Friday, 10 October 2014

பதினாறும் அறுபதும்

   இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசூப் ஜாய் ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டிற்கான(2014) அமைதிக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   மலாலா என்ற சிறுமி அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போதே பள்ளிக்கல்வி குழந்தைகளின் உரிமை என்னும் கோட்பாட்டை முன் வைத்துப் போராட்டம் நடத்தியவள். அவள் ஓர் இஸ்லாமியப் பெண். இஸ்லாமியப் பெண்கள் பள்ளிக்குச்செல்லக்கூடாது எனத்தடுத்த தாலிபான்களை எதிர்த்துக்குரல் கொடுத்தாள். தாலிபான் தீவிரவாதிகள் பள்ளிப்பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த மலாலாவைத் துப்பாக்கியால் சுட்டனர். மயிரிழையில் உயிர் தப்பித்தாள். ஒபாமா, பான்கீ மூன் போன்ற உலகப்பெரும்புள்ளிகள் அனைவரும் அவள் உயிர் பிழைக்க, தொடர்ந்து போராட ஆதரவு தெரிவித்தனர். அவள் துணிச்சலைப்பாராட்டும் வகையில் ஐ.நா சபை .நவம்பர் பத்தாம் தேதியை மலாலா தினமாக அறிவித்தது.
    
     1997இல் பிறந்த மலாலா தன் 17 ஆம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப்பெற்று, மிகவும் இள வயதில் இப்பரிசை வென்றவள் என்னும் சிறப்புக்கு உரியவள் ஆகிறாள்.

    கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் மீட்பு அமைப்பை ஒன்றை உருவாக்கி, இதுவரை  அடிமைத்தளையிலிருந்து 80,000 குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்கம் உருவாவதில் முக்கியப் பங்காற்றியவர் என அறியப்படுகிறார். விளம்பரத்தை விரும்பாத இந்த புதுதில்லிக்காரரை  இந்தியர்களுக்கே அவ்வளவாகத் தெரியாது. தன் மணிவிழாவைக் கொண்டாடிய இந்த மாமனிதருக்கு இப்போது அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

    
     இருவருக்கும் நம் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள். 







No comments:

Post a Comment