சென்ற வாரம் ஏதோ ஓர் ஆர்வக்கோளாறில் சில ஹைக்கூ கவிதைகளைப் புனைந்து என் வலைப்
பூப் பக்கத்தில் வெளியிட்டேன். அதற்கு இத்தனைப் பின்னூட்டங்கள் வரும் என
எதிர்பார்க்கவில்லை.
எனது தலைமாணாக்கரில் ஒருவரான பெரும்புகழ்
வாய்ந்த மருத்துவர் க.கண்ணன் அவர்கள் தன் பின்னூட்டத்தை ஒரு ஹைக்கூவாகவே புனைந்து
அனுப்பியிருந்தார். அவர் எழுதியிருந்த கவிதை இதுதான்
மணக்கிறது
மட்டன் பிரியாணி
சைவச் சமையலரின் கைவண்ணத்தில்.
இந்தக் கவிதை வரிகளை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். அது எனது ஹைக்கூ
வேள்வித் தீயில் ஊற்றப்பட்ட நெய்யாக அமைந்தது.
ஹைக்கூ திலகம் இரா.இரவி அவர்கள் அனுப்பிய பின்னூட்ட மின்னஞ்சல் எனது
எழுதுகோலுக்கு ஊற்றப்பட்ட மையாக அமைந்தது. எழுது கோலை எடுத்தேன்., எழுதினேன்.
தீபாவளி நேரத்தில் பதிகிறேன். இவ் வெடிகள் வெடிக்கலாம்., வெடிக்காமலும்
போகலாம்..
இதோ எனது ஹைக்கூ வெடிகள்
எதைப்புதைத்தாலும்
மண்ணில் மக்கும்
விதை மட்டும் முளைக்கும்
தமிழர்கள் அனைவரும்
புதுமொழி பேசுகிறார்கள்
தமிங்கலம்
ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலைப் பெற்று
ஆங்கிலத்திடம் தொலைத்தோம்.
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
வெவ்வேறு திசைகளில்
அம்மா
மெட்ரிக் படித்தபோது மம்மி
மேரேஜ் ஆனதும் டம்மி
திருக்குறள் அறிவிலார்
என்னுடையரேனும்
இலர்.
வல்வில் ஓரியைத் தெரியுமா?
தமிழ்ப்பட்டதாரி சொன்னார்
ஐ ஆம் சாரி!
காலையில் கைது
மாலையில் விடுதலை
மழலையர் பள்ளியில்
பேச்சுரிமை இருந்தும்
பேசிட உரிமையில்லை
பள்ளிகளில்
பள்ளித்தலமனைத்தும்
நோயில் செய்குவோம்
பாரதி மன்னிக்க
விளைநிலம் ரியல்எஸ்டேட்காரரின்
விழை நிலமாகி, பின்னர்
விலை நிலமானது
தெரு நெடுகிலும்
மின்சார விளக்குகள்., அவை
மின்சாரா விளக்குகள்.
காந்திக்கு இல்லை
ரசிகர் மன்றம்., உண்டு
காந்தியாக நடித்தவருக்கு.
தீபாவளி
மகனுக்குத் தன் இல்லத்தில்
அப்பாவுக்கு முதியோர் இல்லத்தில்
இருகால் விலங்குக்கு
வாழ்வில்லை
ஒருகால் தாவரம் இல்லை எனின்.
கொட்டும் மழையிலும்
ReplyDeleteஅற்புதமாய் வெடிக்கிறது
உம் ஹைக்கூ பட்டாசு
ஆங்கிலத்திடம் தொலைத்தோம்
ReplyDeleteபேச்சுரிமை இல்லாப் பள்ளிகள்
இரண்டும் வெகு அருமை ஐயா.