Tuesday, 9 May 2017

ஜருகண்டி புராணம்

   நாங்கள் பரம்பரையாக விரும்பி வழிபடும் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி. என்னுடைய அப்பா அம்மா இருவரும் திருப்பதி சென்றுவந்த பிறகு நான் பிறந்தேன். அதனால்தான் கோவிந்தராஜூ எனப் பெயரும் இட்டனர். 

அவன் அருளின்றி அவன்தாள் பணிதல் இயலாது என்னும் முன்னோர் மொழியும் உண்மைதான் போலும். பக்கத்து வீட்டு நண்பர் தமிழ்ப்பேராசிரியர் சிங் அவர்கள் புண்ணியத்தில் இருபத்து மூன்றாண்டுகள் இடைவெளிக்குப்பின் நேற்று(8.5.2017) திருப்பதி செல்லும் பேறு கிட்டியது.

     
இளையதலைமுறைக்கு ஓர் அறிவுரை.  உடலில் பலம் இருக்கும்போதே திருப்பதி செல்லுங்கள். வயதானபின் சென்றால் தள்ளு முள்ளுவைத் தாங்கமுடியாது. அப்படி ஒரு நெரிசல் அப்படி ஒரு கூட்டம். எங்குபார்த்தாலும் ஓர் ஒழுங்கின்மையே ஒழுங்காகக் காணப்படுகிறது. ரூபாய் முந்நூறு வரிசையில் பலமணிநேரம் நின்று ஒரு வரிசையில் மட்டுமே செல்ல இயலும் சந்துகளில் நெருக்கி அடித்துக்கொண்டு மூன்று வரிசையாக சென்று, தேவையில்லாத மாடிப்படிகளில் ஏறமுடியாமல் ஏறி இறங்கமுடியாமல் இறங்கி, எப்போது வேண்டுமானாலும் நிலைகுலைந்து விழலாம் என்ற உணர்வுடன் எதையும் தாங்கும் இதயத்தோடு சாமியைக் காண்பதற்காக முன்னே சென்றால் அடிக்கு ஒரு தொண்டர் அல்லது ஒரு குண்டர் நின்று கொண்டு ஜருகண்டி எனச் சொல்லிக்கொண்டே நம் தோள்மீது கையை வைத்துத் தள்ளுகின்றனர். ஒரு விநாடிக்குச்  சராசரியாக எழுபது பேர் சாமி தர்சனம் செய்கிறார்களாம். ஜருகண்டிப் படை இல்லாவிட்டால் இது சாத்தியப்படுமா?
      எங்களுடைய போதாத காலம்- உள்ளூர் அமைச்சர் ஒருவர் புடை சூழ- இல்லையில்லை- படைசூழ சாமி தர்சனம் செய்ய வந்துவிட்டார். திருவிளையாடல் படத்தில் நான் அசைந்தால் என்னும் பாட்டின் நடுவில் மரம் அசையாமல் நிற்கும் பறவைகள் பறந்தபடி நிற்கும் அப்படி எல்லா வரிசைகளும் நின்ற இடத்தில் நெடுநேரம் நின்றன. இப்படிப்பட்ட ஆசாமிகள் சாமியைக் காண வந்துவிட்டால் பக்தர்களின் கதி அதோகதிதான்.

   ஒரு வழியாக சாமியைக் கும்பிட்டோம். உள்ளே சென்றதைக் காட்டிலும் வெளியில் வருவது பெரும்பாடாய்ப் போய்விட்டது.

     அங்கே சாமியால் முடியாததை ஆசாமிகள் சிலர் செய்து முடிக்கிறார்கள். ஆள் அறி அட்டைகள் இல்லாமல் கோவிலுக்குள் செல்லமுடியாது என்பது இப்போது உள்ள விதிமுறையாகும். ஆனால் கண நேரத்தில் பணம் கைமாறுகிறது. ஆளறி அட்டை இல்லாமலும் ஆட்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பழனி முருகனே வந்தாலும் இரண்டு லட்டுதான்- இது சட்டம். ஆனால் கூடுதல் லட்டு ஒன்றுக்கு ரூபாய் நூறு கொடுத்தால் பெற்றுத்தர ஆள்கள் பலர் இருக்கிறார்கள். கோவில் ஊழியர்களுக்கு ரூபாய் இருபத்தைந்து விலையில் ஒருநாளைக்கு இருபது லட்டு தருகிறார்கள். திருப்பதி கோவிலில் ஒரு படிக்கட்டாய் கிடக்கும் வாய்ப்பைக் கேட்டுப் பாடினார் குலசேகர ஆழ்வார். இன்று அவர் இருந்திருந்தால் ஒரு பெருக்குநர் பணியாவது கொடுங்கள் என்று கேட்டிருப்பார்.

     என்னைக் கேட்டால் இ-பேங்கிங், இ-பிசினஸ்  என்பது போல இ-தர்சன் முறையைக் கொண்டுவந்து விடலாம். தள்ளு முள்ளு இல்லாமல் இ-உண்டியலில் பணத்தைப் போட்டு இல்லத்தில் இருந்தபடி வெங்கடாசலபதியைத் தரிசிக்கலாம். அப்படியே இ-லட்டும் கிடைத்தால் சர்க்கரையாளருக்கும் பிரச்சனையில்லை.

    தூய்மை இந்தியா திட்டத்திலிருந்து திருப்பதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது அங்கு போனவுடனே தெரிந்தது. படங்கள் எடுத்தேன். என்னுடைய பதிவுக்கு உலகம் முழுமையும் வாசகர்கள் இருக்கிறார்கள். சிலர் கூகுள் உதவியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் படிக்கிறார்கள். எனது நாட்டுப் பற்றின்  காரணமாக(?) அதுகுறித்து விலாவாரியாக எழுதவும் இல்லை; படங்களைப் போடவும் இல்லை.

    
திருப்பதி சுற்றுலாவின் ஒரு பகுதியாக காளஹஸ்திக்குச் சென்றோம். மற்றப் பயணியர் பேருந்துக்கு வரும்வரையிலும் வெய்யிலுக்காக ஒரு பெட்டிக் கடையில் ஒதுங்கினோம். அங்கே காணப்பட்ட ஒரு திருக்குறள் எங்கள் கவனத்தை ஈர்த்தது. உடன் வந்த பேராசிரியர் இலட்சுமண சிங் அந்தப் பெட்டிக்கடை அம்மையாரிடம் பேச்சுக் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவ் அம்மையாரின் கணவர் முத்துப்பாண்டியும் வந்து சேர்ந்தார். அவர்கள் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர்கள். இங்கே பிழைக்கவந்து இருபது ஆண்டுகள் ஆகின்றனவாம். இந்து மதத்தில் ஆர்வமுடைய அவர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் பெரும்புத்தகத்தை எடுத்துக்காட்டினார். அந்த அம்மையாரின் தமிழ்ப்பற்று எங்களுக்கு வியப்பூட்டியது. அவரது குழந்தைகள் உள்ளூர்ப் பள்ளியில் தெலுங்கு மொழியைப் படிப்பவர்கள். ஆனால் அவர்களை விடா[ப்பிடியாக வீட்டில் அமரவைத்து தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். குழந்தைகள் எழுதிய  பயிற்சி ஏடுகளை எல்லாம் எங்களிடம் காட்டி மகிழ்ந்தார். நாம் யார்யாருக்கோ தமிழ்க் காவலர் என்று பட்டம் கொடுக்கின்றோம். அது போன்ற பட்டங்களை இந்த அம்மையார் போன்றோரைத் தேடிப்பிடித்துக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

    நம்மூர் வைரக்கற்களை விழுந்து விழுந்து பாராட்டும் நாம் இவர் போன்ற உப்புக்கற்களைப் பாராட்டத் தவறிவிடுகிறோம்.

      தமிழ் மொழிக்குத் தமிழ் நாட்டில் மதிப்பில்லை. அயல் மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் தமிழுக்குக் கிடைக்கும் மதிப்பே தனி. இன்று அயலகத் தமிழர்களால்தாம் தமிழன்னைக்குச் சீரும் சிறப்பும் செல்வாக்கும்  கூடிக்கொண்டு வருகின்றன.

   மதுரை ஒத்தக்கடை முத்துப்பாண்டியும் அவர்தம் குடும்பமும் வாழ்க என வாழ்த்தியபடி இந்த ஜருகண்டி புராணத்தை இனிதே நிறைவு செய்கிறேன்.

     

6 comments:

  1. ஐயா, இன்று கடவுளை வணங்கச் செல்பவர்களைவிட கௌரவத்திற்கு கோவில் செல்பவர்களே அதிகம். உண்மையான இறைத்தன்மை பரந்தோடிப்போய்விட்டது. நானும் நான்கரை ஆண்டுகாலம் பழனிமலைக்கு மாதாந்திர கார்த்திகை தவறாவமல் சென்று 200 ரூபாய் வழிபாட்டு வழியில் சென்றுவருவேன். ஆனால் அது கடந்த சனவரி 1ம் தேதியுடன் முடிந்தது. ஒழுக்கம் என்பது கோவிலுக்கு போனால் வரவேண்டும் என்பது போய் ஒழுங்கீனம் கற்றுக்கொள்ள பணியப்படுகிறோம். 200 ரூபாய் வரிசையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் நின்றும் முருகனை காணமுடியாத கூட்டம். இதனால் இடைத்தரகரிடம் 500 ரூபாய் பேசி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தேன். குழந்தைகள் இருவரும் கால்வலிக்குது அப்பா என்றனர் அதனாலேயே இடைத்தரகரை நாட வேண்டிய சூழல்.அப்போது எனது மூத்த மகள் என்னிடம் கேட்டாள், அப்பா தப்பு பண்ணினா சாமி கண்ண குத்தும்னு சொன்னீங்க, இப்ப நம்மையும் குத்துமாப்பா என்றால். அவ்வளவு தான் நாங்கள் நால்வரும் கோவிலை விட்டு வெளியேறி கோபுரம் முன் நின்று முருகனை கும்பிட்டுவிட்டு வீடு வந்தோம்.எனக்கு கிடைத்த அந்த பாடம் இன்று வரை பழனி செல்லும் எண்ணத்தையே ஏற்படுத்தவில்லை.உங்கள் பதிவு உண்மையை உரைகல் போட்டு வெளியிட்டுள்ளது.

    ReplyDelete
  2. ஐயா....நல்ல விவரணம்...நீங்கள் சொல்லியிருப்பது போல் இ தர்சன்...கிட்டத்தட்ட...ஒரு பிக்ஷனாக..சுஜாதா அவர்கள் திருப்பதி பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறார்....எதிர்காலத்தில் திருப்பதி செல்வத எப்படி இருக்கும் என்று....

    கீதா

    ReplyDelete
  3. தமிழ் அன்னை பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் மிகவும் மதிக்கப்பட்டு மகிழ்வுடன் இருக்கிறாள் என்பதுதான் உண்மை...

    ....எங்கள் இருவரின் கருத்தும்

    ReplyDelete
  4. பயனுள்ள பயணக்கட்டுரை

    ReplyDelete
  5. திருப்பதி சென்றுவந்தால் ஒரு விருப்பம் நிறைவேறும் என பாடலில் கேட்டிருப்பீர்கள். அதன்படி அவர் அழைத்தால் தான் நாம் அவரைக் காண இயலும். எத்தனை எத்தனையோ தடைகளைக் கடந்து பெருமாளைத் தரிசிக்கவேண்டும் என்பதே நெறி. ஆகவே வேங்கடவனைத் தரிசித்தை எண்ணி மனமகிழ்வோம்.

    ReplyDelete
  6. God is within. "kadavul" enbatharku "ullathai kadathal" enru en teacher solli koduthaar. If you remain at home and meditate, everything will be made possible. Sit in meditation and enjoy the happiness and satisfaction as I do now. Prof.Pandiaraj

    ReplyDelete