Sunday, 16 April 2017

கரூரில் விளைந்த கரும்பு

    கி. வா. ஜகந்நாதன் அவர்கள் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் பிறந்தவர் என்பது கிருஷ்ணராயபுரத்து மக்களுக்கே தெரியவில்லை.

   அவர்தம் தந்தையார் பெயர் வாசுதேவ ஐயர். தாயார் பெயர் பார்வதி அம்மாள். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் பிறந்தார்.

     இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் தலை மாணாக்கர். கலைமகள் பத்திரிகை அலுவலகத்தில் ஊழியராய்ச் சேர்ந்து அதன் ஆசிரியராய் உயர்ந்தவர்.

   
    Ki.Vaa,Ja (courtesy: Google)
தன் தந்தையாரின் பணிமாறுதல் காரணமாக பல ஊர்களில் படிக்க நேர்ந்தது. நாமக்கல் அருகிலுள்ள மோகனூரில் திண்ணைப் பள்ளியிலும், பின்னர் குளித்தலை, வாங்கல் பள்ளிகளிலும் படித்தார். பள்ளியில் படிக்கும்போதே பேச்சுக்கலையில் வல்லவராய் விளங்கினார். மோகனூரில் உள்ள காந்தமலை முருகன் கோவிலில் முதன்முதல் பொதுமக்கள் முன்னிலையில் சொற்பொழிவாற்றி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

   பள்ளி இறுதி வகுப்பில் படித்தபோது முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல இயலாதநிலையில் இலக்கியத்தில் முழு ஈடுபாட்டைக் காட்டினார். ஜோதி என்ற புனைபெயரில் எழுதினார். நோயின் கோரப்பிடியிலிருந்து சற்றே விடுபட்டு விடாப்பிடியுடன் பள்ளியிறுதி வகுப்பை முடித்தார்,

   சில காலம் சேந்தமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். இவரது தமிழார்வத்தைக் கண்ட சேந்த மங்கலம் ஐராவத உடையார், 1927 ஆம் ஆண்டு கி.வா.ஜ அவர்களை அழைத்துச் சென்று உ.வே.சா அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது உ.வே.சா அவர்கள் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியில் (இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பணியாற்றிக் கொண்டிருந்தார்.

    உ.வே.சா அவர்களுடன் தங்கி குருகுல முறையில் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தனித் தேர்வராக வித்வான் தேர்வெழுதி மாநிலத்தில் முதலாவதாக வந்தார்.

   1932 ஆம் ஆண்டு அலமேலு என்பாரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

    தொடர்ந்து உ.வே.சா அவர்களின் அணுக்கத்தொண்டராயிருந்து அவரது பதிப்புப் பணிகளில் பேருதவி புரிந்தார். மேலும் தானே பெரிதும் முயன்று இருநூற்றுக்கும்  மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தார். அதுவரை யாரும் செய்திராத வகையில் இருபத்து இரண்டாயிரம் தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். இதற்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று, முதியவர்களைச் சந்தித்து வாய்மொழியாகக் கேட்டுத் தொகுத்தார்.

     அவர் எழுதிய கோவூர் கிழார் என்னும் நூல் பன்னிரண்டு பதிப்புகளைக் கண்டது. அவர் கைவண்ணத்தில் உருவான  141 நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.

  “கி.வா.ஜ. என்ன சாதாரண ஆளா? கலைமகளுக்கே ஆசிரியராய் இருந்தாரே!” என்று வியந்து பாராட்டினார் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள்.

   இலக்கியப்பணி மட்டுமே அவர்தம் வாழ்நாள் பணியாக அமைந்தது. எண்பத்து இரண்டாம் அகவையில் ஒருநாள் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிக்கொண்டிருந்தபோது கையிலிருந்த எழுதுகோல் கையைவிட்டு நழுவியது. அந்தக் கணத்தில் அவர்தம் ஆவியும் உடலைவிட்டு நழுவியது.  அந்தக் கருப்பு நாள் 2.11.1988.

    இன்றைய இளைய தலைமுறை மாணவர்களுக்கு இந்த இலக்கிய இமயத்தை அறிமுகப்படுத்தலாமே.
    

     

3 comments:

  1. பெருமகனாரின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete
  2. You have done a good job by introducing Ki Vaa Jaa to the younger generation. Prof.Pandiaraj

    ReplyDelete