காதில் வந்து விழுந்த ஒரு செய்தியை நம்பவும் முடியவில்லை; நம்பாமலும்
இருக்க முடியவில்லை.
Tuesday, 28 February 2017
Tuesday, 21 February 2017
வெட்கித் தலை குனிந்தேன்
இன்று உலகத் தாய்மொழிகள் நாள்.
யுனெஸ்கோ நிறுவனம் இந்த நாளைக் கொண்டாடச் சொல்லி
வலியுறுத்துகிறது. ஒரு மொழி அழிந்து வருவதற்கான அறிகுறிகள் இவை இவை என யுனெஸ்கோ
பட்டியலிட்டுள்ளது. அவையாவன:
அரசு ஆதரவின்மை, ஆட்சி மற்றும் பயிற்று மொழியாக
இல்லாமை, மொழி பேசும் மக்களின் எண்ணிக்கைச் சரிவு, ஊடகங்கள் மொழியைக் கவனமாகக்
கையாளாமை, தம் குழந்தைகளிடம் தாய்மொழியில் பேசாத பெற்றோரின் பொறுப்பற்றப் போக்கு,
தாய்மொழியில் அமைந்த நூல்களை வாசிப்பதில்
ஆர்வமின்மை, மொழி இலக்கண மரபுகளைப் பேணாமை, பிற மொழி மோகம், அளவுக்கு அதிகமான பிற
மொழிக் கலப்பு.
மேலே சொல்லப்பட்ட அனைத்து அறிகுறிகளும் நம்
தமிழ் நாட்டில் தென்படுகின்றன. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஆவன செய்தல்
வேண்டும். இல்லையேல் அன்னைத் தமிழை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய
நிலை ஏற்படலாம்.
தாயைப் புறக்கணிப்பதும் தாய் மொழியைப்
புறக்கணிப்பதும் ஒன்றுதான். தாய்ப்பால் அருந்தி வளராத குழந்தையும், தாய் மொழியைப்
பேசி வளராத குழந்தையும் உடல், மன முதிர்ச்சியற்ற மனிதனாகவே உருவாக முடியும்.
ஒவ்வொருவரும் தன் தாயையும், தாய் மொழியையும்,
தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும். நேசித்தால் மட்டும் போதாது; பேணிக் காக்கவும்
வேண்டும்.
ஒருவன்
தன் தாயைக் காப்பதிலும் தாய் மொழியைக் காப்பதிலும் இலாப நட்டக் கணக்கு பார்த்தல்
கூடாது. ஒரு கரும யோகியைப் போல தாய்க்கும் தாய் மொழிக்கும் தன்னால் இயன்ற நற்பணிகளைச்
செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எங்களுடைய தாய்மொழி தமிழாகும். அதுவும்
எங்கள் தலைமுறை வரைதான். அண்மையில் என் அண்ணன் மகன் திருமணத்திற்குச்
சென்றிருந்தேன். மண மக்களிடம் நான் எழுதிய தமிழ் நூல் ஒன்றைப் பரிசாகத் தந்து, “இந்த நூலில் உள்ளவை
நான் தினமணியில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. படித்துப் பாருங்கள்”
என்று சொன்னேன். “ஐ டோன்ட் நோ டமிள். குட் யூ ப்ளீஸ் கிவ் மி எ ட்ரான்ஸ்லேட்டெட்
வெர்சன்?” என்று கேட்டான் அந்த
மாப்பிள்ளைப் பையன்.
இது ஒரு பதச் சோறு மட்டுமே. ஊதியத்திற்காக
மாநிலத்தை விட்டு, நாட்டை விட்டு இடம் பெயரத் தொடங்கியபின் தாய் மொழி அறியாத
அல்லது எழுதப் படிக்கத் தெரியாத குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிவிட்டன.
இதைவிடக் கொடுமை ஒன்று உண்டு. உள்ளூரில்
படிக்கும் குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்க வற்புறுத்தப்படுவதால் தமிழில்
சரியாகப் பேசவும் எழுதவும் முடியாத linguistically handicapped எனச்
சொல்லத்தக்க இயலாக் குழந்தைகளாகவே உள்ளனர். இவர்கள் நீந்த மறந்த மீன்களைப்
போன்றவர்கள். நீந்த மறந்த மீன்கள் நீரில் இருந்தாலும் பயன் இல்லை.
இப்படிப்பட்ட குழந்தைகளால்
ஆங்கிலத்திலாவது திருத்தமுற பேசவும் எழுதவும் முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. “ஒருவன்
தன் தாய் மொழியில் திறன் பெறாமல் பிற
மொழிகளைச் சரியாகப் பேசவும் எழுதவும் கற்க இயலாது” என்னும்
திரு.வி.கலியாணசுந்தரனாரின் கூற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நல்லூழ் காரணமாக இவர்களில் சிலர் மாவட்ட
ஆட்சியராகி விடுகிறார்கள். நம்மூர் அரசுக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அழைத்தால், மேடையில்
தோன்றி “எனக்குத் தமிழில் பேச வராது” என்று தொடங்கி தமிங்கலத்தில் பேசிச்
செல்கிறார்கள்.
“மகனே! இங்கே வா. இந்த இரும்புப் பேழையில் நம்
பரம்பரைச் செல்வங்களான வெள்ளி, தங்கம், மணிகள்
மற்றும் என்னுடைய முயற்சியால்
கிடைத்த செல்வம் எல்லாம் உள்ளன. இந்தச் சாவியைப் பத்திரமாக வைத்துக்கொள். உனக்கு
நாற்பது வயதாகும்போது திறந்து எடுத்துக் கொள். அதற்கு முன்னர் நீ விரும்பினாலும்
திறக்க முடியாது” எனச் சொல்லிச் சாவியைத் தருகிறார் அப்பா. ஆனால் அவனோ சாவியைத்
தொலைத்துவிட்டு ஏழையாகவே சாகிறான்.
இப்படித்தான் இன்று நம் குழந்தைகள்
தாய்மொழி என்னும் சாவியைத் தொலைத்துவிட்டுப் பரம்பரையாக அனுபவித்து வந்த
இலக்கியச் செல்வங்களை நுகரமுடியாமல்
கிடக்கின்றனர். ஆனால் அது குறித்த வருத்தம் அவர்களிடத்தில் இல்லை என்பதுதான் எனது
வருத்தம்.
ஒரு நீண்ட சங்கிலியின் நுனியில் தொங்கும்
பெரிய கொத்து விளக்கு, அச் சங்கிலியின் ஒரு கண்ணி உடைந்து விட்டாலும் கூட அக் கொத்து
விளக்கு கீழே விழுந்து நொறுங்கிவிடும். அதுபோல ஒரு தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள்
தாய்மொழியைப் படிக்காமல் விட்டாலும் அம் மொழியும் வீழ்ந்து அழியும். கூடவே
அம்மொழியில் உள்ள இலக்கிய இலக்கணச் செல்வங்களும் அழியும்.
எனக்குத் தெரிந்த ஒரு தமிழ்க் குடும்பம்.
கணவன் மனைவி இருவரும் அரசு அதிகாரிகள். தன் ஒரே மகனை ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்க
வைத்தார்கள். அவன் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவேண்டும் என்னும் நோக்கத்தில்
வீட்டிலும் அவனோடு ஆங்கிலத்தில் பேசினார்கள். பள்ளியில் முதல் மொழியாக இந்தி
படிக்கச் செய்தார்கள். . இன்று அவனும் படித்துப் பெரிய வேலையில் உள்ளான். ஆனால்
தாய்மொழியாம் தமிழில் ‘அ’ னா ‘ஆ’வன்னா கூட தெரியாது. தாய்மொழி என்னும் இயற்கை
விழிகளை எடுத்துவிட்டு, ஆங்கிலம் என்னும் செயற்கை விழிகளைப் பொருத்தி விட்டார்கள்
அந்தப் பெற்றோர். அதனால் கீட்சும் ஷெல்லியும் அவன் கண்களுக்குத் தெரிகிறார்கள்.
கம்பரும் வள்ளுவரும் அவன் கண்களுக்குத் தெரிந்திலர். இத்தகையப் பெற்றோர்களைத்
தமிழன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாள்.
இன்று காலையில் நான் என் மகிழுந்தில்
சென்றபோது, நாற்சந்தியில் பச்சை விளக்கொளிக்காகக் காத்திருந்தேன். முன்னால் நின்ற
ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகத்தைக் கண்டு அவருக்குள்ள தாய்மொழி உணர்வு
எனக்கில்லையே என்று வெட்கித் தலைகுனிந்தேன்.
அவ்வாசகம் இதுதான்:
தமிழே! என் உயிரே! வணக்கம்!
தாய் பிள்ளை உறவம்மா
எனக்கும் உனக்கும்!
Tuesday, 14 February 2017
கனவை நனவாக்கும் காதல்
இன்று காதலர் தினம் என காலண்டர்
சொன்னது. பிழைப்பைக் கெடுக்கும் காதல் எங்கும் பெருகி விட்டதோ என மனம் மயங்கித்
தவித்தது. முகம் பார்க்காமலே காதல் செய்ய முகநூலும் வாட்ஸெப்பும் வரிந்துகட்டிக்
கொண்டு உதவுகின்றன.
Thursday, 9 February 2017
கணவன் பெயரைச் சொல்லலாமா?
நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு
பேருந்து பயணத்தில் கண்ட காட்சி இப்போது நினைவுக்கு வருகிறது.
Saturday, 4 February 2017
காலமும் கருத்தும்
சூடிய பூ சூடற்க. இது
நான் அண்மையில் வாசித்த நாஞ்சில் நாடனின் சிறுகதை நூல். சாகித்திய அகாதமியின்
பரிசு பெற்றது.
Thursday, 2 February 2017
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
தமிழா நீ
பெற்றெடுத்த பிள்ளைக்குத்
தக்ஷிகா என்றொரு
பேர்வைத்தாய்! – எனவே
உன்னால்தான்
உனதுதமிழ் அழியும்
உன்மீது
விழுந்திடுமே பழியும்!
Subscribe to:
Posts (Atom)