மொசைக் கன்னடா பற்றிய
விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அங்கு சென்று நேரில் பார்க்கும் நாள் எப்போது
வாய்க்குமோ என எண்ணி ஏங்கியது உண்டு. அந்த இடம் நாங்கள் குடியிருக்கும் ஆன்டாரியோ
மாநிலத்தில் இல்லை. அது அருகிலுள்ள க்யூபெக் மாநிலத்தில் கெட்டினியூ என்ற இடத்தில்
உள்ளது. அது நகரப் பேருந்தில் செல்லும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது என் மகள்
சொல்லிதான் அறிந்தேன்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்குப்பின்
எனக்கு இல்லத்தில் இருப்புக் கொள்ளவில்லை. கேமிராவை தோளில் மாட்டிக்கொண்டு
புறப்பட்டுவிட்டேன் தனியாக.
மேலே குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களையும் பிரிப்பது ஒட்டாவா ஆறு;
இணைப்பது அதன் மீது அமைந்துள்ள அழகான
அலெக்சாண்ட்ரா இரும்புப் பாலமாகும்.
மொசைக் கன்னடா கண்ணில் பட்டுவிட்டது.
மொசைக் என்றால் பன்முகம் என்று பொருள். பன்முகக் கலாச்சாரம் கொண்ட கனடா
என்பதைத்தான் இத் தொடரால் குறிப்பிடுகிறார்கள். நாடு விடுதலைப் பெற்று 150
ஆண்டுகள் ஆனதையொட்டி இதைப் படைத்திருக்கிறார்கள். ஆவல் பொங்க உள்ளே நுழைகிறேன்
நீண்ட வரிசையில் நின்று.
நம்மூரில் இருப்பதுபோல் நுழைவுக்
கட்டணம், கேமிராவுக்குத் தனிக்கட்டணம் என்று எதுவுமில்லை. அதனால் என் மகளுக்குக்
கூடுதல் செலவும் இல்லை!
உள்ளே சென்றதும் என்னை வரவேற்றது ஒரு
பசுங்குடில். ஆம் அக் குடிலின் சுவர்கள், கூரை அனைத்தும் வண்ண வண்ண செடிகளால்
ஆனவை. செடிகளை நெருக்கமாக நட்டு, வளர்ந்ததும் அழகாகக் கத்தரித்து விடுகிறார்கள்.
இதே முறையில் ஓர் இரயில் வண்டியை
உருவாக்கியுள்ளார்கள். படகு, கப்பலை உருவாக்கியுள்ளனர். பியானோ என்னும்
இசைக்கருவியை வடிவமைத்துள்ளார்கள். விளையாட்டு வீர்ர்களைப் படைத்துள்ளனர்.
குழந்தைளின் கற்பனைக் கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு உரு கொடுத்துள்ளார்கள். அப்பப்பா!
நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும்.
அதோ இரண்டு அழகான கரங்கள்; அடடா எவ்வளவு அழகான விரல்கள்! விரல் நுனியில் மிக நுட்பமாக நகத்தையும் அல்லவா காட்டியிருக்கிறார்கள்! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது உண்மை என்பதை இவர்கள் புல்லால் உருவாக்கியுள்ள விலங்குகளைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
இவர்கள் நட்டுவளர்த்துள்ள
பூச்செடிகள் கூட சம உயரத்தில் காணப்படுகின்றன. இது எப்படி சாத்தியமாயிற்று என்பது
எனக்குப் புரியவில்லை.
ஒன்று புரிகிறது தெளிவாக.
இவர்கள் எதையும் சாதிக்கவல்லவர்கள்.
காரணம் இவர்கள் உழைப்பை நேசிக்கிறார்கள். வீதி பெருக்குபவராய் இருந்தாலும் சரி
விமானம் ஓட்டுபவராய் இருந்தாலும் சரி ஊதியத்திற்காக வேலை செய்கிறோம் என்று
இல்லாமல் நாட்டிற்காக வேலை செய்கிறோம் என்ற பெருமித உணர்வுடன் வேலை செய்கிறார்கள்.
உழைப்பை நேசித்தவர்கள் உருவாக்கியது
என்பதால்தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய
கோவிலும், அவனுடைய மகன் இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் கோவிலும்
அழகுமயமாக நிமிர்ந்து நிற்கின்றன.
அங்கே வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்
கருத்துரை ஏட்டில் உழைப்பை நேசித்தவர்களின் கலைத்திறனைப் பாராட்டி எழுதிவிட்டுப் ‘பசுமை’
யான நினைவுகளுடன் அலெக்சாண்ட்ரா பாலத்தில் நடக்கிறேன்.
