Thursday, 2 May 2024

உலகப் பெருநூல்

    கிறித்துவர்களின் பைபிள் எந்தத் தாளில் அச்சடிக்கப்படுகிறதோ அந்தத் தாளில் அமெரிக்காவில் அச்சடித்து வெளிவந்த முதல் நூல் இது எனலாம்.

செட்டிநாட்டைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் தமிழர் திரு.அழகப்பா இராம்மோகன் இப் பெருநூலின் வெளியீட்டுக்குப் பெருமுயற்சி எடுத்த பெருமகனார் ஆவார். அவர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள், அதாவது தைத்திங்கள் முதல் நாளில், இப் பெருநூலுக்கான முன்னுரையை எழுதி வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து ஈண்டு குறிப்பிடத் தகுந்தது.

“தனிப்பட்ட தமிழர்கள் தமிழை மறக்கலாம்; தங்களை மறக்கலாம்; இறந்தும் போகலாம். ஆனால் தமிழ்ச் சமுதாயம் தன்னை மறக்க இயலாது; அது இறப்பற்றது. அதன் ஒட்டு மொத்தமான கூட்டு நினைவுகள் புத்தக வடிவில் அழியாது காக்கப்பட்டு வந்துள்ளன. ஆகவே அவை என்றும் நிலைத்து நிற்கும்.”

ஆம். அவர் கூற்று முற்றிலும் உண்மையே. இன்று அழகப்பா இராம்மோகன் நம்மிடையே இல்லை. ஆனால் தமிழ்ச் சமுதாயத்தின் நிலைப்பேற்றுக்கு அரணாக இந்த நூல் உள்ளது.

  இவரது மறைவுக்குப் பிறகு இதன் மூன்றாம் பதிப்பை அண்மையில் வெளிக்கொணர்ந்தவர் திருமதி மீனாட்சி இராம்மோகன் அவர்கள்.

    1792 பக்கங்கள் கொண்ட ஒரே நூல் இது. பைபிள் தாளில் அச்சிடப்பட்டதால் ஒரு குழந்தை கூட கையில் எடுத்துப் பார்க்கும் வண்ணம் குறைவான எடையை உடையதாய் உள்ளது.

   பொதுவாக நூலுக்கு ஒரு தலைப்பு இருக்கும். அரிதாக ஒரு நூலுக்கு இரு தலைப்புகளும் இருக்கும். உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், முருகன் அல்லது அழகு என்பன திரு.வி.கலியாணசுந்தரனார் எழுதிய நூல்களின் பெயர்கள். ஆனால் இப் பெருநூலுக்கு மூன்று தலைப்புகள் உள்ளன.

 


தமிழ்மறை திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி என்பன அவை.

 

  இப் பெருநூல் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் பெருமைசால் பதிப்பாகும். உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையை நிறுவியவர் அழகப்பா இராம்மோகன் ஆவார். இப்போது இதனை அமெரிக்கா வாழ் தமிழம்மை திருமதி மீனாட்சி இராம்மோகன் நிருவகித்து வருகிறார்.

  தமிழறிந்தவரும், தமிழறியாதவரும் வாசிக்கும் வகையில் இப் பெருநூலில் ஒவ்வொரு சொல்லும் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.

    தமிழ்மறை திருக்குறள் என்னும் பகுதியில் திருக்குறள் மூலமும் தமிழண்ணல் உரையும் அமைந்துள்ளன. திரு.பி.எஸ்.சுந்தரம் அவர்களின் குறளுக்கான எளிய ஆங்கில விளக்கமும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. திருக்குறளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அருஞ்சொற்களுக்குப் பொருள் அகராதி அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.

   வழிகாட்டும் வள்ளுவர் என்னும் பகுதி இந்நூலுக்கு மேலும் சிறப்பினைச் சேர்க்கிறது. வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வு நல்கும் குறட்பாக்களை நொடிப்பொழுதில் காணலாம்! தோல்வியுற்ற நிலையில் எந்தக் குறளைப் படிக்கவேண்டும், நட்பு முறிவின்போது எந்தக் குறளைப் படிக்கவேண்டும், சோம்பல் அல்லது காம உணர்வு மிகும்போது எந்தக் குறளைப் படிக்கவேண்டும், எனப் பட்டியலிட்டுக் காட்டுகிறது இப் பகுதி. இப் பட்டியலைப் பார்க்கும்போது வ.சுப.மாணிக்கனார்திருக்குறள் ஓர் செயல் நூல்எனக் குறிப்பிட்டதன் பொருத்தப்பாடு நன்றாகப் புரிகிறது.

   திருக்குறள் தொடர்பான அரிய கட்டுரைகள் இப் பெருநூலுக்கு அணி சேர்க்கின்றன.

நூலின் அடுத்தப் பகுதி தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு. இதில் தமிழ்ப் பண்பாடு, தமிழினப் பண்பாட்டுக் குறியீடு, இன்றைய தமிழினம், கீழடி, பொருநை அகழாய்வு, இலக்கணமும் செய்யுள் மரபும், தமிழிலக்கிய வரலாறு, மருத்துவம், வானவியல், தொழில்நுட்பம், நடராச தத்துவம் உள்ளிட்ட பல தலைப்புகளில் செய்திகள் குவிந்து கிடக்கின்றன.

   நூலின் மூன்றாம் பகுதிதமிழின எதிர்கால வழிகாட்டிஎன்பது. இதில் தமிழின் எதிகாலம், நல்வாழ்வுக்கான நெறிமுறைகள், தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பு, திருக்குறள் சார்ந்த உணவு முறை மற்றும் மூச்சுப் பயிற்சி முறை போன்றவை இடம் பெற்றுள்ளன.

 

   சுருங்கச் சொன்னால் நூறு நூல்களின் பிழிவு இந்த ஒரு நூலில் உள்ளது என்பது என்னுடைய மதிப்பீடாகும்.

இப் பெருநூலை எங்கே வாங்கலாம்?

 கடைகளில் விற்கப்படுவதில்லை.  Valaitamil.com என்னும் வலைத்தளம் சென்று order online என்னும் தொடரைச் சொடுக்கித் தூதஞ்சல் மூலம் பெற இயலும். இந்திய பண மதிப்பில் ரூ.2500. தூதஞ்சல் செலவு தனி.

  நிறைவாக ஒரு கருத்து. பல நூல்களுக்கு மெய்ப்பு நோக்கியவன் என்ற முறையில் இந்நூலில் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் இருப்பதைப் பார்த்து வியந்தேன். ஆங்கிலத்தில் அதிகமாக உள்ளன. நாலாம் பதிப்பு பிழையில்லாத செம்பதிப்பாக வர வேண்டும் என்பது எனது ஆசை. தலைமைத் தொகுப்பாசிரியர் திரு. மணி மு.மணிவண்ணன் கவனிப்பாராக.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

   

3 comments:

  1. Thirukkural is always the best book sir.

    ReplyDelete
  2. தமிழும் தமிழன் புகழும் என்றும் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  3. தி.முருகையன்5 May 2024 at 14:16

    என்றும் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete