Friday, 16 June 2017

பட்டங்கள் ஆள வந்தாள்

    ‘சான்றோள் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று சொன்ன சங்கப் புலவர் பொன்முடியார் என் எதிரில் வந்திருந்தால் அவர் வாயில் சர்க்கரையைப் போட்டிருப்பேன். வள்ளுவர் மட்டும் என் எதிரில் வந்திருந்தால் நானும் அவர் வாயில் சர்க்கரையைக் கொட்டியிருப்பேன் என்றாள் தன் மகளைச் சான்றோள் எனக் கேட்ட என் மனைவி.

   ஆம் இன்று எங்கள் ஆசை மகள் புவனா கனடா நாட்டின் தலைநகர்ப் பல்கலைக் கழகமான கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெறுகிறாள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோவிந்த ராஜா என்று என் மனம் மகிழ்ச்சியில் துள்ளல் போட்டது. 
  
   
நானும் என் துணைவியாரும் முன்னே நடந்தோம். பின்னால் என் மகள் தோழியருடன் வந்தாள். வரவேற்பில் நின்ற பெண்மணி ஒருத்தி என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். வியப்பு, மகிழ்ச்சி, திகைப்பு எல்லாம் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு கணம் என்னைத் தாக்கியது. “Are you graduating today?  என்று உற்சாகம் பொங்க கேட்டாள். “இல்லை இல்லை என் மகள் பட்டம் பெறுகிறாள் நாங்கள் உடன் வந்தோம்’ என்று ஆங்கிலத்தில் கூறினேன். அப்போது மகள் ஓடி வந்து எங்களை அறிமுகப்படுத்தினாள் நான் வைத்திருந்த காமிராவை வாங்கி ஒரு படம் எடுத்துக் கொடுத்தாள். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் கையேட்டைப் புதுப்பூ போன்ற புன்முறுவலுடன் தந்தாள். நன்றி சொல்லிப் பெற்றுக் கொண்டேன்.

   எங்களை அரங்கின் பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் அமரவைத்துவிட்டு பட்டம் பெறுவோர் அணிய வேண்டிய அங்கியினை அணிவதற்காகச் சென்றாள் மகள்.

    சரியாக கால் நூற்றாண்டுக்குமுன் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இது போன்ற  பெரியதோர்  அரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மேனாள்  குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் கிருஷ்ண காந்த் அவர்கள் எனக்கு பிஎச்.டி பட்டம் வழங்கிய காட்சி என் நினைவுத் திரையில் ஓடியது. ஹாய் அங்கிள்” என்று புவனாவின் தோழி சொன்னபோதுதான் சுயநினைவுக்கு வந்தேன்.

   
அரங்கம் என்றால் அவ்வளவு பெரிய அரங்கம். இதமாகக் குளிரூட்டப் பெற்றது. அரங்க மேடையின் நீளம் இருநூறு அடியாவது இருக்கும். நடுவில் மூன்று வேறுபட்ட உயரமான, பெரிய அலங்கார நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இருபக்கமும் பின்னாலும்  சற்று  சிறிய அளவிலான நாற்காலிகள் இருந்தன. மேடையிலிருந்து சற்று தள்ளி வலப்புறத்தில் இசைக்குழுவினர் இதமான மேற்கத்திய இசையை மென்மையாக வழங்கிக் கொண்டிருந்தனர். படம் பிடிப்பவர் நம்மூர்போல பின்னால் இருப்போர்க்கு இடைஞ்சலாக அரங்கின் நடுவில் நந்திபோல  நிற்கவில்லை. மாறாக அரங்கின் ஓரத்தில் ஒரு மேடையில் நின்றிருந்தார்.

   விழா தொடங்க பத்துநிமிடங்கள் இருந்தன. பட்டம் பெறுவோர் தம் இருக்கைகளைத் தவிர மற்ற அனைத்து இருக்கைகளிலும் பெற்றோரும் முது பெற்றோரும் நண்பர்களும் அமர்ந்திருந்தனர்.

 இந்த கார்ல்டன் பல்கலைக்கழகம் எழுபத்தைந்து ஆண்டுகால பழமையும் நாட்டின் தலைநகர்ப் பல்கலைக்கழகம்(Capital University) என்னும் பெருமையும் உடையது. இதன் தற்போதைய வேந்தர் சார்லஸ் ஷீ அவர்கள் இப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர். இன்றைய தேதியில் இருபத்தெட்டாயிரம் மாணவ மாணவியர் படிக்கிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. பன்னாட்டு மாணவர்கள் பல்லாயிரக் கணக்கில் படிக்கிறார்கள்.

    இப்போது காலை 9.30 மணி. குறித்த நேரத்தில் விழா தொடங்குகிறது. அரங்கம் அமைதி காக்கிறது. எல்லோரும் அமைதியாக எழுந்து நிற்கிறார்கள். அணிவகுப்புக்கான(Academic procession) நேரம் இது. சிலர் நம்மூர் மேளம் நாதஸ்வரம் போன்ற இவ்வூர் இசைக்கருவிகளை இசைத்தவாறு செல்ல, இன்றைய நிகழ்வின் இயக்குநர்(Marshal of Convocation) தன் கைகளில் ஒரு செங்கோலை(The Mace) ஏந்தியபடி முன்னே நடக்கிறார். அவரைத் தொடர்ந்து வேந்தர், துணைவேந்தர், ஆளுநர் குழுத் தலைவர் வருகிறார்கள். அவர்களைத் இது ஓர் அதிகாரப் பூர்வமான நிகழ்வு என்பதற்கான அடையாளமாம் அச் செங்கோல். தொடர்ந்து முதன்மையர்களும்(Deans) பட்டம் பெறுவோரும்(Graduands) அணிவகுத்து வருகிறார்கள். அணிவகுப்புக்கான இசை(Procession music) முழங்குகிறது.

    செங்கோலை மிடுக்காக ஏந்திச் சென்றவர் அதற்குரிய பீடத்தில் பணிவுடன் வைக்கிறார். மொத்த அரங்கமும் அமைதியாக நிமிர்ந்து நிற்கிறது. அழகான இளம்பெண் ஒருத்தி மேடையில் தோன்றி கனடா நாட்டின்  ஓ கனடா எனத் தொடங்கும் நாட்டுப்பண்ணை உணர்ச்சிப் பொங்க பாடுகிறார். அதே உணர்வுடன் அரங்கில் உள்ளோரும் சேர்ந்து பாடுகிறார்கள். நாட்டுப்பண் நிறைவுக்குப் பிறகும் அனைவரும் அமைதியாக நிற்கிறார்கள். பட்டமளிப்பு விழா இயக்குநர்,”பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் ஆணைப்படி இங்கே குழிமியுள்ள மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்வைத் தொடங்க அனுமதி வேண்டுகிறேன்” என்று கூற, வேந்தரும் சில சொற்களில் அனுமதி வழங்க, “அனைவரும் அமரலாம்” என்ற அறிவிப்புக்குப்பின் ஓசையின்றி அனைவரும் அமர விழா இனிதே தொடங்குகிறது. ஆக இருபது நிமிட நேரம் பொறுமையுடன் நிற்க வேண்டியிருந்தது.

   முதல் நிகழ்வாக சமுதாயத்தில் சிறந்து விளங்கும் சான்றோர் இருவருக்கு மதிப்பியல் டாக்டர் பட்டங்களை வேந்தர் வழங்குகிறார். அவர்கள் இருவரும் சுருக்கமாக பட்டமளிப்பு விழா நிகழ்த்தியபின்,    விழாவின் அடுத்த நிகழ்வாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பட்டமளிப்பு நிகழ்வு தொடங்குகிறது.

    பேராசிரியர்கள் வரிசையாக நின்று, மேடைக்கு வரும் மாணவர்களைப் பார்த்து, “வாழ்த்துகள். உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது; உங்களை எண்ணிப் பெருமை அடைகிறோம்” எனப் பற்பல புகழ்மொழிகளைச் சொல்லி வாழ்த்தியனுப்பியது புதுமையாக இருந்தது.

    பெயரை அறிவிக்கும்போது உரிய மாணவர் மேடைக்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் கம்பீரமாக நிற்கிறார். அந்தந்தத் துறைசார் முதன்மையரால் பட்டத்திற்கு உரிய வண்ணப் பட்டுத் துகில்(hood) தோள்களில்  அணிவிக்கப்படுகிறார். இத் துகில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி வண்ணத்தில் அமையும். பிறகு வெற்றிநடை போட்டு, மேடையில் புன்முறுவல் பூக்க நிற்கும் வேந்தர், துணை வேந்தர், ஆளுநர் குழுத் தலைவர்  ஆகியோரை அணுகி கைகுலுக்கி நன்றி தெரிவித்துச் செல்கிறார். அடுத்து பேராசிரியர் ஒருவர் பட்டம் வழங்க அதை இரு கைகளாலும் பெருமிதத்துடன் பெற்றுக்கொண்டு மேடையைவிட்டு இறங்குகிறார். மாணவர்கள் இவ்வாறு மேடையில் தோன்றும்போது பெற்றோரும் உற்றாரும் உறவினரும் பெருங்கூச்சலிட்டுத் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். நம்மூரில் இதற்கெல்லாம் அனுமதியில்லை.

   எங்கள் மகளின் பெயரும் அறிவிக்கப்படுகிறது. புவனா கோவிந்தராஜூ என்னும் இரட்டைச் சொற்கள் அரங்கம் முழுவதும் எதிரொலிக்கின்றன..
மேலாண்மைத்துறை முதன்மையர் வண்ணத்துகிலை அவளுடைய அகன்ற தோள்களில் அணிவித்து வாழ்த்துக் கூறுகிறார். அரங்கம் அதிரும்படி  கரவொலி எழுகிறது. எங்கள் விழிகளிலிருந்து இரண்டு சொட்டு ஆனந்தக் கண்ணீர் விழுகிறது. வகுத்தான் வகுத்த வகை என்பாரே வள்ளுவர் அதனைத் துய்க்கும் வாய்ப்பு  எங்களுக்கு வாய்த்தது.

  அருகில் அமர்ந்திருந்த சீனாக்காரர் என்னைப் பார்த்தார்.”இவள் தந்தை எந்நோற்றான் கொல்!” என அவர் வியந்து நோக்கியதாகவே எண்ணினேன்
.
   முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமேற்றபின் விழா நிறைவுக்கு வந்தது. அனைவரும் எழுந்து நிற்க விழா நிறைவைக் குறிக்கும் இசை(Recessional Music) ஒலிக்கிறது.

     இந்த அளவில் விழா இனிதே நிறைவடைகிறது. பிறகு பட்டம் பெற்றோர் சிறிய அளவில் மது அருந்தி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கின்றனர். பழக்கம் இல்லாததால் என் மகள் இதில் பங்கேற்கவில்லை. வெளியில் வந்து சிறப்பாக அமைக்கப்பட்ட பின் புலத்தின்முன்(back drop) நின்று படம் எடுத்துக்கொண்டோம்.
   

மனதெல்லாம் மத்தாப்பூ பூக்க மகிழ்வுந்தில் ஊர்ந்து இல்லம் வந்து சேர்ந்தோம்.

     

19 comments:

  1. தங்களின் அன்பு மகளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. மகிழ்ச்சி.வளம்பல பெற்று வளர
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என் இனிய நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சகோதரிக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் பல பட்டங்கள் பெற்று மென்மேலும் உயர வேண்டும்.

    ReplyDelete
  5. ரோஜாவை நட்டு வைத்தால் ரோஜாத்தான் பூக்கும்
    புலிக்குப்பிறந்தது பூனையாகாது
    மகள் புவனாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கார்ல்டன் பல்கலைக்கழகத்தின்​ பட்டமளிப்பு விழாவில் நாங்கள் நேரில் கலந்து கொண்டு மகிழும் உணரவைத் தருகிறது உங்கள் மடலும் படங்களும். அருமை. புவனாவுக்கு பாராட்டுகள். பெரிதுவந்த பெற்றோருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. எங்கள் மனதார்ந்த பாராட்டுக்கள் ., வாழ்த்துக்கள் .
    ஈன்ற பொழுதின் குறளை மெய்ப்பித்த தங்கள் மகள் புவனாவிற்கு CONGRATS.





    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. My heartfelt wishes to dear Bhuvani. I feel very proud to be her ever loving Teacher. As one among a special members of Dr.AGs family, I am always indebted to him. Indeed it gives me an immense pleasure in sharing my love and care with him. Dr.AG is not only an educator but also a good human. Both of his daughters excel good in their fields because of the credit he earned by serving to the poor and needy. May God, the Almighty, the only Subject of the entire world may shower his blessings on each and everyone of his family to make them live and lead a very happy life. I am much delighted in reading the posting. Thank you sir for immediate sharing.

    ReplyDelete
  10. Dear Dr!It's a moment of pride that gives a sense of achievement not only to your daughter but also to you both!Congrats!

    ReplyDelete
  11. வாழ்த்துகள். நாங்களும் நேரில் பார்த்தது போல உணர்ந்தோம்.நானும் பாரதியார் பல்கலை மாணவிதான்

    ReplyDelete
  12. Very picturesque presentation. May God be with your daughter. I share your happiness. I am reminded of Keats: "I am too happy in thy happiness."

    ReplyDelete
  13. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். ///
    உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். நானும் விழாவில் கலந்துகொண்டதைப் போல உணர்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  14. பட்டம் பெற்ற தங்கள் செல்வத்திற்கும், அதற்குப் பாடுபட்ட தங்கள் இருவருக்கும் ஆக மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  15. பட்டம் பெற்ற தங்கள் செல்வத்திற்கும், அதற்குப் பாடுபட்ட தங்கள் இருவருக்கும் ஆக மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  16. suuuuuper. Pls convey our Congrats to Bhuvana. Our best wishes.

    ReplyDelete
  17. கனடாவிலிருந்து நேரலையாக கண்டது போல் இருந்தது தங்கள் வர்ணனை. வழக்கம் போல் தங்களது சொல்லாட்சி என்னை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச் சென்றது.
    "முது பெற்றோர், மதிப்பியல் முனைவர், முதன்மையர்" நல்ல தமிழ்ச் சொற்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  18. ஐயா உங்கள் மகள் புவனாவிற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.எங்கள் மகள் பட்டமேற்பு விழாவில் எங்கள் சார்பாக நீங்கள் கலந்து கொண்டதற்கு கோடானுகோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  19. பட்டம் பெற்ற தங்களின் மகளுக்கும், அதற்கு உற்றத் துணையாக இருந்து ஆதரவு தந்து வழிவகுத்த இனிய பெற்றோருக்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete