Saturday, 26 August 2017

படியேறிச் செல்லும் படகுகள்

 
Courtesy:Rideau canal world heritage site
 
நான் கனடா நாட்டுக்கு வந்த புதிதில் ஒட்டாவா நகரில் வசிக்கும் இந்நாட்டுக் குடிமகன் நண்பர் முருகானந்தம் அவர்கள் படியேறும் படகு பற்றிச் சொன்னபோது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. பிறகு ஒரு நாள் என்னையும் என் துணைவியரையும் நேரில் அழைத்துச் சென்று காட்டியதோடு விளக்கமாகவும் சொன்னார். உண்மையிலேயே கனடா நாட்டுக்காரர்களின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொழில் நுட்பம் என்னை வியந்து நிற்கச் செய்தது.
  
Courtesy:Rideau canal world heritage site
ஆயிரம் ஆண்டுகள் ஆகியும்  நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை முதல்முறையாகப் பார்த்தபோது பண்டைத் தமிழர்களின் கட்டுமானத் தொழில் நுட்பத்தை எண்ணி வியந்து நின்றேன். அதற்கு அடுத்து அதே அளவு  வியப்புடன் பார்த்தது இந்தப் படியேறும் படகுகளைத்தான்.


    ரிடியூ கால்வாய் கனடாவின் பழைய தலைநகரமான கிங்ஸ்டன் நகரையும் புதிய தலைநகரமான ஒட்டாவா நகரையும் இணைப்பதாகும். இது இரண்டு நூற்றாண்டுகளுக்குமுன்  மனித முயற்சியால் உருவான  202 கிலோமீட்டர் நீளமுள்ள மகத்தான கால்வாய் ஆகும்.  வரலாற்றுச் சிறப்புடைய இக் கால்வாய் கனடா நாட்டின் பாரம்பரிய சின்னமாகும். மேலும் இது யுனஸ்கோ நிறுவனம் அங்கீகரித்துள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும்.

    ஓர் ஆற்றின் நீர் மட்டமும் இன்னொரு ஆற்றின் நீர்மட்டமும் எண்பது அடி உயர வித்தியாசத்தில் உள்ளன. கீழே இருப்பது ஒட்டாவா ஆறு; மேலே இருப்பது ரிடியு ஆறு இந்த இரண்டும் ஒரே மட்டத்தில் இருந்தால் ஒரு சிறிய கால்வாயை வெட்டி இணைத்துப்படகு போக்குவரத்தை எளிதாக்க முடியும். ஆனால் அப்படி இல்லையே. எனவேதான் அந்த இரண்டு ஆறுகளையும் இணைக்க அறுபது அடி அகல  கான்கிரீட் படிகளை அமைத்து, அவற்றின் மீது இரட்டை மரக்கதவுகளை அமைத்துச் செயற்கையாக நீரின் மட்டத்தைக் கூட்டிக் குறைத்து படகுகளை மேல் மட்டத்தில் உள்ள ரிடியு ஆற்றுக்கு ஏற்றவும், அங்கிருந்து கீழ்மட்டத்திலுள்ள ஒட்டாவா ஆற்றினுள் இறக்கவும் ஒரு வழிவகையைக் கண்டுபிடித்தார்கள். இந்தத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால் நூறு கிலோமீட்டருக்குமேல் சுற்றி வளைத்துதான் செல்லமுடியுமாம்.
 






இனி சற்று அருகில் சென்று பார்க்கலாம். ஒரு படியின்மேல் நீர் நிற்கிறது. நீரின் மீது படகு நிற்கிறது அந்த நீர் கீழ் நோக்கி வடிந்துவிடாமல் இருக்க படியின் விளிம்பில் பொருத்தப்பட்டுள்ள இரு மரக்கதவுகளும் இடைவெளி இல்லாமல் சாற்றிப் பூட்டப்பட்டுள்ளன. இப்போது மேல் படியின் கதவுகளின் அடிப்பகுதியில் உள்ள வால்வுகள் மெல்லத் திறக்கப்படுகின்றன. தண்ணீர் கீழ்நோக்கிப் பாய்கிறது. இப்போது நீர்மட்டம் உயர உயர படகும் மேலெழும்புகிறது.

ஒரு கட்டத்தில் மேல்படியின் நீர் மட்ட அளவுக்கு கீழ்மட்ட நீர் உயர்ந்து சமதளத்தில் நிற்கிறது. மேலே உள்ள கதவுகள் முழுமையாகத் திறக்கப்படுகின்றன. படகோட்டி தன் படகைச் செலுத்தி மேல்படிக்கு வந்துவிடுகிறார். உடனே திறந்திருந்த கதவுகள் சாத்தப்பட்டுப் பூட்டப்படுகின்றன. இதே முறையில் தண்ணீரைத் தேக்கியும் வடித்தும் படகுகளை மேலே உள்ள ஆற்றுக்குச் செலுத்துகிறார்கள். இணைக்கப்பட்டுள்ள காணொளிக் காட்சியைப் பார்த்தால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

    இந்தக் கதவுகளைத் திறப்பதற்கும் சாற்றுவதற்கும் மின்சார மோட்டார் எதுவுமின்றி மனிதர்களே இயக்குவது நம்மை மேலும் வியப்படையச் செய்கிறது.  இவற்றை எல்லாம் காணொளிக் காட்சியாகப் பார்த்து மகிழலாம்.
   
   இந்தக் கூத்தெல்லாம் ஜூன் தொடங்கி நான்கு மாதங்களுக்குத்தான். பிறகு ஆற்று நீர் எல்லாம் உறைந்து பனிக்கட்டி ஆகிவிடுமாம். மக்கள் ஆற்றின்மீது நடப்பார்களாம்; ஓடுவார்களாம்; பனிச்சறுக்காடி விளையாடுவார்களாம்!

  இயற்கை அன்னை பல்வேறு வேடம் தரித்துக் கன்னட நாட்டில் களிநடம் புரிகிறாள்! அவற்றை எல்லாம்  பார்த்து உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.

முனவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.


11 comments:

  1. மிகவும் அருமையான தகவல். இது போன்ற செயல்கள் நம் மண்ணிலும் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். நன்றி ஐயா.

    ReplyDelete
  2. நல்ல தகவல்....

    ReplyDelete
  3. வியப்பில் ஆழ்த்தியது உங்களின் பதிவு ஐயா!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மிக மிக வியப்பாக இருக்கிறது. இன்னும் காணொளி பார்க்கவில்லை...பார்த்துவிட்டு வருகிறோம். நல்ல பதிவு புதியதாய் அறிந்த ஒரு விஷயம்!

    கீதா: வியப்பு!! நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது. இப்போது காணொளியில் பார்க்கிறோம்...அதற்குமுன் ஆறு உறைந்துவிடும் குளிர் காலத்தில் என்பது தெரியும். ஆனால் அதன் மீது நடப்பது அல்லது விளையாடுவது கொஞ்சம் அபாயகரமானது இல்லையோ....ஏனென்றால் நான் ஷிம்லாவில் இருக்கும் மணாலிக்குப் போயிருந்த போது ரோத்தாங்க் பாஸ் செல்லும் வழியில் பனி உறைந்திருந்த சமயம் அங்கு விளையாடவும் நடக்கவும், அனுமதிக்கப்பட்டோம் என்றாலும் ஆங்கானே ஜவான்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நான் ஆர்வ மிகுதியில் கொஞ்சம் மேலே செல்லலாம் என்று நானும் மகனும் நடந்த போது ஜவான் அனுமதிக்கவில்லை. அங்கு அடியில் தண்ணீர் இருக்கும் என்றும் பனியில் அமிழ்ந்தால் குழியில் அமிழ்ந்துவிடுவோம் என்றும் சொன்னார்...அதனால்தான் இதை அறியும் ஆவலில் இந்தக் கேள்வி ஐயா...

    ReplyDelete
  6. காணொளி பார்த்தோம் ஐயா. அருமை...ரசித்தோம்

    ReplyDelete
  7. வியப்பு மேலிட்டது. காணொளியைக் கண்டோம். ஆற்று நீர் உறைந்து பனிக்கட்டி ஆகி, அதில் மக்கள் ஓடுவது பற்றி அறிந்து இன்னும் வியந்தோம்.

    ReplyDelete
  8. வியந்துபோனேன் ஐயா
    காணொளியினைக் காண இதோ செல்கிறேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  9. காணொளி கண்டேன் நிஜமாகவே சூப்பர் . நான் போனபோது கொஞ்சம் குளிராகா இருந்ததால் அவ்வளவாக சுற்றவில்லை

    ReplyDelete
  10. Marvellous arrangement and wonderful coverage. Everything brought before the eye in an enchanting manner. Prof.Pandiaraj

    ReplyDelete
  11. Thank you for your nice coverage.Our forefathers had every wisdom and knowledge.intelligence remained in one form or another always

    ReplyDelete