Sunday, 16 August 2020

என்னைப் புரட்டி எடுத்த புத்தகம்

   பதினான்கு நாள் வனவாசம் இன்னும் ஒருமணி நேரத்தில் முடிவுக்கு வரும்.   இந்தப் பதினான்கு நாள் வனவாசத்தில் நான் செய்த உருப்படியான செயல்கள் ஏதேனும் உண்டா என்று தட்டிக் கொட்டிப் பார்க்கிறேன். மனைவியிடம் கேட்டேன். அவள் சொல்கிறாள்: பாத்திரங்கள் விளக்கியது; வீட்டைக் கூட்டிப் பெருக்கியது!” அவள் பார்வையில் அவை உருப்படியான செயல்கள். ஆனால் என் பார்வையில்.....

  

       கலாம் அவர்கள் எழுதிய ஓர் ஆங்கில நூலை வாசித்ததை - இல்லை இல்லை- சுவாசித்ததை ஓர் உருப்படியான செயல் என்று சொல்வேன். இந்த வனவாச இல்லம் என் மகளின் தோழி வசிக்கும் இடமாகும். அவள் வேறொரு தோழியுடன் தங்கிக்கொண்டு நாங்கள் ஏகபோக உரிமையுடன் வசிக்க வழிசெய்தாள். அவள் வாழ்க! அவள் சுற்றம் வாழ்க. நான் படித்த அந்த நூல் அவளது உபயம் என்று சொல்லத்தான் இத்தனைச் சுற்றி வளைப்பு.

  “ஒரு புத்தகக் கடைக்குச் சென்று அங்குள்ள புத்தகங்களைப் புரட்டிப்போட்டு ஒரு புத்தகம் வாங்குவதைக் காட்டிலும் உங்களைப் புரட்டிப் போடும் ஒரு புத்தகத்தை வாங்கிப் படிப்பது சிறந்தது’ என்று சுகி சிவம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

   என்னைப் புரட்டிப் போட்ட அந்த நூல் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் எழுதிய WINGS OF FIRE என்னும் ஆங்கில நூலாகும். நூலுக்குள் செல்லுமுன் நூலைப் பற்றிப் பார்க்கலாம்.

  ஹைதராபாத்தில் உள்ள யுனிவர்சிட்டீஸ் பிரஸ் 184 பக்கங்கள் கொண்ட இந்த நூலை 1999ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளியிட்டது. நான் படித்தது 2015ஆம் ஆண்டு நாற்பத்து ஏழாம் பதிப்பாக வெளியான நூல்; ருபாய் 325 விலை குறிக்கப் பெற்றது.

    நூலினுள் செல்லுமுன் ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இன்று கலாம் குறித்துப் பேசுகிற எவரும்(என்னைத் தவிர) - அலுவலக உதவியாளர் முதல் அமைச்சர் வரை- கலாம் அவர்கள் 2020இல் நம் நாட்டை வல்லரசாக்க கனவு கண்டார் என்றுதான் பேசுகின்றனர். இப்படிப் பேசுவது முற்றிலும் தவறாகும். வளர்ந்த நாடாக அமைய வேண்டும் என்றுதான் கனவு கண்டார்; பேசினார்; எழுதினார். தவறாகப் புரிந்தகொண்ட யாரோ ஒருவர் முதல் முதலில் சொன்னதை நாம் அப்படியே வழிமொழிகிறோம். என்ன எதுவென்று பார்க்காமலே வரும் குறுஞ்செய்திகளை அடுத்தவருக்கு அனுப்புவது நமக்குக் கைவந்த கலையாயிற்றே!

   கலாம் அவர்கள் இந்த நூலில் முத்தாய்ப்பாக நூலின் நிறைவு வரியாக இப்படி பதிவு செய்கிறார்: Self reliance Mission and Technology Vision 2020 will make our country strong and prosperous and take our rightful place among the ranks of the developed nations.

   இனி நூலின் பேசுபொருள் பற்றிப் பேசுவோம்.

  கலாம் அவர்கள் தன் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றி அவ்வப்போது சொல்ல, அவற்றைக் கவனமுடன் செவிமடுத்து, குறிப்பெடுத்து, அசை போட்டு, பின்னர் அழகான எளிய ஆங்கில நடையில் நூலாக ஆக்கியுள்ளார் அருண் திவாரி.  Orientation, creation, propitiation, contemplation என நான்கு அத்தியாயங்களில் நூலை எழுதி முடித்து, கலாம் குறித்துத் தான் சொல்ல வந்த செய்திகளை ஒரு முத்து மாலையாகப் படைத்தளிக்கிறார். இவ்வளவு தெளிவாக எப்படி ஒருவர் தன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்ல முடியும்  என்னும் கேள்விக்குப் பாரதியாரின் பாடல் வரிதான் விடையாக அமைகிறது: “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்”

    இந்த நூலில் கலாம் அவர்கள் தன்னை ஓர் ஏவுகணை விஞ்ஞானியாக மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார். அதற்கு அடித்தளமாய் அமைந்த குடும்பத்தினரின் பங்களிப்பை நினைவு கூர்ந்து பதிவு செய்கிறார். மேலும், தம் திறமையை இனங்கண்டு ஊக்கமளித்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் பங்களிப்பையும் கச்சிதமாகச் சொல்லி அவர்தம் பெயர்களை நன்றியுடன் பதிவு செய்கிறார். ஆசிரியர்களின் பெயர்களை நினைவில் வைத்து நன்றி பாராட்டும் இந்த நல்ல பண்பை நம் குழந்தைகளிடத்தில் உருவாக்க வேண்டும்.

    அடுத்து தான் சந்தித்த தோல்விகளிலிருந்து பாடம் கற்று, அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாய் மாற்றியது எப்படி என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். இராக்கெட்டைச் செலுத்துதல் என்பது ஒரு குழுவாகச் செயல்பட்டு இலக்கை எட்டும் பணியாகும். தோல்வி அடைந்தபோது குழுவினரைக் குற்றம் சொல்லாமல் தானே பொறுப்பை ஏற்றுக்கொண்டு, வெற்றி கண்டபோது எல்லாப் புகழும் குழுவினருக்கே என்றார். இந்தப் பண்பை நம் நாட்டு இளைஞர்களும் இளம்பெண்களும் கலாமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

   நம் நாட்டின் இளைஞர்கள் பற்றி கலாம் கூறும் ஒரு கருத்து மிக முக்கியமானதாகும். இப்படி ஒரு நூல் எழுத வேண்டிய நோக்கம் குறித்து 166ஆம் பக்கத்தில் இப்படிச் சொல்கிறார்: “நம் இளைஞர்கள் தம் இலக்கில் தெளிவில்லாமல் இருக்கின்றனர்; எத் திசையில் பயணிப்பது என்னும் தெளிவும் இல்லை. பெரிதாக வளமானப் பின்புலம் இல்லாமலும் ஒருவர் சாதிக்கலாம் என்பதை இவர்களுக்குச் சொல்வதற்காகவே  என் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதுகிறேன்”

    இவர்களை நோக்கி மேலும் சொல்கிறார்: “கூடுதல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுங்கள்; உருப்படியாக ஒன்றைச் சாதிக்க முயலுங்கள். சிறு வெற்றியில் கிடைக்கும் செயற்கையான மகிழ்ச்சியில் மயங்கிக் கிடந்து விடாதீர்.”(ப.162)

 ‘உங்களை நீங்களே தோல்வியடையச் செய்யும் செயல்களை ஒருபோதும் செய்யாதீர். பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டும் உங்கள் பணியைச் செய்யாதீர். செய்யும் பணியில் முழுமையாக ஒன்றி உறுதிப் பாட்டுடன் செய்யுங்கள்”.(ப.175)

   நூல் பெயருக்கான குறிப்பையும் ஓரிடத்தில் கண்டேன். “ஒவ்வொரு இந்திய இளைஞனின் இதயத்திலும் சாதிக்கும் வெறியானது அக்னியாக இருக்கட்டும்; அந்த அக்னிக்குச் சிறகுகள் முளைக்கட்டும்; அவர்களால் நம் திருநாட்டின் புகழொளி வானமெங்கும் பரவட்டும்”(ப்.168)

      கலாம் அவர்கள் இந்த இளைஞர் சமுதாயத்திற்காக ஒரே வரியில் ஒரு மகத்தான செய்தியை இந்த நூலில் ஏதேனும் ஓரிடத்தில் சொல்லியிருப்பார் என்ற எதிர்பார்ப்போடு நூலை ஆழ்ந்து படித்தேன். என் முயற்சி வீணாகவில்லை. கண்டேன் அந்த வைர வரியை. அது இதுதான்:      Suffering is the essence of success.

  தன் பணிகளில் இறைவனும் ஒரு பங்குதாரர் என உறுதியாக நம்பும் கலாம் அவர்கள் மிக உருக்கமான ஒரு வரியுடன் நூலை முடிக்கிறார்: இறைவனின் பேரன்புதான்  நிரந்தரச் சொத்து. என் கொள்ளுத் தாத்தா அவுல், என் தாத்தா பக்கிர், என் தந்தையார் ஜெயினுலாப்தீன்ஆகியோரின் இரத்த உறவு என்பது என்னுடன் முடிந்து விட்டாலும் இறைவனின் கருணைக்கு மட்டும் முடிவே இல்லை; அது நிரந்தரமானது.

    பல்வேறு திடீர் திருப்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் இவற்றுடன் கூடிய ஒரு நாவலைப் போல நூல் அமைந்துள்ளதால் படிப்போரைப் புரட்டிப் போடுகிறது என்பதும் மட்டும் உண்மை.

    இந்நூலின் ஆங்கில நடை அழகில் நான் சொக்கிப் போனேன். அம்மா செய்யும் பாயாசத்தில் வாய்க்குவாய்த் தென்படும் முந்திரி பருப்புகளைப் போல நூல் முழுதும் காணக் கிடைக்கும் கவிதை வரிகள்! அப்பப்பா! அவற்றின் சிறப்புகளைச் சொல்லப் புகுந்தால் தனிக் கட்டுரையாகவே அமைந்துவிடும்!

   இனி நான் பங்கேற்கும் திருமணங்களில் மணமக்களுக்கு அளிக்கப்படும் பரிசு நூல் இதுவாகவே இருக்கும்.

   கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. எங்களை அழைத்துச் செல்ல மாப்பிள்ளை வந்துவிட்டார். மீண்டும் சந்திப்போம்; சிந்திப்போம்.

முனைவர் .கோவிந்தராஜூ,

கனடாவிலிருந்து.

  

17 comments:

  1. அருமை ஐயா. நானும் அந்த சுவையை ருசிக்க விரும்புகிறேன். நன்றி

    ReplyDelete
  2. Inspiring article Sir. Bought and kept in my shelf some time back. Will read it soon Sir.

    ReplyDelete
  3. ஒரு மா மனிதரை பற்றி ஒரு மாண்பு மனிதர்

    ReplyDelete
  4. ஆகா... வாசிக்க வாசிக்க மெய் சிலிர்க்கிறது ஐயா... நன்றி...

    ReplyDelete
  5. எங்கள் இல்ல நூலகத்தில் உள்ள, நான் ரசித்துப் படித்த நூல்களில் ஒன்று. நன்கு உள்வாங்கி மிகவும் பொறுமையாக வாசித்துப் பகிர்ந்துள்ளீர்கள். மகாத்மா காந்தியின் சுய சரிதைக்குப் பிறகு நான் விரும்பிய நூல்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  6. ரத்தினச் சுருக்கங்களை அழகாக விளக்கியது அருமை ஐயா.

    ReplyDelete
  7. ஒரு மணிநேரம் கடந்து விட்டது பெயரனை கொஞ்சி இருப்பீர்கள். மகிழ்வாய் கடக்கட்டும் இனிவரும் காலங்கள்...

    ReplyDelete
  8. ஆமாம் ஐயா அருமையான புத்தகம். நூலினைப் பற்றி உங்கள் வரிகள் அருமை.

    பேரனோடு கொஞ்சி விளையாடியிருப்பீர்கள். பொக்கிஷமான தருணங்கள்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  9. அற்புதமான நூல்
    அற்புதமான மனிதர்

    ReplyDelete
  10. மிகச் சிறப்பானதொரு நூல் பற்றிய உங்கள் பதிவும் சிறப்பு.

    ReplyDelete
  11. Simply super..we get the impression of reading the content of the book, though not read..

    ReplyDelete
  12. வல்லரசு என்றெல்லாம் கலாம் அவர்கள் பேசவில்லை என்ற செய்தி மிக மனதிற்கு இதம் அளிக்கிறது .நல்லறிஞர்கள் எவரும் நாம் எப்படி சிறக்க வேண்டும் ,நிறைவாக ஒரு பணியை எவ்வாறு செய்ய வேண்டும், நல்ல மனிதராக எப்படி வாழ வேண்டும், நன்றி உடையவராக எப்படி இருக்க வேண்டும்,பிறருக்கு எப்படி உதவ வேண்டும்,உலகத்தையே ஒரு குடும்பமாக எப்படி கருதவேண்டும் என்பது போலத்தான் சிந்திப்பார்களே தவிர ஒரு பெரிய ஆளுமை அல்லது அதிகார கனவுகளுடன் வலம் வருவதில்லை என்பதை தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  13. சிறப்பான அறிமுகம். நன்றி

    ReplyDelete
  14. One of the best motivational book

    ReplyDelete
  15. இனி நான் பங்கேற்கும் திருமணங்களில் மணமக்களுக்கு அளிக்கப்படும் பரிசு நூல் இதுவாகவே இருக்கும்.....
    மணமக்களுக்கு தாங்கள் வழங்கும் தேசிய விருது.

    ReplyDelete