Sunday, 5 October 2014

என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு


    அண்மையில் கடந்து போன ஆசிரியர் தினத்தன்று என்னிடம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்த மாணவர் ஒருவர் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தி இதுதான்:
‘நான் சந்தித்த, சந்திக்கும் ஒவ்வொருவரும் என் ஆசிரியரே. சிலரிடம் தெரிந்து கற்றுக்கொள்கிறேன். சிலரிடமிருந்து அவர்கள் அறியாமலேயே கற்றுக்கொள்கிறேன். அவகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.’
என் செல்பேசியில் பதிவாகியிருந்த அந்தக் குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்தேன். நீள நினைத்துப் பார்த்தேன். பொருள் விளங்கியது போலவும் இருந்தது, பொருள் விளங்காதது போலவும் இருந்தது. இது எனக்கு அனுப்பப்பட்ட வாழ்த்தே தவிர எனக்காக மட்டும் அனுப்பப்பட்டது அல்ல என்பதை ஒருவாறு உணர்ந்தேன்.
வகுப்பில் நான்கு சுவர்களுக்கு நடுவில் நின்று எண்ணையும் எழுத்தையும் சொல்லிக்கொடுத்த ஆசிரியரைத்தவிர வேறு சிலரும் ஆசிரியர்கள் என எண்ணத்தக்கவர் என்பதை அக்குறுஞ்செய்தியில் மறைபொருளாக உணர்த்தி இருந்தார் என் மாணவர். அவர் இன்றைக்கு இருநூறு படுக்கைகள், நூறு ஊழியர்கள் கொண்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவராக உள்ளார். இந்த நிலைக்கு அவர் உயர்ந்ததற்குக் காரணம் வகுப்பறையில் அவருக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்கள் மட்டுமல்லர் என்பதை அச்செய்தியில் உணர்த்துகிறாரோ என்று எண்ணத் தொடங்கினேன். ஒரு தெளிவு பிறக்காவிட்டால் அவரிடமே கேட்டுவிடுவது நல்லது என்றும் எண்ணியிருந்தேன். ஒன்றைப்பற்றி பிறழ உணர்வதை விட, கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லதுதானே?.
  இது குறித்து அவ்வப்போது மனத்தில் அசைப்போட்டுக்கொண்டிருந்த நிலையில், சென்னையிலிருந்த ஓர் உறவினர் இல்லத்திற்குச் சென்றவாரம் சென்றிருந்தேன். குளித்து உடைமற்றிக்கொண்டு அன்றைய நாளிதழைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை, உணவு உண்ண அழைத்தனர். உணவு மேசையைச்சுற்றி அனைவரும் அமர்ந்தோம்..  உணவின் சுவையை உணர்ந்து மகிழ்ந்து உண்டு கொண்டிருந்த என்னை, அருகில் உண்டும் உண்ணாமலும் பேசிக்கொண்டிருந்த சிறுமியர் இருவரின் உரையாடல் என் கவனத்தைக் கவர்ந்தது. அச்சிறுமியர் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரிகள். அக்காவுக்கு ஒன்பது வயதும், தங்கைக்கு ஆறு வயதும் இருக்கும். முன்னவள் சென்னை வாசி., பின்னவள் அமெரிக்காவிலிருந்து விடுமுறையில் வந்தவள். முன்னவள் கேட்டாள்:  உனக்கு அம்மா சமையல் பிடிக்குமா பாட்டியின் சமையல் பிடிக்குமா? பின்னவள் கூறிய மறுமொழிதான் என்னைத் திகைக்க வைத்தது. என் மாணவர் அனுப்பியிருந்த வாழ்த்துச்செய்தியில் எனக்கு ஏற்பட்ட ஐயத்திற்கு அவளுடைய மறுமொழி தெளிவுரையாக அமைந்தது. அறுபத்து இரண்டு வயதில் ஆறே வயதான அந்தச் சிறுமியிடம் நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். நீங்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளத் தொடங்குமுன் அவள் கூறிய மறுமொழியைக் கூறிவிடுகிறேன்.
     “ நீ இது போன்ற கேள்விகளைக் கேட்பதே தவறு” என்று கூறினாள். அவள் கூறியது சரிதானே? அவளுடைய அக்கா கேட்ட கேள்விக்கு அம்மா என்று விடை சொன்னால் பாட்டியின் மனம் வருந்தும்., பாட்டி என விடை சொன்னால் அம்மாவின் மனம் வருந்தும். தர்ம சங்கடமான கேள்விகளைக் கேட்டுப் பிறர்தம் மனத்தை நோகடிக்கக்கூடாது என்பதைச் சொல்லிக்கொடுத்த அந்தச் சிறுமியும் எனக்கு ஆசிரியர்தானே?
   முன்பொரு சமயம் ஒரு குழந்தையைப் பார்த்து, “ உனக்கு அம்மாவைப் பிடிக்குமா அப்பாவைப் பிடிக்குமா/” என்று கேட்டது என் நினைவில் வந்து தொலைத்தது. இது எவ்வளவு அபத்தமான கேள்வி என்பது இப்போதல்லவா புரிகிறது! ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதைப்போல் மற்றவரை ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்பதையும் கற்றுக்கொடுத்துவிட்டாள் அந்தச் சின்னஞ்சிறு பெண்.
இனி உனக்குப் பிடித்த ஆசிரியர் யார் என்று குழந்தையிடம் கேட்குமுன் யோசிப்போம். இரண்டாவது குழந்தையைப் பெற்ற பெண்ணிடம் இரண்டுமே பெண்ணா என்று கேட்டு உள்ளத்தைக் காயப்படுத்த மாட்டோம். என் அம்மாவைப்போல் உன்னால் சமைக்க முடியுமா என்று மனைவியிடம் கேட்டுச் சங்கடப்படுத்தமாட்டோம்.
  இப்படி எத்தனைப் பேரிடம் எத்தனை வாழ்வியல் பாடங்களைக் கற்றிருப்பார் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய அந்த மாணவர்!. ஆக உற்று நோக்கினால், உற்றுக்கேட்டால் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உருப்படியாக எதையாவது கற்றுக்கொள்ளலாம்.  தான் என்ற முனைப்பை அகற்றிவிட்டு, திறந்த மனத்தோடு இருக்கப்பழகினால் வாழ்நாள் முழுவதும் யாரிடமும் நல்லவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.
   நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றால் மட்டும் போதாது. வாழ்வியல் திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.எப்போதும் கற்றுக்கொள்ளலாம்., எவரிடமும் கற்றுக்கொள்ளலாம். சிலர் சாகும் வரையில் கூட கற்றுக்கொள்ளமாட்டார்கள். என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்று வருந்திக் கூறுவார் வான்புகழ் வள்ளுவர். சற்றே சிந்தித்து நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளலாமே.
கட்டுரை ஆக்கம்:
முனைவர் அ கோவிந்தராஜூ
தேசிய விருதாளர்
2, பாலாஜி நகர்,
கரூர்-639005
செல்பேசி எண்;9443019884
Email id: agrphd52@gmail.com


3 comments:

  1. Very interesting article. It reminds us that we can learn from anyone, anywhere and any time.

    ReplyDelete
  2. ஐயன் குறளோடு அருமை யாகச் சொன்னீர்கள்.நன்று.நன்றி.

    ReplyDelete