என் கால்களுக்கு அடியில் ஓடுகிறது
ஒட்டாவா ஆறு. ஆம் உலகிலேயே தூய்மையான தண்ணீரை உடைய வற்றாத ஜீவநதி என்னும்
பெருமையோடு!
நம் நாட்டு நதிகளின் நிலையை எண்ணி ஒரு நீண்ட
பெருமூச்சு விட்டேன். உடன்வந்த கனடாக்காரர் என்னைப்பார்த்து, “எனி ப்ராப்ளம்?”
என்றார். “யெஸ் தேரீஸ் ஏ பர்னிங் ப்ராப்ளம் இன் மை நேஷன்” என்று சொல்லத்தான்
நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.
“நோ ப்ராப்ளம் தேங்க்யூ” என்று சொல்லிவிட்டு
நடையைக் கட்டினேன்.
...........................................
முனைவர்
அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
Pictures are superb;and also the CAMERA HANDLING EXCELLENT.LONG LIVE YOUR AMBITIONS AND EXPLORATION.
ReplyDeleteஅப்பப்பா..கண்ணுக்கு விருந்து. உங்களால் நாங்கள் காணும் வாய்ப்பினைப் பெற்றோம். நன்றி.
ReplyDeleteஐயா! படங்கள் கண்ணைக் கட்டுதே!! கண்ணையும் மனதையும் கட்டிப் போட்டுவிட்டன! என்ன ஒரு கலைநயம்! மனதைக் கொள்ளை கொண்டுவிட்டன. அவர்கள் எதையுமே நேசமுடன் செய்வதுதான் ஐயா ரசித்து ரசித்துச் செய்வது...கடனே என்று செய்யாமல்...அதுதான் அவர்களை இத்தனை சாதிக்க வைக்கிறது. அருமையான பதிவு.. பசுமையான பதிவு! உங்களின் இறுதி வரி ஆதங்கமும் எங்கள் மனதிலும் எழுந்தது!
ReplyDeleteகீதா: ஐயா இதில் உள்ளது போல் இத்தனை துல்லியமாக இல்லை என்றாலும் நம் ஊரில் அரக்கு பள்ளத்தாக்இல் உள்ள பூங்காவில் வண்ணத்துப் பூச்சி, மான்கள் போன்ற வடிவில் செடிகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் அடர்த்தியாக எல்லாம் இல்லை. ஸ்கெச்சஸ் போல... ஐயா...ஆனால் இத்தனை பெரிய உருவங்கள் எல்லாம் இல்லை...என்றாலும் அதுவே நல்ல முயற்சி என்று தோன்றியது ஐயா. அழகான படங்கள் பதிவும் அருமை
You have feasted my eyes. Thank you very much, sir. I feel I were in Canada.
ReplyDeleteSuper, நான் இன்னும் பார்க்கவில்லை ,, கூடிய விரைவில் ..
ReplyDeleteகல்லிலே கலை வண்ணம் கண்டான் இங்கே!
ReplyDeleteபுல்லிலே புதிய உலகம் படைத்தான்
அங்கே!
அதை கேமராவில் சுட்டு வந்தது
விந்தை!
நன்றி ஐயா!
Very Beautiful!
ReplyDeleteAmazing Sir
I visit Kanada without visa, passport and also without expense
ReplyDeleteThank you Aiya.
தூய நீராய் ஓடுகின்ற ஒட்டாவா? நமக்கு அது ஒட்டாதா?என்றுதான் எண்ணுகின்றேன். நம் இதயத்தில் கண்ணீர் சுரக்கின்றது. சென்னையில் வாழும் என் கண்ணின்முன்னால் அந்த பாவப்பட்ட கூவம் தெரிகிறது!
ReplyDeleteநீதிபதி மூ.புகழேந்தி
Whatsapp feedback from Poet Punniamurthy
ReplyDeleteமொசைக் கனடாவை
முகத்தருகில்
கொண்டுவந்தீர்
கல்லில் மட்டுமே
கலைவண்ணம்
படைக்கமுடியும்
என்எண்ணத்தை
நீங்கள் அனுப்பிய
புல்வண்ண
ஒவியங்கள்
புறந்தள்ளிவிட்டன
நன்றி கவிஞரே
நன்றி கலைஞரே
நன்றி அறிஞரே
நன்றியுடன்
மானம்பாடி புண்ணியமூர்த்தி .