Wednesday, 19 November 2014

மனித குலத்தின் பொது எதிரி


   மனித குலத்தின் ஒரே பொது எதிரி நெகிழிதான். அதை பிளாஸ்டிக் என்று சென்னால்தான் புரியும்.
   
         ஒருநாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பற்றி விரிவாகப் பேசிவிட்டு, அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி முடியும் என்று எதிர் கேள்வி கேட்டான் ஒரு மாணவன். பிளாஸ்டிக் குழாய் இல்லாவிட்டால் குளியலறையில் தண்ணீர் வராது என்றான். அவன் சொல்வது உண்மைதான்.

   இன்று இயந்திரங்களில் ப்ளாஸ்டிக் பாகங்கள் தவிர்க்க இயலாதவை. மருத்துவம் சார்ந்த கருவிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் எடுத்ததற்கெல்லாம் பிளாஸ்டிக் வேண்டுமா?

சென்ற வாரம் ஒரு திருமண விருந்திற்குப் போயிருந்தேன். வாழை இலை போட்டு உணவைப் பரிமாறினார்கள். கூர்ந்து பார்த்தபோது தெரிந்தது. அது ஒரு பிளாஸ்டிக் வாழை இலை! அசப்பில் வாழை இலையைப் போலவே இருந்தது. சாம்பார் சாதத்தோடு எழுந்து வந்துவிட்டேன். அங்கு பந்தலில் தொங்கிய மாவிலைத் தோரணங்களைப் பார்த்தேன். மாவிலைகள் அனைத்தும் பிளாஸ்டிக்! அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த தொட்டிகள், தொட்டியில் இருந்த செடிகள் அனைத்தும் பிளாஸ்டிக்!  வரவேற்பு மேசைமீதிருந்த தாம்பாளத்தில் இருந்த பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக்! அவர்கள் கொடுத்தது பாலித்தின் தாம்பூலப்பை! அந்தப் பையைத் திறந்து பார்த்தால் அதில் இருந்தது ஒரு பிளாஸ்டிக் டிஃபின் பாக்ஸ். நல்ல வேளை அதில் இருந்த பாக்கும் வெற்றிலையும் பிளாஸ்டிக்கால் ஆனவை அல்ல!
இது என்ன கொடுமை!

  செருப்பு பயன் உடையதுதான். அதற்காக பூஜை அறையிலும் காலில் போட்டுக்கொள்ள வேண்டுமா என்ன? சற்றே சிந்திக்க வேண்டாமா?

தன்னையே அழிக்கும் வல்லமையுடையன என்பதை அறியாமல் பல பொருள்களை மனிதன் கண்டுபிடித்துவிட்டான். அவற்றுள் ஒன்று இந்த பிளாஸ்டிக்.  PVC என்றும் polythene என்றும் செல்லப் பெயரிட்டு அழைத்தான். (PVC-Poly Vinyl Chloride) அது அவனைக் கொல்ல வந்த யமன் என்பதை எப்போது உணரப் போகிறானோ?

பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் போதும், பழைய பிளாஸ்டிக் பொருள்களை எரிக்கும் போதும் டயாக்சின் (dioxin) என்னும் உயிர்க்கொல்லி வாயு வெளியாகிறது. இந்த நச்சு வாயுவை சுவாசிக்கும் மனிதனுக்கு வரும் நோய்கள் எண்ணற்றவை. அவற்றுள் சில : புற்றுநோய், சர்க்கரை நோய், தோல் நோய், கல்லீரல் அழுகல் நோய் மற்றும் மலட்டுத் தன்மை உருவாதல்.

1997 ஆம் ஆண்டு நம் நாட்டில் சராசரியாக ஒரு மனிதனின் பிளாஸ்டிக் நுகர்வு ஆண்டிற்கு 1.7 கிலோ என்று இருந்தது. ஆனால் தற்போது ஒரு மனிதனின் பிளாஸ்டிக் நுகர்வு 10.5 கிலோ என உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் 1,70.000 டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விளைவாக வளி மண்டலத்தில் டயாக்சின் வாயுவின் அளவு அதிகமாகிக் கொண்டே உள்ளது.

ஒரு மனிதன் இந்த டயாக்சின் வாயுவை  குண்டூசி தலையின் எடைக்குமேல் முகர்ந்தால் இறக்க நேரிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைப்பற்றி   யார்  கவலைப்படுகிறார்கள்?  வரும் முன் காக்கும் மனப்பாங்கு நம்மிடத்தில் மிகவும் குறைவு.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
என்று வள்ளுவர் கூறுவது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது.

மண்ணில் மக்குவதற்கு பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்துக் கொள்ளும் காலம் 500 முதல் 1000 ஆண்டுகள் எனக் கணக்கிட்டுள்ளனர். இதை எளிதில் மக்கச் செய்யும் மகத்துவத்தை யாரேனும் கண்டு பிடித்தால் அவருக்கு இரண்டு நோபல் பரிசுகளை ஒரே சமயத்தில் கொடுக்கலாம்.
அதுவரை நாம் என்ன செய்யலாம்?

01.          பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தைத் தவிர்ப்போம் அல்லது குறைப்போம்
.
02.          பிளாஸ்டிக் பொருள்களை உபயோகித்தபின் கண்ட இடங்களில் போடாமல், சேர்த்து வைத்து மறு சுழற்சிக்கு அனுப்புவோம்.

03.          பாலித்தின் பைகளில் பொருள்கள் வாங்குவதைத் தவிர்ப்போம். பழைய காலம் மாதிரியே மீண்டும் காகிதப் பைகளில், துணிப்பைகளில் பொருள்களை வாங்குவோம். (மஞ்சள் துணிப்பை கலாச்சாரம் நம் கொங்கு மண்ணுக்கே உரியதுதானே?)

04.          பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகளை உணர்வோம், உணர்த்துவோம்.


     ஒரு வீட்டிற்கு விருந்தினராகச் செல்லும் போது அந்த வீட்டை அலங்கோலப் படுத்தலாமா?  சிறிது காலம் இந்த மண்ணில் விருந்தினராகத் தங்கியுள்ள நாம் இம் மண்ணை மாசுபடுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை. சிந்திப்போமா?

Saturday, 15 November 2014

இடுக்கண் நீக்கிய இணையர்


  மனிதனுக்கு எப்படியெல்லாம் சங்கடம் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. சரியான நேரத்தில் கணவன் மனைவி இருவரும் உதவி செய்ததால் தப்பிததார் அவர்.

  உடுமலைப்பேட்டையில் புகழ்பெற்று விளங்கும் வித்யா நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கும் உரையாற்றச் சென்றபோதுதான் அவருக்கு இந்த சோதனை நிகழ்ந்தது.

   அவர் தெரியாமல் செய்த ஒரு தவறுதான் அதற்கெல்லாம் காரணம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

 ஓர்  ஓட்டுநரை வைத்துக்கொண்டு காலை ஆறு மணிக்குப் புறப்பட்டார். ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலுள்ள முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார். கார் நகரைத் தாண்டியதும் எண்பது தொண்ணூறு என்று பறந்ததால், பாதுகாப்புக்காக சீட் பெல்ட்டை இழுத்துப் பொருத்திக்கொண்டார். மூன்று மணி நேர பயணத்திற்குப் பிறகு கார் உடுமலைப்பேட்டையை அடைந்தது. சீட் பெல்ட்டை நீக்கிவிட்டு மெல்ல இறங்கினார். அவருடைய நண்பர் வணக்கம் சொல்லி வரவேற்று அதிர்ச்சியுடன் ஏற இறங்கப்பார்த்தார்.

  . நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்த பெல்ட்டை அணிந்ததால், அந்தப் பட்டை அளவுக்கு வெள்ளைச் சட்டையில் குறுக்காக ஒரு கருப்புப்பட்டைப் படிந்திருந்ததைப் பார்த்தபோதுதான் நண்பர் ஏற இறங்க பார்த்ததன் காரணம் புரிந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் பள்ளியில் இருக்கவேண்டும். சஃபாரி சட்டையைத் துவைக்க முடியுமா, காயுமா என்ற சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் நண்பர் சட்டையைக் கழ்ற்றச்சொல்லி, புது சட்டை ஒன்றைக்  கொடுத்தார். அவருடைய துணைவியார் ஓடி வந்து துவைத்துக் காயப்போட்டுவிட்டுச் சுவையான சிற்றுண்டியைப் பரிமாறினார். உடனே விரைந்து சென்று காயாத சட்டையை எடுத்து அயர்ன் செய்துகொடுத்தார். பார்த்தால் அழுக்குப் பட்ட அறிகுறியே தெரியவில்லை. கம்பீரமாக சட்டையை அணிந்துகொண்டு நன்றிகூறி உரிய நேரத்தில் வித்யா நேத்ரா பள்ளிக்குச் சென்று உரையாற்றத் தொடங்கினார்.

   உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
   இடுக்கண் களைவதாம் நட்பு
 என்ற வள்ளுவர் கூற்றை எண்ணியபடியே அந்த இணையரை நெஞ்சார வாழ்த்தினார். சுஸ்லான் காற்றாலை நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் திரு.பிரேம்குமாரும் அவரது மனைவியும்தான் இங்கே குறிப்பிடப்படும் இடுக்கண் நீக்கிய இணையர்.

  அது சரி. அசடு வழிநத அந்த சஃபாரி சட்டை மனிதர் யார்?
வேறு யார்? நானேதான்.

இந்த நிகழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம்:
 இனி இப்படிச் செல்லும்போது கூடுதலாக ஒரு செட் பேண்ட் சட்டை எடுத்துச்செல்லவேண்டும். அல்லது எவ்வளவு அழுக்குப் பட்டாலும் தெரியாத டார்க் கலர் சஃபாரி அணிந்து செல்ல வேண்டும்.
   



   




Sunday, 9 November 2014

அன்பெனும் அமிழ்தம்

                                                                                                         
     அன்பு ஆற்றல் மிக்கது.

          ஒரு பிளவுபட்ட குடும்பம் குழந்தையின் அன்பால் ஒன்று சேர்வது உண்டு

  . காதலனுக்குமண்ணில் மாமாலையும் ஒரு சிறுகடுகாய்தோன்றக் காரணம் காதலி காட்டும் அன்பின் வலிமைதான்.

          மனைவி காட்டும் தன்னலமற்ற அன்பு, நெறிகெட்டுச் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

        இன்றளவும் குடும்பம் என்னும் கட்டுக்கோப்புக் குலையாமல் இருப்பதற்குக் காரணம் அன்னை பொழியும் அன்பின் வலிமை தான்.

    குடும்பத் தலைவனாய் விளங்கும் தந்தை ஓய்வின்றி உழைப்பதும் ஆழ்மனதில் கிக்கும் அன்பின் பேராற்றலால்தான்.

   சாதி, மதம், இனம் பாராமல் அன்பு காட்ட வேண்டும். மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பைப்  பொழிய வேண்டும். பகைவரையும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும்.  இந்த அன்பு நெறியைத்தான்நின்னோடு ஐவரானோம்என்று குகனையும், ‘நின்னோடு அறுவரானோம்என்று அனுமனையும், ‘நின்னோடு எழுவரானோம்என்று விபீடனையும் இராமன் தம்பியராக்கிக் கொள்வதாய் கம்பன் படைத்துக்காட்டுகிறான். இவ்வன்பு நெறி தழைக்குமாயின் உலகமாந்தார்  உவகையுடனும் அமைதியுடனும் வாழலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சே. இக்கூற்று அன்புக்கும் பொருந்தும். தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடத்து அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்தி, அதாவது செல்லம் கொடுத்து, குழந்தையின் போக்குக்கு விட்டு,  பின்னர்  துன்பப்படுவதுண்டு.

    கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகையும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. இது காலப்போக்கில் வெறியாக மாறிவிடும். மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக்கூடாது. மதத்தின் மீது ப்ற்றுபு இருக்கலாம். அது ஒருபோதும் மதவெறியாக மாறுதல் கூடாது.

    நம் நாட்டில் இல்லறம் என்பது வற்றாத அன்பின் அடிப்படையில் அமைவது. ஆயினும் அவ்வற்றாத ஊற்று வரதட்சணைச் சிக்கல்களால் வறண்டு போவதைப் பார்க்கிறோம். செல்வ மகளையும் கொடுத்து, செல்வத்தையும் கொடுக்க ஏழைத் தந்தையால் இயலுமா? பாரதியார் கண்ணம்மாவை நோக்கி, அன்பொழுக செல்லமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு என்று கூறுவதைப் போல, அருள் காட்டி ம் புரியும் இளைஞர் கூட்டம் பெருக வேண்டும். வள்ளுவர்  கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருக வேண்டும். கணவனின் மனமும் மனைவியின் மனமும் அன்பால் இணைக்கப்பட வேண்டும். மனமுறிவுதான் மணமுறிவுக்குக் காரணம்.

   கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட காட்டத்தான், அன்பு பெருகும். பிற உயிர்களிடத்து அன்பு காட்டி, அதனால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். இவ்வின்பத்தை அனுபவித்தவர்  தாயுமானவர். 
           “அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
           இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமேஎன்று கூறுகிறார்.

        “காக்கை குருவிகள் எங்கள் ஜாதிநீள்
          கடலும் மலையும் எங்கள் கூட்டம்
 என்று அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்பு காட்டியவர் பாரதியார்.

  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்பின் மிகுதியால் நெஞ்சு  நெக்குருகிப் பாடியவர் வள்ளலார்.

   ஒரு முறை காந்தியடிகளின்  உதவியாளர்  மீராபென் விடுத்த வேண்டுகோளின்படி, ஆசிரமத்தில் வசித்த  இளைஞர்கள் சிலர்  இரவு நேரத்தில் சுந்தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், “மரங்களும் நம்மைப்போல் உயிருடையவை. நம்மைப்போலவே வளர்கின்றன; முகர்கின்றன; உண்கின்றன; பருகுகின்றன; உறங்குகின்றன .அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும் போது தழைகளைப் பறித்தல் தவறுஎன்று கூறினாராம்!

   இன்றைக்குச் ரியாக நூற்றி இருபத்தியோர் ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் (9.11.1893)மெரிக்காவில் சிக்காக்கோவில் நடைபெற்ற ர்வமத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.,   ‘மெரிக்க நாட்டுச் சகோதரர்களே, சகோதரிகளேஎன்று  கூறி உரையைத் தொடங்கியபோது எழுந்த கரவோலி அடங்க பத்து நிமிடம் ஆனதாம்!

      எனவே, நாடு, மொழி, இனம் கடந்து, யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வழியில்.எல்லோரும் நம்  றவினர் என ஒவ்வொருவரும் எண்ணி வாழத் தொடங்கினால் உலகில் போர்  ஏது?  பூசல் ஏது?


.     அண்மைக்காலமாக, மனித மனங்கள் மெல்ல மெல்ல பாலைவனங்கள் ஆகிவருகின்றன.  இறைவன் அன்பு மயமானவன். எனவேதான் எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. அன்பெனும் அமிழ் நீர் எல்லோருடைய உள்ளங்களிலும் மீண்டும் பெருக்கெடுக்க  வேண்டும். இதற்கான வழிகளைச் சிந்திப்போம்.