Thursday, 9 October 2014

தூய்மை இந்தியா

      ஸ்வச் பாரத் என்றால் என்ன? அதுதான் தூய்மை இந்தியா இயக்கம். பாரத பிரதமர் சென்ற அக்டோபர் இரண்டாம் தேதி புதுதில்லியில் தொடங்கி வைத்தது. சந்தித் தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் என்றார் பாரதியார். மோதி அவர்கள் கையில் துடைப்பம் ஏந்தி அவர் கூற்றுக்குச் செயல் வடிவம் கொடுத்தார். மஹாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், அதாவது 2019 இல் தூய்மையான இந்தியாவைக் காண்பது என்பது இலக்கு ஆகும்.

   இது முடியுமா முடியாதா எனப் பட்டிமன்றம் நடத்துவதை விட்டுவிட்டு 

முடியும் என்னும் உறுதியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மனத்தளவில் 

ஏற்க வேண்டும். பிறகு முனைப்புடன் செயல்படத் தொடங்கவேண்டும்

. முதலில் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதையும், திறந்தவெளியில் 

ஒன்றுக்கு இரண்டுக்குப் போவதையும் நிறுத்தியாக வேண்டும்.

     பெருஞ்சாலைகள், பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும்.பளிங்குத் தரையுடன்   கழிவறைகள் கட்டப்பட வேண்டும். அவற்றில் தடையில்லா மின் வசதியும் தண்ணீர் வசதியும் இருத்தல் வேண்டும். தொடர்ந்து 100 விழுக்காடு பராமரிப்பினை உறுதி செய்ய வேண்டும். இக் கழிவறைகளைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் எதையும் வசூலித்தல் கூடாது. இந்தத் திட்டத்தை அரசும் அரிமா, சுழற்சங்கம் போன்ற சமூக சேவை அமைப்புகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும். தூய்மையான கழிவறைகளில் கழிப்பது என்பது தனி சுகம்தான். மனிதனின் உடல்சார் தேவைகளில் இது முதன்மையானது. எழுத்தில் சாதனைப் படைத்த சுஜாதா தன் வயதான காலத்தில்,”ஒவ்வொரு நாளும் மலம்கழிப்பதே எனக்குச் சாதனையாகத் தோன்றுகிறது” என்று சொன்னாராம். இது சாதனையாகவும் இல்லாமல், வேதனையாகவும் இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டுமானால் தூய்மையான, வசதியான கழிவறைகள் கல்லெறியும் தூரத்தில் கண்டிப்பாக அமைய வேண்டும்.

    மோதி அவர்கள் பள்ளி தோறும் சிறுமியர்க்கான கழிப்பறை கட்டும் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார். இதனை பில்கேட்ஸ் பெரிதும் வரவேற்று டிவிட்டரில் எழுதியுள்ளார். நானும் எழுதலாமே என்று நினைத்தேன்.,என் வலைமடலில் எழுதினேன்.


1 comment:

  1. Having a clean toilet where ever we go gives such a peace of mind. Investing in building and maintaining clean toilets is the best way to initiate clean India movement.

    ReplyDelete