Monday, 16 January 2017

உங்களுக்குக் குறள் மொழி தெரியுமா?

   பல வருடங்கள் கழித்து நண்பர் இருவரும் சந்திக்கின்றனர். அவர் அவருடைய மனைவி, வந்த நண்பர் அனைவரும் குறள்மொழியில் பேசுகின்றனர்.
அந்த நண்பர் வந்தபோது நானும் அங்கிருந்தேன். நல்ல வேளை எனக்குக் குறள்மொழி தெரிந்திருந்ததால் அவர்கள் பேசியது புரிந்தது.

நண்பரின் மனைவி: முதல்ல கைகழுவிகிட்டு வாங்க ஒன்பது தயாரா இருக்கு.
வந்த நண்பர்; வேண்டாம் தங்கச்சி நான் தொண்ணூத்து அஞ்சில இருக்கேன்.
நண்பர்: நீ இப்படி சொன்னா  நம்ம எழுபத்து ஒன்பதுக்கு என்னாதான் அர்த்தம்?
வந்த நண்பர்: சரி சரி . சைவம்தானே?
நண்பர்: நாங்க எப்பவுமே இருபத்து ஆறுதான். உனக்குத் தெரியாதா?
வந்த நண்பர்: அப்ப சரி. அஞ்சு நிமிஷம் பொறு. இருபத்து ஏழை முடிச்சிட்டு வந்துடறேன்.

   உங்களுக்கு  ஒன்றும் புரியலையா? நான் சொல்றேன். ஒன்பதாவது அதிகாரம் விருந்தோம்பல். நண்பர் மருந்து சாப்பிடறாராம். மருந்து அதிகாரம் தொண்ணூத்து அஞ்சு.

  சாப்பிடாட்டி நம்ம 79க்கு என்னதான் அர்த்தம்? ஆமாம் எழுபத்து ஒன்பதாவது அதிகாரம் நட்பு.

    அவங்க வீட்ல சைவந்தான். அதைத்தான் இருபத்து ஆறு என்று சொன்னார். அது புலால் மறுத்தல் அதிகாரம்.

   அப்புறம் என்னமோ இருபத்து ஏழை முடிச்சிட்டு...

27 ஆவது அதிகாரம் தவம்! அஞ்சு நிமிஷம் தவம் முடிச்சிட்டு சாப்பிடுவாராம்!

இருவரும் சாப்பிட்டுக்கொண்டெ உரையாடுகிறார்கள்.

“உன்னோட ஆறு நலந்தானே?”

“ம்...ம்..”

“உன்னோட ஏழு”

“சரியில்ல”

“அவனோடநாற்பது?”

“நாசமாபோச்சு”

“ஏம்பா?”

“எண்பத்து இரண்டு, எண்பத்து மூணுதான் காரணம்”

“அவனுக்கு நாற்பத்து மூணே இல்லையா?”

“இல்லையே”

“அப்ப பதினாலு, நூறு?”

“எதுவும் இல்ல. அவனால என்னோட தொண்ணூத்து ஏழு கெட்டுப் போச்சு எல்லாம் முப்பெத்து எட்டுப்படி நடக்குது. நான் என்ன செய்யட்டும்?”

“அப்படி சொல்லாத. எழுபத்து நாலோட எதிர்காலமே அவன்மாதிரி பசங்ககிட்டதான் இருக்கு. நான் அவங்கிட்ட நாப்பதும் எண்பதும் எவ்வளவு முக்கியங்கிறதை சொல்றேன். அவனுக்கு தொண்ணூத்து மூணு தொண்ணூத்து நாலு பழக்கம் இருக்கா?

“நல்ல வேளை; அதெல்லாம் இல்ல. சரி அப்ப நான் புறப்படறேன். கேக்க மறந்துட்டேன். உன்னோட நூத்தி நாலு எப்படி இருக்கு?”

“ரெண்டே இல்ல; அதனால நூத்தி நாலு சரியில்ல”

“போயிட்டு வறேன். உன்னோட எட்டுக்கும் தங்கச்சியின் ஒன்பதுக்கும் நன்றி. உன்னோட ஏழுக்கெல்லாம் வாழ்த்துகள்.”

   என்ன தலையைப் பிச்சிக்கிறீங்களா? ஒரு திருக்குறள் புத்தகத்தை கையில எடுங்க. நண்பர்களோட உரையாடலை அதிகாரத் தலைப்போட பொருத்திப் படிங்க.

   அப்புறம் என்ன அப்புறம்? குறள்மொழி தெரிஞ்சவங்களிடத்தில குறள் மொழியில பேசி அசத்துங்க.





11 comments:

  1. இப்படியும் தமிழில் குறள் மொழியில் பேசலாம் என்பதை புரியவைத்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. ஆகா
    ஆகா
    இப்படியும் பேசலாமா
    இப்படிப் பேச ஆளிருக்கிறார்களா என்ன?
    இருப்பின் போற்றுதலுக்கு உரியவர்கள்

    ReplyDelete
  3. திருக்குறளை பரப்ப எத்தனை சுவாரஸ்யமான வழி!பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. அடடா...! இப்படி ஒரு வழி தெரியாமல் போச்சே...!

    ReplyDelete
    Replies
    1. ஓவர் டு டிடி! டிடி... நீங்களும் இனி இப்படிப் பேசத் தொடங்கிவிடுவீர்களோ...திருக்குறள் புத்தகத்தைக் கையிலெடுத்தாச்சு!!ஹஹஹ்

      Delete
  5. திருவள்ளுவருக்கு அருமையான நினைவஞ்சலி செய்தீர்கள்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
  6. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது ஆன்றோர் மொழி. நீங்கள் எண்ணையும் எழுத்தையும் வைத்து ஒரு தமிழ்ச் சித்து விளையாட்டையே நிகழ்த்தி விட்டீர்கள். வள்ளுவன் பார்த்திருந்தால் குரு நகை புறிந்திருப்பான்.

    ReplyDelete
  7. ஆஹா இது நல்லா இருக்கு.....

    ReplyDelete
  8. மிக அருமையான உரையாடல்...அப்படியே குறளும் படிக்கவைச்சுட்டீங்களே ஐயா!!! அருமையான தளம் கண்டறிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.தாங்கள் வந்து எங்களுக்குக் கருத்து பதிந்ததால் அறிய முடிந்தது. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  9. புதுமை. ஆனால் தெரிந்தவர்களுக்கே!- நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  10. நல்ல சிந்தனைகளைப் பதிவிட்டுள்ளீர்கள். சில திருக்குறளைப் படித்து அதன் கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் தமிழை முழுமையாகக் கற்றவர்கள் போல் காட்டிக்கொள்வர். அவர்களிடம் தங்களது கட்டுரையைக் கொடுத்துப் படி என்றால் தான் திருக்குறளை முழுமையாகக் கற்கவேண்டும் என்ற எண்ணமும் உலகப்பொதுமறையின் தேவையும் புரியும். அடுத்து எந்த அதிகாரத்தில் எந்த செய்திகளை வள்ளுவர் வெளிப்படுத்துகிறார் என்பதை உரையாடல் போல் மிக அழகாக நினைவில் நிற்கும் வகையில் கூறியுள்ளது அருமை. தங்கள் பதிவை படிக்க நாற்பத்தொன்றால் இயலாது. ஆனால் நாற்பதால் முடியும். நாற்பதால் என்பத்திரண்டையும், என்பத்து மூன்றையும், இருபத்தெட்டையும் தவிர்க்கலாம். வள்ளுவத்தை அறிவதால் எட்டையும், நாற்பத்து மூன்றையும், இருபத்தைந்தையும் பெறலாம். தங்களின் செயலுக்கு நூறைத் தெரிவிக்கிறேன்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    கரூர்.

    ReplyDelete