Friday, 9 June 2017

கனடா கனவு

   உலகப் புகழ் பெற்ற கார்லட்டன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படிக்க வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து கைநிறைய ஊதியம் பெறவேண்டும். பட்டமளிப்பு விழாவில் மூவரும் பங்கேற்க வேண்டும்.

 கனவு ஒன்று; கனவு கண்டவர் மூவர்.  நான், என் துணைவியார், என் இளைய மகள் புவனா மூவரும் இரண்டாண்டுகளுக்கு முன் கண்ட கனவு இன்று நனவாகிறது.

    6.6.17 அன்று மாலை ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளுடன் மங்களூர் சென்னை விரைவு இரயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அப்படி என்ன மூட்டை முடிச்சுகள்? சரியாக இரண்டாண்டுகளுக்குப் பிறகு மகளைப் பார்க்கப் போகிறோம் என்பதால் இனிப்பு, கார வகைகள், வற்றல், வடகம், பொடிகள் என என் துணைவியார் தன் கையால் தயாரித்து எடுத்துச் செல்வதால் சுமை அதிகமாகிவிட்டது. ஆனாலும் அது ஒரு சுகமான சுமை.

   சென்னையில் சகலை இல்லத்தில் தங்கி பயணம் தொடர்பான சில பணிகளை முடித்துக்கொண்டு   8.6.17 மாலை ஒன்பது மணிக்கு சென்னை விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம். வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு புறப்பட்டோம். அதற்குக் காரணம் எங்கள் பயணச் சீட்டில் என் தந்தையார் பெயரில் இருந்த ஓர் எழுத்துப்பிழைதான். இப்படி பயணச் சீட்டில்  எழுத்துப்பிழை இருந்தால் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது என சிலர் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். அது உண்மையும் கூட. பயணச் சீட்டில் உள்ள பெயரும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். பயண முகவர் செய்த தட்டச்சுப் பிழையைச் சரி செய்ய என் மகள் இருவரும் படாதபாடு பட்டார்கள். ஒரு நாள் முன்னதாக அப்பிழை கண்ணில் பட்டதால் சிக்கல் தீர்ந்தது. இது விமானப் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.

    விதிமுறைகளின்படி பெட்டியில் உள்ள பொருள்கள், எடை முதலியவற்றைச் சரியாகச் சோதித்து எடுத்துச் சென்றதால் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. அப்படியிருந்தும் ஒரு பெட்டியில் இருந்த கறிவேப்பிலைப்பொடிமீது சந்தேகம் வந்துவிட்டது. அது குறித்த எனது விளக்கத்தைக் கேட்டதும் அனுமதித்துவிட்டார். இப்படி ஏதாவது சிக்கல்கள் வராமல் இருந்தால் பயணம் சப்பென்றுதானே இருக்கும்? ஒருவழியாக எல்லா சோதனைகளும் முடிந்து நள்ளிரவு ஒரு மணிக்கு லுஃப்தான்சா விமானத்தின் உள்ளே சென்று உரிய இருக்கைகளில் அமர்ந்தோம். ஜன்னல் ஓர இருக்கையை என் மகள் பதிவு செய்து இருந்த்தால்  வேடிக்கைப் பார்க்கவும் படம் எடுக்கவும் வசதியாக இருந்தது.

