Monday, 24 August 2020

எங்கும் இனிமை என்றும் இனிமை

    ஒட்டாவா என்பது கனடா நாட்டின் தலைநகரம். புதுமை, இனிமை, தூய்மை, வளமை இந்த நான்கும் நீக்கமற நிறைந்த நகரம். இந்த நகரின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது ஒட்டாவா ஆறு. ஓர் அழகிய இளம்பெண் புன்முறுவல் பூத்தபடி நகரின் நடுவே மெல்ல நடந்து சென்றால் எப்படியிருக்கும்! அப்படியிருக்கிறது நகரின் இடையிடையே ஒய்யார நடைபயிலும்  ஒட்டாவா ஆறு.      மூன்று ஆண்டுகளுக்குமுன் நான் இங்கே வந்தபோது இந்த ஆற்றின் பேரழகைக் கண்டு பெருவியப்படைந்து இப்படி எழுதினேன்.

    இப்போது பார்க்கிறேன் அதே பேரழகு! அதே தூய்மையான பளிங்கு நீர்! பதினான்கு நாள் தனிமை, ஏழுநாள் பேரனுடன் கொஞ்சல் என மூன்று வாரங்கள் உருண்டோட,  இன்று காலை காலார வெளியே சென்று வரலாம் என்று எண்ணிப் புறப்பட்டேன். கொடைக்கானலின் பகல்நேர தட்பவெப்ப நிலைதான் வெளியில் நிலவியது. நல்ல வெயில்; ஆனாலும் சில்லென்ற குளிர் உடலைத் தொட்டுத் தழுவியது.

    எனக்கு மிகவும் பழக்கமானதும், மனத்துக்குப் பிடித்ததுமான ஆண்ட்ரூ ஹேடன் பூங்காவை நோக்கி நடைபோட்டேன். எதிரே வந்தோர் வழக்கம்போல் புன்முறுவல் பூத்து ‘ஹாய்’ சொல்லியபடி என்னைக் கடந்து சென்றனர். நானும் அவ்வாறே செய்தேன். இது இந்த நாட்டுப் பழக்கம்!  என்ன கொடுமை! அந்த அழகிய பெண்களின் இதழ்கள் காட்டும் இனிய புன்னகையைக் காணமுடியவில்லை. அவர்களுடைய அழகிய கண்களைக் காணமுடியவில்லை. அவற்றைக் காண தடை போட்டவை அவர்கள் அணிந்திருந்த முகக்கவசமும் கருப்புக் கண்ணாடியும். நல்லவேளை கொரோனாவைத் தவிர்க்க காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும் என எந்த அமைப்பும் சொல்லவில்லை. அதனால்  ‘ஹாய்’ என்ற அந்த ஒற்றைச் சொல் என் காதிலே தேனாகப் பாய்ந்தது!

      ஒட்டாவா ஆற்றங்கரையில் அமைந்துள்ள அந்தப் பூங்காவின் ஊடே ஒருமணி நேரம் மெல்ல நடந்தேன். மூன்றாண்டுகளுக்கு முன் நான் பார்த்த கனடா வாத்துகள் என வழங்கப்படும் கவின்மிகு பறவைகள் கூட்டமாக என்னருகே வந்து என்னை வரவேற்றன.


 

    

   ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கும் பச்சைப் புல்வெளிகள் முன்னர் நான் பார்த்த அதே அழகுடன் மிளிர்ந்தன. ஆற்றங்கரையின் மீது அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் சாய்ந்தும் உடைந்தும் கிடக்காமல் அன்று பார்த்த அதே அழகுடன் விளங்கின.

    நம் நாட்டைப் பற்றிக் குறைசொல்வதாய் நீங்கள் எண்ணுதல் கூடாது. ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். சென்னையில் நாம் பார்க்கும் ஒரு பூங்காவை ஓராண்டு கழித்துச் சென்று பார்த்தால் அவ்வளவு அலங்கோலமாக இருக்கும். பராமரிப்பு இல்லாமல் பாழாகிக் கிடக்கும். ஆட்சி மாறினால் காட்சி மாறும். அந்தப் பூங்கா மாட்டுக் கொட்டிலாக மாறிவிடும்! ஆனால் இங்கே ஆட்சி மாறினாலும் பூங்காக்களின் காட்சியும் மாட்சியும் மாறா! பூங்காவை உருவாக்க ஒதுக்கும் நிதியை விட அதனைப் பராமரிப்பதற்கு அதிக நிதியை ஒதுக்குகிறார்கள். பராமரிப்பது தனியார் நிறுவனம் என்றாலும் சேவைக்குறைபாடு சிறிதும் இல்லை.




     மூன்றாண்டுகளுக்குப் பிறகு இப் பூங்காவில் ஒரு வேறுபாட்டைப் பார்க்கிறேன். அன்று பலராக இருந்த பார்வையாளர்கள் இன்று சிலராக இருக்கின்றார்கள். நாள்தோறும் பூங்காவுக்கு வந்தோர் கொரோனா சமயம் என்பதால் தாங்களே சுயக்கட்டுப்பாட்டுடன் வாரம் ஒருமுறை வருகின்றனர்; வாரம் ஒருமுறை வந்தோர் மாதம் ஒருமுறை வருகின்றனர். இதற்குக் காரணம் இங்கே உள்ள மக்களின் தன்னார்வ ஊரடங்குக் கலாச்சாரம்.

   நம்மூரில் ஊரடக்கு; இங்கே ஊரடங்கு. புரியவில்லையா? அங்கே காவல் துறை மூலம் ஊரை அடக்க வேண்டியுள்ளது. இங்கே ஊர் தானாக அடங்குகிறது. இங்கே கொரோனா காரணமாக ஒரு நாளும் பூங்காக்கள் மூடப்பட்டதில்லை என்று என் மகள் சொல்கிறாள். பொதுப் போக்குவரத்து முடக்கமும் இல்லை.

    பொது மக்களின் தன்விருப்பார்ந்த கட்டுப்பாடு காரணமாகத்தான் ஓங்கு புகழ் ஒட்டாவா நகரம்  கொரோனா நோய்த்தொற்றின் கோரப்பிடியில் பெரிதாய்ச் சிக்காமல் பெயர் சொல்லும்படியாய் இருக்கின்றது. “தற்காத்துத் தற்கொண்டார்ப் பேணும் தகைசான்ற” மக்கள் வாழும்  இடமாகவே இந்த நகரைப் பார்க்கிறேன்.

   வளர்ப்பு நாயை அழைத்தபடி அல்லது இழுத்தபடி பலரும் செல்வதை நாம் பார்த்திருக்கிறோம்; பயந்திருக்கிறோம். ஆனால் அதோ பாருங்கள். ஒரு பார்வையற்ற முதியவர் தனி ஒருவராகப் பூங்காவில் சுற்றி வருகிறார். அவர் பின்னாலே வர, முன்னாலே ஒரு நாய் அவரை வழி நடத்திச் செல்கிறது. இல்லம் திரும்பியதும் இதுகுறித்து என் மகளிடம் பேசினேன். அது பயிற்சி பெற்ற சிறப்பு நாய் என்று சொன்னாள் இது குறித்துப் பின்னர் எழுதுவேன்.

முனைவர் .கோவிந்தராஜூ

கனடா நாட்டிலிருந்து.

12 comments:

  1. ஒட்டாவா தரும் ஓங்கிய நினைவுகள் அருமை

    ReplyDelete
  2. The photos, as usual, add beauty to the articles.

    ReplyDelete
  3. நம்மூரில் இதுவும் ஒரு கனவு தான்...

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா! தங்களின் Blog ஐப் படித்தால் நேரில் உணர முடியாத குறை நீங்குகிறது! அருமை!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,
    தாங்களுக்குக் கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு எங்களுக்கும் பகிர்ந்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
    நன்றி

    ReplyDelete
  6. உங்கள் உலாவினை எங்களோடு பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி. பலவற்றை அறிந்துகொண்டேன். ரம்மியமான புகைப்படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  7. தங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா.

    பயிற்சி பெற்ற பைரவரைப் பற்றி அறிய அவா!

    ReplyDelete
  8. ஒருபுறம் மனம் மகிழ்கிறது
    மறுபுறம் ஏங்குகிறது

    ReplyDelete
  9. மகிழ்ச்சி. கனடா தேசத்தில் மக்கள் தொகை மிகவும் குறைவு. பரப்பளவு அதிகம்.மேலும் உலகின் அறிவில் சிறந்தோர்களின் புகழிடங்களில் ஒன்று கனடா. விதிமுறைகளை கடைபிடிப்பதால் உண்டாகும் நன்மைகளை உணர்ந்தவர்கள். ஆனால் நம் நாட்டில் விதிகளை உடைத்தால் வீரனாக கருதப்படுகிறார்கள். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்-கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் அதிக பிள்ளைகளை பெற்றுக் கொண்டவர்கள். வறுமை காரணமாக பணத்திற்காகவும் பதவிக்காகவும் எதையும் விட்டுக் கொடுப்பவர்கள். Concisely calibre of our people is low.It will take a few decades to become Man from human.

    ReplyDelete
  10. சுய ஒழுக்கம் என்பது நம் நாட்டில் இருந்தால், நம் நாடும் ஒட்டாவாவை விட அழகாய் மிளிரும்... அருமையான சிந்தனை துளிகள் ஐயா...

    ReplyDelete