Sunday 26 October 2014

மலரும் நினைவுகள்


                          என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
                          தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
                                                                                                -திருமூலர்


     தந்தி மூலம் செய்தி அனுப்பும் முறை இப்போது வழக்கொழிந்து விட்டது. ஆனால் தொலைப்பேசி பரவலாக பயன்பாட்டில் இல்லாத காலத்தில் தந்திதான் தகவல் தொடர்பு சாதனமாக விளங்கியது. அந்தக்காலத்தில் தந்தி வந்தால் என்னமோ ஏதோ என்று மக்கள் மனம் கலங்குவர். ஆனால் எனக்கு வந்த தந்திகள் எல்லாம் நல்ல செய்திகளையே தாங்கி வந்தன.

  YOU ARE APPOINTED AS LAB ASSISTANT என்ற செய்தியோடு கோவை நேரு வித்யாலயா பள்ளியிலிருந்து வந்த தந்தி. YOU ARE APPOINTED AS PG TEACHER  என்ற செய்தியோடு கோபிசெட்டிபாளையம்  வைரவிழா மேனிலைப்பள்ளியிலிருந்து வந்த தந்தி.

 முதல் குழந்தைப் பேற்றுக்காக என் மனைவி தாய் வீடு சென்றிருந்த சமயத்தில், YOU ARE BLESSED WITH A DAUGHTER என்ற செய்தியோடு வந்த தந்தி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவச்செய்தது. அப்பா என்னும் பேற்றுக்கு என்னை ஆளாக்கிய மகளைக்காண தந்தியைவிட விரைவாகச் சென்றேன்.

 அவள் பிறந்த யோகத்தால் YOU ARE ELECTED AS SENATE MEMBER FOR THREE YEARS என்ற செய்தியோடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த தந்தியும் இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

YOU ARE APPOINTED AS PRINCIPAL  என்ற செய்தியைத் தாங்கி, காகிதபுரம் TNPL பள்ளியிலிருந்து வந்த தந்தி. இது குறிப்பிடத்தக்க ஒன்று. கடும் போட்டிக்கிடையே நான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்படியாக நல்ல செய்திகள் நாடி வந்தன.

  இவற்றுக்கு இடையில், 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி வந்த தந்திச் செய்திதான் வாழ்வில் மறக்க முடியாதது. நடுவணரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து வந்தது அத்தந்திஅந்தச் செய்தி என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நாட்டின் உயரிய விருது உங்களுக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தியே அது. I AM PRIVILEGED TO INFORM YOU THAT YOU HAVE BEEN SELECTED FOR THE NATIONAL AWARD என்ற வரிகளைக் கண்ணால் பார்த்து, கைவிரலால் தொட்டு, பலமுறையும் படித்தேன். இவ்விருதுக்கு என்னைப் பரிந்துரைத்த கோபி மாவட்டக் கல்வி அலுவலர், மிக நேர்மையான அதிகாரி திரு நரேஷ் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்தேன்உணர்வு நிலையிலிருந்து உலக நிலைக்கு வர ஒரு மணி நேரம் ஆயிற்று.

    உற்றார் உறவினர் நண்பர்கள் மாணவர்கள் என அனைவரும் ஈரோடு இரயில் நிலையத்திற்கு வந்து வழியனுப்பிவைத்தார்கள். நானும் என் மனைவியும் 36 மணிநேர பயணத்திற்குப் பிறகு புதுதில்லி ஜன்பத் ஹோட்டலுக்குச் சென்று அரசுச் செலவில் தங்கினோம்செப்டெம்பர் நான்காம் தேதி காலையில் விக்யான் பவனில் நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றேன். குடியரசுத் தலைவரிடமிருந்து விருதினைப் பெறும்போது செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை எவை என்பதற்கான பயிற்சிதான் அது.

  அன்று மதியம்  புகழ்பெற்ற இம்ப்பீரியல்ஹோட்டலில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி விருந்தளித்தார். அன்று மாலையில் பிரதமர் வாஜ்பாயி அவர்களுடனான சந்திப்பில் பங்கேற்றேன். நிறைவாக, விருதாளர்கள் சார்பாக என்னை அழைத்தபோது எந்தத்தயக்கமும் இல்லாமல் மேடையேறி நன்றியுரையாற்றினேன்செந்தமிழும் நாப்பழக்கம் ஆங்கிலத்திற்கும் அதே பழக்கம் என்னும் கோட்பாட்டோடு பேசிப்பழகிய ஆங்கிலம் தமிழாசிரியராகிய எனக்கு நன்றாகவே கைகொடுத்தது. தொடர்ந்து நடந்த விருந்தின்போது வடக்கத்திய விருதாளர் பலரும் என்னைப் பாராட்டினார்கள்.

