Monday, 12 June 2017

ஒட்டாவாவுக்கு ஒரு ஓ போடலாம்

   ஒட்டாவா என்பது கனடா நாட்டின் தலைநகரமாகும். ஒட்டாவா நதிக்கரையில் அமைந்துள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பத்து இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்டது எனச் சொன்னால் நம்பமாட்டீர்கள்.
     மிகப்பெரிய வணிக மையமாக இந்நகரம் விளங்குகிறது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் மிகுதியாக உள்ள நகரமும் இதுவே.
    பன்னாட்டு மக்கள் வாழும் நகரம் என்பதால் பன்முகப் பண்பாடுகள் கொண்ட மக்களைக் காண முடிகிறது.
     மக்களின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்யும் மெர்சர் நிறுவனத்தின் கணிப்பில் ஒட்டாவா உலக அளவில் பதினான்காவது இடத்தில் உள்ளது. இந்த நகரில் உள்ள ரிடோ கால்வாய் யுனஸ்கோ அறிவித்துள்ள உலகப் பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.
  
அமெரிக்கர் போலவே கனடா நாட்டுக்காரர்களும் மரங்கள் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்களாகத் தெரிகிறார்கள். கனடா நாட்டின் கொடியில் நடுவில் மேப்பிள் மர இலையை வைத்திருப்பதிலிருந்து இது புலனாகிறது.
    பொதுப் போக்குவரத்துப் பேருந்து இயக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. இது குறித்துத் தனிப்பதிவைப் பின்னர் போடுவேன்.
   
இல்லத்தில் இருப்பு கொள்ளவில்லை. எனவே மாலை நேரத்தில் காலார நடக்கத் தொடங்கினோம். மாலை நேரம் என்றால் ஐந்து மணி ஆறு மணி என நினைத்துக் கொள்ளாதீர்கள். மணி ஏழுக்குமேல் இருக்கும். எட்டு மணியானாலும் சூரியன் மறையாத ஊர் இது,
   ஒரு பெரிய பலசரக்குக் கடைக்குச் சென்றோம். தமிழ் நாட்டில் ஒரு செட்டியார் கடையில் கிடைக்கும் அத்தனைப் பொருள்களும் அந்தக் கடையில் இருந்தன. கல்லாவில் ஒரு இலங்கைத் தமிழர் இருந்தார். நல்ல முனை முறியாத  தமிழில் நயமாகப் பேசினார். அங்கதன் என்பது அவர் பெயர். அங்கதன் என்பவன் இராமாயணத்தில் வரும் வானரன் வாலியின் மகன். நம்மூரில் இப்படிப்பட்ட நல்ல தமிழ்ப்பெயர்களை வைப்பதில்லை. இச் செய்தியை அமெரிக்காவில் வசிக்கும்  என் மூத்த மகள் அருணாவிடம் பகிர்ந்து கொண்டபோது  “இலங்கைத் தமிழரிடம்தான் தமிழ் உயிர்ப்போடு உள்ளது” என்று சொன்னாள். நானும் அவள் சொன்னதை வருத்தத்துடன் ஆமோதித்தேன்.
     
காய்கறி முதலியவற்றோடு ஒரு சீமாறும் வாங்கினோம். நான் முன்னே நடக்க பின்னால் மனைவியும் மகளும் வந்தனர். சாலையில் காரில் சென்றவர்கள் கூட சற்றே நிறுத்தி பிறகு  சென்றனர். திரும்பிப் பார்த்தபோதுதான் காரணம் புரிந்தது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் போல சீமாற்றைப் பிடித்துக் கொண்டிருந்தாள் என் மனைவி1
   மகளுக்கும் எனக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை!


15 comments:

  1. இலங்கைத் தமிழரிடம்தான் தமிழ் உயிர்ப்போடு உள்ளது
    உண்மை ஐயாஉண்மை
    மகிழ்ந்தேன்

    ReplyDelete
  2. We too live in Canada through your writeup

    ReplyDelete
  3. ஆங்கில கலப்பு இல்லாமல் இருக்கும் இலங்கை தமிழ்!

