இல்லம் வீடு என்பன ஒரு பொருள்
குறித்தப் பல சொல்கள் என்றாலும் சற்று எண்ணிப் பார்த்தால் சிறு வேறுபாடு இருப்பது
தெரியும். வீடு என்பது மனிதர்கள் வசிக்காத இடம் எனலாம். எடுத்துக்காட்டாக நீண்ட
நாள்களாகப் பூட்டிக் கிடக்கும் வீட்டைக் குறிப்பிடலாம்.
இல்லம் என்பது மனிதர்கள் வசித்துக்
கொண்டிருக்கும் வீடாகும். வீடு வாடகைக்கு விடப்படும் என்று சொல்லலாமே தவிர இல்லம்
வாடகைக்கு விடப்படும் எனச்சொல்வது சரியாக
இருக்காது.
கனடாவில் தனியாக வாழும் மனிதர்கள்
பலராக உள்ளனர். இவர்களுடைய வாழிடத்தை வீடு என்பதா? இல்லம் என்பதா? வீடு என்றுதான்
சொல்லத் தோன்றுகிறது. இல்(ல)வாழ்க்கை என்பது அன்பின் அடிப்படையில் அமைவது. ஒற்றை
ஆளாக வசிப்பவர் அன்பைக் காட்டவும் முடியாது; அன்பைப் பெறவும் முடியாது. அதனால்தான்
கட்டுரைத் தலைப்பை ஒற்றை மனிதர் வீடுகள் என்று குறிப்பிட்டுள்ளேன்.
அதிகாலையில் ஓர் அகன்ற தெரு வழியே
நடைப்பயிற்சி செய்தேன். ஒரு குடியிருப்பில் ஒரு பேரிளம்பெண் செடிகளுக்குத் தண்ணீர்
ஊற்றிக் கொண்டிருந்தாள். அவளிடம் பேச்சு கொடுத்தேன். “நான் மட்டும் தனியாக இங்கே
வசிக்கிறேன். என் மகளும் மருமகளும் அடுத்தத் தெருவில் வசிக்கிறார்கள்” என்றாள். “மகனுடன்
வாழலாமே” என்றேன். “மருமகளுக்கு என்னைக் கண்டால் பிடிக்காது” என்றாள். இந்த
நாட்டிலுமா மாமியார் மருமகள் சண்டை என நினைத்தபடி, “ நீங்கள் எந்த நாடு?” எனக்
கேட்டேன். “பாங்களாதேஷ்” என்றாள். இந்தியாவும் பாங்களாதேஷும் அண்டை நாடுகள்
என்பதால் நமது கலாச்சாரம் அங்கும் பரவி இருக்கலாம். “உங்கள் கணவர்” என்றேன்.
“எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. அந்த மனிதர் தனியாக வசிக்கிறார்” என்று
அவள் சொன்னதும் எனக்கு ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது.
தனிமையில் வாழும் இந்த மனிதர் அவ்வப்போது பொம்மை விமானம் செலுத்தி மகிழ்வார் |
நன்றி: மெட்ரோ நியூஸ் |
எழுபது எண்பது வயதிலும் உடல்
நலத்துடன் இருக்கிறார்கள். தாங்களே சமைத்து உண்கிறார்கள். இவர்கள் இயல்பாக கார்
ஓட்டிச் செல்வதைக் காணமுடிகிறது. சர்வ சாதாரணமாக சைக்கிள் ஓட்டுகிறார்கள். பலர்
இந்த வயதிலும் வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர். சிலர் பல்கலைக்கழகத்தில் முழுநேர
மாணவராகச் சேர்ந்து படிக்கவும் செய்கிறார்கள்.
இத்தகைய ஒற்றை மனிதர் குடில்களில்
பெரும்பாலும் நாய்கள் வளர்ப்புப் பிராணியாக இருப்பதைப் பார்க்கலாம். இந்த ஒற்றை
மனிதர்களுக்கு உறுதுணையாக இருப்பவை
நன்றியுள்ள நாய்கள்தாம். மிகவும் முடியாத கட்டத்தில் அரசு அல்லது தனியார்
நடத்தும் முதியோர் காப்பகங்களில் இவர்கள் சென்று சேர்ந்து விடுகிறார்கள்.
நான் சிலரிடம் பேசிப் பார்த்ததில்
ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் இறந்த காலத்தைப் பற்றியோ இறக்கும் காலத்தைப்
பற்றியோ கவலைப்படுவதில்லை. மறாக நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழ்கிறார்கள்.
இவர்களைப்பற்றி
எழுதிக்கொண்டிருக்கும்போதே உடனிகழ்வாக என் மனம் நம் நாட்டின் நிலை குறித்தும்
சிந்திக்கிறது.
நம் நாட்டில் கூட்டுக் குடும்பங்கள்
மெல்ல மறைந்து வருகின்றன. பெற்றோரைப் பேண வேண்டும் என்னும் கடமையுணர்வு பிள்ளைகளிடத்தில்
குறைந்து வருவதால், பெற்றோரில் பலரும் தனித்து வாழ்கிறார்கள்.
ஓய்வூதியம் பெறுவோர் பாடு கொஞ்சம்
பரவாயில்லை. ஆனால், விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட நம் நாட்டில் கூட்டுக்
குடும்பச் சிதைவால் முதியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். காலமெல்லாம்
உழைத்து உழைத்து ஊருக்கெல்லாம் உண்டு மகிழ உணவிட்டவர்கள் கடைசிக்காலத்தில் உடுக்க
உடையில்லாமலும், உண்ண உணவில்லாமலும், உறங்க ஓர் உறைவிடம் இல்லாமலும் வாழ்கின்ற அவலநிலையும் உள்ளது. ஐந்தாண்டு காலம்
சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கு மாதம் அறுபதாயிரம் ரூபாய் ஓய்வூதியம்
வழங்கும் அரசு ஐம்பது ஆண்டு காலம் உழைத்துச் சோர்ந்துபோன விவசாயிக்கு ஒரு சிறு தொகையை
ஓய்வூதியமாக மாதாமாதம் வழங்கலாம்.
இதுகுறித்த உரத்த சிந்தனை உருவாக
வேண்டும், இல்லையேல் நம் நாட்டில் வருங்காலத்தில் விவசாயிகளும் இருக்கமாட்டார்கள்;
விவசாயமும் இருக்காது.
மறு சுழற்சி வசதியுடன் கூடிய பிளாஸ்டிக்
அரிசி மட்டுமே அங்காடியில் விற்கும் காலம் வந்துவிடும்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
நம் நாட்டில் வயதானவர்களுக்கு என்று ஒரு பென்ஷன் இப்போதும் இருக்கிறது ஐயா
ReplyDeleteOld Age Pension என்று கூறுவார்கள்.ஆனால் அத்தொகையினை வைத்துக் கொண்டு,
காலம் தள்ள முடியுமா என்பது சந்தேகமே
OAP பெறுவதற்கு eligible அனாதையாக இருக்க வேண்டும். OAP க்கு தகுதியாக்கிக் கொள்ள லஞ்சம் கொடுக்க வேண்டும்.
Deleteகூட்டுக்குடும்பங்களின் சிதைவே இன்றைய நமது சமுதாய அவலங்களுக்கு முதற்காரணம் ஐயா.
ReplyDeleteஐயா உங்கள் கட்டுரை நமது அடுத்த சந்ததியினர் வாழ்வை முன்கூட்டியே சொல்வதாக நினைக்கிறேன். விவசாயிகள் வாழ்வு வளம்பெற, ஊழல் குறைந்து நேர்மையான அதிகாரிகள் வந்தால் தான் நடக்கும்.
ReplyDeleteEconomic development is the main reason behind all these independent life.Somehow people enjoy this type of life also.Regarding our legislators salary,they think they are the owner of Government money. We should be happy for one thing:Reserve Bank Governor has not thought in that direction to fix his SALARY.
ReplyDeleteநிகழ்காலத்தில் நிம்மதியாக வாழும் ஒற்றை மனிதர்கள்.....
ReplyDeleteவசதிகள் இருப்பதால் இப்படி இருக்க முடிகிறது. நம் ஊரில் இப்படி இருக்க வழியில்லை என்பதால் தான் முதியோர் இல்லங்கள் அதிகரித்து விட்டதோ....
இளமையில் வறுமை என்பதை விட முதுமையில் வறுமை மிகக் கொடிது. மேலும் முதுமையில் தனிமை அதனினும் கொடிது.
ReplyDeleteசமீபத்தில் ஒரு முகநூல் காணொளி கண்டேன். அதில் அமெரிக்கப் பிச்சைக்கார்களிடம் (homeless) "உணவு, பீர், பணம்" மூன்றையும் காட்டி ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொன்ன பொழுது ஒரிருவர் உணவைத் தெரிவு செய்வர்.
காணொளியின் பிற்பகுதியில் "No one here to talk to me. Can you please spend some time with me?" என்று மன்றாடுகிறார். உள்ளம் கனத்து விட்டது.
பயமாக இருக்கிறது...
ReplyDeleteஅடுத்த சந்ததிகளின் வாழ்வு ???
ReplyDeleteமனிதப்பிறவியே துன்பத்தின் அடிப்படைதான். அதிலும் இளமையில் தனிமை என்றால் பரவாயில்லை.முதுமையில் தனிமை என்பது வேதனையான விசயம். தென்னை வைத்தவன் தின்னுட்டுச் சாவான். பனை வைத்தவன் பார்த்துட்டுச் சாவானென்பது முதுமொழி. தென்னை குறிப்பிட்ட பருவத்தில் பயன் தரும் என்பதே விளக்கம். ஆகையால் தான் தென்னையை வைச்சால் இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு எனப் பாடல் கூறுகிறது. ஆனால் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்து வாழ்க்கையைத் தேடிக்கொடுத்த பின்னர் பெற்றவர்களை அனாதையாக்குவது பாவத்திலும் பெரும் பாவம். அதற்கு மோட்சமே கிடையாது. தங்கள் கட்டுரையில் ஒரு வயதனவர் தனிமையைப் போக்க பொம்மை வான் ஊர்தி விட்டு மகிழ்வதைப் படத்தோடு காட்டியுள்ளீர்கள். அக்காட்சி தனது குழந்தைக்குப் பெற்றோர்கள் விளையாட்டுப் பொம்மை வாங்கிக் கொடுத்து மகிழ்வர். இறுதியில் பெற்றோரையே குழந்தையாக மாற்றிச் சென்று விடுகிறார்களே என எண்ணும்போது வேதனையாக உள்ளது.
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர்
கரூர்.
முனைவர் திரு. ரா. லடசுமணசிங் அவர்களின் கருத்து மனம் கனக்க வைத்து விட்டது.
Delete- கில்லர்ஜி
ஆங்கிலத்தில் ஹோம், ஹௌஸ் என்பதற்கு வித்தியாசம் உண்டு போல இல்லம், வீடு!
ReplyDeleteஆம் ஐயா அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள். அங்கு அவர்கள் அப்படி தனியாக வாழ இயலும் அதற்கான வசதிகளூம் அங்கு நிறைய உண்டு. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் தனியாக வாழ்வது என்பது கொஞ்சம் கடினம்தான் அந்தக் கடினத்தின் இடையிலும் கிராமத்திலும், நகரத்திலும் வாழ்கிறார்கள். ஒன்று சொல்லலாம் இங்குத் தனியாக வாழ்ந்தாலும், ஒரு நாள் அந்த நபரை வெளியில் கானவில்லை என்றால் என்னாச்சு என்று வினவி சற்று எட்டிப் பார்ப்பார்கள். ஆனால் அங்கு அது பொதுவாகக் கிடையாது. எனவே சில சமயங்களில் வம்பு கூட நல்லதோ என்று கூடத் தோன்றும்.
முதியோர் இல்லங்கள் வேதனையான ஒன்றுதான் இங்கு...ஆனால் அவர்களதுகுழந்தைகள் வெளிநாடுகளில் இருக்க இவர்கள் எங்கே போவார்கள்? வெளிநாட்டில் எப்போதும் குழந்தைகளுடன் இருக்க முடியாதே...வயதாகும் போது??!! இப்போது அதற்கும் நிறைய தொழில்நுட்ப ரீதியாக வசதிகள் வந்துவிட்டன. தனியாக இருக்கும் பெற்றோரைக் கவனித்துக் கொள்ள மருத்துவ வசதிகள் என்று இவ்வளவு என்று கட்டிவிட்டால், மருத்துவர் உடனே வீட்டிற்கு வந்து பார்ப்பது எல்லாம் வீடியோவாக நேரடியாக வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்குக் காட்டி நேரடியாகவே கருத்துப் பரிமாற்றம் செய்து என்று ஒரு மருத்துவர் சென்னையில் பல பகுதிகளை நெட்வொர்க் செய்துகொண்டு செய்து வருகிறார் என்பதைச் செய்தியில் வாசித்தேன்..என்றாலும் வேதனைதான்! இதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் நிறைய எழுதலாம்..ஐயா..
கீதா
நிகழ் காலத்தையே மட்டும் நம்பி வாழ்ந்தால் நாட்டில் முறையற்ற வருவாய் சேர வழி இல்லை. நல்ல மனப்பாங்கு. நமக்கு இயலுமா என்பது கேள்விக் குறியே! - நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteநல்ல கலாச்சார சூழலில் நல்ல மனங்கள் சாத்தியம்/
ReplyDeleteவணக்கம் நண்பரே.. !
ReplyDeleteஉங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும்.
தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
http://gossiptamil.com/aggre/