Friday, 30 June 2017

இதுவே என் இறுதித் தீர்ப்பு

  நண்பர் முருகானந்தம் அவர்கள் முன்னிரவில் என்னைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “உங்களுக்குப் பிடித்த ஓர் இடத்திற்கு நாளை அழைத்துச் செல்கிறேன். வருகிறீர்களா?” என்றார். அதற்காகத்தான் காத்திருந்தேன்.

   இல்லத்தரசியிடம் பேசினேன்.” முதலில் நான் செல்கிறேன். அந்த இடம் உனக்கு ஏற்றதாக இருக்குமா எனப் பார்த்துவிட்டு உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றேன். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னதால் நண்பருக்கு என் வருகையை உறுதி செய்தேன். உடனே முதுகில் மாட்டிக் கொள்ளும் ஒரு பையைத் தேடி எடுத்தேன். தண்ணீர்க் குடுவை, ஒரு சிறு குறிப்பேடு, பேனா, கேமரா, பைனாக்குலர், தொப்பி என அனைத்தையும் பையில் போட்டு வைத்துவிட்டுத் தூங்கச் சென்றேன். தூக்கம் வரவில்லை.

    காட்டிற்குள் செல்லும்போது சிவப்பு மற்றும் வெண்ணிற உடைகளை அணிந்து செல்லுதல் கூடாது. செருப்பு அணிவதும் கூடாது. ஷூ அணிந்து செல்வது கட்டாயமாகும். எனவே ஏற்ற உடையணிந்து முதுகில் பையை மாட்டிக்கொண்டு காலை ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வரவும் நண்பர் முருகானந்தம் அவர்கள் காரில் வந்து ஹலோ சொல்லவும் சரியாக இருந்தது. குறித்த நேரத்தில் உரியவர்களைச் சந்திப்பதும், குறித்த நேரத்தில் பணியைத் தொடங்குவதும் இங்கே படு இயல்பாகும்.

     காரில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்து, முதல் வேலையாக இருக்கைப் பட்டையை இறுக்கி அணிந்து கொண்டேன். காரில் பயணம் செய்யும் அனைவரும் இரண்டு வயது குழந்தையாக இருந்தாலும் சீட் பெல்ட் போட்டே ஆக வேண்டும். இல்லையேல் கார் ஓட்டுநர் நூறு டாலர் தண்டத்தொகை அழ வேண்டியிருக்கும். எந்த போலீஸ்காரருக்கும் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்க  முடியாது.

    அடுத்த ஒரு மணி நேரத்தில்  ஒட்டாவா  புறநகர்ப் பகுதியில் இருந்த ஒரு வனப்பகுதிக்குச் சென்று உரிய இடத்தில் காரை நிறுத்தினார்.

    முதுகுப் பையை மாட்டிக்கொண்டு கையில் கேமராவைப் பிடித்தபடி அவருடன் நடந்தேன். முகப்பில் ஓர் அறிவிப்புப் பலகை கண்ணில் பட்டது. வனத்தின் வரைபடம், அதில் நடமாடும் வன விலங்குகள் பறவைகள் முதலிய விவரங்கள் இருந்தன. மறுபக்கம் ஒரு பதாகையில் செய்யத் தகாதவைகளைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
   
அறிவிப்புப் பலகை
காட்டின் உள்ளே சென்று மது அருந்தக் கூடாது. செல்ல நாயைக் கூட்டிச் செல்லக் கூடாது. அங்கே காணப்படும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தின்ன எதுவும் தரக் கூடாது. புகைப்பிடிக்கவும் தீமூட்டுவதும் கூடாது. டெண்ட் அடித்துத் தங்குதல் கூடாது. முக்கியமாக குப்பை போடக்கூடாது. ஆர்வ மிகுதியில் காட்டில் காணப்படும்  செடிகளைப் பிடுங்குதல் கூடாது. இது போன்ற பல குறிப்புகளை எழுத்துப் பிழை ஏதுமின்றி ஆங்கிலத்திலும் ஃபிரென்ச் மொழியிலும் அழகாக எழுதி வைத்துள்ளார்கள்.

    பக்கத்தில் பார்த்தால் நடமாடும் கழிவறை நிற்கிறது. காட்டுப் பகுதிதானே என்று மர இடுக்கில் நின்று மறந்தும் சிறுநீர் கழித்துவிட முடியாது. மீறினால் சிறுநீர் மட்டுமா கழியும்? நம் வங்கிக் கணக்கிலிருந்து பணமும் கழியும்!    எதற்கப்பா வம்பு என எண்ணியபடி நண்பரின் பின்னால் நடந்தேன். நாங்கள் தேடிச்சென்றது பீவர்{Beaver) என்னும் விலங்கை. அது கட்டியுள்ள அணைக்கட்டைப்(Beaver Dam) பார்ப்பதுதான்  முக்கிய இலக்காக இருந்தது. எனவே வாலைச் சுருட்டிக்கொண்டு சத்தம் போடாமல் நடந்தேன்.
    
பொறியாளர் பீவர் (கூகுள் கோப்புப் படம்)
பீவர் என்பது  பெரிய எலி போன்ற கருநிற விலங்காகும். அதன் வால் இறகுப்பந்து விளையாடுவதற்கான மட்டையைப்போல் இருக்கும். காட்டில் அல்லது சதுப்பு நிலக் காட்டில் ஓடும் நீரோடையைத் தடுத்து மரக்குச்சிகள், மண், கற்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்து ஓர் அணையைக் கட்டி, தேங்கும் நீரில்  மீன் நண்டுகளை வளர்த்துச் சாப்பிடும். அந்த அணை அதன் பகைவர்களிடமிருந்து தப்பிக்க உதவும் அகழியாகவும் பயன்படும். இத்தகைய கட்டுமானப் பொறியியல் நுட்பத்தை எங்குதான் கற்றதோ? வியப்பாக உள்ளது. இதைவிட வியப்பான செய்தி என்ன தெரியுமா? இந்த பீவர் கட்டும் அணைகளை மனிதர்கள் பார்க்கலாம். அவ்வளவுதான். அதை அழிக்க முயன்றால்  ஆயிரம் டாலர் அபராதம்! பீவர் தேசிய விலங்காயிற்றே!

  
அழகிய ஆந்தை
காட்டின் உள்ளே போகப் போக உயரமான மரங்கள் இருந்தன. அண்ணாந்து பார்த்தபோது உச்சாங்கிளையிலிருந்து ஓர் உருவம் என்னைப் பார்த்தது. அது ஓர் ஆந்தை. அது சட சடவென்று பறக்குமுன் மட மடவென்று பத்துப் படங்கள் எடுத்தேன்; ஒன்று தேறியது.

   “பார்த்து வாருங்கள். மனிதரைத் துன்புறுத்தும் நரி போன்ற கொயோட்(Coyote) என்னும் விலங்கு இங்கே திரியும்” என்று சொல்லி கொஞ்சமாக என் வயிற்றில் புளியைக் கரைத்தார் உடன் வந்த நண்பர். அதோடு விட்டாரா? இந்த ஊரில் வாழும் ஸ்கங்க்(Skunk) என்னும் பெயருடைய விலங்கு அருகில் வரும் மனிதர்மீது தன் ஆசன வாயிலிருந்து  ஒரு திரவத்தை ஸ்பிரே பண்ணுமாம். அவ்வளவுதான். நான்கு நாள்களுக்கு யாரும் அவர் அருகில் நெருங்க முடியாதாம்.. உடம்பில் அப்படியொரு துர்நாற்றம் அடிக்குமாம். இது என்ன புது வம்பு என நினைத்தேன்.

    எட்டி நடையைப் போட்டோம். எங்கும் பீவர் அணை தென்படவில்லை. ஒரு கூரை வேய்ந்த சாலை கண்ணில் பட்டது. அருகில் சென்றோம். அது ஒரு பறவைகள் காப்பகம். அடிபட்ட பறவை, மயங்கி விழுந்த பறவை, பறக்க இயலாப் பறவை, நோயுற்ற பறவை ஆகியவற்றை இங்கே கண்ணும் கருத்துமாகப் பராமரித்துச் சரியானவுடன் காட்டில் விட்டுவிடுகிறார்கள். இது பறவை ஆர்வலர்களின் நன்கொடையில் செயல்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். அங்கே நாங்கள் சேவல், வாத்து, கழுகு ஆகியவற்றைப் பார்த்தோம்.
  
நடைக்கு அஞ்சாத நண்பர் முருகானந்தம்
அப்படியே காட்டையொட்டி இருந்த சதுப்பு நிலக்காட்டையும்
(Marshy land) பார்த்தோம். சேறும் நீரும் சகதியும் உள்ள நிலத்தின் மீது எப்படி நடப்பது? அருமையாக நடக்கலாம். மரப்பலகையால் ஆன பாதையை மிக அழகாக அமைத்துள்ளார்கள். இதன் மீது நடந்து செல்வதை ஆங்கிலத்தில் Board walk என்று சொல்கிறார்கள். பாதையின் இரண்டு பக்கமும் ஒருவகைக் கோரைப்புல் ஆள் உயரத்திற்கு ஏக்கர் கணக்கில் அடர்ந்து வளர்ந்துள்ளன. சில காட்டுச் செடிகள் சிவந்த பழங்களுடன் காட்சியளிக்கின்றன. அவை மனிதர்கள் உண்ணத் தகுந்ததாம். ஆனால் பறித்துத் தின்றால் ஃபைன் கட்ட வேண்டியிருக்குமாம்! Very fine என நினைத்துக் கொண்டு நீட்டிய கையை வெடுக்கென இழுத்துக் கொண்டேன்.

   
நல்ல வெயிலும் நடந்த களைப்பும்
இந்தக் காடுகளை- நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் சதுப்பு நிலக் காடுகளை என்னும் என்.சி.சி
(National Capital Commission) என்னும் ஆணையம் பாதுகாத்து வருகிறது. இந்தச் சதுப்பு நிலத்தில் பீட்(peat) எனப்படும் பெட்ரோல் போன்ற எரிபொருள்(Fossil fuel)புதைந்து கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்த மரங்கள் மக்கிப் பல்வேறு வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி இன்னும் 135 ஆண்டுகளுக்குத் தேவையான எரிபொருள் கிடங்காக மாறியுள்ளதாம்!

    
உண்டு மகிழும் உற்சாகம்
அடேங்கப்பா என வியந்தபடி மீண்டும் ஒரு காட்டில் நுழைந்து நூறு நூற்றைம்பது அடி உயரமான கோனிஃபர்
(Conifers)மரங்களைக் கண்டோம். காட்டின் நடுவே வசதியாக அமர்வதற்கு அழகான இருக்கைகளை அமைத்திருந்தது புதுமையாக இருந்தது. வெளியில் வரும்போது அங்கே கலையழகுடன் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் ஒரு தாய் தன் குழந்தைகளுடன் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தாள். ஏதோ பலநாள் பழகியவர் போல் என் நண்பர், “எங்களுக்கும் ஏதாவது மிச்சம் மீதி கிடைக்குமா”’ என்று ஆங்கிலத்தில்  கேட்டார். வாய் கொள்ளாத சிரிப்புடன் “நிறையவே இருக்கிறது” என்றார் அந்த அம்மையார்.

