வ.உ.சிதம்பரனார் தன் பள்ளிப்படிப்பை
ஒட்டப்பிடாரத்தில் திண்ணைப்பள்ளியிலும் பின்னர் தூத்துக்குடி புனித சேவியர்
பள்ளியிலும் முடித்தார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் பட்டப்படிப்பை
முடித்தார். திருச்சியில் பயின்று சட்டப்படிப்பில் தேறினார். ஒட்டப்பிடாரத்தில்
வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். குறுகிய காலத்தில் சிறந்த குற்றவியல் வழக்கறிஞர்
என்று பெயரெடுத்தார். தகுதி, நேர்மை, திறமை காரணமாக நீதிபதிகளின்
மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தார். பொய் வழக்கில் கைதானவர்கள் வ.உ.சி யின்
வாதத்திறமையால் விடுவிக்கப்பட்டனர். இதனால் காவல் துறையினரின் கடுங்கோபத்திற்கு
ஆளானார். தன் தந்தையின் அறிவுரையை ஏற்றுத் தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கும்
தன் தொழிலில் பொருளும் புகழும் ஈட்டினார். தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும்
பெரும் செல்வாக்கு மிக்கத் தலைவராக்த் திகழ்ந்தார்.
அந்தக்காலக்கட்டத்தில் தான் சுதேசி பிரச்சார சபை, தர்ம சங்க நெசவு சாலை, தூத்துக்குடி
கைத்தொழில் சங்கம், சுதேசி பண்டக சாலை போன்ற சுதேசி நிறுவனங்களை உருவாக்கினார்.
இதற்கிடையில் சுப்ரமணி சிவாவுடன் சேர்ந்து நாட்டு விடுதலை குறித்து மேடை தோறும்
அனல் பறக்கப் பேசினார். இதைப் பார்த்த ஆங்கிலேய அரசு அதிர்ந்தது.
1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாளன்று
சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். மும்பை, கொல்கத்தா ஆகிய ஊர்களுக்குச்
சென்று தன் பேச்சுத்திறமையால் ஏராளமான பங்குதாரர்களைச் சேர்த்தார். எஸ்.எஸ்.லாவோ
என்ற கப்பலை வாங்கி இயக்கினார். பொது மக்களும் வணிகர்களும் இந்தக் கப்பலை பெரிதும்
பயன்படுத்தினார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வெள்ளையர் பல விதங்களில் சதி
செய்தனர். ஒரு கட்டத்தில் ரூபாய் ஒரு லட்சம் கையூட்டு தரவும் முன் வந்தனர். ஆனால்
வ.உ.சி யின் சினம் கண்டு சிதறி ஓடினர்.
வ.உ.சி அவர்கள் தொழிலாளர்களை ஒன்று திரட்டி
விடுதலை இயக்கத்தில் ஈடுபடுத்தினார். ஒடுக்கப் பட்டத் தொழிலாளர்களை ஓரணியில்
சேர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டினார். 1908 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மாபெரும்
போராட்டம் ஆட்சியாளர்களை நிலை தடுமாறச் செய்தது. இதனால் தேசத்தலைவர்களின் பார்வை
இவர் பக்கம் திரும்பியது. இனி வ.உ.சி யை வெளியில் விட்டு வைத்திருப்பது கொள்ளிக்
கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்து கொள்வதற்குச் சமம் என்று எண்ணிய வெள்ளை அரசு
அவரை கைது செய்ய திட்டம் தீட்டியது. தன்னைச் சந்திக்க வருமாறு ஆணை பிறப்பித்து
வந்த இடத்தில் கைது செய்தார் திருநெல்வேலி ஆட்சியர் வின்ச். அந்தக் கறுப்பு நாள்
1908 ஆம் ஆண்டு மார்ச்சு 12 ஆகும். வ.உ.சி கைதான செய்தி காட்டுத்தீ போல பரவியது.
பொது மக்கள் கொந்தளித்து எழுந்தனர். திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் கடைகள்
அடைக்கப்பட்டன. கல்விக்கூடங்களுக்கு மாணவர்கள் செல்லவில்லை. முடிதிருத்துவோர்,
துணி வெளுப்போர், குதிரை வண்டி இழுப்போர் என அனைவரும் வேலைக்குச் செல்லவில்லை.
ஐந்து நாள்கள் இந்த நிலை நீடித்ததால் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. பலர்
பலியானார்கள். பின்னாளில் மாபெரும் சுதந்திரப்போராட்டத்திற்கு வித்திட்ட இந்த
நிகழ்வு திருநெல்வேலி எழுச்சி என்று வரலாற்றாசிரியர்களால் வருணிக்கப்பட்டது.
வ.உ.சி வழக்கில் தீர்ப்பெழுதிய நீதிபதி பின்ஹெ
பின் வருமாறு எழுதினார்: “சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தைக் கேட்டால் செத்த
பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி வெடிக்கும். அடிமைப்பட்ட நாடு அரை மணி நேரத்தில்
விடுதலை பெறும்.” முடிவில் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். மேல்
முறையீட்டுக்குப் பிறகு பத்து ஆண்டுகளானது. கோயம்புத்தூர் சிறையில்
அடைக்கப்பட்டார். அங்கு செக்கிழுத்தார். கல்லுடைத்தார். உள்ளங்கைகளில் குருதி
பெருகியது.
வ.உ.சி யின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்ட ஆஷ்
என்பவர் திருநெல்வேலி ஆட்சியரானார். தக்கத் தருணம் பார்த்திருந்த வாஞ்சிநாதன் மணியாச்சி
இரயில் நிலையத்தில் ஆஷ் துரையை நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்றான். தானும்
சுட்டுக்கொண்டான்.
நீண்ட
சிறைவாசத்திற்குப் பிறகு 1912 டிசம்பர் 24 ஆம் நாள் வ.உ.சி விடுதலை
செய்யப்பட்டார். அப்போது விடுதலைப் போராட்டத்தின் காலமும் கோலமும் மாறியிருந்தது.
தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கினார். நாட்டுக்காக தன் செல்வத்தையெல்லாம்
இழந்த அவர் பல தொழில்களைச் செய்தார். ஒரு சமயம் மண்ணெண்ணெய் விற்றுப் பிழைத்தார்.
எதுவும் பயன்தரவில்லை. வறுமையில் வாடினார். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தார்.
இருப்பதில் நிறைவு கொண்டார்.
அவர் செல்வாக்கை
இழந்தாலும் சொல்வாக்கை இழக்கவில்லை. தமிழின்பால் தன் கவனத்தைத் திருப்பினார். அது
தமிழன்னை செய்த தவப்பயன் என்பேன். ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.
இன்னிலை, சிவஞ ன போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். பல நூல்களைப்
பதிப்பித்தார். இது பற்றி விரித்தெழுதினால் ஒரு தனிக்கட்டுரையாக அமையும்.
டாக்டர் இராதாகிருக்ஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர்
தினமாகக் கொண்டாடுகிறோம். அதே நாளில்தான் வ.உ.சி யும் பிறந்தார்.
ஆசிரியப்பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். அந்த நாளில் கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சி யைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். மறக்கக்கூடாத மாமனிதர் அவர்.
முனைவர் அ
கோவிந்தராஜூ
தேசிய விருதாளர்
2, பாலாஜி நகர்
கரூர் 639005
nice article
ReplyDelete