Thursday, 26 January 2017

தாயின் மணிக் கொடி

   இன்றைக்கு நெடு நேரம் தொலைக்காட்சிப் பெட்டிமுன் தவமாய்க் கிடந்தேன். ஒன்பதுமணி வரையிலும் சென்னையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வையும், தொடர்ந்து பதினொன்று முப்பது வரை புதுதில்லியில் நடந்த குடியரசுநாள் விழா நிகழ்வுகளையும் கண்டு மகிழ்ந்தேன். அவ்வப்போது நாட்டுப்பண் இசைக்கப்படும்போது எழுந்து நிற்பதும் பின்னர் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுமாய் பொழுது கழிந்தது. மனதெல்லாம் மத்தாப்பாய் நம் நாடு குறித்த பெருமித உணர்வே பூத்துக் குலுங்கியது.

     குடியரசுத் தலைவர் தம் வயதையும் பொருட்படுத்தாமல் கால்கடுக்க நின்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதும், கண் கொட்டாமல் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்ததும் மெய்சிலிர்க்க வைத்தது.

    நம்மிடையே மதத்தில், உடுக்கும் உடையில் உண்ணும் உணவில் வேறுபாடுகள் பல இருந்தாலும் மலரிடை நார் போல மணியிடை இழைபோல நாட்டுப்பற்று உள்ளது என்பதை உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறோம்.

    நம் சிறுவர் சிறுமியர் நிகழ்த்திக் காட்டிய கலைநிகழ்ச்சிகளில் “நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம்” என்னும் உணர்வு அவர்தம் முகங்களில் வெளிப்பட்டதைப் பார்த்து வியந்து போனேன்.

    தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சற்றே ஓய்வாக அமர்ந்த நேரத்தில் என் துணைவியார் அவளது வாட்ஸப்பில் வந்த ஒரு குறும்படத்தைப் பார்க்கச் சொன்னாள்.

    பள்ளிக்குச் செல்லாமல் குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இடைநின்ற மூன்று சிறியவர்கள் ஒரு மெட்ரிக் பள்ளியின் கொடியேற்று விழாவைக் காண விரும்புகிறார்கள். ஆனால் பள்ளிக் காவலர் விரட்டியடிக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் ஒரு செயலை உடனே செய்கிறார்கள். அந்த வழியாக வந்த ஆட்சியர் கூட தன் காரை நிறுத்தி இறங்கி அச் சிறுவர்களின் செயலில் தானும் பங்கேற்கிறார்.

   அவர்கள் செய்த செயல் செயற்கரிய செயல். எவருடைய கற்பனைக்கும் எட்டாத செயல்.

குறும்படத்தை இணைப்பில் காணலாம்.


   

6 comments:

  1. உணர்வு பூர்வமான பதிவு.....இந்தக் காணொளி முன்பு வந்த ஒன்று...அதில் சிறிது மாற்றத்துடன் வேறொன்றும் கண்டதுண் டு....காணும் பொழுது இனம் புரியா உணர் வு...மேலிடும் ...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உணர்வு பூர்வமானப் பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
  4. இந்த மாதிரிப் பதிவுகள் மனதுக்கு உற்சாகம் தருகின்றன.

    ReplyDelete