    அந்தக் குழந்தைகளிடம் ‘பை பை’ சொல்லிவிட்டு, அருகில் நின்ற எங்கள் காரில் புறப்படத் தயாரானபோது பெரிய கேமராவுடன் கண்ணில் பட்டார் ஓர் உயர்ந்த மனிதர். அவரிடம் பீவர் அணை ஏதும் கண்ணில் படாததை வருத்தத்துடன் சொன்னார் நண்பர் முருகானந்தம். “கவலைப்படாதீர்கள். கொஞ்ச தூரம் காரில் சென்றால் காணலாம்” என்று கூறி விவரமும் தந்தார். நன்றி சொல்லிவிட்டு அவர் சொன்ன வழியில் பயணித்தோம்.

     நெடுந்தூரம் சென்று காரை ஓரமாக நிறுத்தி இறங்கினோம். ஒன்றும் தென்படவில்லை. என்னே வியப்பு! அவரும் தன் காரில் எங்களைத் தொடர்ந்து வந்து , “இன்னும் இருநூறு அடியில் வலப்புறமாக சாலையோரம் உள்ள சதுப்பு நிலத்தில் உள்ளது” என்று கூறிவிட்டுச் சென்றார். அவ்வாறே நாங்களும் சென்று பீவர் அணையைக்  கண்டு மகிழ்ந்தோம்.
     
கண்டேன் பீவர் அணையை
ஆர்வம் மிகுதியில் தட்டுத் தடுமாறி கீழே இறங்கி அணைக்கு அருகில் சென்று படம்பிடித்தேன். நான் கால்வைத்த இடத்திலிருந்து ஒரு பாம்பு நெளிந்தோடி மறைந்தது. ‘பயம் வேண்டாம். எங்கள் ஊரில் விஷப்பாம்புகள் அறவே இல்லை. நீங்கள் பார்த்தது கார்டன் ஸ்நேக்” என்றார் நண்பர்.

     பீவர் என்ற கட்டுமானப் பொறியாளரைப் பார்த்து ஒரு சல்யூட் அடிக்க எண்ணினோம். எங்கள் கண்ணுக்கு அவர் புலப்படவில்லை. அவர் எங்காவது மறைவான இடத்திலிருந்து எங்களைப் பார்க்கக்கூடும் என்னும் நம்பிக்கையில் அவர் கட்டியிருந்த  பிரமாண்டமான அணையை நோக்கி இராணுவ வீரர் தோரணையில் நின்று ஒரு சல்யூட் அடித்துவிட்டு இலக்கை அடைந்த மகிழ்ச்சியுடன் இனிதாக  இல்லம் நோக்கி விரைந்தோம்.

     முயற்சியும் அறிவும் திறமையும் உடைய பீவர் கனடா நாட்டின் தேசிய விலங்காகத் திகழ்வதற்கு முழுத் தகுதி உடையது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இதுவே என் இறுதித் தீர்ப்பு.

முனைவர் .கோவிந்தராஜூ
கனடா நாட்டிலிருந்து.

குறிப்பு: நம் நாட்டுப் பறவை இனத்திலும் விலங்கினத்திலும் கட்டுமானப் பொறியியல் வல்லுநர்கள் உண்டு. பின்னூட்டம் அளிக்கும் அறிவார்ந்த வாசகர்கள் அது குறித்து எழுதுவார்களாக.
   


16 comments:

  1. இது போல் வாய்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... வாழ்த்துகள் ஐயா...

    என்னவொரு கட்டுப்பாடு.....! அதுவே சிறப்பு.....

    ReplyDelete
  2. To know more about Peat Moss, please visit
    http://ncc-ccn.gc.ca/places-to-visit/greenbelt/mer-bleue

    ReplyDelete
  3. தூக்கணம் குருவி ?

    ReplyDelete
  4. நம் அடுத்த இலக்கு >>> http://ncc-ccn.gc.ca/places-to-visit/gatineau-park

    ReplyDelete
  5. எங்கள் தாட்டாமை தீர்ப்பை மாற்றிச்சொல்லமாட்டார்
    ஏனென்றால் அவரின் இறுதித்தீர்பே
    உறுதித்தீர்ப்பு

    ReplyDelete
  6. உங்களின் இறுதித் தீர்ப்பை ஏற்கிறோம்.

    ReplyDelete
  7. Aiya thangali ennai selavillamal kanadavirku alaithuchendruvitteerkal . nandri

    ReplyDelete
  8. கனட நாட்டு தேசிய விலங்கான பீவரின் கட்டுமானத் திறமை அதன் தற்சார்பு மனோபாவத்தை காட்டுகிறது. பெரும்பாலும் இயற்கையின் அனைத்துப் படைப்புகளுமே தற்சார்பு நிலை கொண்டு தான் வாழ்கின்றன... மனிதன் தவிர
    135 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருள் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்களே. கனடா அரசின் நிலைப்பாடு என்ன? இயற்கையை அழித்து எடுக்கப் போகிறார்களா.... நெடுவாசல் போல...?

    ReplyDelete
  9. ஓர் அணையைக் கட்டி, தேங்கும் நீரில் மீன் நண்டுகளை வளர்த்துச் சாப்பிடும்.

    வியப்பாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  10. அணை கட்டி உயிர் வாழும் பீவர் என்ற விலங்கின் அற்புதத்தை அருமையாகப் பதிவிட்டுள்ளீர்கள். இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு ஞாபகம் வருவது ஒரு பழைய திரைப்பாடல். பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான். மனிதனுக்குக் கற்றுக்கொடுத்தது பறவைகளும் விலங்குகளும் தான். நம் நாட்டில் கழுகு கூடு கட்டும் திறன் அதிசயத்தக்கது. இரும்பை வளைக்கும் தன்மையுடைய மூலிகைத் தாவரத்தைக் கண்டுபிடித்து அதைத் தன் கூட்டில் வைத்து இரும்புக்கம்பிகளை இலக்கி வளைத்து வலிமையான இருப்பிடத்தை அமைக்குமாம்.அதே போல் காகம் அமைத்த கூட்டிலிருந்து விழுந்த சைக்கிள் போக்ஸ் கம்பிகளைச் சோதித்துப் பார்த்துள்ளேன். மிகவும் இலகுவாக வளைந்தது.திரு.முருகானந்தம் அவர்கள் தூக்கனாங்குருவியின் கூட்டைக் குறிப்பிட்டுள்ளார்கள் அக்குருவிகளை நெசவுக்குருவி எனவும் குறிப்பிடுவர். மின்மினிப்பூச்சிகள் பார்த்திருப்பீர்கள். அப்பூச்சிகளை அழகுவண்ணக்குருவி (மைனா) தனது கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு ஒளியைத்தர மின்மினிப்பூச்சிகளைப் பிடித்து களிமண்ணில் ஒட்டி விடும். இக்குருவிகள் மின்சாரப்பொறியாளர்கள். ’ஙப்போல் வலை’ எனப் படித்திருப்போம். விலங்கினங்களில் விளைச்சல் உள்ள காலங்களில் உணவுதானியங்களைப் பெருமளவில் சேமிக்கும் வல்லமை படைத்தது எலிகள். அவைகள் தங்களது இருப்பிடத்தை அமைக்கும்போது இயற்கையின் சீற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள “ங” என்ற எழுத்தைப் போன்று வலையை(இருப்பிடத்தை) அமைக்குமாம். ஆகவே எலிகளும் கட்டடப் பொறியாளர்களே! முயல்களில் குழி முயல் ஒரு வகை. தனது குட்டிகளைப் பாதுகாப்பாக வைக்க குழிகளை அமைக்கிறது. தனது குட்டிகளுக்குப் பாலூட்ட இருப்பிடத்தை அறிந்து தோண்டி வெளியில் வரவழைக்கிறது. பிறகு குட்டிகள் உள்ளே சென்றவுடன் அக்குழியை மண்ணிட்டு நிரப்பி மூடுகிறது. அக்குட்டிகள் சுவாசிப்பதற்கு காற்று எப்படிக்கிருந்து கிடைக்கிறது என அறியமுடியவில்லை. இதே போல் கல்வி கற்காத பொறியாளர்களாகப் பறவைகளும் விலங்களும் இப்பூமியில் வாழ்வது இயற்கையின் கொடை எனலாம்.
    முனைவர் ரா.லட்சுமணசிங், பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
    கரூர் - 5

