Friday, 17 July 2026

ஆடிக் கும்மாயம்

   இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. என் துணைவியார் நேற்றே பூசைக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். பூசையின் ஒரு பகுதியாக இறைவனுக்கான படையல். இதுவரை செய்யாத ஒன்றைச் செய்து படைக்கப் போவதாய்ச் சொன்னார். அது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் என்று ஒரு புதிர் போட்டார். செட்டி நாட்டு உணவு வகையில் ஒன்று என்னும் குறிப்பையும் தந்தார். வாயில் எச்சில் ஊறியதே தவிர, மூளையில் ஒன்றும் ஊறவில்லை.