எங்கள் வீட்டையொட்டி ஒரு சிறிய தோட்டம். அதில் செடி, கொடி, மரங்கள் அதிகம். பூச்சி பொட்டுகள் தங்கும் வகையில் குப்பைக் கூளங்களைக் குவித்துப் போட்டு வைப்பதில்லை. அப்படியிருந்தும் நேற்று ஒரு பாம்பு வீட்டிற்கே வந்து, துண்டைக் காயப்போட வெளியில் வந்த என்னைப் பார்க்க, நான் அதைப் பார்க்க ஒரு கணம் திகைத்து நின்றேன்.
என்னை ஒரு வீரன் என நினைத்து புறவாலைக் காட்டி விரைவாக
வளைந்து நெளிந்து ஊர்ந்தது. மழைநீர் வடிய அமைக்கப்பட்டிருந்த குழாயுள் புகுந்தது. நான்
திரும்பி வீட்டைச் சுற்றி ஓடித் தோட்டத்திற்குள் சென்று அதன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
என்னைப் பார்த்ததும் அதனைக் கொல்ல வந்த எமன் என நினைத்து அதன் ஐந்தறிவுக்கு எட்டிய
வகையில் தப்பிக்கும் வழிகளை ஆராய்ந்தது.
கொல்லாமை அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைப் படித்து
இயன்றவரையில் கடைப்பிடிப்பவன் நான் என்பது பாம்புக்குத் தெரியுமா? தெரியாத காரணத்தால், முதலில்
வந்த குழாய் வழியே தப்பித்துச்செல்ல முயன்றது. இரண்டடி உயரத்தில் எம்பி எட்ட முயன்ற
போது வழுக்கி விழுந்தது. அருகில் இருபது அடி நீளமும் ஆறு செண்டிமீட்டர் விட்டமும் கொண்ட
பி.வி.சி குழாய் கிடப்பதைப் பார்த்ததும் அதன் அருகில் ஒரு நொடி நின்றது. உள்ளே தலையை நீட்டி எட்டிப் பார்த்தது. அடி விழாமல்
தப்பிக்க அதன் உள்ளே புகும் என நினைத்தேன். ஆனால் அது எடுத்த முடிவுதான் என்னை வியக்க
வைத்தது. அந்தக் குழாயை ஒட்டி மறைவாக ஊர்ந்து சென்று அங்கிருந்த சுற்றுச் சுவரில் ஓர்
ஓட்டையைக் கண்டுபிடித்து அதனுள் நுழைந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.
அதன் இயல்புக்கு மாறாக, அது பகல் நேரத்தில் வெளியில்
திரிந்தது முட்டாள் தனமான செயல் என்றாலும், குழாய்க்குள் நுழைவதைத் தவிர்த்தது அறிவார்ந்த
செயலே ஆகும். குழாயின் அடுத்த நுனி மூடியிருந்தால் என்ன செய்வது? உள்ளே சென்றதும் இந்த
நுனியை நான் ஒரு கல்லைப் போட்டு மூடிவிட்டால் கதை கந்தலாகிவிடுமே என்றும் யோசித்துள்ளது.
மனிதர்கள் அவசரத்தில் தவறான முடிவை எடுத்து வம்பில்
மாட்டிக் கொள்வதுண்டு. பல்லடுக்குக் குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் குடியிருக்கும்
ஒருவர் மூன்றாம் மாடியில் தீ என அறிந்ததும் அங்கிருந்து கீழே குதித்துத் தப்பிக்க முடிவெடுத்தால்
எப்படியிருக்கும்!
“அடே கோவிந்தா! சிக்கல் வரும்போது தவறான முடிவை
எடுத்து மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதே” என்று ஒரு பாடம் நடத்திய பாம்பைப் பாராட்ட
நினைத்தாலும் பயத்தில் உறைந்து கிடந்த என்னால் முடிய இயலவில்லை. இன்று இந்தப் பதிவை
வலைப்பூவில் இட்டு என் பாராட்டைத் தெரிவிக்கின்றேன்.
ஆறறிவுடையவர் என்னும் செருக்கினால் நாம் பிற உயிரினங்களின்
அறிவைக் குறைத்து மதிப்பிடுவது சரியன்று. வாழ்க பாம்புகள்! இப் புவியில் வாழ்வதற்கு
நமக்குள்ள உரிமை அவற்றுக்கும் உண்டல்லவா!
பாம்பைக்
கண்ட பயத்தின் நடுவிலும் மனத்தில் ஒரு வெண்பா உருவானது.
பட்டப் பகலிலே பார்த்தேன் நெடும்பாம்பு
எட்ட
வருகையில் எட்டிநான் பார்க்க
கடுகி
மறைந்தது கண்ணிமைக்கும் போதில்
வெடவெடத்து
நின்றேன் வியர்த்து.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.
அழகான பதிவு ரசித்து வாசித்தேன். பாம்பு என்றால் உடனே கம்பைத் தூக்கும் மக்களிடையே இப்படி அதை அடிக்காமல் அதன் செயல்பாட்டைக் கவனித்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தௌ.
ReplyDeleteநம்மை விட மற்ற உயிரினங்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை. ஏனென்றால் அவற்றிற்கு 6 வது அறிவு இல்லை எனவே எப்போதுமே தங்களின் பாதுகாப்பை மிகவும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் அவற்றின் Senses இருக்கும். பொதுவாகவே Natural instinct . அது நிதானமாகத் தப்பிக்க யோசித்தது எதனால் என்றால், 'அதற்குத் தெரிந்திருக்கும் கண்டிப்பாக அந்த உணர்வு அவற்றிற்கு அதிகம். இவர் நம்மை அடிக்கப் போவதில்லை. ஆனால் எப்படியும் தப்பிக்க வேண்டும்' என்று நிதானமாகச் செய்திருக்கிறது தனக்கான வழியைக் கண்டறிய. ஒருவேளை கம்பு எடுத்திருந்தால் உங்கள் பதற்றம் அதற்குத் தெரிந்திருக்கும் எனவே ஆபத்து என்பதை உணர்ந்து குழாய்க்குள் புகுந்திருக்கும் அதன் பின் வெளியில் அரவம் இல்லை என்று உணர்ந்த பின் வளைக்குள் புகுந்திருக்கும், அப்படித்தோன்றுகிறது
கீதா
கவிதை அருமை, ஐயா ரசித்தேன்
ReplyDeleteகீதா
பாம்பு நடத்திய பாடம் தலைப்பு அருமை. அதைவிட தாங்கள் கூறிய கருத்துரை அருமை. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. இதற்கு வேறு பொருள் உண்டு என்பது என் எண்ணம். எப்படி இருப்பினும் பாம்பு ஒரு விசமுடைய உயிரினம். ஆகவே நாம் அச்சப்பட வாய்ப்புண்டு. பலரும் கூறுவார்கள் பாம்பு கூச்ச சுபாவம் உடையது, மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லவும் மறையவும் முயற்சிக்கும். 90சதவீத பாம்புகளுக்கு விசமில்லை, முக்கோண வடிவமுடைய பாம்புகளுக்கே விசமுண்டு என்பர். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் குடியிருக்கும் பகுதியில் அதன் இருப்பிடம் உருவாக்கும் சூழலைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் அதை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதை அப்பாம்பு அறியாது. வழக்கமாக இலை சருகுகள், குழாய்கள், பொந்துகள் மற்றும் கல் இடுக்குகளில் மறைந்து தன்னைப் பாதுகாக்கும் இயல்புடையது பாம்புகள். நீங்கள் கண்ட பாம்பு உங்கள் கண்பார்வையில் இருந்து வெளியேறுவதைப் பார்த்தால் மட்டுமே உங்களுக்கு அச்ச உணர்வு மறையும். நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர்
கரூர்
ஆறு மாதத்திற்கு ஒருமுறை குருணை மருந்தை வாங்கி அதனுடன் ஆற்றுமணல் கலந்து வீட்டை சுற்றி போட்டால் பாம்பு மட்டுமில்லை எந்த பூச்சியினமும் நெருங்காது. தர்ப்பை புல் வளர்த்தாலும் எந்த பாம்பினமும் அண்டாது. அந்த புல்லிற்கு அப்படியொரு சிறப்பு.
ReplyDeleteஅருமையான பாடம் ஐயா...
ReplyDeleteNice lesson sir
ReplyDeleteஅழகான பா. தொடருங்கள். நன்றி.
ReplyDelete