Saturday, 27 May 2017

அன்பு மகள் அருணாவுக்கு,

  நலம்தானே? இங்கே அம்மாவும் நானும் நலமாக உள்ளோம். அங்கே அமெரிக்க தட்ப வெப்ப நிலை உனக்குச் சாதகமாக உள்ளதா? உனக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துகள்.

     இன்று படுக்கையை விட்டு எழும்போதே என் அம்மாவின் அன்பு முகம் மனத்தில் தோன்றி நிறைந்தது. நான்கு பத்தாண்டுகள் ஓடி மறைந்து விட்டன. ஆம் 1977ஆம் ஆண்டு இதே நாளில்தான் உன் தேசம்மாள் பாட்டி இயற்கை எய்தினார். அப்போது எனது வயது இருபத்தைந்து. எம்.ஏ முதலாண்டு படித்துக்கொண்டிருந்த காலக்கட்டம்.

    உன் பாட்டியை சாதாரணமாக எண்ணிவிடாதே. அவர் ஒரு தனிப்பிறவி. ஒரு கரும யோகி. ஒரு ஞானி. அமானுஷ்ய சக்தியைப்(Super Natural Power) பெற்றிருந்தவர். இன்றைக்கு உளவியல் கூறும் பல கோட்பாடுகள் அவருடைய வாழ்வில் செயல் வடிவம் பெற்றிருந்தன. ஆனால் அது குறித்து ஏதும் அவருக்குத் தெரியாது. நான் சொல்லப்போகும் செய்திகளை நீ நம்பமாட்டாய். அவற்றுக்கெல்லாம் நானும் பெரியப்பாவும்தான் சாட்சிகளாக உள்ளோம்.

   உளவியலில் தொலைவில் உணர்தல்(Telepathy) என்பதும் தொலைவில் இயக்குதல்(Tele kinetics) என்பதும் காலம் காலமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளாக உள்ளன.

   உன் பெரியப்பா கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாலை கல்லூரி முடிந்து ஒரு பேருந்தைப் பிடித்து சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வருவார். உன் பாட்டி லாந்தர் விளக்குடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பார். “பெத்தவாண்டா ராரா” என்று கூறி வரவேற்று அழைத்துச் செல்வாராம். அவருக்கு முனை முறியாத  நெல்லுச் சோறும் சுவையான கோழிக்கறி குழம்பும் தயாராக இருக்கும். தான் வருவது எப்படி அம்மாவுக்குத் தெரிந்தது என வியந்து நிற்பாராம் பெரியப்பா.

   கூவத்தூரில் நாங்கள் வாழ்ந்த பூர்விக இல்லம் வரகு வைக்கோல் கூரையால் ஆனது. உப்பு, அரிசி, புளிப் பானைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துச் சுவர் ஓரம் சாய்த்து அடுக்கப்பட்டிருக்கும். மூங்கில் கழிகளால் ஆன ஒரு பரண் இருக்கும். கடைக்குட்டியான நான்தான் அப்பரண் மீது ஏறி உன் பாட்டி கேட்கும் பொருளை எடுத்துக் கொடுப்பேன். வாரச் சந்தையில் வாங்கும் பொருள்களைப் பரணில் வைப்பதும் எடுப்பதும் என் வேலை. எல்லாம் சரியாக இருக்கும். வாங்கி வந்த வாழைப்பழங்கள் மட்டும் கணக்கில் உதைக்கும். கணக்கில் வராத பழங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் என் வயிற்றுக்குள் போயிருக்கும்! சரி  விஷயத்திற்கு வருகிறேன்.

   தொலைவில் இயக்குதல்(Tele kinetics) என்னும் கோட்பாட்டின்படி ஒருவர் செடியிலுள்ள மலர்களை தூரத்தில் நின்றபடி உதிரச் செய்ய முடியும். சீறிவரும் காளையை பார்வையால் தடுத்து நிறுத்த முடியும். விபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்ற முடியும்.

    ஒரு புது பித்தளை சொம்பு பரண்மீது ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அன்று இரவு காற்றும் மழையுமாக இருந்தது. அது கீழே விழுந்து நசுங்கிவிடுமோ என எண்ணியபடியே இருந்துள்ளார். என்னை அழைத்து அதை எடுத்துக் கீழே வைக்கச் செய்திருக்கலாம். நான்தான் அன்றிலிருந்து இன்றுவரை தூக்கத்தில் கும்பகர்ணன் ஆயிற்றே. காலையில் பார்த்தால் அது நசுங்கியிருந்தது. இது உன் பெரியாப்பா என்னிடம் அண்மையில் பகிர்ந்துகொண்ட செய்தியாகும்.

  நான் தப்பிப் பிழைத்தக் கதையைக் கேள். வீட்டில் இருந்த மாட்டு வண்டியைக் கூலிக்கு ஓட்டுவதுண்டு. பண்ணையத்து ஆள் நெல் அரவை மில்லில் அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்று ஜெயங்கொண்டம் என்னும் ஊரில் இறக்கிவிட்டு  நாற்பதோ ஐம்பதோ வண்டிச்சத்தமாக வாங்கி வருவார். இரவு நேரத்தில்தான் இப்பணி நடக்கும். ஒருநாள் பண்ணையத்து ஆளுக்கு உடல்நலம் இல்லாததால் நான் வண்டியை ஓட்டிச் சென்றேன். இரவு பதினோரு மணிக்கு மேல் ஜெய்ங்கொண்டத்திலிருந்து வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன். இருட்டு என்றால் அப்படி ஓர் இருட்டு. இருட்டை எடுத்துக் குழந்தைக்குத் திருஷ்டி பொட்டாக வைக்கலாம்! வண்டி ஓட்டியவாறு தூங்கிவிட்டேன். ஒரு கட்டத்தில் காளைகள் தம் கழுத்து மணிகளை ஆட்டும் சத்தம் கேட்டு விழித்து எழுந்தேன். வண்டி நம் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருக்கிறது! என்னை எதிர்பார்த்து உன் பாட்டியும் வெளியில் புளிச்ச நார்க் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

  தொலைவில் உணர்தல்(Telepathy) கோட்பாட்டுக்குச் சான்றாக ஒரு நிகழ்வினை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். கல்லூரியில் படித்த உன் பெருமாள் பெரியப்பா விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். விவசாய வேலையாக கொல்லைக்குச் சென்றிருந்தார். அப்போது மாலை மணி ஆறு இருக்கும். வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த என்னை உன் பாட்டி அவசரமாக அழைத்து, ”சீக்கிரம் கம்பங்கொல்லைக்கு ஓடு. அண்ணனைத் தேடிப்பாரு” என்றார். ஓடிப் போய்ப் பார்த்தால் கம்பங்கொல்லை கிணற்றில் தவறி விழுந்து கத்திக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தோர் துணையோடு அவரைக் காப்பாற்றினோம். உன் பாட்டியின் தொலைவில் உணர்தல் என்னும் உள்ளுணர்வு காரணமாக உன் பெரியப்பா அன்று பிழைத்தார்.

  வானிலை நிலைய இயக்குநர்  ரமணன் எங்கள் அம்மாவின் அருகில் நிற்க முடியாது. உன் பாட்டி மழை எப்போது வரும் என மிகத் துல்லியமாகக் கூறுவார். காலையில் நான் பள்ளிக்குச்  செல்லும்போது குடை கொடுத்தனுப்புவார். மாலையில் வரும்போது நனைந்தபடி வருவேன். குடை இலட்சணம் அப்படி!

    தேசம்மாள் என்னும் தெய்வத்திடம் ஏதோ ஒரு சக்தி இருந்தது என்பது மட்டும் உண்மை.

   நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உன் விருப்பம்.

இப்படிக்கு,

உன்னைப் பெற்றதில் பெருமைகொள்ளும் அப்பா.

9 comments:

  1. வியக்க வைக்கும் சக்தி...

    ReplyDelete
  2. வியக்க வைக்கிறது. டெலிபதி, டெலி கைநெட்டிக்ஸ்...அறிந்திருந்தாலும்.....

    ReplyDelete
  3. அந்த கால பாட்டிகளுக்கு உண்டு. என் பாட்டியையும் சேர்த்து.. என்னைப் போன்ற தாத்தாக்களுக்கு இப்பொது இருக்குமா என்பது சந்தேகம். ஸ்ரீநாத்.srrinath@yaho.com.

    ReplyDelete
  4. இவ்வாறான சக்தி சிலரிடம்தான் இருக்கும். கேள்விப்பட்டுள்ளேன். மகளுக்கான உங்கள் கடிதம் மூலமாக நாங்களும் பல செய்திகளை அறிந்தோம்.

    ReplyDelete
  5. தொலை உணர்வு பற்றிய தங்களது பதிவு அருமையிலும் அருமை.
    ஆமாம்.... கூவத்தூரில் குடியிருந்ததாய்க் குறிப்பிட்டிருந்தீர்கள்..... எந்த கூவத்தூர் அண்ணா...?

    ReplyDelete
  6. I always knew she is a very special person!!!

    ReplyDelete
  7. ஐயா,இதில் பாட்டி (தங்கள் தாய்) படித்தாரா இல்லையா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை. அவர் இந்த ஏட்டுக்கல்வியை கற்றிருந்தால் அந்த நிலை எட்டி இருக்க மாட்டார். அவர்கள் இயற்கையை மதித்து வாழ்ந்தால் அது நிகழ்ந்தது.ஆனால் நாம் கல்வியில் நாம் சாதித்து விட்டோம் என்று நினைத்துக்கொண்டு விக்கலுக்கு வைத்தியம் பார்க்கிறோம். பாட்டியை பற்றி நீங்கள் சொன்ன தகவல் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதைப்பற்றி பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் பேசுவதில்லை. அதற்கு கல்வி மற்றும் தனிக்குடும்பம் என்ற இரண்டும். விவசாயம் செய்தவர்க்கு எப்போதும் இயற்கையோடு ஒரு புரிதல் உண்டு. இங்கு இயற்கை என்பதை கடவுளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.இது போன்ற தகவல்களை அதிகம் பதிவேற்றேம் செய்ய வேண்டும் ஐயா.உங்கள் அன்னையின் அருளாசி எனக்கும் கிடைத்தது.

    ReplyDelete
  8. படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது ஐயா

    ReplyDelete