Sunday, 6 September 2026

சிறுவர்களால் சீரழிந்த சிறுமலர்

    இன்றைய தினமலரில் வெளிவந்த செய்தியொன்று என்னை நிலைகுலையச் செய்தது. இளைய தலைமுறை எதை நோக்கிச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் கதி கலங்குகிறது.

    ஒன்பது, பத்தாம் வகுப்பில் படிக்கும் நான்கு சிறுவர்கள் சேர்ந்துகொண்டு, மனநிலை குன்றிய பதினைந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

   நடந்த கொடுமையை அச்சிறுமி பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் அழுது புலம்பி அருகில் இருந்த காவல் நிலயத்தை அணுகியுள்ளனர். காவலர் விசாரிக்கும் முறையில் விசாரித்தபோது நடந்த கொடுமையை அச் சிறுவர்கள் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையும் அதை உறுதி செய்துள்ளது. கொடுமையிலும் கொடுமை இது நடந்த இடம் ஒரு பள்ளிக் கட்டடம்.

  போக்சோ சட்டத்தில் வழக்கைப் பதிவு செய்து நால்வரையும் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் வைத்துள்ளனர்.

   அந்த நால்வரின் பெற்றோரும் அவமானத்தால் தலைகுனிந்து, வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். தொடர்புடைய பள்ளிக்குத் தீராத அவப்பெயர் வந்து சேர்ந்துள்ளது.

   கடந்த பத்தாண்டுகளில் சிறுவர் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு ஆகியுள்ளன. பள்ளிகளில்  மதிப்பெண் ஒன்றை மட்டும் குறியாகக் கொண்ட கல்விச் செயல்பாடுகள் அரங்கேறுவதுதான் இதுபோன்ற கொடுமைக்கெல்லாம் காரணம்.

   நன்னெறிக் கல்வி ஏட்டளவில் மட்டுமே உள்ளது. மாணவன் எத்தகைய கொடுமை இழைத்தாலும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியில் அனுப்ப முடியாத சூழலே உள்ளது.

   பள்ளிச் சிறுவர்கள் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். அதில் தொடர்ந்து பாலியல் சார்ந்த படங்களைப் பார்த்துப் பார்த்துசிறுமியரைப் பாலுணர்வு நோக்கிலேயே பார்க்கின்றனர். இப்போது வருகின்ற வணிக நோக்கிலான திரைப்படங்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாய் உள்ளன.

 

   ஒழுக்கமாக வளராத பள்ளிச் சிறுவர்கள் கல்லூரிக்குச் சென்றால் அங்கும் அவர்கள் ஒழுங்காய்ப் படிப்பதில்லை. பெற்றோருக்குத் தெரியாமல் பல தவறுகளைச் செய்கின்றனர்.

   நேற்று திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் ஒரு காரில் கேரளம் சென்று, அங்கு நள்ளிரவில் அதிவேகத்தில் காரை இயக்கி, கொடும் விபத்துக்குள்ளாகி அனைவரும் மாண்டு விட்டனர். அவர்கள் கேரளம் சென்றது அவர்களுடைய பெற்றோருக்குத் தெரியாதாம்.

   இப்படியெல்லாம் நிகழ்வதற்குக் காரணம் என்ன? நாற்றங்கால் பராமரிப்புச் சரியில்லை என்பதே என் கருத்தாகும். என் ஆசிரியப்பணி அனுபவம் என்பது நாற்பது ஆண்டுகள். வகுப்பறையில் முப்பது நிமிடம் மட்டுமே பாடம் நடத்துவேன். மீதி பதினைந்து நிமிடம் நன்னெறிக் கல்விதான்; அதுவும் குறள் சொல்லும் நன்னெறிகள்.

 நான் தலைமையாசிரியர் ஆனபின், வாரத்தில் பத்துப் பிரிவேளைகள் நன்னெறிப் பாடம் மட்டுமே நடத்துவேன். அதுவும் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக இருக்கும்.

   வாரத்தில் ஐந்து நாட்களிலும் காலை வணக்க வகுப்பு உண்டு. நாளும் ஒரு திருக்குறளை விரிவாக எடுத்துரைப்பேன்.

    பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றும் மதிப்பெண் சான்றும் வழங்குவதற்கு முன்பு அவர்களை ஒரு கூடத்தில் அமரவைத்துக் கல்லூரியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசுவேன். வாழ்க்கையில் பாலியல் ஒழுங்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதைச் சொல்லி முடித்தபின்,

   பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்                            ஏதில் பிணந் தழீஇ யற்று

 என்னும் குறட்பாவை அவர்தம் மனங்கொள்ளுமாறு விளக்குவேன்.

   இப்போது இந்த நடைமுறையெல்லாம் பள்ளிகளில் உள்ளதா எனத் தெரியவில்லை.

 பள்ளிக் கல்வியை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலக்கட்டம் இது. அதிகாரத்தில் இருப்போர் சிந்திப்பார்களா?

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

   

No comments:

Post a Comment