வீட்டிற்கு அருகிலேயே
பள்ளிப்பேருந்து நிறுத்தம். பேருந்தில் ஏறிய அனு என்ன நினைத்தாளோ ஏறிய வேகத்தில்
இறங்கி விட்டாள்.
பேருந்தில் ஏற்றிவிட வந்த அவளுடைய பாட்டி என்ன சொல்லியும்
கேட்கவில்லை.
“இங்க பாருமா.. இதுக்கு மேல என்னால வண்டியை நிறுத்த முடியாது. இன்னும்
ஒரு நிமிஷம் தாமதம் ஆனாலும் இரயில்வே லெவல் கிராசிங்ல் மாட்டிக்குவோம். அனுக்கிட்ட
நல்ல தனமா பேசி ஆட்டோவுல கொண்டுவந்து விடுங்க” என்று கூறியபடி நடத்துநர் ஆயா
விசில் ஊத பள்ளிப் பேருந்து விரைந்தது.
“பாட்டி... நான் ஸ்கூலுக்குப் போகல”
“பொட்டக் கழுத பாழாப் போறவள.. நீ பள்ளிக்கூடம் போவலின்னா ஒண்ற அப்பன் என்னை
உண்டு இல்லைன்னு பண்ணிடுவான்”.
“ஆமாமா.. நீ ரொம்பதான் எங்க அப்பாவுக்குப்
பயப்படுறே. சொல்லப்போனா நீதான் எங்க அப்பா அம்மாவை பாடா படுத்துற. அவுங்கள
நிம்மதியா இருக்க விட மாட்டியே”
“அட வாயாடிக் கழுதை வா வூட்டுக்கு
ஒனக்குச் சூடு வக்கிறேன்..”
மருந்து, துணிமணி, வெந்நீர் சகிதமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான் முரளி.
“அப்பா.. அப்பா.. நான் ஸ்கூலுக்குப் போகல தங்கச்சிப் பாப்பாவை பாக்க ஆசையாய் இருக்குப்பா..அம்மாவைப்
பாக்கணும்பா”
பள்ளி முதல்வருடன் தொடர்புகொண்டு அனுவுக்கு ஒருநாள் விடுப்புச் சொன்னான்
முரளி.
“அம்மா.. நீயும் வாயேன். அனுவும்
வரட்டும்.”
“ரெண்டாவதும் பொட்ட புள்ளய
பெத்திருக்கா... அவள நான் பாக்க வரல. இப்படி வரிசையா பொட்டப் புள்ளைங்களை
பெத்திட்டு இருந்தா குடும்பம் உருப்பட்ட
மாதிரிதான். அது அதுக்கும் சீரு செனத்தி செஞ்சு, வீடு வாசல வித்துப்போட்டு தெருவுல
நிக்கப் போற.”
பாட்டி பேசியது எதுவும் அனுவுக்கு
விளங்கவில்லை. அம்மாக்காரி பேசியது முரளிக்கு எரிச்சலாக இருந்தது.
“ஏம்மா பெண் குழந்தைன்னா உனக்குக் கேவலமா போச்சா. வாயை மூடிட்டு எங்கூட வா. அவ
முன்னால இப்படிப் பேசாத..அப்படியே இடிஞ்சிப்போயிடுவா”
“டேய் முரளி ஒண்ணு சொல்றேன்
தெரிஞ்சுக்க.. பொட்டக்கோழி கூவி பொழுது விடியாது.
சாண் பிள்ளையானாலும் ஒரு ஆண்பிள்ளை
வேணும்டா..”
இது திருந்தா ஜென்மம் என்று
மனதுக்குள் திட்டியபடி, முரளி அனுவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்,
“ஹாய் மாது எப்படி இருக்க? நம்ம
குட்டித் தங்கம் எப்படி இருக்கா?”
அன்போடு விசாரித்தான் முரளி.
அனு தன் தங்கச்சிப் பாப்பாவின்
பட்டு விரல்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள். பிறந்து இரண்டே நாளான அந்தக்
குழந்தையிடம் இரண்டு மணி நேரம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தாள்!
“ஏங்க.. அத்தை பேத்தியைப் பாக்க
வரமாட்டாங்களா?” – ஏக்கத்துடன் கேட்டாள்
மாது.
