Tuesday, 3 January 2017

கரூர் மாநகரில் கவின்மிகு விழா

    ஒரே சமயத்தில் ஏழு நூல்கள் வெளியாவது கரூர்நகரம் கண்டிராத நிகழ்வு என நண்பர்கள் தமக்குள் வியப்பு மேலிட பேசிக் கொண்டிருந்தார்கள். வள்ளுவர் உணவகம் வழங்கிய தேநீரைச் சுவைத்தபடி ஒருவர்க்கொருவர் அறிமுகமாகி உற்சாகமாக அளவளாவி நின்றபோது   நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு ஆர்.முரளி அவர்கள் விழா தொடங்க இருப்பதை அழகு தமிழில் அறிவித்தார்.


     சரியாக மாலை ஐந்து மணிக்கு விழா தொடங்கியது. புகழ் பெற்ற லார்ட்ஸ் பார்க் பள்ளி மாணவியர் சான்ட்றா, செனீட்டா இருவரும் தேனை ஒத்த இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார்கள்.

    ‘தமிழ்த் தேனீபேராசிரியர் இரா.மோகன் விழாவிற்குத் தலைமை ஏற்றார். அரிமா மேலை பழனியப்பன் தமக்கே உரிய வெண்கல மணிக்குரலில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அது இலக்கிய மணம் வீசிய இன்னுரையாக அமைந்து அவையோர் அனைவரையும் ஈர்த்தது.

   பேராசிரியர் இரா.மோகன் எழுதிய இரு நூல்களான கவிதைச் சிறகுகள்,   இரா.இரவியின் படைப்புலகம்,,    முனைவர் .கோவிந்தராஜு எழுதிய வா நம் வசப்படும் ,       பேராசிரியர் நிர்மலா  மோகன் எழுதிய       .படித்தாலே இனிக்கும்புதுகை மு.தருமராசன்  எழுதிய நயனுறு நடைச் சித்திரம், பேராசிரியர் பானுமதி தருமராசன் எழுதிய   வரலாறு படைத்த வைர மங்கையர் ,   கவிஞர் இரா. இரவி எழுதிய   வெளிச்ச விதைகள்  ஆகிய ஏழு நூல்கள் வெளியிடப்பட்டன.  


  திருக்குறள் பேராயத்தின் செயலாளரும், வா.செ.கு. இலக்கிய ஆய்வு அறக்கட்டளையின் துணைத்தலைவரும், பேருந்து கட்டுமானத் தொழிலில் முன்னோடியாக விளங்கும் முதுபெரும் தொழிலதிபருமான   திருப.தங்கராசு   அவர்கள் நூல்களை வெளியிட வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக்  கல்லூரித் தாளாளர் வள்ளுவர் சீர்பரவுவார்திரு..செங்குட்டுவன் நூல்களைப் பெற்றுக்கொண்டார்.

       நூல்களை வெளியிட்ட திரு..தங்கராசு அவர்கள் வாசிக்கும் வழக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். நூல்களைப் பெற்றுக்கொண்ட திரு..செங்குட்டுவன் பேசும்போது இளைய தலைமுறையினர் பண்படும் வண்ணம் எழுத்துகள் அமைய வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.

   
தொடர்ந்து,  விழாவில் முன்னிலை வகித்த சிதம்பரம் அய்யங்கார் ரெட்டி, கரூர் மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் தீபம் சங்கர் , திரு.ஜி.எஸ்.பால கிருஷ்ணன், பழனி முருகன் அணிவணிகர் திரு. பாலமுருகன், தாந்தோனி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் திரு.மு.தமிழரசு ஆகியோர் ஏழு நூல்களின் சிறப்புப் படிகளை உரிய விலைகொடுத்துப்  பெற்றுக்கொண்டனர்.

    அடுத்த நிகழ்வாக நூல் ஆய்வரங்கம் களைகட்டியது.

 முதலில் பன்மொழி வித்தகர் தேசியமணி இரா.இராமசாமி அவர்கள் பேராசிரியர் இரா.மோகன் எழுதிய கவிதைச் சிறகுகள்,   இரா.இரவியின் படைப்புலகம் என்னும் இரு நூல்கள் குறித்து மதிப்புரை வழங்கினார்.  இலக்கிய உலகுக்குப் பேராசிரியர் மோகனின் பங்களிப்பு எவையெவை என்பதைப் பட்டியலிட்டுப் பேசிய பாங்கு மிக அருமையாக இருந்தது. முத்தாய்ப்பாக எல்லாப் புகழும் மோகனுக்கே என்று சொல்லி நீண்ட கரவொலியைப் பரிசாகப் பெற்றார்.

   கோபிசெட்டிபாளையம் தமிழறிஞர் முனைவர் இரா.கா.மாணிக்கம் அவர்கள் தன் ஆய்வு மாணவர் முனைவர் .கோவிந்தராஜூ எழுதிய வா நம் வசப்படும் என்னும் நூலைத் திறம்பட ஆய்வு செய்தார். இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நல்லநூல் எனப் புகழாரம் சூட்டினார்.

   கவிஞர் இரா.இரவி அவர்கள் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியர் நிர்மலா மோகனின் படித்தாலே இனிக்கும் என்னும் நூல் குறித்துப் பேசினார்.

   முனைவர் .கோவிந்தராஜூ அவர்கள் கவிஞர் இரவி எழுதிய வெளிச்ச விதைகள் என்னும் நூலைத் திறனாய்வு செய்தார். பதச் சோறாக சில கவிதைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார். பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்கள் புதுகை தருமராசன்- பேராசிரியர் பானுமதி தருமராசன் இணையர் எழுதிய நயனுறு நடைச் சித்திரம், வரலாறு படைத்த வைர மங்கையர் ஆகிய இரு நூல்களை இனிய தமிழில் மிக இயல்பாக ஆய்வு செய்தார்.

   மதிப்புறு முனைவர்  வானதி இராமநாதன் அவர்கள் செட்டிநாட்டுச் செந்தமிழில் வாழ்த்துரை நல்க வாழ்த்தரங்கம் தொடங்கியது. தரமான நூல்களை மட்டுமே கால்ங்காலமாக வானதி பதிப்பகம் வெளியிட்டு வருவதைப் பெருமைய்டன் குறிப்பிட்டார். தம் உரை நிறைவில் நூலாசிரியர்கள் அனைவரையும் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

  தொடர்ந்து இராம்கோ சிமெண்ட்ஸ் மேனாள் துணைத் தலைவர் பட்டயக் கணக்கர் திரு.இரா.சரவணப் பெருமாள், சீர்மிகு சேரன் பள்ளியின் ஆலோசகர் முனைவர் எஸ்.டி.குணசேகர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து பேசிய கரூர் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இரா.லட்சுமண சிங் அவர்கள் தம் கல்லூரியில் பேராசிரியர் மோகனின் நூல் பாடநூலாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

   வாழ்த்தரங்கின் நிறைவாக, பதினைந்து ஆண்டுகளாக புதுகைத் தென்றல்என்னும் சிற்றிதழை வெற்றிகரமாக நடத்திவரும் புதுகை தருமராசன் வாயெல்லாம் வண்டமிழ் மணக்க வாழ்த்திப் பேசினார்.

    பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்கள் சுருக்கமாகவும் செறிவாகவும் நூலாசிரியர்கள் சார்பாக ஏற்புரை நிகழ்த்தினார்

   
விழாவின் நிறைவில், பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் விழாப் பேருரை ஆற்றினார். நூலாசிரியர்களையும், நூல் மதிப்புரை வழங்கிய சான்றோர்களையும் பாராட்டிப்பேசினார். அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனக் காலத்தின் தேவைக்கேற்றவாறு தமிழ்மொழி தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தகைமையினைத் தக்கச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார். தம் உரையின் இடையே 1330 குறள்பாக்களையும் மனப்பாடம் செய்துள்ள பள்ளி மாணவி சு..திவ்யங்காவை மேடைக்கு அழைத்துப் பாராட்டிப் பொன்னாடை அணிவித்தார்.

   நிறைவாக, முனைவர் .கோவிந்தராஜூ அவர்கள் நன்றி நவில, மாணவியர் நாட்டமுடன் பாடிய நாட்டுப் பண்ணுடன் எட்டு மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.

    அறிவியல் ஆசிரியர்  ஆர்.முரளி அவர்கள்  விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அவர் வெற்றெனத் தொகுக்காமல் இடையிடையே பாயசத்தில் இட்ட முந்திரிப் பருப்பென இலக்கிய மேற்கோள்களை வழங்கிய பாங்கு விழாவிற்குக் கூடுதல் அழகைச் சேர்த்தது.

   விழாவிற்கு வந்த விருந்தினர் அனைவரும் விழா முடியும்வரை இருந்து, விழாக் குழுவினர் அன்புடன் வழங்கிய அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்து, மற்றுமொரு மகத்தான விழாவில் மீண்டும் சந்திக்கலாம் என்னும் எண்ணத்தோடு விடைபெற்றுச் சென்றனர்.

   நாளேடுகள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு இந்த நல்ல நிகழ்வு பற்றிய செய்தியினை மறுநாளே வெளியிட்டன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

  சுருங்கச் சொன்னால், இவ் விழா இலக்கிய ஆளுமைகள், இலக்கிய ஆர்வலர்கள், இனிய வாசகர்கள் என அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்கா நினைவலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும்.

6 comments:

  1. ஆகா
    தங்கள் நூலுமா, மகிழ்ந்தேன் ஐயா
    தங்களின் நூலினை எப்படிப் பெறலாம் என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா

    ReplyDelete
  2. சு.ர.திவ்யங்கா உட்பட அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நல்லதொரு2நிகழ்ச்சியின்2ரசமான2வருணனை2இராய2செல்லப்பா2நியுஜெர்சி

    ReplyDelete
  4. அருமையான நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுபோலவே இருந்தது.

    ReplyDelete
  5. படைப்புலகம் விரிவடைவதற்கு தமிழ்த்தேனீ அய்யா இரா.மோகன் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேசமயம் தங்களின் நூல்கள் தொடர்ந்து வெளிவருவது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்றைய தலைமுறையினருக்கு நல்ல உளவியல் சிந்தனைகளை மிக அழகாக கசப்புச்சுவையை உடைய மாத்திரைகளில் இனிப்புச்சுவை மேலே தடவப்பட்டு வழங்குவதைப் போன்று சொற்களின் வாயிலாகத் தங்கள் நூல்களில் நல்ல அறச்சிந்தனைகளை சுட்டி வழங்குவது நூலுக்கே மகுடமாக உள்ளது. அருமையான நிகழ்ச்சி அதில் வாழ்த்துரை வழங்க எனக்கும் ஒரு வாய்ப்பினை வழங்கினீர்கள். நன்றி.

    ReplyDelete
  6. Thanking you very much for the reciprocation sir. As usual it has come out well. Felt very happy in joining my hands with you sir. Once again I thank you very much for given me an opportunity to compere the event.

    ReplyDelete