பதினான்கு நாள் வனவாசத்தில் இன்று ஐந்தாம் நாள். ஆடி வெள்ளி என்பதால் வீட்டைக் கூட்டிப் பெருக்கிக் கிருமிக்கொல்லியைக் கொண்டு துடைத்துத் தூய்மைப் பணியை மேற்கொண்டேன். பணிநிறைவுக் காலத்தில் துணைவியாரின் பணிகளைப் பகிர்ந்து கொள்வதை ஒரு வழக்கமாகவே ஆக்கிவிட்டேன்.
எனது
மடிக்கணினியை உசுப்பி விட்டேன்.கரூர் நண்பர் ஒருவர் கனடா நாட்டின் கரோனா நிலை
குறித்து எழுதுமாறு மின்னஞ்சல் விடுத்திருந்தார்.
கனடா
அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது ‘விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக்
கொண்டார்’ என்னும் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய திரையிசைப்பாடல் வரிதான்
எனக்கு நினைவுக்கு வருகிறது. கடந்த ஜனவரி பதினைந்தாம் தேதியே கனடா அரசு கரோனாவுக்கு
எதிரான போரைத் தொடங்கியது. முதல் வேலையாக நாட்டிலுள்ள அனைத்து விமானத் தளங்களையும்
மூடியது. அமெரிக்கா –கனடா எல்லை வாயிலை மூடி சீல் வைத்தது. இது போன்ற அறிவார்ந்த
நடவடிக்கைகளால் இன்று அதன் கொட்டம் அடங்கி
ஒரு கட்டுக்குள் இருக்கிறது.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
என்னும் குறளை கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின்
ட்ரூடோ அவர்களுக்கு யார் மொழிபெயர்த்துச் சொன்னார்களோ தெரியவில்லை; மிகுந்த
எச்சரிக்கையுடன் வழிநடத்துகிறார்.
கனடா
அரசு கடுமையான சட்டங்களைப் போட்டதோடு நிற்காமல் அவற்றை நடைமுறைப் படுத்துவதில்
மிகவும் கண்டிப்போடு இருப்பதால் கரோனா காட்டுத்தீ போல பரவாமல் தடுக்க முடிந்தது.
நான் கண்ட இரண்டு விமான நிலையங்களிலும் முகக்கவசம் அணியாத நபர் ஒருவரைக்கூட காண
இயலவில்லை. நான் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் வழியே பெரிய சாலையை, சிறிய பூங்காவைப்
பார்க்க முடியும். அங்கே மக்கள் முகக்கவசம்
அணிந்து நடமாடுவதைப் பார்க்கிறேன். அனைவரும் முறையாக வாயை,மூக்கை மூடியபடியே
முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். முகக்கவசம் அணியாமல் போனால் நூறு டாலர்
தண்டத்தொகை கட்டவேண்டுமாம்.
அதேபோல் வெளிநாடுகளிலிருந்து கனடா வந்து பதினான்கு நாள்கள் தனிமையில்
இருப்போர் அதற்குரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். விதி மீறினால் 75000
டாலர் (இந்திய மதிப்பில் ரூ.37,50,000) தண்டத்தொகை அல்லது ஓராண்டு சிறை மற்றும்
விசா நீக்கம். இப்போது சொல்லுங்கள் நான் என் அறைக்கதவைத் திறந்து வெளியில் ஓர் அடி
எடுத்து வைக்க முடியுமா?
இங்கே வசிக்கும் நண்பர் பொறியாளர் முருகானந்தம் சொன்ன செய்தி கேட்டு
பெரிதும் வியப்படைந்தேன். ஊரடங்கை அமல்படுத்துமுன் கனடா அரசு வேலை இழப்பின்
காரணமாக ஏற்பட்ட மக்களின் பொருளாதாரத் தேவையைச் சரியாகக் கணித்து மாதந்தோறும் பணம்
கொடுத்ததால் தொடக்கக் காலத்தில் கரோனாவின் பரவல் தடுக்கப்பட்டு அதன் கொட்டம் அடக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும் ஊரடங்குக் காலம் முடிந்ததும் சில நிறுவனங்கள் ஆள்குறைப்பில் ஈடுபட்டபோது
அரசு தலையிட்டு அதைத் தடுக்கும் வகையில் பெரிய அளவில் நிதி உதவி செய்ததாகவும் கூறி
என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தினார்.
நோய்த்தொற்று
குறித்த விழிப்புணர்வை எற்படுத்துவதில் அரசு பெரும் வெற்றி கண்டுள்ளது. நாடு
முழுவதும் ஒரே மாதிரியான செயல்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. படங்கள், வாசகங்கள்
எல்லாம் நோக்கத்தையொட்டி மிகச் சரியாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக WISE என்னும் சுருக்கச் சொல் என்னை மிகவும் கவர்ந்தது.
W-Wear
a mask properly;
I- Isolate yourself;
S- Stay two meters apart;
E- Exercise proper hand hygiene
பொது மக்களும் அரசுடன் ஒத்துழைக்கின்றனர். விதி மீறல் தொடர்பாக பெரிய அளவில் இலட்சக்கணக்கில் தண்டத்தொகை வசூலிக்கப்பட்ட செய்தியைக் காண முடிவதில்லை.
பேரங்காடிகளில், பொது இடங்களில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதாய் என் மகள் கூறுகின்றாள். மணிக்கணக்கில் காத்திருந்துதான் மளிகைப் பொருள்களை வாங்கி வந்ததாய்ச் சொன்னாள்.
கரோனோ நோயைக் குணப்படுத்துவதாய்ச் சொல்லிக் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ மனைகள் இங்கே இல்லை. நாடு முழுவதும் இப் பொறுப்பை அரசு மருத்துவ மனைகள் மட்டும் ஏற்றுத் திறம்படச் செயல்படுகின்றன.
இங்கும் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் அவை எதிரிக்கட்சிகளாக இல்லாமல் கரோனா தொடர்பாக அனைத்து ஒத்துழைப்பையும் தருகின்றன. ஆளுங்கட்சி சத்தியமாய் உள்ளது! எனவே இது சாத்தியமாய் உள்ளது;
ஊர்கூடித் தேர் இழுத்து நிலையில்
நிறுத்துவதுபோல இந்த நாடு கரோனாவைக் கண்டபடி ஆடவிடாமல் தன் கட்டுக்குள்
வைத்துள்ளது.
சுருங்கச் சொன்னால் கரோனா குறித்த அச்சம் மக்களிடையே இல்லை; அதேசமயம்
விழிப்புணர்வு உள்ளது. இங்கே ஊடகங்களில் அமைச்சர்கள் தலைகாட்டுவதில்லை. முன்களப்
பணியாளர்களை முன்னிலைப் படுத்துகின்றனர். இங்கே முன்னால் நிற்பது அரசு; அரசியல்
அன்று. நம்மூரில் இவை எல்லாமும் தலைகீழாக உள்ளன.
முனைவர் அ.கோவிந்தராஜு,
கனடாவிலிருந்து.
அழகிய முறையில் கனடா நாட்டின் கொரோனா குறித்த விடயங்களை விளக்கியமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteவிரைவில் பெயரனைக் கண்டு கொஞ்சிட வாழ்த்துகள்.
இங்கே இருக்கும் அரசு நம்மிடம் திருடாமல் இருந்தால் போதும். அரசு வேலை செய்பவர்கள் தான் நமது நாட்டில் சுகபோக வாழ்க்கை வாழமுடியும்.
ReplyDeleteஐயா. அது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு. மக்களுக்கு உதவுகிறது. இங்கு மக்கள் பணத்திலல்லவா (மதுக்கடை வருவாய்) அரசு செயல்படுகிறது.நம்மை நாம் காத்துக்கொள்ள பாதுகாப்பாக இருப்பது மிக அவசியம் .
ReplyDeleteநமது நாட்டு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் எண்ணிக்கை நம் நாட்டின் மக்கள் தொகையைவிட அதிகம்.இங்கிலாந்து மற்றும் அமெரிக்கசட்டங்களின் கலவை நமது சட்டங்கள்.நமது கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை அல்ல. மேலை நாடுகளை பார்த்து பொறாமை கொள்வதை தவிர வேறு வழி இல்லை.
ReplyDeleteநம் நாட்டை நினைத்தால்...
ReplyDeleteவேதனை...
கனடாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது ஐயா
ReplyDeleteகனடாவில் கோவிட் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்ல விஷயம். அங்குள்ள சட்டங்கள் பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டோம்
ReplyDeleteதுளசிதரன்
கனடா நாட்டைப் பற்றிய சிறப்பானத் தகவல்களுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteநம் நாட்டில் ஊழல்கள் அதிகம் தான் மறுப்பதற்கில்லை. என்றாலும் நம் நாட்டு மக்கள் தொகை, இங்கிருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் விளிம்பு நிலைக்கும் கீழே வசிக்கும் மக்கள் சதவிகிதம் கூடுதல் இல்லையா? இங்கு அறியாமையில் வாழ்பவர்களின் சதவிகிதமும் அதிகமாச்சே. இங்குள்ள சட்ட ஆட்சி அமைப்பும் வேறு இல்லையா?
ஒரு வகுப்பில் 10 பேரை மேய்த்துக் கட்டுவதற்கும் 50 பேரை மேய்த்துக் கட்டுவதர்கும் வித்தியாசம் உள்ளதே. அதற்குத் திறமையானவர்களும் தேவைதானே. அத்தகைய திறமை மிக்கவர்கள் வெகு சிலர் எனும் போது கொஞ்ச்ம கடினம்தான் அதுவும் ஊழலும் கலந்து நிற்கும் போது.
கீதா
நிற்பது அரசு....அனைத்தும் இதில் அடங்கிவிட்தே ஐயா.
ReplyDeleteWISE - wise தான். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மிகுந்த எச்சரிக்கையுடன் வழிநடத்துகிறார் என்பது உலகோர் பாராட்டும் உன்னத செயல்.
ReplyDelete👏👏
ReplyDelete