ‘நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. இன்னும் ஒருமணி நேரத்தில் உங்கள் வீட்டு மின் இணைப்பு நிறுத்தப்படும். விவரம் அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்என்று ஒரு செய்தி இரவு எட்டு மணிக்கு வரும். என்னமோ ஏதோ என நினைத்து அவன் தந்த இணைப்பில் உள்ளே சென்றால் நம் கைப்பேசியில் உள்ள அனைத்துத் தகவல்களும் அவனுக்குச் சென்றுவிடும்!

    ஏதோ ஓர் எண்ணிலிருந்து இன்று ஓர் அழைப்பு வந்தது. என்னிடம் படித்த முன்னாள் மாணவராய் இருக்கலாம் என்று எடுத்தேன். என் பெயரைக் குறிப்பிட்டு, வங்கி ஒன்றிலிருந்து பேசுவதாய்ச் சொன்னதும் அழைப்பைத் துண்டித்துவிட்டேன். உடனே இது குறித்துக் காவல் துறையில் பணிபுரியும் நண்பருக்குத் தெரிவித்தேன். என்னையும் வைத்துக் கொண்டே அவர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டார். The number you have dialled does not exist என்று கேட்கிறது! சற்றுமுன் பேசிய கயவனின் எண் அடுத்த நொடியில் எப்படி இல்லாமல் போகும்? அந்த அளவுக்கு அவன் தொழில் நுட்பம் அறிந்து வைத்திருக்கிறான்!

     கட்டுச் சோற்றுக்குள் நாமே எலியை வைத்துக் கட்டிக் கொண்ட கதையாக இன்று நாம் கைப்பேசியை வைத்துள்ளோம்.

   இதன் மூலம் வரும் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு திருக்குறள்தான்.

 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.  (341) 

 ..........................................................................................................................

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 comments:

  1. நம் கைப்பேசி நம் கையடக்கத்தில் கைக்குள்! இரு பொருள் நம் கட்டுப்பாட்டிலும் என்பதுதான். அறியாத எண் என்றால் எடுக்கவே வேண்டாம். அப்படி உண்மையாகவே நம்முடன் தொடர்பு கொள்ளும் நபராக இருந்தால் ஒன்று வாட்சப் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம்.

    வங்கிக் கணக்குகள் அலைபேசி வழி செய்யாமல் இருப்பதும் நல்லது. பணத்திற்கு எப்படி நாம் Boss ஆக இருக்க வேண்டுமோ அது போல கைப்பேசிக்கும்!

    கீதா

    ReplyDelete
  2. அருமையாக சொன்னீர்கள் உதடுகள் ஒட்டாத குறளுடன்...

    ReplyDelete