இந்தக் கொளுத்தும் வெயிலில் மனிதர்கள்
எப்படியோ சமாளித்துக் கொள்கிறார்கள். பாவம் பறவைகள் விலங்குகள் பாடு திண்டாட்டம்தான்.
இவைகளைப் பற்றிக் கவலைப்படும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பறவைகள் கோடைக்காலத்தில்
தண்ணீருக்காக அல்லாடுகின்றன. நான் ஒரு பெரிய எவர்சில்வர் தட்டில் தினம்தோறும் வழிய
வழிய நீர் ஊற்றி வீட்டின் முன் உள்ள வேப்பமர நிழலில் வைக்கிறேன். மதிய நேரத்தில்
சிட்டுக் குருவிகள் வந்து அந்த நீரைக் குடிக்கின்றன. அதில் இறங்கிக் குதியாட்டம்
போட்டுச் சிறகுகளை நனைத்துக் கொள்கின்றன.
நாய்களின் தவிப்பு சொல்லி மாளாது.
நான் சொல்வது வளர்ப்பு நாய்களைப் பற்றி அன்று. தெரு நாய்களைப் பற்றிதான் என் கவலை
எல்லாம்.
என்னுடைய மாணவர் நிசப்தம் வா.மணிகண்டன் ஒரு பதிவில் மலைப்பாம்பு
போல கிடக்கும் அதி நவீன நான்குவழிச் சாலைகளைப் பற்றி விவரித்திருந்தார். அச்
சாலைகளில் பறக்கும் அதிவேக வாகனங்களில் அடிபட்டுச் சாகும் நாய்களைப் பற்றிக்
கரிசனத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
என் நண்பர் பேராசிரியர் இலட்சுமண சிங் அவர்கள்
தம் வீட்டிற்கு முன்னால் தெரு நாய்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு தினமும்
தண்ணீர் ஊற்றி வைக்கின்றார். திருமதி சிங் அவர்கள் மிச்சம் மீதி சோறு இருப்பின் போடுகின்றார். அதற்கு
நன்றிக் கடனாக, அந்த நாய்கள் அவர் வீட்டு வாயிலில் இரவு நேரத்தில் படுத்துக்கொண்டு
காவல் காக்கின்றன.
நேற்று காலை நடைப் பயிற்சியின்போது
நான் கண்ட ஒரு காட்சி தெரு நாயையும் என்னையும் மெய்சிலிர்க்க வைத்தது.
ஒரு சிறுமி, தன் வீட்டுக்குமுன் கையில் ஹோஸ்
பைப்புடன் நிற்க, தெரு நாய்கள் வரிசைக் கட்டிக் கொண்டு வந்து வாலை ஆட்டுகின்றன.
நீரை நாய்களின்மீது பீய்ச்சி அடிக்க அவை மகிழ்ச்சியாக குளிக்கின்றன. குளித்து
முடித்ததும் நாய்கள் மெய் சிலிர்க்கின்றன. இது நாளும் நடக்கும் நல்ல நிகழ்வாகும். பீட்டா,
ப்ளூகிராஸ் போன்ற அமைப்பினர் பார்த்தால் அந்தச் சிறுமிக்கு ஒரு விருது
கொடுப்பார்கள்.
தெரு நாய்களுக்குச் சரியான உணவு
கிடைக்காததும் ஒருவகையில் நல்லதுதான் போலும். ஊளைச் சதை ஏதும் இல்லாமல்
பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கின்றன.
தெரு நாய்களுக்கு ஒரு பிரச்சனை
என்றால், வளர்ப்பு நாய்களுக்கு வேறு ஒரு பிரச்சனை. தெருவில் திரியும் அழகான இளம்
பெட்டை நாய்களைப் பார்த்து அவை ஏங்குகின்றன. இந்த விஷயத்தில் தெரு நாய்களுக்குள்ள
சுதந்திரம் வளர்ப்பு நாய்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது குறித்து ஜெயகாந்தன் எழுதியுள்ள நிக்கி
என்னும் சிறுகதையை வாசகர்கள் படிக்க வேண்டும்.
வளர்ப்பு நாய்கள் தெரு நாய்களுக்கு
ஈடு கொடுத்து விரைவாக ஓடமுடியாது. அவை அளவுக்கு அதிகமாக பருமனாக இருப்பதும் ஒரு
காரணம்.
கேரளாவில் தெரு நாய் ஒன்று மனிதனைக்
கடிக்க, நகராட்சியினர் எல்லா தெரு நாய்களையும் பிடிக்க, பீட்டா அமைப்பினர்
நீதிமன்றத்துக்குச் சென்று தடை ஆணை வாங்கியதெல்லாம் தனிக் கதை யாகும்.
கிராமப் புறங்களில் தெரு நாய்
போடும் குட்டிகளை ஆளுக்கொன்றாக எடுத்துச் சென்று வீட்டில் வளர்ப்பார்கள். ஜானி
என்றும் கறுப்பன் என்றும் பெயர் சூட்டி
மகிழ்வார்கள். அந்த வீட்டில் வளரும் சிறு குழந்தைகளும் அங்கு வளரும் நாய்க்
குட்டியும் பழகும் விதமே தனி. குழந்தை நாய்க்குட்டியின் வாலைப் பிடித்து
முறுக்கும்; வாயைப்பிடித்து இரு கைகளாலும் பிளக்கும். இவை எல்லாவற்றையும் அந்தக்
குட்டிநாய் பொறுத்துக் கொள்ளும். அப்படியே அது குழந்தையின் கையைக் கடித்தாலும் அது
பொய்க்கடியாக இருக்கும்!
எங்கள் கிராமத்தில் ஒரு தாய்
சேயையும் நாயையும் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தடியில் விட்டுவிட்டு வீட்டினுள்
வேலையாய் இருந்தாள். சற்று நேரம் கழித்து குழந்தை இரத்தக்கறையோடு தவழ்ந்து வர,
அதிர்ச்சியோடு ஓடிபோய்ப் பார்த்தாள். அங்கே ஒரு பாம்பு கடிபட்டு இரு துண்டுகளாகக்
கிடந்தன. பாம்பு தீண்டியதால் நாயும் இறந்து கிடந்தது. நாயின் தியாகத்தால் அன்று
குழந்தை பிழைத்தது. அன்று முதல் அக் குழந்தையை நாயம்மா என்றழைக்க பின்னர் அப்பெயரே
நிலைத்துவிட்டது.
புவியியல் அடையாளத்துடன் பல
பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா,
காங்கேயம் காளை என்னும் பட்டியலில் இராஜபாளையம் நாய் இடம்பெறுவதை நாம் அறிவோம்.
இந்து மதத்தில் பறவைகளையும்
விலங்குகளையும் வணங்குவது மரபாக உள்ளது. அந்த வகையில் நாய் பைரவராக
வழிபடப்படுகிறார்.
பழமொழி என்பது வாய்மொழி
இலக்கியமாகும். நாயைக் குறித்தப் பழமொழிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.(பார்க்க:
பழமொழிகள் தொகுப்பு கி.வா.ஜ)
எடுத்துக்காட்டாக சில பழமொழிகள்:
தூங்கும் நாயைத் தொந்திரவு செய்யாதே
குலைக்கிற நாய் கடிக்காது
நாய் அடிக்கக் குறுந்தடியா? /நாய் வித்தக் காசு கொலைக்குமா?
நாய் அடித்த படுபாவி சேய் இல்லாமல் அழுதானாம் ./நாய் அடையுமா சிவலோக பதவி? /நாய்
அறியுமா ஒரு சந்திப் பானை?
நாய் அறியுமா நறு நெய்யை? / நாய் அன்பு நக்கினாலும் தீராது..
நாய் ஆனாலும் அதற்கும் ஒரு வாயும் வயிறும் உண்டல்லவா?
நாய் ஆனாலும் சேய் போல./நாய் இருக்கிற இடத்திலே சண்டை உண்டு
நாய் இருக்கிற வீட்டில் திருடப் போனது போல. /நாய் இருப்பது ஒரு ஆள் இருக்கிற
மாதிரி.
நாய் இல்லா ஊரில் நரி அம்பலம் பண்ணியதாம். /நாய் இறந்ததென்று ஓநாய் அழுததாம்.
/நாய் உண்ட புலால் போல./நாய் உதறினால் நல்ல சகுனம்.
நாய் உள்ள ஆட்டுக் கிடையில் நரி புகுந்தாற் போல. /நாய் உளம்புதல் மாதிரி.
நாய் ஊளையிட்டா மழை பெய்ய வேண்டும்? /நாய் ஊளையிட்டால் ஊர் நாசமாகும் ./நாய்
ஊளையிடுவது நடுச்சாமத்துக்கு மேல். /நாய் வயிற்றில் நரி பிறக்குமா? /நாய் வாயில்
அகப்பட்ட முயல் போல/நாய்வாலை நிமிர்த்த முடியுமா? /நாய் வேதம் படித்தது போல /நாயை
வளர்த்து நரகலை அள்ளுவானேன்? /நாய்ப் பீயை மிதிப்பானேன் நல்ல தண்ணீர் ஊற்றிக்
கழுவுவானேன்? /நாய்க்கும் உண்டு சூல் அழகு
நாய்க்கடி போதாதென்று செருப்படியும் பட்டானாம். /நாய்க்கடிக்கு நாற்பது நாள்
பத்தியம் /சமுத்திரம் நிறைய தண்ணீர் இருந்தாலும் நாய் நக்கிதானே குடிக்க வேண்டும்?
நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும் /நாய்க்கு நாக்கில் வேர்க்கும்;கழுகுக்கு மூக்கில்
வேர்க்கும்./நாய் வேடமிட்டவன் குலைத்துதான் ஆக வேண்டும்
நக்குகிற நாய்க்குச் செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான்.
ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு இளப்பம்.
நாய்க்கு நரகல் சர்க்கரை /நாய்க்குத் தெரியும் நமன் வருகை
நாய்க்குக் குப்பைமேடு; பேய்க்குப் புளிய மரம். /நாய்க்கு எதற்கு நன்னாரி
சர்பத்து? /நாய் குரைக்கப் பேயும் நடுங்கும்/நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க
நேரமும் இல்லை. /நாய் நடுரோட்டில் தூங்கும் /நாயைக் கொஞ்சினால் மூஞ்சியை நக்கும் /நாயைக்
குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாயை மலத்தில்தான் வைக்குமாம். நாயாய்ப்
பிறந்தாலும் நல்ல இடத்தில் பிறக்க வேண்டும்.
ஆக, நாய் மனித குலத்தோடு கொண்டுள்ள அன்புப் பிணைப்பு மிகத் தொன்மையானது.
நாயைப் பாடிய புலவர்கள் மிகப்பலர். அண்மைக் காலத்தில்,
“வாலைக் குழைத்து வரும் நாய்தான்- அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!”
என்று நாயைப் போற்றிப் பாடிய நாயகர் நம் பாரதியார் ஆவார்.
ஒன்று மட்டும் உண்மை:
நாயின்றி அமையாது உலகு.
This comment has been removed by the author.
ReplyDeleteஎங்கள் தெருவில் பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன ஐயா
ReplyDeleteவீட்டிலும் ஒரு வளர்ப்பு நாய் இருக்கிறது
இந்த வெயில் காலத்தில் தெருநாய்களின் நிலைமை மிகவும் கடினம்தான்
அருமை ஐயா...
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDeleteநாய் பற்றிய ஒரு குறு ஆய்வே செய்து விட்டீர்கள். மனிதர்கள் பற்றிக் கூட கவலை கொள்ளாத இந்த சமூகத்தில் விலங்குகள் பற்றிய தங்களது அக்கரை பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் அண்ணா...!
ReplyDeleteSuper.
ReplyDeleteஅருமையான பதிவு. நாய்கள் காலங்காலமாக மனிதர்களுடன் வாழ்ந்த விலங்கு. விலங்குகளில் மிகவும் நன்றியுடன் தனது பணிகளைத் தவறாமல் செய்யக்கூடியது. ஒரு வேளை உணவிட்ட வீட்டுக்குத் தன் பங்குக்கு உழைப்பைத் தரக்கூடியது. ஆகையால் தான் நன்றிக்கு நாயை உதாரணம் கூறுகின்றனர். அதனைப் போற்றுபவருக்கு நன்மையையும் தூற்றுபவருக்குத் துன்பத்தையும் நாய்கள் தருகின்றன. எந்த விலங்கானாலும், பறவைகளானாலும் மனிதனை நம்பி அவைகள் வாழ்வதில்லை. மாறாக அவைகள் தான் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கின்றன. விதைப்பரவலைச் செய்கின்றன. பூமியில் மனிதனைத்தவிற மற்ற உயிரினங்கள் நன்மையையே செய்கின்றன. ஆகையால் அவைகளைத் துன்புறுத்துவதை விடுத்து அவற்றிற்கு வாழ்வளிக்க உதவுவோம். நாய்களைப் பற்றி பழ(பல)மொழிகள் அருமை இவ்வளவு பழமொழிகளை இக்கட்டுரை வாயிலாகத்தான் அறிந்தேன். நன்றி.
ReplyDeleteபேராசிரியர்.லட்சுமணசிங்.
நாயில்லாமல் நானில்லை
ReplyDeleteசொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமுமில்லை-ஒரு
துணையில்லாமல் வந்ததெல்லாம்
பாரமுமில்லை
நன்றியுள்ள உயிர்களெல்லாம்
பிள்ளைதானடா-தம்பி
நன்றி கெட்ட மகனைவிட
நாய்கள் மேலடா
அனுபவரீதியாக உணர்ந்தவன் நான்
நான் மாணவர்களிடம் பேசும் பொழுது
இந்த செய்தியை சொல்லி ஒரு பாடல்
பாடுவேன்
கடவுளை நாம் வணங்குகிறோம்
கடவுள் நம்மை வணங்குவாரா?
ஆண்ணவனைப்பார்க்க நாம் கோவிலுக்குள் செல்கிறோம்
அவர் நம் வீட்டுக்கு வருவாரா?
வருவார் வணங்குவார் எப்படி?
ஆண்டவனும் உன்னைத்தேடி வீட்டுக்கு
வந்திடுவான்
பறவைகள் உருவத்திலே அருமைத்தோழா-அந்த
உயிர்கள் வாழ்வதற்கு
தண்ணீரும் உணவும் தந்தால்
கடவுளும் வணங்குவானே
அருமைத்தோழா
ஒருகுவளை நீருக்காக
ஊரெல்லாம் சுற்றி வந்து
தெருக்களிலே நிற்குதடா
அருமைத்தோழா-அந்த
நன்றி உள்ள நாய்களுக்கு
நாம் தினமும் உணவளித்தால்
கடவுளும் வாழ்த்துவானே
அருமைத்தோழா
என்னிடம் இரண்டு வளர்ப்புநாய்கள்
உள்ளன அர்ஜூன் பீமா என்று
இவர்கள் வருவதற்கு முன்னால்
எனது ரத்த அழுத்தம் 110/180
இது மிகவும் அதிகம் என மருத்துவர் சொன்னார்
தற்போது அது 80/140 ஆக குறைந்து
விட்டது
அதனால் தான் சொன்னேன்
நாயில்லாமல் நானில்லை
நாயைப்பற்றி பிரபஞ்சனின் பயம்
என்ற சிறுகதை படிக்கத்தக்கது
நாயில்லாமல் நானில்லை
ReplyDeleteசொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமுமில்லை-ஒரு
துணையில்லாமல் வந்ததெல்லாம்
பாரமுமில்லை
நன்றியுள்ள உயிர்களெல்லாம்
பிள்ளைதானடா-தம்பி
நன்றி கெட்ட மகனைவிட
நாய்கள் மேலடா
அனுபவரீதியாக உணர்ந்தவன் நான்
நான் மாணவர்களிடம் பேசும் பொழுது
இந்த செய்தியை சொல்லி ஒரு பாடல்
பாடுவேன்
கடவுளை நாம் வணங்குகிறோம்
கடவுள் நம்மை வணங்குவாரா?
ஆண்ணவனைப்பார்க்க நாம் கோவிலுக்குள் செல்கிறோம்
அவர் நம் வீட்டுக்கு வருவாரா?
வருவார் வணங்குவார் எப்படி?
ஆண்டவனும் உன்னைத்தேடி வீட்டுக்கு
வந்திடுவான்
பறவைகள் உருவத்திலே அருமைத்தோழா-அந்த
உயிர்கள் வாழ்வதற்கு
தண்ணீரும் உணவும் தந்தால்
கடவுளும் வணங்குவானே
அருமைத்தோழா
ஒருகுவளை நீருக்காக
ஊரெல்லாம் சுற்றி வந்து
தெருக்களிலே நிற்குதடா
அருமைத்தோழா-அந்த
நன்றி உள்ள நாய்களுக்கு
நாம் தினமும் உணவளித்தால்
கடவுளும் வாழ்த்துவானே
அருமைத்தோழா
என்னிடம் இரண்டு வளர்ப்புநாய்கள்
உள்ளன அர்ஜூன் பீமா என்று
இவர்கள் வருவதற்கு முன்னால்
எனது ரத்த அழுத்தம் 110/180
இது மிகவும் அதிகம் என மருத்துவர் சொன்னார்
தற்போது அது 80/140 ஆக குறைந்து
விட்டது
அதனால் தான் சொன்னேன்
நாயில்லாமல் நானில்லை
நாயைப்பற்றி பிரபஞ்சனின் பயம்
என்ற சிறுகதை படிக்கத்தக்கது