    ReplyDelete
    Replies
    1. நம் நாட்டுப் பொறியாளர் பறவை, விலங்கினங்களின் செயல்பாடுகளை அருமையாக விளக்கியுள்ளீர்கள். உங்களுடைய பின்னூட்டம் எனது பதிவுக்கு வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது. நன்றி.

      Delete
  11. தங்களின் எழுத்து நடை மிக அருமை.கனடாவில் இருப்பது பாேன்ற உணர்வைத் தருகிறது.நன்றி அய்யா.

    ReplyDelete
  12. ஆம் ஐயா! பீவர் அழகான கட்டுமானப் பொறியியலாளர்!!! அது போன்று ஸ்கங்க் தன்னைக் காத்துக்கொள்ளவே அந்த வாயுவைப் பீச்சும்.ஹெட்ஜ் ஹாக் தன்னைச் சுருட்டி பந்து போன்று ஆக்கிக் கொள்ளும் தன்னைக் காத்துக் கொள்ள மட்டுமல்ல முள்ளம் பன்றி போல் ஆனால் பார்க்கச் சிறிதாக இருக்கும்.

    நம ஊர் தூக்கணாங்குருவி நல்ல பொறியியலாளர். அது போன்று காக்கை கூடச் சொல்லலாம். தன் கூட்டை எத்தனை முறை அமுக்கி அமுக்கிப் பார்த்து குச்சிகள் கீழே விழுகிறதா என்று சரி பார்க்கும். மரம் ஆடினாலும் கூடு கலையாது இருக்கும் இடம் பார்த்து கட்டுமே!! அதுவும் திறமைதானே!!

    எறும்பு, கரையான்...புற்றுகள்!!! என்ன ஒரு பொறியியல்!! தேனீக்கூடு!! அந்த வடிவம் மனிதனால் கூட அமைக்க முடியாதே!!வண்ணத்துப் பூச்சி காட்டர் பில்லராக இருக்கும் போது கட்டும் கூடு கூட்டுப்புழுக் கூடு...அப்புறம் குளவி கூட நம் வீட்டில் எல்லாம் எப்படி மண்ணைக் கொண்டு வந்து கொண்டுவந்து கூடு கட்டியிருக்கும். அதை அத்தனை எளிதாக உடைக்க முடியாதே ஐயா! எலி வளை....முயல் தன் குட்டிகளை மறைத்து வைக்கும் வளைகள் அருமையாக இருக்கும்...அது போல கடலாமை சென்னையில் கடற்கரையில் குளிர் காலத்தில் கரைக்கு வந்து மணலில் குழி தோன்டி அழகாக அறைகள் எல்லாம் வைத்து அதில் 90 லிருந்து 120 வரை முட்டைகள் இடுமே!! சிலந்திகள் பின்னும் வலை!!!மரங்கொத்திப்பறவை..பைன் மரத்தில் போடும் துளை...இப்படி நிறைய சொல்லலாம் இல்லையா?!!!

    கீதா

    ReplyDelete
  13. பீவர் கட்டிய அணையைக் கண்டீர்கள் என்பது மிகவும் சந்தோஷம் அருமையான பதிவு ஐயா. அங்கு போல் இங்கும் நம் நாட்டிலும் இயற்கையைப் பாதுக்காக்கக் கடும் சட்டங்கள் வந்தாலொழிய நம் நாட்டின் இயற்கை அழிந்து கொண்டுதான் இருக்கும்...அது வேதனைதான்..

    துளசிதரன், கீதா

    ReplyDelete