Monday, 17 April 2017

இளமையில் துறவு- சிறுகதை (முனைவர் அ. கோவிந்தராஜூ)

     லவ்பேர்ட்ஸ் என்று தங்களை நோக்கி சக மாணவ மாணவியர் விரல் நீட்டிப் பேசுவதை அவர்கள் இருவரும் அறிந்துதான் இருந்தார்கள்.

  “உங்கள் பேரண்ட்சை அழைத்துப் பேசட்டுமா?”

  “சார் சார் ப்ளீஸ் சார் வேணாம் சார்”

  “நாங்கள் இனி எந்தத் தப்பும் செய்யமாட்டோம் சார்” –மேரியும் மோகனும் காலில் விழாக் குறையாகக் கெஞ்சினார்கள். முதல்வர்  தன் நெற்றியை வலக் கையால் தடவியபடி சிந்தித்தார்.

    படிப்பில், விளையாட்டில் குறிப்பாக நீச்சலில் மோகன் முதல் இடத்தில் இருந்தான். இப்போது மேரியின் காதல்  வலையில் சிக்கிக் கொண்டானே என்ன செய்யலாம் என்று யோசித்தார். இன்னும் இரண்டு மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள நிலையில் பெற்றோரை அழைத்துப் பேசினால் விளைவு மேலும் மோசம் ஆகலாம் என எண்ணிய முதல்வர் ஒரு முடிவுக்கு வந்தார். பல்வேறு அறிவுரைகளைக் கூறிவிட்டு நிறைவாகச் சொன்னார்:

   “இதுதான் கடைசி மன்னிப்பு, கடைசி எச்சரிக்கை. இனிமேல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வகுப்புக்குச் செல்லுங்கள்”

     அறிவியல் புத்தகத்தைத் திறந்தால் எல்லாப் பக்கங்களிலும் அவனுடைய முகமே அவளுக்குத் தெரிகிறது. அவள் வீட்டில் அவள் ஒரே பிள்ளை. பெற்றோர் இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். திருப்புத் தேர்வு மதிப்பெண் அட்டையில் ஆறில் நான்குப் பாடங்களில் சிவப்பு மையால் அடிக்கோடு போட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

    மோகனும் குடும்பத்தில் ஒரே பையன். பெற்றோர் இருவரும் விசைத்தறி வைத்து சேலை நெசவு செய்தார்கள். இப்போதெல்லாம் தன் மகனின் அலைப்பேசிக்கு நேரங்கெட்ட நேரத்தில் அழைப்புகள் வருவதையும் மிக மெல்லிய குரலில் அவன் பேசுவதையும் கண்டு இருவரும்  கலக்கம் அடைந்தார்கள். எனினும் அதுபற்றி அவனிடம் எதுவும் பேசவில்லை.

    கேரளச் சுற்றுலா சென்று வந்த பின்னர்தான் அந்த மாணவிக்குக் கிறுக்குப் பிடித்தது. அரையாண்டு விடுமுறையில் பள்ளி ஏற்பாடு செய்த சுற்றுலாவில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர் கொச்சின் கடற்கரையில்  துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டபோதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. திடீரென்று ஒரு பேரலை வந்து மேரியை கடலுக்குள் இழுத்துச் சென்றது. “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று மாணவியர் எழுப்பிய பெருங்குரலால் ஒரு பெருங்கூட்டம் கூடியதே தவிர அவளைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை.

    ஆசிரியர் அன்புநாதன் அலைப்பேசியில் அவசரமாகப் பேசிவிட்டு, “மற்ற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் கரையில் உள்ளார்களா?” என்று கத்தினார்.
“சார், மோகனைக் காணவில்லை”.

“சார், அவன்தான் கடலில் பாய்ந்து விழுந்து நீந்திச் சென்றதைப் பார்த்தேன்”

   இப்படி ஒருவருக்கு ஒருவர்  பதறிக் கொண்டிருந்தபோது மேரியைத் தூக்கித் தோள்மீது போட்டுக்கொண்டு கரையேறி வரவும் ஆம்புலன்ஸ் வண்டி வந்து நிற்கவும்  சரியாக இருந்தது. நல்ல வேளை மேரி பிழைத்து எழுந்தாள்.

 சுற்றுலா முடிந்து  பள்ளிக்குத் திரும்பியதும் ஒருவாரம் இதுபற்றிய பேச்சாகத்தான் இருந்தது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தக் கதையாக,மேரியின் தோழியர் மோகன் அவளைத் தோள்மீது தூக்கிவந்தக் காட்சியைச் சொல்லிச் சொல்லி அவளை உசுப்பேற்றி விட்டார்கள்.

      பள்ளியில் ஒரு ஞாயிற்றுக் கிழமை நடந்த சிறப்பு வகுப்பின்போது சாக்பீஸ் எடுக்க அவள் படிகளில் இறங்கிவர, தாமதமாக வந்த மோகன் படிகளில் ஏறிச் செல்ல,  ஒரு விபத்து அங்கு யாருக்கும் தெரியாமல் அரங்கேறியது. தன் கன்னத்தில் பட்ட அவளது எச்சிலை கைக்குட்டையால் அழுத்தித் துடைத்தான். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு, “இவளுக்கென்ன கிறுக்குத் தலைக்கேறிவிட்டதா இப்படிச் செய்து விட்டாளே” என்று நினைத்தபடி வகுப்பறை வாயிலில் நின்று,”எக்யூஸ் மீ சார்” என்றான்.

     ஒருநாள் ஆய்வகத்திற்குச் செல்லும் வழியில்,”மோகன் உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, ஐ லவ் யூ”என்று நேரடியாகவே சொல்லிவிட்டாள். “யூ ஆர் எ மேட் கேர்ள்” என்பதுதான் மோகனின் பதிலாக இருந்தது.

  மேரியின் அம்மா அவளை உள்ளூர் மாதா கோவிலுக்கு அழைத்துச்சென்று சாமியாரிடம் சொல்லி ஒரு வேப்பிலைப் பாடம் போட்டாள். அதனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.

    அவளிடம் தன் முடிவைத் தெளிவாகத் தெரிவித்துவிடுவது என்ற முடிவோடு ஒரு நீண்ட கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டான்.

  “மேரி, ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள். பள்ளியில் படிக்கும்போது காதல் கீதலென அலைவது தற்கொலை முயற்சிக்குச் சமமானது. பள்ளிப் பருவமென்பது மனம் பக்குவப் படாத பருவம் என்று எத்தனை முறை நம் முதல்வர் வணக்க வகுப்பில் சொல்லியிருக்கிறார். நீ என்னிடம் காட்டுவது உண்மையான காதல் இல்லை. அது  இன்ஃபேச்சுவேஷன். அதாவது ஒரு பெண்ணுக்கு ஆணிடம் உள்ள ஈர்ப்பு; அவ்வளவுதான்.

   தீ என்பது சமைக்கப் பயன்பட வேண்டும். அது வாழும் குடிசையக் கொளுத்தப் பயன்படக் கூடாது. எனக்கு என ஒரு கனவு உள்ளது. எதிர்காலத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக வர வேண்டும் என விரும்புகிறேன். நீயும் உன் பெற்றோருக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதே. தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது. நீயும் படி; என்னையும் படிக்க விடு” என்று கடிதத்தை முடித்திருந்தான் மோகன்.

    தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மோகன் மாவட்டத்தில் முதலாவதாக வந்தான். மேரி பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெற்றுத் தேறியவர்களில் முதலாவதாக வந்தாள்.

  காலம் கரைந்தோடியது.

          வாசுதேவன் நினைவு மருத்துவமனையின் வாயிலில் சீறிக்கொண்டு ஓர் ஆம்புலன்ஸ் வந்து குலுங்கி நின்றது. தும்பைப் பூ போன்ற வெள்ளாடையில் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை ஸ்டெச்சரில் வைத்து அவசரமாக உள்ளே தள்ளிச் சென்றார்கள்.

   பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா பகுதியில் புகழ்பெற்ற மருத்துவமனை அது. நூறு படுக்கைகள் கொண்ட அம் மருத்துவ மனையில்  இருபது மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். ஆலோசனைக் கட்டணம் இருபது ரூபாய் மட்டுமே. மகப்பேறு கட்டணம் ஐந்நூறு தான். ஒட்டுக் குடல் அறுவை சிகிச்சை ஆயிரத்தில் முடிந்துவிடும். ஏழை எளியவருக்குக் கட்டணம் இன்றி தரமான மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்காரர் மணிகண்டன் என்பவர் நடத்திவரும் அந்த மருத்துவ மனைக்கு வெளிநாட்டவர் அளிக்கும் நிதி ஆதரவும் உண்டு.

   “பேஷண்ட்பெயர் என்ன?”

   “லூர்து மேரி”

அவளுடைய இடது கையை மெல்லத் தூக்கி நாடிப் பிடித்துப் பார்த்தார் டாக்டர் ராஜ்மோகன்.

“வெறும் லோ ப்ரஷர்தான். இந்த இஞ்சக்க்ஷனைப் போடுங்கள்” என்று செவிலியரிடம் சொல்லிவிட்டு அடுத்த நோயாளியைப் பார்க்கச் சென்றார்.

    கிறித்துவத் துறவியாக மாறி முழு நேர சமூக சேவகியாகப் பணியாற்றும் இந்த லூர்து மேரியும் இங்கே மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ராஜ் மோகனும் ஜெயங்கொண்டம்  பி.என்.பி.எல் பள்ளியில் இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த மேரியும் மோகனும் என்பது எனக்கு மட்டுமே தெரியும். எப்படி என்கிறீர்களா?

  அப்போது நான்தானே அப்பள்ளியின் முதல்வர்!.

   

.
 
   


5 comments:

  1. ஆகா...!

    உண்மை நிகழ்வு தானே ஐயா...?

    ReplyDelete
  2. ஆகா
    போற்றுதலுக்கு உரிய மாணவர்கள்
    தங்களால் வளர்க்கப் பட்டவர்கள் அல்லவா

    ReplyDelete
  3. உண்மையும் பொய்யும் கலந்திருக்கிறதா, அல்லது பொய்யும் உண்மையும் கலந்திருக்கிறதா, அல்லது, உண்மை மட்டும் தானா? எப்படியாயினும் மேரி தன் படிப்பில் தவறிவிட்டதை நான் மன்னிக்க மாட்டேன்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  4. அருமை. வெற்றிமுனை மாத இதழில் வரும் .நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  5. படிக்கின்ற காலத்தில் படிப்பைத் தவிர வேறு சிந்தனை கூடாது. நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள காதல் ஒரு தடையாக அமையக்கூடாது. நல்ல சிறுகதை.
    முனைவர் ரா.லட்சுமணசிங்

    ReplyDelete