    ReplyDelete
  4. Dr ST Gunasekhar12 June 2017 at 09:58

    Sense of humour is inbuilt in every ideal teacher! You're an ideal teacher!

    ReplyDelete
  5. "நல்ல முனை முறியாத தமிழ்".... ஆஹா... நல்ல சொல்லாட்சி

    ReplyDelete
  6. இடைவிடாத உங்கள் பயண பதிர்வு எங்களை அங்கே அழைத்துச் செல்கிறது.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பகுத்துண்டு பல்லுயிர்
    ஓம்பும் பண்பை வள்ளுவரிடம் இருந்து
    பயின்றவர் நீங்கள்
    இயல்பாக இயற்கையை
    உயிர்களை நேசிப்பவர்
    தங்களை ஒட்டாவா கவர்ந்தது அதை எங்களிடம் பகிர்ந்து கொண்டது அருமை
    இந்தியாவில் இன்னொரு
    தேசியகீதம் அனுமதிக்கப்
    படுமானால் பழனி திரைப்படத்தில் வரும்
    ஆறோடும் மண்ணில்
    எங்கும் நீரோடும்
    என்றப்பாடலை பரிந்துரைப்பேன்
    பயிரை உயிராக மட்டுமல்ல
    உடன்பிறந்த தங்கையாக
    பாவித்து எழுதப்பட்ட பாடல்
    பச்சைவண்ண சேலைகட்டி
    முத்தம் சிந்தும் நெல்லம்மா
    பருவம் கொண்ட
    பெண்ணைப்போல்
    தலையை குனிவதேனம்மா
    அண்ணன் தம்பி
    நாங்கள் உண்டு
    என்ன வேண்டும்
    கேளம்மா?
    அறுவடைகாலம்
    உந்தன்
    திருமணநாளம்மா

    என்ன ஒரு கற்பனை
    என்ன ஒரு நேசம்
    வாடிய பயிரைக்கண்டு
    வாடிய வள்ளாரை விடவும்
    சொல்லரும் சூற்பசும்பின்
    தோற்றம்போல் சூல் கொண்ட நெல்லம்மா
    உனக்கு என்ன வேண்டும்
    சொல்லம்மா என்று பாசத்துடன் வினவுவது
    நிலம் பார்த்த தங்கைக்கு
    வளைகாப்பு நடத்துதல் போல என்ன ஒரு பாசம்
    போராடும் வேலையில்லை
    யாரோடும் பேதமில்லை
    ஊரோடு சேரந்துண்ணலாம்
    என்று சொல்லும்போது
    கணியன்பூங்குன்றனாரின்
    யாதும் ஊரே! யாவரும் கேளிர் நினைவுக்கு வருகிறது
    வாய்ப்பிருந்தால்
    You Tube ல் பதிவிறக்கம் செய்து கேளுங்கள்
    அது பாடல் மட்டுமல்ல
    படிக்க வேண்டிய பாடம்
    தொடரட்டும் உங்கள்
    கனடா அனுபவங்கள்

    ReplyDelete
    Replies
    1. மறக்க முடியாத படம், பாடல்...

      Delete
  9. மூன்று நாளில், எங்க ஊரைப் பற்றி முக்கால் வாசி விஷயம் தெரிந்து எழுதி விட்டீர்கள்...அருமை

    ReplyDelete
  10. கனடா நல்ல நாடு..இலங்கை தமிழர் அங்கு நிறையப்பேர் உள்ளனர்..தமிழ் உயிர்ப்புடன் அவர்களிடம் இருப்பது மட்டுமின்றி அதனை அவர்கல் பேணிப் பாதுகாக்கின்றனர்....

    கனடாவில் விவசாயம் நல்ல முறையில் இருக்கிறது...அதைப் பற்றியும் எழுதுங்கள் ஐயா....

    கீதா

    ReplyDelete
  11. Laughter at the expense of Madam Govindaraj. Enjoy.

    ReplyDelete
  12. துடைப்பம் துப்பாகியானது வியப்பே! நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete