Tuesday, 8 August 2017

ரக்க்ஷா பந்தன் என்னும் உறவுப் பாலம்

   ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முழுநிலா நாளில் சகோதரிகள் தம் சகோதரர்களின் கையில் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ராக்கி கட்டுவது நம் இந்தியத் திருநாட்டின் இனிய பாரம்பரிய நிகழ்வாகும்.

  கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் என் மகளின் இல்ல முற்றத்தில் நின்றுகொண்டு மாலைப் பொழுதில் வானத்தைப் பார்க்கிறேன். அழகிய முழுநிலா ஒளி உலா செல்கிறது.

   என் நினைவுகள் பின்னோக்கிப் பயணிக்கின்றன.


“ரக்க்ஷா என்றால் பாதுகாப்பு என்று பொருள். பந்தன் என்றால் உறவு என்று பொருள்.  பாசத்தின் அடையாளமாக சகோதரி தன் சகோதரனின் கையில் ராக்கி கட்டுகிறாள். அவன் தன் அன்புப் பரிசாக வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பைத் தருவதாய் உறுதியளிக்கிறான்.

   ராக்கி கட்டுவது என்பது இரத்த உறவில் உள்ள சகோதரர்களுக்கு மட்டுமல்ல. யாரும் யாருக்கும் ராக்கி கட்டலாம். ஓர் இளைஞன் நொடிப்பொழுதில் தன்னுடன் படிக்கும் பெண்ணுக்கு ராக்கி கட்டி சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தலாம்.

   நாளை நம் பள்ளியில் ரக்க்ஷா பந்தன் கொண்டாட உள்ளோம்”

நான் முதல்வராகப் பணியாற்றிய போது இவ்வாறு கரூர் லார்ட்ஸ் பார்க் பள்ளியில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் பேசிமுடித்ததும் எழுந்த கரவொலி ஓய இரண்டு நிமிடம் ஆயிற்று. கரூர் பிரம்ம குமாரி அமைப்பினர் பள்ளிக்கு வந்து வண்ண வண்ண ராக்கிகளைக் கொடையாகத் தந்து சென்றனர்.

   மறுநாள் நடந்த விழாவில் ராக்கி கட்டுவதின் பின்னணியில் உள்ள ஒரு கதையைச் சொன்னேன்:

“ஆயர்பாடியில் கண்ணன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது கையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த திரெளபதி தன் சேலைத் தலைப்பைக் கிழித்து அவனுடைய கையில் கட்டி இரத்தம் வடியாமல் தடுத்தாள். அவளுக்கு ஒரு துன்பம் என்றால் பாதுகாப்பு அளிப்பதாய் அப்போது உறுதி அளித்தான் அச் சிறுவன்.

   பின்னாளில் திரெளபதியின் சேலையைத் துச்சாதனன் இழுத்து அவமானப்படுத்தியபோது மலையளவு சேலையைத் தந்து கண்ணன் திரெளபதியின் மானத்தைக் காப்பாற்றினான்.”

  தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் உடன்  பயின்ற மாணவிகளுக்கு ராக்கி கட்டினார்கள். தொடர்ந்து மற்ற வகுப்புச் சிறுவர்களும் அவர்கள் வகுப்பில் படித்தச் சிறுமியர்களுக்கு ராக்கி கட்டினார்கள்.

   சமா ஃபர்ஜானா சண்முகம் கையில் ராக்கி கட்டினாள். லட்சுமி என்பவள் லாரன்ஸ் கையில் ராக்கி கட்டினாள்; சகாய வனஜா சல்மான் கையில் ராக்கி கட்டினாள். முன்னால் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மெய் சிலிர்த்தது.

    மறுநாள்முதல்  முதல் பத்தாம் வகுப்பு மாணவியர் சிலர் பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை அண்ணா என அழைத்ததை நான் காது குளிரக் கேட்டேன். பல ஆண்டுகள் இந்த விழாவை நடத்தி நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியதால் சின்னத்திரைகளும் பெரியத் திரைகளும் அவர்களுடைய நல்ல மனங்களில் எந்த நச்சு விதைகளையும் ஊன்றமுடியாமல் தோற்று ஓடின.

    “இரவு உணவு தயார். வாங்க சாப்பிடலாம்” என என் இல்லத்தரசி இனிதே அழைத்தபோதுதான் அந்தப் பசுமையான நினைவுகளிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்திற்குத் திரும்பினேன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
 
   

    

9 comments:

  1. சகோதரத்துவம் காப்போம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. பின்னணி கதையும் அருமை...

    ReplyDelete
  3. Love and affection among brother and sister has no yard stick.It is only common;however there are few exceptions what we see in our day today life.

    ReplyDelete
  4. கதையும் பதிவும் அருமை ஐயா. சகோதர சகோதரி பாசம் என்பது மிக மிக அருமையான ஒன்று. அது பாதுக்காக்கப்பட வேண்டிய ஒன்று..

    துளசி, கீதா

    ReplyDelete
  5. சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தும் உணர்வு அருமை. தமிழகத்தில் இது முன்பு இல்லை.தற்போது தமிழகத்திலும் வர ஆரம்பித்துவிட்டது. வட இந்தியாவின் பாதிப்பு என்று கொள்ளலாமா? நம் பண்பாட்டிலேயே பலவற்றை நம்மவர் மறந்தும், தொடராமலும் இருக்கும்போது இதுபோன்ற பல புதிய பழக்கங்கள் நம்மவரிடையே புக ஆரம்பித்துவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. ராக்கி சரிதமும் மாணவியர் மனப்பாங்கும் அருமை - நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  7. ராக்கி சரிதமும் மாணவியர் மனப்பாங்கும் அருமை - நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  8. ஐயா, உங்கள் கருத்து என்னைமிகவும் நெகிழ்ச்சிப் படுத்துகிறது. நான் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் போது என் வகுப்பில் பல பெண்கள் இருந்தனர். அதில் ஒரேயொரு சகோதரி சந்திரா என்பவர் வந்து எனக்கு ராக்கி கட்டி வாழ்த்தினார். பனிரெண்டாம் வகுப்பு முடித்தபின் அவருடன் தொடர்பே இல்லை. 20 ஆண்டுகள் கழிந்தபின் இந்த வருடம் அவரை கரூரில் சந்தித்தேன். அந்த சகோதரி ஏற்படுத்திய அந்த காப்பு இன்றும் என்னைக்காப்பதாகவே நினைக்கிறேன். இந்த ஆண்டில் என்னுடன் பணிபுரியும் சகோதரி ஒருவர் கல்லூரிக்கு பயந்து ராக்கியை ஒரு உறையில் போட்டு கொடுத்தனுப்பி வாழ்த்தினார். இந்த சகோதரத்துவ விழா அனைத்துக் கல்விக்கூடங்களிலும் கொண்டாடப்படவேண்டும்.

    ReplyDelete