    1.50 மணிக்குப் புறப்பட  வேண்டிய விமானம் 1.30 மணிக்கே புறப்பட்டது. பணிப்பெண்களின் விருந்தோம்பல் சற்று நேரத்தில் தொடங்கியது. அவர்களுடைய உடல்மொழி, பேசும் விழி, பேசிய மொழி எல்லாமே அழகுதான். உலக அழகிப் போட்டியில் இரண்டாம் சுற்றுவரை சென்ற பெண்களைத் தேடிப்பிடித்துப் பணியில் அமர்த்தியிருப்பார்களோ என்னவோ! நாங்கள் விரும்பிப் பெற்றுக் கொண்ட சைவ உணவு வகையறா மிக நன்றாக இருந்தது. ஆனாலும் அசைவ உணவுக்காரர்களுக்குதான் கொண்டாட்டம்..
   மணிக்கு நானூறு முதல் தொள்ளாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் முப்பதாயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த வண்ணம் இருந்தது.பயணியர் ஒவ்வொருவரும் தனித்தனி தொடுதிரையில் திரைப்படங்கள் பார்க்கலாம். நான் ஒரு ஜெர்மானிய மொழிப்படத்தைப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. விடிந்ததும் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்ப்பதே சுகமான அனுபவமாக இருந்தது. ஒரு கட்டத்தில் பாக்தாத் நகரின் மீது விமானம் பறந்தது. இளமையில் நான் படித்த பாக்தாத் திருடன் நாவல் நினைவில் வந்துசென்றது.. ஜெர்மன் நாட்டில் விமானம் பறந்தபோது ஜன்னல் வழியே கண்ட காட்சி மிக வியப்பாக இருந்தது. நாடு முழுவதும் அடர்ந்த காடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பரவிக் கிடக்கின்றன. ஆங்காங்கே பெரிய ஏரிகளும் நீண்ட ஆறுகளும் நிரம்பி வழியும் தண்ணீருடன் காட்சியளிக்கின்றன. மருந்துக்குக் கூட நீரில்லாத தமிழக ஆறுகள் உடனிகழ்வாக என் உள்ளத்தில் தோன்றி மறைந்தன.


    பத்துமணி நேர தொடர் பறப்புக்குப் பிறகு, எட்டாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து நலமாக ஜெர்மன் நாட்டின் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கினோம். அடுத்த விமானம் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் புறப்படும். அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் இப் பதிவை மடிக்கணினியில் தட்டச்சு செய்துகொண்டுள்ளேன்.

10 comments:

  1. வணக்கம் ஐயா
    கனவு மெய்ப்பட வேண்டும்.,,,
    பாரதியின் வரிகளை வசமாக்கிய உங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .உங்கள் பயண அனுபவத்தை தருக.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பறக்கும் போதே பகிர்வு...! ஆகா...!

    ReplyDelete
  4. ஆஹா.பயணத்தில் உடனுக்குடன் பதிவு....மீதிப்பயணமும் இனிதே அமைய வாழ்த்துகள் ஐயா....

    ....துளசி, கீதா

    ReplyDelete
  5. கனடா. அழகான நாடு..பால் மிக நன்றாக இருக்கும்.வளமும்.... கனடாவை குறுக்காக வரி போட்டால்.....மேலே செல்லாக் செல்ல மக்கள் வாழ்வது குறைவு.....கீழே தான் மக்கள் தொகை.....பனி...

    கீதா

    ReplyDelete
  6. Enjoyed your writing as usual. Have a nice time. My blessings to your daughter. Prof.Pandiaraj

    ReplyDelete
  7. மகிழ்ச்சி அண்ணா! எங்களுக்கு "அன்புள்ள அமெரிக்கா" மாதிரி "கவின்மிகு கனடா" கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பணிப்பெண்களின் உடல்மொழி, பேசும் விழி, பேசிய மொழி What a fantastic compilation sir. No chance no one can compete you except you. I enjoyed your reading your blog sir. Keep on sharing your Canada experience. Awaiting eagerly to go through each and every your postings sir. Really superb.

    ReplyDelete
  9. பயணக்கட்டுரை பயணத்தில் எழுதுகின்ற அருமையே அருமை. உங்களுடன் நானும் பனிப்பதாகவே உணர்வு. நான் வந்து வழியனுப்பி இருக்கவேண்டும். ஏதோ தவிர்த்துவிட்டது. அற்புதமான பதிவு. - மகிழ்வே தொடரட்டும். - நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete