Tuesday, 11 August 2020

சூழலைக் கெடுக்கும் சூழ்ச்சி

     எனது சுற்றுச்சூழல் சார்ந்த ஆக்கப் பணிகள் எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிவிட்டன. 1993இல் நம்மாழ்வாரின் தொடர்பில் இணைந்தபோது சூழல் குறித்த எனது ஆர்வம் பன்மடங்காகியது. பவானி நதிநீர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயலராகவும் சிலகாலம் பணியாற்றினேன். என் மாணவர்களின் ஒத்துழைப்போடு ஒரு நஞ்சில்லா காய்கறிக் கடை கூட நடத்தினேன் என்பதை நம்புவீர்களா? இப்படியாக ஓர் ஆசிரியரின் சமூக மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளைக் கருத்தில் கொண்டே எனக்கு நடுவண் அரசு தேசிய விருதினை வழங்கிச் சிறப்பித்தது. ஒரு சூழல் செயற்பாட்டாளர் என்ற வகையில் இந்தச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை 2020                (EIA-Environment Impact Assessment 2020) என்பது எனக்கு உடன்பாடாக அமையவில்லை.

      

நாடு விட்டு நாடு வந்தபோதும் இது என் மனத்தைப் போட்டுப் பிசைகிறது. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை 2020 என்ற நடுவண் அரசின் சட்ட முன்மொழிவைப் படித்ததும் அதிர்ச்சிக்குள்ளானேன்.

   சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இடம்பெறாத ஒரு அதிகாரிகள் குழுதான் இந்த அறிக்கையைத் தயாரித்திருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது எனக் கட்டியம் கூறுவதாய் தொடங்குகிறது.

    பொருளாதார வளர்ச்சி என்பது முடிவு. அதை அடையும் வழிகளும் முக்கியம் என்பதை மறந்துவிட்டு அல்லது துறந்துவிட்டு இவ்வறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

   அறிக்கையை மேம்போக்காகப் பார்த்தால் பல நல்ல அம்சங்களைக் கொண்டிருப்பதாகத் தெரியும். ஆனால் ஊன்றிப் பார்த்தால் சுற்றுச் சூழலுக்கு உலை வைப்பதாய் அது அமைந்திருப்பதை உணரலாம்.

    எங்கள் பழைய திருச்சி மாவட்டத்தில் ‘செருப்பால அடிச்சிப்புட்டு கருப்பட்டியும் கொடுத்தானாம்’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த வரைவறிக்கையைப் பார்க்கும்போது இந்தப் பழமொழிதான் என் நினைவில் தோன்றுகிறது.

  சுற்றுச் சூழல் துறையின் முன் அனுமதியோ அல்லது ஒப்புதலோ இல்லாமல் திட்டப்பணிகளைச் செயற்படுத்த இந்த முன்மொழிவுச் சட்டம் பச்சைக்கொடி காட்டுகிறது. இனி பொதுமக்கள் கருத்துக்கேட்பு இருக்காது.  

     குயவர்கள் அனுமதியின்றி குளத்தில் களிமண் எடுக்கலாம், ஊரில் சமூகக்கூடம் கட்ட ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளலாம் போன்ற முன்மொழிவுகளைப் பார்த்ததும் ‘அட! பரவாயில்லையே’! என்று சொல்லத் தோன்றும். ஆனால் தொடர்வது என்ன தெரியுமா? இனி மாநில அரசு எட்டுவழிச் சாலை என்ன எண்பது வழிச் சாலையைக் கூட போடலாம். நெல் விளையும் நிலத்தில் நிலக்கரி எடுக்கலாம். யாரும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாது. நீதி மன்றங்களுக்குச் சென்றாலும், ‘இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம்’ என ஒதுங்கிக் கொள்ளும்.

   நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்

   உயிர்க்கு இறுதியாகி விடும்

என்னும் குறளை வரைவறிக்கையைத் தயாரித்தோர் மனத்தில் கொள்வது நன்று. இவ்வறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குறளை மனத்தில் கொள்வது நன்று.  

   கொரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கும் பொதுமக்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா என்பது ஐயமே.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

   

 

9 comments:

  1. நல்ல சிந்தனை. சுற்றுச்சூழல் காகிதத்தில் மட்டும் பாதுகாக்கப்படுகிறது. வள்ளுவரின் வரிகள் மேடைப்பேச்சுக்குப் பயன்படுகிறது. என்னசெய்வது. ஒவ்வொரு மழை வெள்ளத்தின் போதும் நொய்யல் ஆற்றுநீர் பல வண்ணங்களில் செல்கிறது. தற்போது கருப்புநிற நீர். ஊடகங்களுக்கு ஒருநாள் செய்தி. மக்களுக்குக் காட்சி. சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு ஆலை முதலாளிகள் வழங்கும் பணமழை. அவ்வளவுதான். நஞ்சில்லா காய்களை எழுத்தில் மட்டுமே பார்க்கலாம். வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete
  2. ஆம் அய்யா.சமூக அக்கறை கொண்ட எல்லோருக்கும் இதே சிந்தனைதான்.எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம். நன்றி.

    ReplyDelete
  3. தி. முருகையன்11 August 2020 at 22:12

    ஐயா வணக்கம்.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா. இன்று நடக்கும் எல்லாவற்றிற்கும் நம்மமவர்களே காரணம். மக்கள் சிந்தித்து நல்லவர்களைத் தேர்ந்தெடுக்காமல் கட்சி ஜாதி மதம் பார்த்து வாக்களிப்பதால் வந்த வினைதான் இது. இனியாவது மக்கள் சிந்தித்தால் சரி .

    ReplyDelete
  4. ஐயா வணக்கம். சமூக அக்கறை கொண்ட நீங்கள் எங்கு இருந்தாலும் நமது நாட்டை பற்றிய சிந்தனைதான்.நன்றி.

    ReplyDelete
  5. நாட்டை சீரழிக்கும் மூடர்கள்...

    ReplyDelete
  6. மக்களுக்கு பணம் வாங்கி கொண்டு வாக்களிக்கும் விழிப்புணர்வு மட்டுமே இருக்கிறது ஐயா.

    ReplyDelete
  7. பொருத்தமான குறளையும் தேர்ந்தெடுத்து எச்சரித்திருப்பது மிகவும் நன்று .,நன்றி அய்யா

    ReplyDelete
  8. "பேய்கள் அரசாண்டால்......" தான் நினைவுக்கு வருகிறது. இன்றைய ஆட்சியாளர்களின் எண்ணம் எப்படி இருக்கிறது தெரியுமா....? ஓட்டை சைக்கிள் கூட இல்லாத ஊரில் ஒரு பென்ஸ் காரை நிறுத்தி விட்டால் அந்த ஊரின் செல்வச் செளிப்பு உயர்ந்து விட்டதாய் கனவு காணும் அடிமுட்டாளாய்த்தான் காட்சியளிக்கிறார்கள்.

    இதில் மக்களைக் குறை கூற ஒன்றும் இல்லை தோழர். இன்றைய தேர்தல் அரசியலில் நேர்மையான, மக்கள் சிந்தனை கொண்ட ஒரு நல்லவன் நிலைத்து நிற்பதே சாத்தியமற்ற சூழல். ஒரு அர்விந்த் கெஜ்ரிவால் படும் பாட்டைத்தான் இந்த உலகமே பார்த்துக் கொண்டிருகிறதே!

    ReplyDelete
  9. அருமையான சமுதாய பொறுப்புமிக்க ஆலோசனை. சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்.
    "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்" என்ற வள்ளுவப்பாட்டன் சொல்லை கருத்தில் கொள்ளவேண்டும்

    ReplyDelete