“அம்மாவுக்குக் கொஞ்சம் ஒடம்பு
சரியில்ல..ரெண்டொரு நாள்ல வருவாங்க” என்று சொல்லி மழுப்பினான். தன்னுடைய அம்மா
அங்கு வராமல் இருப்பது நல்லது என அவன் நினைத்தான்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை
பிறந்ததால் மாது வீடு திரும்ப இரண்டு வாரம் ஆயிற்று.
மாது அன்று பூத்த செந்தாமரை போன்ற
பச்சைக் குழந்தையுடன் காரில் வந்து இறங்கினாள். முரளியின் அம்மா ஆரத்தி எடுக்க
வரவில்லை. முரளி உள்ளே ஓடிச்சென்று ஆரத்தித் தட்டை எடுத்து வந்தான், அனுவும்
அவனும் சேர்ந்து ஆரத்தி எடுத்து
வரவேற்றார்கள்.
“முரளி இங்க வாடா. நான் அப்பவே
சொன்னேன். அவ ஒடம்புல ஏதோ கோளாறு இருக்கு. அதானாலதான் ஆம்பிளைப் பிள்ளை தரிக்கில.
நீ கேட்டியா?”
அத்தை பேசிய இந்த வார்த்தைகள்
குத்தீட்டியாக குத்தி அவளை வதைத்தன. அவனையும்தான்.
ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணுக்கு எதிரியானதையும்,
ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை இழிவு படுத்துவதையும் அவனால் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை.
“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாரதி பாடியது தன் அம்மாவுக்குப் பொருந்துவதை எண்ணி
வியந்தான்.
ஒருநாள் அலுவலகம் முடிந்து வீடு
திரும்பியபோது அம்மா சொன்ன செய்தி அவனுடைய காதில் பேரிடியாய் விழுந்தது.
“ டேய் முரளி, நம்ம குடும்பத்துக்கு
ஒரு ஆண் வாரிசு வேணும். அதுக்கு நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேணும்”
“ஏம்மா ஒனக்கு ஏதாவது அறிவு
இருக்குதாம்மா? அவ காதுல இது விழுந்தா எப்படிப் பதறிப்போவா தெரியுமா?”
“ஒண்ட்ற பொஞ்சாதிக்கு ஒரு ஆம்பிளைப்
பிள்ளைய பெத்துக்குடுக்க துப்பு இல்ல.”
“வாயை மூடும்மா. அவகிட்ட ஒரு
கோளாறும் இல்ல. எல்லா கோளாறும் எங்கிட்டதான் இருக்கு.”
“முரளி என்னடா சொல்ற? ஒங்கிட்ட
என்னடா ராசா கோளாறு?”
“நான் சொல்றேம்மா.. நீங்க பேசுனது எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான்
இருந்தேன்” என்று கூறியபடி உள்ளே வந்தார் முரளியின் வகுப்புத் தோழர் டாக்டர்
அறிவுடை நம்பி. பிரபல மகப்பேறு மருத்துவர்.
“அம்மா நம்ம ரிக் வேதம் என்ன
சொல்லுது தெரியுமா? மனைவி என்பவள் விளைநிலம் மாதிரி. கணவன் என்பவன் உழவன்
மாதிரி. அவன் என்ன விதையை விதைக்கிறானோ அதுதான் அந்த நிலத்தில முளைத்து வளரும்”
முரளியின் அம்மா புரியாமல் விழித்தாள்.
டாக்டர் அறிவுடை நம்பி தொடர்ந்தார்:
“கருவில் உருவாகிற குழந்தை ஆண் அல்லது பெண் என்பதை குரோமோசோம்கள் முடிவு
செய்யும். மனைவியிடம் இருப்பது ஒரு ஜோடி எக்ஸ் குரோமோசோம்கள். கணவனிடம் இருப்பது
ஒரு எக்ஸ் குரோமோசோம் மற்றும் ஒரு வொய் குரோமோசோம்.
அம்மாவின் எக்ஸ் குரோமோசோமோட அப்பாவின் வொய் குரோமோசோம் சேர்ந்தா ஆண் குழந்தை
உருவாகும்; அப்பாவோட எக்ஸ் குரோமோசோம் சேர்ந்தா பெண் குழந்தை உருவாகும்.”
“ஆக ஆண் குழந்தை பொறக்கிறதுக்கும்,
பெண் குழந்தை பொறக்கிறதுக்கும் கணவன்தான்
காரணம். அதாவது அவனது செல்லில் உள்ள குரோமோசோம் வகைதான் காரணம். இந்த அறிவியல்
உண்மை தெரியாம பெண்களை நாம் குற்றம் சொல்லுகிறோம். அம்மா.. ஆண் பெண் வித்தியாசம்
பார்த்தது அந்தக் காலம். பொறக்கிற குழந்தையை ஆண் பெண் வித்தியாசம் பாக்காம கண்ணும்
கருத்துமா வளர்க்கிறது இந்தக் காலம்.”
“அம்மா மாது தாயி, என்னை
மன்னிச்சிடம்மா. எனக்கு இப்பதான் உண்மை புரியுது.’
“என்னங்க அத்தை இப்படி பெரிய
வார்த்தை எல்லாம் சொல்றீங்க’ என்று சொன்னபடி ஓடிச்சென்று தன் அத்தையின் வாயைப்
பொத்தினாள் மாது.
தொட்டிலில் கைகால்களை ஆட்டிக்கொண்டு
படுத்திருந்த பேத்தியை அள்ளி எடுத்து ஆரத் தழுவினாள் முரளியின் அம்மா.
“நம்பி, எப்படியோ என் அம்மாவின்
ஞானக் கண்ணைத் திறந்து விட்டாய். நன்றி நன்றி” என்று கூறி கைகுலுக்கி மகிழ்ந்தான்
முரளி.
%%%%%%%%%%%%%%%%%%%%%
புரிந்து திருந்தியது சரி...
ReplyDeleteஅருமை ஐயா!
ReplyDeleteஇன்றைய நிலையில் பெண் கிடைக்காமல் பல ஆண் பிள்ளைகளின் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்!��
நல்ல கதை...! பிறக்கப் போகும் மகவின் பாலிணத்தை முடிவு செய்வது தந்தையின் Chromosome தான் என்ற அடிப்படை அறிவியல் ஞானம் சமூகத்திற்கு எடுத்துரைக்கப்படவேண்டியது. பாராட்டுக்கள் அண்ணா...!
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteஇந்த அறிவியல் உண்மைதெரியாமல் எத்துனை எத்துனை குடும்பங்கள்
ReplyDeleteநிம்மதி இழந்து தவித்திருக்கும், எத்துனை பெண்களின் வாழ்வு பறியோயிருக்கும்
இதுபோன்ற விழிப்புணர்வுக் கதைகள் பெருக வேண்டும் ஐயா
நன்றி
விஞ்ஞானத்தில் ஆரம்பித்து ஞானத்தில் முடியும் கதை. அருமை.
ReplyDeleteஐயா, உங்களுக்கு ஞானக்கண் உண்டோ. இந்தக்கதை என்னை 2010ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதிக்கு அழைத்துச்சென்றது. ஏனெனில் அன்றுதான் எனது இளைய மகள் பிறந்தாள். என் அப்பா அம்மா இருவருமே ஆசிரியர்கள். அப்படி இருந்தும் என்மனைவி இராண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பெற்று விட்டாள் என்று குழந்தையை பார்த்தவுடன் சென்றுவிட்டனர்.என்மனைவி தன்தாயை இழந்தவள். என்மனைவியின் மூத்த சகோதரி என்மனைவிக்கு தாயாக இருந்து கவனித்தார்.இன்னும் சொல்லப்போனால் என் மனைவியின் கர்பகாலத்தில் ஸ்கேன் செய்த மருத்துவ பெண்மணி,இது பெண் கலைத்துவிடலாமா என்றார்.இந்த சமூகத்தில் இன்னும் ஆண் குழந்தைப் பைத்தியம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆயிரம் பாரதிகளும், கவிமணிகளும், ஒளவையார்களும் வந்தாலும் இது மாறாது ஐயா
ReplyDeleteSuperb thought sir.it's really wonderful story to this world sir..continue to write like this story more and more sir..congrats sir
ReplyDelete