   மறுநாள் நிகழ்வை எண்ணி எண்ணி இரவில் தூங்கவில்லை. அதிகாலையில் எழுந்து விரைந்து விழாவுக்குத் தயாரானோம். குறித்த நேரத்தில் விழா அரங்கிற்குச் சென்றோம். மூன்றடுக்குச் சோதனைக்குப் பிறகு என்னை அரங்கின் முன்பகுதியிலும் என் மனைவியைப் பார்வையாளர் பகுதியிலும் அமரவைத்தார்கள். சரியான நேரத்தில் குடியரசுத் தலைவர் டாக்டர் பி ஜெ அப்துல் கலாம் அவர்களும் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி அவர்களும் மேடையை நோக்கி வந்தார்கள். அனைவரும் எழுந்து நின்றோம்., நாட்டுப்பண் இசை நிறைவுற்றதும் அமர்ந்தோம். முரளி மனோகரின் வரவேற்புரைக்குப்பிறகு, டாக்டர் கலாம் அவர்கள் சிறப்புரையாற்றினார். நாட்டின் எதிர்காலம் ஆசிரியர் கைகளில் உள்ளது என்பதை உணர்த்தினார்.  அன்றைய தினமணியில் வந்திருந்த ஆசிரியர் தின கட்டுரையை மேற்கோள் காட்டிப் பேசியபோது எனது நாடி நரம்புகளெல்லாம் புடைத்தெழுந்தன. காரணம் அந்தக் கட்டுரையை எழுதியதே நான்தான்!

     அவருடைய  உரைக்குப் பிறகு விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. அகர வரிசையில் அழைத்தார்கள். என்னுடைய முறை வந்தது. தோன்றின் புகழொடு தோன்றுக என்று வள்ளுவர் குறிப்பிடுவார்.அத்தகைய பெருமிதத்தோடு மேடை நோக்கிச் சென்றேன்., டாக்டர் கலாம் அவர்களின் கண்களை நோக்கியபடி, புன்முறுவலுடன் அவர் அளித்த விருது, வெள்ளிப்பதக்கம், ரூபாய் 25000 க்கான வங்கிவரைவு ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டேன்கனவு காணச்சொன்னீர்கள்., என் கனவு இந்தக்கணத்தில் நனவானது” என்று சொன்னேன். மகிழ்ச்சி என்று சொன்னபடி கைகுலுக்கி விடைகொடுத்தார். நான் தமிழில் பேசியது எதுவும் புரியாததால் அருகில் நின்ற ஜோஷி அவர்கள் என்னை வியந்து நோக்கினார்விருது பெற்ற அந்தக்கணம், அந்த மகிழ்ச்சியை உணரத்தான் முடிந்ததே தவிர இன்றளவும் உரைக்க முடியவில்லை.

  விழா நிறைவுற்று அரங்கைவிட்டு வெளியில் வந்ததும், INDAIN EXPRESS   நிருபர் ஒருவர் How did you feel when you  received the National Award? என்று கேட்டார்.It was just an ecstatic experience என்று சொன்னேன்.

 தமிழகம் திரும்பியதும் ஊடக நண்பர்கள் சூழ்ந்துகொண்டு பேட்டி கண்டார்கள். மிகக்குறைந்த வயதில் தேசிய விருது பெற்றவர், அதுவும் மாநில விருது பெறாமல் நேரடியாக தேசிய விருதைப் பெற்றவர் என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டார்கள்.  ஆங்கில நாளேட்டில் An extraordinary teacher and plucky puppeteer என்னும் தலைப்பில் ஒரு செய்திக்கட்டுரையை வெளியிட்டார்கள்.(INDIAN EXPRESS dt 11.10.2003) கோவை வானொலி நிலையத்தார் ஒரு பேட்டி கண்டு ஒலிபரப்பினார்கள்.

    1980 முதல் 2003 வரை 23 ஆண்டுகள் மாணவர்களின் துணையோடு  ஆற்றிய சுற்றுச்சூழல் மேம்பாட்டுப்பணிக்காக வழங்கப்பட்டதுதான் இந்த விருது.

   ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து,  ஆசிரியப்பணியை விரும்பி ஏற்று, இன்றளவும் அப்பணியை ஓர் அறப்பணியாக மகிழ்ச்சியுடன் செய்துகொண்டிருக்கும் இந்த எளியவனுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம் அல்லவா இவ்விருது!
            


     Dr.A.P.J.Abdul Kalam confers the National Award. Dr.Murli Manohar Joshi looks on.
                               Vigyan Bhavan, New Delhi  5th September 2003     


2 comments: